சூரிய வழிபாடு பற்றிய 40 தகவல்கள் sun god

காலையில் நீராடிவிட்டு இளஞ்சூரியனை வழிபாடு செய்வது நம் பாரம்பரிய வழிபாட்டு முறைகளில் ஒன்று. இயற்கை வழிபாட்டில் சூரியவழிபாடே முதல் வழிபாடாகும்.

1. சூரியக் கடவுள் ‘கொடிநிலை’ என்ற பெயரால் அழைக்கப்பட்டதாக தொல்காப்பியத்தில் குறிக்கப்பட்டிருக்கிறது. சிலப்பதிகாரத்தில் சூரிய கோவில் உச்சிகிழான் கோட்டம் என்ற பெயரால் குறிக்கப் பெறுகிறது.

2. உலகில் எழுந்த பழமையான நூலான ரிக் வேதத்தில் சூரிய வழிபாடு குறிக்கப்பட்டிருக்கிறது. சௌராஷ்டிரம் என்ற பாரத வர்ஷத்தின் ஐம்பத்தி இரண்டு நாடுகளில் ஒன்று சூரிய வழிபாட்டின் அடிப்படையில் எழுந்த பெயராகும்.

3. ஐரோப்பா, தென் அமெரிக்கா, சீனா முதலிய நாடுகளில் சிதைந்த நிலையில் சூரியனார் கோவில்கள் உள்ளன.

4. ரிக்வேதம் சூரியனை மூன்றுவித அக்னியில் ஒன்றாகவும், யஜுர்வேதம் சகல உலகங்களையும் ஒளிபெறச் செய்பவன் என்றும், அதர்வண வேதம் சூரியனை வழிபட்டவர்கள் இதயநோயிலிருந்து விடுபடுவர்.

5.சூரியன் காலையில் ரிக் வேத சொரூபியாகவும் மதியத்தில் யஜுர் வேத சொரூபியாகவும் மாலை வேளையில் சாம வேத சொரூபியாகவும் திகழ்கிறான்.

6. “ஆதித்யானாம் அஹம் விஷ்ணு’ என்கிறார் பகவத்கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர். இதன் அர்த்தம் “நானே சூரியனாகத் திகழ்கிறேன் என்பதாகும்.

7. சூரியன், ஒவ்வொரு பருவ காலத்திலும் ஒவ்வொரு நிறத்தில் காட்சி தருகிறார். வசந்த காலத்தில் தங்க நிறத்திலும், வெயில் காலத்தில் செண்பகப்பூ நிறத்திலும், மழைக்காலத்தில் வெண்மை நிறத்திலும், கார்காலத்தில் கருமை நிறத்திலும், முன்பனிக் காலத்தில், தாமரை நிறத்திலும், பின்பனிக் காலத்தில் சிவப்பு நிறத்திலும் விளங்குவதாக வேதங் கள் கூறுகின்றன.

8. சூரியன் ஏழு குதிரைகள் பூட்டிய “காலம்‘ என்ற ஒற்றைச் சக்கர தேரில் பவனி வருபவராக புராணங்கள் கூறுகின்றன. இந்த ரதத்தை ரதசப்தமியன்று விஷ்ணு சூரியனுக்கு அளித்தார். ரத சாரதியாக காசியப முனிவரின் மகனான அருணன் விளங்குகிறார். இவருக்கு இடுப்புக்குக் கீழே அங்கங்கள் கிடையாது. வைரோஜன யோகத்தில் ரதத்தைச் செலுத்தி, சூரிய பகவானுக்கு உறுதுணையாக இருக்கிறார்.

9. சூரிய ரதத்தின் ஏழு குதிரைகளை காயத்ரி, பிருகதி, உஷ்ணிக், ஜகதி, திருஷ்டுப், அனுஷ்டுப், பங்கிதி என்று அழைப்பர். இவை, வாரத்தின் ஏழு நாட்களைக் குறிக்கின்றன.

10.ஸ்ரீ மகாவிஷ்ணுவைப் போல் சூரியனுக்கு சங்கும், சக்கரமும் உண்டு. அதனால் வைஷ் ணவர்கள் சூரியனை “சூரியநாராயணன்’ என்று போற்றுகின்றனர்.

11. சிவ ஆகமங்களில் சூரிய மண்டலத்தின் நடுவே சிவபெருமான் உறைந்திருப்பதாக கூறுகின்றன. சூரியன் சிவனின் அஷ்டமூர்த்தங்களில் ஒருவராகவும், வலது கண்ணாகவும் இருக்கிறார். அதனால் தான் சைவர்கள் “சிவசூரியன்’ என்று போற்றுகின்றனர்.

12. சூரியனின் தேர் தெற்கில் பயணிக்கும் காலத்தை தட்சிணாயனம் என்றும், வடக்கு நோக்கி பயணிக்கும் காலத்தை உத்ராயணம் என்றும் கூறுவர்.

13.தைமாதம் சூரியனின் தேர் பாதை தெற்கிலிருந்து வடக்கு நோக்கி மாறும் அன்றைய நாளுக்கு “ரதசப்தமி’ என்று பெயர். அன்று சூரியனை வழிபட்டால், சகல சௌபாக்கியங்கள் கிட்டும்.

14. ஸ்ரீ ராமசந்திரமூர்த்தி உலகின் நலனைக் கருதி ராவணனை வெல்ல முனைந்தபோது ஸ்ரீ ராமனுக்கு கவசமாக, பாதுகாப்பாக, ஆதித்ய ஹ்ருதயத்தை அகஸ்தியர் உபதேசித்தார்.

15. வேதியர்கள் தினமும் ஓதும் காயத்ரி மந்திரம் சூரியனுக்குரியதே. ஆதித்ய ஹ்ருதயமும் காயத்ரி மந்திரமும் நமக்கு சிறந்த ஆரோக்கியத்தையும் அறிவுத் திறனையும் வாழ்வில் வெற்றியையும் கொடுக்கக் கூடியவையாகும்.

16. இந்தியாவில் சூரியனுக்கென்று தனியே ஒருசில ஆலயங்களே உள்ளன. இவற்றுள் மிக முக்கியமானது, ஒரிசாவில் கோனார்க், கயாவில் தட்சிணார்க்கா, ஆந்திராவில் அரசவல்லி, குஜராத்தில் மொதேரா, அஸ்ஸலமில் சூர்யபஹார், மத்திய பிரதேசத்தில் உனாவோ, கேரளாவில் ஆதித்யபுரம், காஷ்மீர், ஸ்ரீநகரில் 2000 ஆண்டுகள் பழைமையான “மார்த் தாண்டா’ ஆலயம் ஆகியவையாகும்.

17. நம் ஆரோக்கியத்துக்கும் அதி பதியாக இருப்பவர் சூரிய பகவான்! ‘சுகத்துக்கு சூரிய பகவானை வணங்கு’ என்று மந்திர சாஸ்திரங்கள் சொல்கின்றன.

18.காலை 7 மணிக்குள்ளும் மாலை 5 மணி முதல் 6 மணிக்குள்ளும் சூரிய வெளிச்சத்தில், சிறிது நல்லெண்ணெயை உடல் முழுவதும் தடவிக் கொண்டு, ஒரு மணி நேரம் அமர்ந்திருந்தால் நெடுநாட்களாக நம்மை விட்டு விலகாத நோய்கள் குணமாகி விடும்.

19. சூரிய வழிபாட்டு முறையைக் கடைப்பிடிக்கும் சீனர்களும் ஜெர்மானியர்களும் தங்கள் வாழ்நாளை அதிகப்படுத்திக் கொள்கின்றனர். நல்ல ஆரோக்கியத்துடன் திகழ்பவர்கள் மட்டுமல்லாமல், நீண்ட நாட்களாக தீராத வியாதியால் அவதிப்படுகிறவர்களும், பூப்படையாத பெண்களும், முக்கியமாக கண்பார்வை மங்கியவர்களும் ஞாயிற்றுக்கிழமைதோறும் இந்த வழிபாட்டைச் செய்வது மிகவும் நல்லது.

20. கி.மு.2000-க்கு முன்பே சூரியன், அக்னி, வருணன் ஆகியோரை உலகத்தினர் வழிபட்டு வந்துள்ளனர்.

21. உபநிஷத்துக்களும் புராண இதிகாசங்களும் சூரியனின் புகழைப் பேசுகின்றன.

22.வேதகால ரிஷிகள், “சூரியனே தண்ணீருக்கெல்லாம் ஆத்மா” என்று குறிப்பிடுகிறார்கள்.

23. சூரிய ஒளியில் நிறப்பிரிகை ஏற்பட்டால் ஏழு வண்ணமாகப் பிரிகிறது. ஏழு வண்ண ஒளியின் சேர்க்கையே சூரிய ஒளி. சூரியனுக்கு ஏழு குதிரைகள் என்று வேதம் வர்ணிப்பதன் சூட்சுமம் இதுவே. குதிரையை அசுவம் என்பர். அசுவம் என்ற சொல்லுக்கு வர்ணம் என்றும் பொருளுண்டு.

24. சூரிய வழிபாட்டினால் தோல் நோய், கண் நோய்கள் குணமாகிவிடும் என்று பாரசீகர்கள் நம்பினார்கள். பாரசீக மத குருக்களான மாகாஸ்கள், சூரிய வழிபாட்டின் மூலம் சிகிச்சை செய்யும் மருத்துவர்களாக விளங்கினர்.

25. சூரியனைப் பரம்பொருளாக “ஆதித்ய ஹிருதயம்” கூறுகிறது. “மார்க்கண்டேய புராணம்”, “பவிஷ்ய புராணம்” முதலியவை சூரிய வழிபாட்டை விவரிக்கின்றன. மந்திரங்களில் மிக சக்தி வாய்ந்ததாகக் கருதப்படும் “காயத்ரி” சூரியனுக்கு உகந்த மந்திரம்.

26. சூரிய வழிபாடு “சௌர மதம்” என்ற பெயரில் ஷண்மதங்களுள் ஒன்றாக இருந்து வந்திருக்கிறது. சௌர மதம் ஒரு காலத்தில் உலகளாவிய மதமாகவும் பரவியிருந்தது.

27. ஆதிகாலத்தில் சௌர மதத்தினர் சூரியனுக்கு ரத்த அர்க்கியம் கொடுத்து வழிபட்டார்கள். ஆதிசங்கரர்தான் இதை மாற்றினார்.

28. அந்தக் காலத்தில் ரிஷிகள் சூரிய கிரணங்களை “ஜீவத்திறல்” என்றும் “ஆயுளை வளர்க்கும் அன்னம்” என்றும் போற்றினார்கள்.

29. சூரிய வழிபாட்டினை உலகம் முழுவதும் கடைப்பிடிக்கிறார்கள். எகிப்தியர்கள் சூரியனை ஆமன்-ரா (ஆரோக்கியம் தருபவன்) என்று போற்றுகிறார்கள். கிரேக்கர்கள் “போபஸ்- அப்போலோ’ என்றும், ஈரானியர்கள் “மித்ரா’ என்றும் அழைக்கிறார்கள்.

30. நைல் நதிக்கரையில் வாழ்பவர்கள் சூரிய வழிபாடு செய்தபின்தான் அன்றைய பணியைத் தொடங்குவதை வழக்கத்தில் வைத்திருந்தனர்.

31. கருங்கடல் கரையோர நாடுகளில் கி.மு. 3,000 ஆண்டுகளுக்கு முன்னரே சூரிய வழிபாடு மேற்கொள்ளப்பட்டதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

32. எகிப்தில் கி.மு. 14-ஆம் நூற்றாண்டிலேயே சூரிய வழிபாடு மேற்கொள்ளப்பட்டதற்குச் சான்றாக பிரமிடுகள், புராதனக் கலைப்பொருட்கள், கட்டடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

33. ஈரானில் கி.மு. 551-லும், சுமேரியாவில் கி.மு. 4000-லும், மேற்கு ஐரோப்பாவில் கி.மு. 2000-லும் சூரிய வழிபாடு நடந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன..

34. கேரளாவில் தைப்பொங்கலை முன்னிட்டு பகவதி அம்மன் கோவில்களில் பொங்கல் படைத்து வழிபடுவர்.

35. ஆந்திராவில், பெருமாள் கோவில்களில் சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் நடைபெறும்.

36. கர்நாடகாவில் பொங்கல் திருநாளை முன்னிட்டு கரும்புகளினால் பந்தலிட்டு சூரியனுக்குப் பொங்கல் படைத்து வழிபடு வது வழக்கம்.

37. மகாராஷ்டிராவில் மூன்று நாட்கள் பொங்கல் விழா கொண்டாடுவர். அப்போது எள்ளுருண்டை முக்கியத்துவம் பெறுகிறது. முதல் நாள் போகி அன்று எள் சேர்த்து கேழ்வரகு மாவு ரொட்டியும், காய்கறி கூட்டும் சமைத்து இறைவனுக்குப் படைத்து உண்பர். இரண்டாம் நாள் சங்கராந்தியன்று இனிப்பு, பழங்கள், கரும்புகள், பொங்கல் படைப்பர். மூன்றாம் நாள் கிங்கராந்தியன்று வடை செய்வார்கள். தை மாதம் குளிராக இருப்பதால் வழிபாட்டில் எள்ளுருண்டை முதலிடம் பெறுகிறது.

38. அஸ்ஸாம் மற்றும் மணிப்பூர் மாநிலங் களில் “போகாலிபிஹூ’ என்ற பெயரில் அறுவடைத் திருவிழா கொண்டாடுவர்.

39. உத்திரப்பிரதேசத்தில் பொங்கலன்று வீட்டுக்கு வருபவர்களை கரும்புத்துண்டுகள் மற்றும் தாம்பூலத்துடன் ஆசீர்வதிப்பர்.

40 .உலகெங்கும் வாழும் இலங்கைத் தமிழர்கள், மார்கழி மாதம் முழுவதும் வீட்டு வாசலில் சாணத்தால் பிள்ளையார் பிடித்துவைப்பர். அதனைச் சேர்த்து வைத்து பொங்கலுக்கு மறுநாள் பிள்ளையார் பொங்கல் கொண்டாடுவர். சாணப்பிள்ளையாரை ஆற்றில் கரைத்துவிடுவார்கள்.

ஆதித்ய ஹ்ருதயம் ஸ்தோத்திரம்

Leave a Comment