Maasi Magam

மகிமை மிக்க மாசி மகம் (Maasi Magam) வழிபாடும் சிறப்பும் !

மாசி மகம்.. எதனால் சிறப்பு பெறுகிறது?
மாசி மகம்..!!
மாசி மகம் என்பது மாசி மாத பௌர்ணமியுடன் கூடிவரும் மக நட்சத்திர நாளில் கொண்டாடப்படும் ஒரு சிறப்பான நாளாகும். வரும் (24.02.2024) சனிக்கிழமை மாசி மகம் வருகிறது.

சிவன், விஷ்ணு, முருகனுக்கு உகந்த நாள் :

மகாவிஷ்ணு, உமாமகேஸ்வரன், முருகன் ஆகிய 3 தெய்வங்களுக்கும் உகந்த நாள் மாசி மகம்.

உமா தேவியார் மாசி மாதம் மக நட்சத்திரத்தில்தான் தட்சணின் மகள் தாட்சாயணியாக அவதரித்தார் என்பதால் மிகவும் புண்ணிய நாளாக கருதப்படுகிறது. இந்நாள் பெண்களுக்குரிய விரத தினமாகவும் போற்றப்படுகிறது. பாதாளத்தில் இருந்த பூமியை பெருமாள் வராக அவதாரம் எடுத்து வெளிகொணர்ந்த நாளும் மாசி மகத்தன்றுதான்.

இந்நாள் முருகப்பெருமானுக்கும் உகந்த நாளாகும். அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பன் என்ற பெயரும் முருகனுக்கு உண்டு. இதற்கு காரணமான தந்தைக்கு முருகன் மந்திர உபதேசம் செய்த நாளும் மாசி மகம்தான். முப்பெரும் தெய்வங்களுக்கு உகந்த இந்த நன்னாள், தோஷம் நீக்கும் புண்ணிய நாளாக கருதப்படுகிறது. இந்நாளில் புண்ணிய ஸ்தலங்களை தரிசிப்பதும், புண்ணிய நதிகள், தீர்த்தங்களில் நீராடுவதும் பாவங்களை போக்கும் என்பது ஐதீகம். கும்பகோணம், ராமேஸ்வரம் போன்ற இடங்களில் தர்ப்பணம், பிதுர்க்கடன் செய்வது நன்மை தரும்.

தோஷம் நீக்கும் மாசி மகம் :

பிற தலங்களில் செய்யும் பாவம் காசி தலத்தில் தீரும். காசியில் செய்த பாவம் கும்பகோணத்தில் நீங்கும் என்பதே கும்பகோணத்தின் சிறப்பு. மாசி மகம், மகா மகம் என்றாலே நினைவுக்கு வருவது கும்பகோணம் தான். கும்பகோணம் இத்தகைய சிறப்பு பெற்றுள்ளதற்கு ஒரு புராண வரலாறும் கூறப்படுகிறது.

முன்னொரு காலத்தில் பிரளயம் ஏற்பட்டு உலகம் அழியப் போகிறது என்பதை முன்கூட்டியே தெரிந்து கொண்ட பிரம்மா, உயிர்கள் அனைத்தும் அழிந்துவிடுமே என அஞ்சி சிவபெருமானிடம் முறையிட்டார்.

பல புண்ணிய தலங்களிலிருந்து மண், அமுதம், அனைத்து ஜீவராசிகளின் ஜீவ வித்துக்கள் அனைத்தையும் சேர்த்து ஒரு கும்பத்தில் வைத்து, அதை மங்கள பொருட்களால் அலங்கரித்து, அதன் நான்கு புறங்களிலும் வேத ஆகமங்களை வைத்து, வில்வத்தால் அர்ச்சனை செய்து மேருமலையில் வைத்துவிடும்படி, சிவபெருமான் பிரம்மனிடம் கூறினார். பிரம்மனும் அவ்வாறே செய்தார்.

பிரளயம் வந்தபோது அனைத்தும் வெள்ளத்தில் சிக்கி அழிந்தன. அமுதம் நிறைந்த குடத்தை வெள்ளம் உருட்டிச் சென்றது. அக்குடம் ஒரு இடத்தில் தடைபட்டு நின்றது. அந்த இடம்தான் கும்பகோணம்.

சிவபெருமான் வேடன் உருவங்கொண்டு, அக்கும்பத்தின்மீது அம்பெய்து அதை உடையச் செய்தார். குடம் உடைந்து அமுதம் வழிந்து எட்டுத் திசைகளிலும் பரவியது. குடத்தை அலங்கரித்திருந்த பொருட்கள் வௌ;வேறு இடங்களில் விழுந்து லிங்கங்களாக காட்சி அளித்தன. அதன்பிறகு பிரம்மா படைப்பு தொழிலை தொடங்க சிவபெருமானிடம் அனுமதி கேட்டார். சிவன் சம்மதிக்க, பிரம்மன் மனம் மகிழ்ந்து பூர்வ பட்சத்தில் வரும் அசுவதி நட்சத்திர நாளில் கொடியேற்றம் செய்து பெருமானையும், தேவியையும் எட்டு நாட்கள் வௌ;வேறு வாகனங்களில் எழுந்தருள செய்தார். ஒன்பதாவது நாள் மேருமலையை போல் உயர்ந்த தேர் செய்து, அதில் பஞ்ச மூர்த்திகளை எழுந்தருள செய்தார். பத்தாவது நாளான மக நாளில் பஞ்சமூர்த்திகளை வீதி உலா வர செய்து, மகா மக தீர்த்தத்தில் தீர்த்தம் கொடுக்கும் மாசி மக விழாவை ஆரம்பித்து வைத்தார். அந்த அடிப்படையில்தான் மாசி மக விழா ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.

இத்தினத்தில் தீர்த்த கரைகளில் தர்ப்பணம், பிதுர்க்கடன் ஆகியவை செய்தால் பாவங்கள் நீங்கி நற்கதி பெறுவர் என்பது நம்பிக்கை.
🙏🙏🙏🙏🙏

மக நட்சத்திரம் பெருமாளுக்கு உகந்த நாள். நீர் நிலை உள்ள இடங்களில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுவது வழக்கம். இப்படி தீர்த்தவாரிக்கு பெயர் பெற்ற 108 திவ்யதேசங்களில் ஒன்று மகாபலிபுரம். இங்கு மாசி மகத்தன்று நீராடுவது ராமேஸ்வரத்தில் நீராடிய பலனைத் தரும். இதற்குக் காரணமானவர் புண்டரீக மகரிஷிதான். திருப்பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள பெருமாளின் காலடியில் அன்றலர்ந்த தாமரை மலரை வைத்து வணங்க வேண்டும் என்ற ஆவலில் இவர் மாமல்லை கடற்கரையில் மலரை வைத்துவிட்டு, பாற்கடலுக்கு வழி ஏற்பாடு செய்ய முயற்சித்தார். அதற்காக கடல்நீரை தொடர்ந்து இரைத்துக் கொண்டிருந்தார். இவரின் தளரா முயற்சியையும் தாளாத பக்தியையும் கண்ட திருமால் ஒரு முதியவராக உருக்கொண்டு முனிவரிடம் வந்து, எனக்கு பசியும் களைப்புமாக உள்ளது. ஊருக்குள் சென்று உணவு வாங்கி வாருங்கள். அதுவரை நானே கடல்நீரை உமக்காக இரைக்கிறேன் என்று அனுப்பினார். முனிவரும் உணவு வாங்கிவந்து பார்த்தபோது கடல் உள்வாங்கி இருந்தது. முதியவரைக் காணோம். அப்போது ஒரு குரல் கேட்டது. முனிவர் அவ்விடத்தைப் பார்க்க, தான் வைத்த மலரை பாதங்களில் வைத்துக்கொண்டு திருமால் தரையில் பள்ளிகொண்டு ரிஷிக்கு காட்சி தந்தார். ஸ்ரீமன் நாராயணனே தன் திருக்கரத்தால் நீர் இரைத்த இந்த அர்த்தசேது கடலில் மகத்தன்று நீராடுவது பெரும் புண்ணியம்.

ராமர், ராவணனை வதம் செய்வதற்காக சிவனருள் பெற வேண்டி, அகத்திய முனிவரின் ஆலோசனையை நாடினார். அம்முனிவர், கும்பகோணம் வந்து சில காலம் தங்கி இத்தலத்திலுள்ள காசி விஸ்வேசுவரரை வழிபட்டால் உருத்திராம்சம் பெறலாம் எனக்கூறினார்.

அதன்படி ராமர் இங்கு வந்து விஸ்வேசுவரரை வழிபட்டு, தன் உடலில் உருத்திர அம்சம் ஆரோகணிக்கப் பெற்றார். அதன் காரணமாக இவ்விடமும் காரோணம் எனப் பெயர் பெற்றதாகக் கூறுவர். இதன் பழைய பெயர், திருக்குடந்தைக் காரோணம். மகாமகக் குளத்தின் வடகரையில் உள்ளது இக்கோயில். மாசிமகத்தில் விளக்கு ஏற்ற வேண்டும்.

ஸ்ரீரங்கத்திற்கு எவ்வளவு சிறப்புண்டோ அத்தனையும் கொண்ட சிறப்பான திவ்யதேசம் திருக்கோஷ்டியூர். மந்திர உபதேசம் வேண்டி ராமானுஜர், திருக்கோஷ்ட்டியூர் நம்பியை 18 முறை தேடி வந்தது இங்கு தான். உலகமக்கள் அனைவருக்கும் ஓம் நமோ நாராயணாய என்ற எட்டெழுத்து மந்திரத்தை ராமானுஜர் உபதேசித்ததால் (ஓம் என்பது ஓரெழுத்து) திருமந்திரம் விளைந்த திவ்யதேசம் என்ற பெருமை இதற்குண்டு.

பேரழகு கொண்டவர் என்பதால் இங்கிருக்கும் பெருமாளுக்கு சவுமியநாராயணர் என்பது திருநாமம். பொதுவாக கோயில்களில் உற்ஸவர் விக்ரகங்களை பஞ்சலோகத்தால் அமைப்பர். ஆனால், தூய்மையான வெள்ளியால் ஆன விக்ரகம் இங்குள்ளது. இதை தேவலோக இந்திரனே தந்ததாக ஐதீகம்.

இப்பெருமானைதிருமங்கையாழ்வார் வெள்ளியான் கரியான் மணிநிற வண்ணன் என்று போற்றுகிறார். இங்குள்ள தாயாருக்கு திருமாமகள், நிலமாமகள், குலமாமகள் ஆகிய பெயர்களுண்டு. மகாமகக்கிணறு என்னும் சிம்மக்கிணறு இங்குள்ளது. இதில் மாசிமகத்தில் நீராடுவது சிறப்பு. மாசிமகத்தன்று இங்கு தெப்பத்திருவிழா நடைபெறும். சவுமியநாராயணரிடம் ஏதாவது வேண்டுகோள் வைத்து அது நிறைவேறியவர்கள், தெப்பக்குளத்தில் தீபமேற்றி வழிபடுவது சிறப்பாகும். அந்த விளக்கை புத்திரபாக்கியம், திருமணம் போன்ற கோரிக்கைகளை வைப்பவர்கள் வீட்டிற்கு எடுத்துச்சென்று பூஜையறையில் வைத்துக்கொள்ளலாம். வேண்டுதல் நிறைவேறியதும், அடுத்த மாசிமகத்தன்று மீண்டும் அந்த விளக்குடன் மேலும் 3 அல்லது 5 அகல் விளக்குகளை ஏற்றி வைப்பது மரபாகும்.

Leave a Comment