இருமுடி பற்றி ஒர் பார்வை.. irumudi

இரண்டு அறைகளாகப் பிரித்து அதில் புனிதமான நெய்யை கொண்டும் ஐய்யப்பன் விக்கிரகத்தின் மீது நெய் அபிஷேகம் செய்யப்படும்.

ஐயப்பனுக்கு காணிக்கையாய் கொடுக்க நெய் கொண்டு செல்வது காலம் காலமாய் இருந்து வருகிறது. இந்த வழக்கம் ஏன் ஏற்பட்டது தெரியுமா?

 

இருமுடியில் நெய்த்தேங்காய் சுமந்து செல்வதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகிறது.Irumudi

முதல் காரணம்:

பந்தளராஜன் மனைவிக்கு தலைவலி ஏற்படுகிறது. உடனே புலிப்பாலால் தலைவலி தீரும் என பொய்க்காரணம் காட்டி ஐயப்பனை காட்டுக்கு அனுப்புகின்றனர். வளர்ப்புத் தந்தையான பந்தள மன்னன் மிக வருத்தத்துடன் மகனை வழியனுப்பும் போது, காட்டில் உண்பதற்காக பல நாட்கள் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக நெய்யில் தயாரித்த சில உணவு வகைகளை ஒரு முடியாகக் கட்டினான். அதே சமயம், சிவபக்தனான பந்தள மன்னன், முக்கண்ணனான சிவனின் அம்சம்போல் ஒரு தேங்காயை மற்றொரு முடியில் வைத்துக் கொடுத்தான். அந்த இருமுடிகளையும் இணைத்து திருமுடிமேல் ஏந்திய சிறுவன் மணிகண்டன், புலிப்பால் கொண்டுவர காட்டுக்குச் சென்றான். இருமுடியை முதன்முதலில் தலையில் ஏற்றியது ஸ்ரீஐயப்பன் என்று புராணம் கூறுகிறது. இவ்வாறு ஐயப்பன் செய்தது போலவே, இருமுடியை தலையில் தாங்கி ஐயப்பனை வழிபடும் முறையாக அதுமாறி, நாளடைவில் நிலைத்தும்விட்டது.

இரண்டாவது காரணம்

ஐயப்பனின் வளர்ப்புத் தந்தை பந்தளமகாராஜா ராஜசேகரன் ஐயப்பனை விட்டு பிரிந்து செல்லும் காலம் வந்தது. ஐயப்பன் பிரியும் நேரத்தில் மணிகண்டா, நீ காட்டுக்குள் குடியிருக்கப் போவதாய் சொல்கிறாய். அங்கே மலைகளைக் கடந்து வரவேண்டும். அவை சாதாரண மலையல்ல. வயதான நான் உன்னைக் காண எப்படி வருவேன் என்றார். அதற்கு மணிகண்டன் உங்களுக்கு ஒரு கருடன் வழிகாட்டும். அந்த வழிகாட்டுதலின்படி நீங்கள் எனது இடத்திற்கு வந்து விடலாம் என அருள்பாலித்தார். அதன்படி ஆண்டுக்கு ஒருமுறை ஐயப்பனைக் காண பந்தளராஜா மலைக்குச் செல்வார்.மகனை வெறுங்கையோடா பார்க்கச் செல்ல முடியும். அவனுக்கு பிடித்தமானவற்றை எல்லாம் எடுத்துச் செல்ல வேண்டாமா? என்ன கொண்டு செல்வது என யோசித்தார். நெய் இலகுவில் கெட்டு போகாத ஒன்று.எனவே நெய்யில் செய்த பலகாரங்களை கொண்டு செல்வார். மேலும் தனி நெய்யை தேங்காய்க்குள் ஊற்றி கொண்டு சென்றால் இன்னும் பல நாள் கெடாமல் இருக்கும். ஐயப்பனைக் காண செல்வதென்றால் எளிதான காரியமா? இன்று போல அன்று பஸ், ரயிலெல்லாம் கிடையாதே! எனவே பந்தளத்திலிருந்து நடந்தே மலை ஏறுவார். மலையை அடைய பல நாட்களாகும்.எனவே கெட்டுப் போகாத நெய்யை எடுத்துச் செல்லும் வழக்கம் உருவானது. இருமுடிகட்டில் முக்கியமானது நெய் தேங்காய்தான். அத்துடன் ஐயப்பன் அரண்மனையில் இருந்த போது அணிந்த நகைகளையும் எடுத்துச் சென்ற பழக்கம் நாளடைவில் உருவானது. அது இப்போது பெரும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. அன்று கருடன் வழிகாட்டுவது விசேஷ அம்சம். வயதான அவர் மலை ஏற முடியாமல் ஐயோ அப்பா என்று சொல்லியபடியே பல இடங்களில் உட்கார்ந்தும் விடுவார். இந்தச் சொற்களே திரிந்து ஐயப்பன் என ஆனதாகவும் சொல்லப்படுவதுண்டு…

இதுவே நாம் இருமுடியை எடுத்து செல்லும் காரணம்…. ஸ்வாமியே சரணம் ஐயப்பா…

 

இருமுடி கட்டுதலும் அதற்கு தேவையான பொருட்களும்

இருமுடி கட்டுதலும் அதற்கு தேவையான பொருட்களும் !!
🔥 ஐயப்பன் என்றால் அனைவருக்கும் ஞாபகம் வரும் ஒரே விஷயம் இருமுடி. ஐயப்பன் வழிபாட்டில் இருமுடி மிகவும் புனிதமானது. தனது உடலையும், உள்ளத்தையும் தூய்மையாக்கி மனம் உருகி ஐயப்பனை வேண்டும் பக்தர்கள், அய்யனின் திருமேனி அபிஷேகத்துக்கு நெய்யையும், பு+ஜை பொருட்களையும் கட்டி சுமந்து செல்வது தான் இருமுடி. இருமுடியை கோவிலில் வைத்தும் கட்டலாம். வீடுகளில் வைத்தும் கட்டலாம்.

🔥 வீடுகளில் வைத்து கட்டும் போது சபரிவாசனே அங்கு வாசம் செய்வான் என்று கூறுவார்கள். ஐயப்பனின் அருள் ஒளி வீசும். இருமுடி கட்டும் நாளில் வீட்டை சுத்தப்படுத்தி ஐயப்பன் படத்தை மலர்களால் அலங்காரம் செய்து படத்தின் முன்பு நெய்விளக்கேற்றி வைக்க வேண்டும். இருமுடி கட்டுவதற்காக வரும் குருசாமியை வாசலில் பாதபு+ஜை செய்து வீட்டிற்குள் அழைத்து வர வேண்டும்.

🔥 குருசாமி வந்ததும் பூஜைகளை தொடங்குவார். அப்போது ஐயப்பன் பக்தர்கள் பஜனை பாடல்களை பாடுவார்கள். இருமுடி கட்டும் பக்தர் குருசாமியின் அருகில் ஐயப்பன் படத்திற்கு முன்பு அமர்ந்து இருக்க வேண்டும். தேங்காயில் நெய்நிறைக்க தொடங்கும் போது நமது பிரார்த்தனைகளோடு சாமியே சரணம் என்றபடி தேங்காயில் நெய்யை நிறைக்க வேண்டும்.

🔥 நெய் நிறைந்ததும் அதை மூடி சந்தனம், குங்குமம் பு+சி ஒரு சிறிய பையில் வைப்பார்கள். அதற்குள் காணிக்கை பணமும், அன்னதானத்துக்கு சிறிதளவு அரிசியும் வைக்கப்பட்டு இருக்கும். வீட்டில் யாராவது நெய் நிறைக்க விரும்பினால் அவர்களும் நெய் நிறைத்து கொள்ளலாம். மற்றொரு சிறு பையில் பூஜை பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும்.

🔥 அதில் மஞ்சள் பொடி, பன்னீர், தேன், சந்தன வில்லைகள், குங்குமம், விபூதி, ஊது பத்தி, சாம்பிராணி, கற்பூரம், பேரீச்சம்பழம், உலர்ந்த திராட்சை, முந்திரி, கல்கண்டு, அச்சு வெல்லம், அவல், பொரி, கடலை, மிளகு, கல் உப்பு, எலுமிச்சம் பழம், வெற்றிலை பாக்கு, பாசிபருப்பு, வளையல், கண்ணாடி, சீப்பு, ரவிக்கை துணி ஆகியவை இடம் பெற்றிருக்கும்.

🔥 முன் முடியில் (இருமுடியில் முன்பக்கம் இருக்கும் கட்டு) நெய், தேங்காய் மற்றும் பூஜை பொருட்கள் வைத்து கட்டப்படும். பின் முடிக்குள் சபரிமலை தரிசனம் முடிந்து திரும்பும் போது பதினெட்டாம் படி அருகில் உடைக்கவும், வீட்டின் முன்பு உடைக்கவும் இரண்டு தேங்காய்களும் மற்றும் மாலை அணிந்தவருக்குத் தேவையான பொருட்களும் வைத்து கட்டப்பட்டிருக்கும்.

🔥 வசதி வாய்ப்புகள் இல்லாத காலத்தில் பின்முடியில் சமையலுக்கு தேவையான அரிசி மற்றும் வழியில் சாப்பிடுவதற்கு தேவையான தின்பண்டங்களையும் சுமந்து சென்றிருக்கிறார்கள். இருமுடி கட்டி முடித்ததும் வீட்டில் நம்மால் முடிந்த அளவு அன்னதானம் வழங்கலாம். இருமுடி கட்டை குருசாமி தூக்கி நமது தலையில் வைக்கும் போது அவரது பாதங்களை தொட்டு வணங்க வேண்டும்.

🔥 தலையில் இருமுடியை சுமந்ததும் வீட்டு வாசலில் தேங்காய் உடைத்து விட்டு திரும்பி பார்க்காமல் தலையில் இருமுடி கட்டும், மனதில் ஐயப்பன் நினைவுமாக புனித யாத்திரையை தொடங்க வேண்டும்.

🔥 இதனால் ஆண்டு தோறும் வீடுகளில் சகல ஐஸ்வரியமும் அதிகரித்து ஆண்டவனின் அருளும் நிறைகிறது. கோவில்களில் வைத்தும் இருமுடி கட்டி புறப்படலாம்.

🔥 பள்ளிக்கட்டு சபரிமலைக்கு… யாரைக் காண.. சுவாமியைக் காண… என்ற சரண கோஷத்தோடு மலை ஏறுவோம்! வாழ்வில் வளம் பெறுவோம்!

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!