மலை பக்தியோடு பக்தர்களால் சுற்றிக் கும்பிடப்படும் நிகழ்வு மலைவலம் அல்லது கிரிவலம் எனப்படும். கிரி என்றால் மலை ; வலம் என்றால் சுற்றுதல் என்று பொருள். அதனால் மலையை சுற்றி வருவதை கிரிவலம் என்று பெயர். புராண காலம் முதல் இன்று வரையில் கிரிவல யாத்திரை திருவண்ணாமலைக்கு சிறப்பைச் சேர்க்கிறது.

“நினைத்தாலே முக்தி தரும்” தலம் திருவண்ணாமலை. பஞ்சபூத தலங்களுக்குள் இது நெருப்புக்குரிய தலம். இங்கு மலையே இறைவனின் சொரூபமாக உள்ளது. திருவண்ணாமலை தலத்தைச் சுற்றி 1008 லிங்கங்கள் புதைந்து இருப்பதாகக் கூறப்படுகிறது. திருவண்ணாமலை ஈசனை மனதில் தினமும் நினைத்தால் நிச்சயம் முக்தி கிடைக்கும் என்று மார்க்கண்டேய முனிவரிடம் நந்தி பகவான் அருளியுள்ளார்.

திருவண்ணாமலை தலத்தில் தான் முதன் முதலில் லிங்க வழிபாடு தொடங்கியது. மகா சிவராத்திரி தொடங்கியதும் இந்த தலத்தில் தான் என்று புராணங்களில் குறிப்படப்பட்டுள்ளது. மலையில் உள்ள குகைகளில் சித்தர்கள், யோகிகள் தவம் செய்தனர். பின் குகைகளிலேயே இறைவனுடன் கலந்து ஜீவசமாதி நிலை அடைந்தனர். இதனால் அம்மலையில் சக்தி அதிர்வலைகள் அதிகமாகி மலையைச் சுற்றி வருவதால் இறை அருளும் மகான்களின் ஆசியும் பக்தர்கள் பெறுகின்றனர் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

மலையின் அமைப்பு

அருணாச்சல மலையானது 2668 அடி உயரத்துடனும் 14 கிலோமீட்டர் சுற்றளவுடன் காட்சியளிக்கிறது. மலையைச் சுற்றிலும் எண்கோண வடிவில் எட்டு சிவலிங்கங்கள் அமைந்துள்ளன. அவைகள்

  1.  இந்திர லிங்கம்,
  2.  அக்னி லிங்கம்,
  3.  எம லிங்கம்,
  4.  நிருதி லிங்கம்,
  5.  வருண லிங்கம்,
  6.  வாயு லிங்கம்,
  7.  குபேர லிங்கம், மற்றும்
  8. ஈசான்ய லிங்கம் என்பனவாகும்.

இத்திருக்கோயிலின் கிழக்குக் கோபுரம் 217 அடி உயரம் – தமிழகத்திலேயே உயர்ந்து விளங்குகிறது.

தெற்கு கோபுரம் – திருமஞ்சன கோபுரம், மேலக்கோபுரம் – பேய்க்கோபுரம்,

வடக்குக் கோபுரம் – அம்மணியம்மாள் கோபுரம் என்றழைக்கப்படுகிறது.

இத்தகைய பெருமைகளை கொண்ட , ஆதிப்பரம்பொருளாக விளங்கும் அண்ணாமலையின் அடிவாரத்தைச் சுற்றி கால்நடையாக வலம் வரும்போது சுற்றியுள்ள மூலிகை சக்தி மிக்க செடிகொடிகளின் காற்றைச் சுவாசிப்பதால் உடல் நலமடைவதோடு மலையின் சக்திமிகு அதிர்வுகள் வாழ்வை நல்விதமாக அமைத்துக்கொள்ளவும் உதவுகின்றன என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Comments

comments

Leave a Comment