செல்வம் மூன்று வகைகளில் வரும்…  செல்வம் வரும் மூன்று வழிகளை தெரிந்து கொள்ளுங்கள். Prosperity ways

1. லட்சுமி செல்வம்,
2. குபேர செல்வம்,
3. இந்திர செல்வம் எனப்படும்.

லட்சுமி செல்வம் :
பாற்கடலை, மந்தார மலையை மத்தாகவும் வாசுகி பாம்பைக் கயிறாகவும் கொண்டு தேவர்கள் வாலையும் அசுரர்கள் தலையையும் பிடித்துக் கடைய, சந்திரன், ஐராவதம், காமதேனு, தன்வந்திரி இவர்களுடன் மகாலட்சுமியும் வெளிப்பட்டாள். இந்த மகாலட்சுமிதான் இந்திரன் இழந்த செல்வத்தை மீண்டும் அவனுக்குக் கொடுத்தாள்.

மேலும் குபேரனை அளகாபுரிக்கு அதிபதியாக ஆக்கினாள். கிருஷ்ணனின் நண்பனான குசேலனுக்கு அளவற்ற நிதியைக் கொடுத்தாள். இவளின் கடைக்கண் பார்வை தன்மேல் விழாதா என ஏங்கித் தவிக்கும் உள்ளங்கள் பல. இந்த மகாலட்சுமியின் அருளைப் பெற்றவர்களுக்கு பதினாறு வகையான பேறுகளும் வந்து சேரும்.

லட்சுமி செல்வத்தைப் பெற்றவர்களுக்கு மதி மயக்கம் தோன்றாது. இந்தச் செல்வத்தைப் பெற்றவர்கள் மற்ற மனிதர்களின் மனம் கோணாமல் நடந்து கொள்வார்கள். தர்ம வாழ்வை மேற்கொள்வார்கள். இந்த செல்வம் ஏழுதலை முறையையும் தாண்டி நிலைத்து நிற்கும். இந்த செல்வம் வளர்பிறை சந்திரனைப் போன்று ஓங்கி வளரும். இயல்பிலேயே கொடை உள்ளம் கொண்டவர்களின் மீதுதான் லட்சுமியின் கடைக்கண் பார்வை படும்.

குபேர செல்வம் :
குபேரனின் தகப்பனார் ஒரு ரிஷி. தாயாரோ அசுர குலத்தைச் சேர்ந்தவர். குபேரன் ராவணனுக்கு சகோதர முறை. அந்தச் சகோதரனாலேயே இவரது நகரம் கைப்பற்றப்பட்டு விட, லட்சுமியின் அருளால் தனி நகரத்தை ஏற்படுத்திக் கொண்டார். இவர் தவம் செய்து அந்தத் தவ பலத்தினால் சங்கநிதி, பதுமநிதி போன்ற நவநிதிகளுக்கும் அதிபதியானார்.

குபேரனை ஒருவர் மனமுருகிப் பிரார்த்தித்தால், குபேரன் வழங்கும் குபேர செல்வம் அந்த பக்தருக்கு திடீர் செல்வமாக வந்து சேரும். அதாவது லாட்டரி, அறக்கட்டளை களை ஏற்படுத்தி அடையும் சுய லாபம் போன்றவையே அச்செல்வங்கள். திடீரென இந்த செல்வம் எப்படி ஒருவருக்கு வந்ததோ அதைப் போன்றே விரைவில் மறைந்துவிடவும் செய்யும்.

எனவே இத்தகைய செல்வத்தை பெற்றவர்கள் மிகுந்த எச்சரிக்கையோடு மரம் நடுதல், அன்னதானம், படிக்கும் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்குதல், ஏழைப் பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பது போன்ற பொதுக் காரியங்களுக்குச் செலவழிக்க வேண்டும். மூன்று தலை முறைகள் வரையிலாவது அந்த செல்வம் கீழிறங்காமல் நிலைத்திருக்கும்.

இந்திர செல்வம் :
போகி என்ற பண்டிகையை இந்திரனை முன் வைத்தே கொண்டாடுகிறோம். கிழக்கு திக்கின் அதிபதியாகத் திகழும் இந்திரன், தேவர்களின் தலைவனும் கூட, இந்திரனைப் பிரார்த்திப்பவர்கள் வெகு சிலரே. பசு, வீடு, அரச போகம் மற்றும் பொன் பொருள் சேர்க்கை போன்றவை இந்திர சம்பத்தின் அடையாளங்கள்.

இந்திரன் அருளால் அடையும் செல்வம் மூன்று தலைமுறைகள் வரை வருவது அரிதிலும் அரிது. சிலருக்கு ஒரே தலை முறையில் கூட மறைந்துவிடும். இந்தச் செல்வம் நிலைக்க விரும்புபவர்கள் கிரிவலம் வருதல், குல தெய்வத்தைப் பூஜித்தல் போன்ற நற்காரியங்களில் ஈடுபட்டால் நலம் விளையும்.
வாழ்க வளமுடன் !

English Overview : Here, we have given some information on how to become rich and the ways for prosperity.

Leave a Comment