Magara rasi palangal Ragu ketu peyarchi 2017

மகரம்: ராகு – கேது பெயர்ச்சி பொதுப்பலன்கள் (27.07.2017 முதல் 13.02.2019 வரை)

உலகில் திரும்பக் கிடைக்காத ஒரே சிம்மாசனம் தாயின் மடிதான் என்பதை அறிந்தவர்கள் நீங்கள்! உங்களுக்கு 27.07.2017 முதல் 13.02.2019 வரை உள்ள காலகட்டங்களில் ராகுவும் கேதுவும் என்ன செய்யப் போகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

ராகுவின் பலன்கள்

இதுவரை உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் அமர்ந்து நின்று காரியத்தடைகளையும் மன உளைச்சலையும் கொடுத்துவந்த ராகு பகவான், இப்போது ராசிக்கு ஏழாம் வீட்டில் வந்து அமர்கிறார். உங்களின் அறிவாற்றலை மழுங்க வைத்தவர், இப்போது உங்களுக்கே தெரியாமல் உங்களுக்குள் மறைந்து கிடக்கும் திறமைகளை வெளிக்கொண்டுவரப் போகிறார்.

வீண் விவாதங்கள், அலைச்சல்கள், கோபதாபங்கள் எல்லாம் குறையும். கணவன், மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு. என்றாலும் களத்திர ஸ்தானமான ஏழாம் வீட்டில் அமர்வதால் மனைவியுடன் வரும் சின்ன சின்னப் பிரச்சினைகள் பெரிதாகாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அவர்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். எந்த விஷயமாக இருந்தாலும் சுயமாக யோசித்து முடிவெடுக்கப் பாருங்கள். குழந்தை பாக்கியம் உண்டு. நண்பர்களுடன் வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கப் பாருங்கள். வருமானம் அதிகரித்தாலும் சேமிக்க முடியாமல் கையிருப்பு கரையும். திடீர் பயணங்களுக்குக் குறையிருக்காது.

ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்

புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் 27.07.2017 முதல் 04.04.2018 வரை ராகு பகவான் செல்வதால் தந்தையாரின் ஆரோக்கியம் மேம்படும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். புதிதாக வீடு, மனை வாங்குவீர்கள். திடீர்ப் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். ஷேர் மூலம் பணம் வரும். அரசு காரியங்கள் விரைந்து முடியும்.

சனியின் பூசம் நட்சத்திரத்தில் 05.04.2018 முதல் 10.12.2018 வரை ராகு பகவான் செல்வதால் உங்களின் அழகு, இளமை கூடும். சோர்ந்திருந்த நீங்கள் சுறுசுறுப்பாவீர்கள். பணவரவு எதிர்பார்த்த வகையில் திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். அரசால் ஆதாயம் உண்டு. நிர்வாகத் திறமை கூடும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

குரு பகவானின் புனர்பூசம் நட்சத்திரத்தில் 11.12.2018 முதல் 13.02.2019 முடிய ராகு பகவான் செல்வதால் இளைய சகோதரர் வகையில் உதவிகள் கிடைக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

வியாபாரத்தில் போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் உங்கள் அணுகுமுறையை மாற்றுவீர்கள். புதிய முதலீடுகளைப் பற்றி யோசிப்பீர்கள். வேலையாட்களிடம் தொழில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். பழைய பாக்கிகள் கைக்கு வரும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களிடம் காரசாரமான விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. கடையை அவசரப்பட்டு வேறு இடத்துக்கு மாற்ற வேண்டாம்.

இருக்கிற இடத்திலேயே தொடர்வது நல்லது. உத்தியோகத்தில் மேலதிகாரியின் போக்கை அறிந்து நடந்துகொள்வீர்கள். உங்களின் கடின உழைப்புக்கேற்றாற்போல் பதவி உயர்வும் அடைவீர்கள். சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் மூக்கை நுழைக்காதீர்கள். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடுவதற்கு முன் படித்துப் பாருங்கள். உங்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான பதவி உயர்வு, சம்பள உயர்வைக்கூடப் போராடிப் பெற வேண்டி வரும்.

கேதுவின் பலன்கள்

இதுவரை உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் நின்று கொண்டு உங்களைப் பக்குவமில்லாமல் பேசவைத்த கேது பகவான், இப்போது உங்கள் ராசியிலேயே வந்தமருவதால் இனி சமயோஜிதப் புத்தியுடன் பேசவைப்பார். எப்போது பார்த்தாலும் எதிர்மறையாகச் சிந்தித்த நீங்கள் இனி ஆக்கப்பூர்வமாகச் செயல்படுவீர்கள். குடும்பத்தினரின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளப் பாருங்கள். பிள்ளைகளின் வருங்காலத்தைக் குறித்த கவலைகள் அவ்வப்போது வந்து போகும்.

ராசிக்குள் கேது அமர்வதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்ததையும் உட்கொள்ள வேண்டாம். அவ்வப்போது கோபப்படுவீர்கள். சாப்பாட்டில் உப்பைக் குறைத்துக் கொள்ளுங்கள். யாருக்காகவும் ஜாமீன், உத்தரவாதக் கையெழுத்திட வேண்டாம். தன்னம்பிக்கை குறையும். முடிந்தவரை இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்

செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் 27.07.2017 முதல் 29.11.2017 வரை கேது பகவான் செல்வதால் வீடு, வாகனப் பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். தாயாருடன் கருத்து மோதல்கள் வரும். மூத்த சகோதரர் வகையில் அலைச்சல்கள் வந்து போகும். இந்தக் காலக்கட்டத்தில் அவிட்டம் 1, 2-ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு நட்சத்திரத்திலேயே கேது செல்வதால் சிறு சிறு விபத்து, தூக்கமின்மை வந்துபோகும். வீடு மனை வாங்குவதாக இருந் தால் தாய்ப் பத்திரத்தைச் சரிபார்ப்பது நல்லது.

சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் 30.11.2017 முதல் 06.08.2018 வரை கேது செல்வதால் மனைவிவழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பழைய நகையை மாற்றி புது டிசைனில் வாங்குவீர்கள். அரசாங்க அதிகாரிகளின் ஆதரவு உண்டு. திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இக்காலக்கட்டத்தில் உங்களின் நட்சத்திரத்திலேயே கேது செல்வதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது.

07.08.2018 முதல் 13.02.2019 வரை கேது செல்வதால் திட்டமிட்ட காரியங்கள் தாமதமாகும். குடும்பத்தில் கணவன்-மனைவிக்குள் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. பிள்ளைகளிடம் கோபத்தைக் காட்டாதீர்கள். ஆரோக்கியக் குறைவு ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமாக இருங்கள். இந்த ராகு-கேது மாற்றம் வேலைச்சுமையையும் விவாதங்களையும் தந்தாலும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையால் வெற்றியையும் தரும்.

பரிகாரம்: திருவாதிரை நட்சத்திரம் நடைபெறும் நாட்களில் ராமானுஜரை மலர்மலை அணிவித்து வணங்குங்கள். கொய்யா மரக்கன்று நட்டுப் பராமரியுங்கள். மனநிம்மதி உண்டாகும்.

 

Comments

comments

Leave a Comment