Thanusu rasi palangal Ragu ketu peyarchi 2017

தனுசு: ராகு – கேது பெயர்ச்சி பொதுப்பலன்கள் (27.07.2017 முதல் 13.02.2019 வரை)

வளைந்துத் தாக்கும் கருவியான வில்லை ராசியாக கொண்டவர்களே! உங்களுக்கு இந்த ராகுவும், கேதுவும் இணைந்து 27.07.2017 முதல் 13.02.2019 வரை உள்ள காலகட்டங்களில் எப்படிப்பட்ட பலன்களை தரப்போகிறார்கள் என்பதை பார்ப்போம்.

ராகுவின் பலன்கள்

இதுவரை உங்கள் ராசிக்கு ஒன்பதில் அமர்ந்து கொண்டு வருமானத்திற்கு வழியே இல்லாமல் தடுமாற வைத்த ராகு பகவான் இப்பொழுது எட்டாம் வீட்டில் சென்று மறைகிறார். ராகு எட்டில் மறைவதால் அல்லல்பட்ட உங்கள் மனம், இனி அமைதியடையும். பாதியிலேயே தடைபட்டுப் போன வேலைகளையெல்லாம் இனி பரபரப்புடன் முடித்துக் காட்டுவீர்கள். உங்கள் முகம் பளிச்சிடும்.

வீட்டில் தள்ளிப் போய் கொண்டிருந்த சுபநிகழ்ச்சிகள் இனி சிறப்பாக நடக்கும். அடிக்கடி தந்தையாருடன் வீண் வாக்குவாதங்களும் மனக்கசப்புகளும் வந்துகொண்டிருந்ததே! அவரின் உடல்நிலையும் அவ்வப்போது பாதிக்கப்பட்டாதே, இனி அவரின் ஆரோக்யம் மேம்படும். அப்பா, மகனின் உறவு இனிக்கும். தந்தைவழி சொத்திலிருந்த சிக்கல்களெல்லாம் விலகி உங்கள் கைக்கு வந்துசேரும். ஆனால் எதிர்பாராத வகையில் செலவு மற்றும் திடீர் பயணங்கள் அதிகரிக்கும். கணவன் – மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. உறவினர்கள், நண்பர்களிடம் குடும்ப விஷயங்களை சொல்லி ஆறுதல் தேடாதீர்கள்.

மனைவியின் ஆரோக்கியத்தில் அக்கறையாக நடந்துக் கொள்ளுங்கள். வெளிமாநில புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். உணவு விஷயத்தில் முடிந்த வரையில் அசைவ, கார உணவு வகைகளை தவிர்த்துவிட்டு, காய்கறி, கீரை வகைகளை அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள். வேற்றுமொழிப் பேசுபவர்களால் ஆதாயம் உண்டு. சிலர் வீடு மாற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும்.

ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்

புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் 27.07.2017 முதல் 04.04.2018 வரை ராகுபகவான் செல்வதால் கணவன்- மனைவிக்குள் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். உத்யோகத்தில் வேலைச்சுமை இருந்துக் கொண்டே இருக்கும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளப்பாருங்கள். தங்க ஆபரணங்களை இரவல் கொடுக்கவோ,வாங்கவோ வேண்டாம். மூத்த சகோதரர் உதவுவார்.

சனியின் பூசம் நட்சத்திரத்தில் 05.04.2018 முதல் 10.12.2018 வரை ராகுபகவான் செல்வதால் வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். தைரியமாக புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். குடும்பத்தில் அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் மகிழ்ச்சி தங்கும். ஆபரணங்கள் சேரும். புது வாகனம் வாங்குவீர்கள். இளைய சகோதரர் உதவுவார். வழக்கு சாதகமாகும். இடவசதியான வீட்டிற்கு மாறுவீர்கள். பணவரவு அதிகரிக்கும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும்.

குருபகவானின் புனர்பூசம் நட்சத்திரத்தில் 11.12.2018 முதல் 13.02.2019 முடிய ராகு பகவான் செல்வதால் சோர்ந்து கிடந்த உங்கள் முகம் மலரும். அழகு, ஆரோக்கியம் கூடும். புதிதாக வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். பழைய வாகனத்தை மாற்றி, புது வாகனம் வாங்குவீர்கள். குழந்தை பாக்கியம் உண்டாகும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலையை அறிந்து பொறுப்பாக நடந்துகொள்வார்கள். உங்கள் மகனுக்கு எதிர்பார்த்த கல்வி பிரிவில் இடம் கிடைக்கும்.

வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிப்பீர்கள். வேலையாட்களின் ஆதரவு கிட்டும். பழைய சரக்குகள் விற்றுத் தீரும். மற்றவர்களை நம்பி பெரிய முதலீடுகளைப் போடாதீர்கள். வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பேசுங்கள். வேலையாட்களின் ஆதரவு உண்டு. என்றாலும் அவர்களைக் கண்காணிப்பது நல்லது. கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் எதற்கெடுத்தாலும் குறை சொல்லிக் கொண்டுத்தானே இருந்தார்கள். உத்யோகத்தில் மேலதிகாரியின் அடக்கு முறை மாறும். இனி உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். சலுகைகளுடன், பதவியும் உயரும். மேலதிகாரியின் சொந்த விஷயங்களில் தலையிடுமளவிற்கு நெருக்கமாவீர்கள். இழந்த சலுகையை மீண்டும் பெறுவீர்கள்.

கேதுவின் பலன்கள்

இதுவரை உங்கள் ராசிக்கு மூன்றாவது வீட்டில் அமர்ந்து கொண்டு மன தைரியத்தையும், தன்னம்பிக்கையையும், விடாமுயற்சியையும் கொடுத்து வந்த கேது பகவான், இப்போது ராசிக்கு இரண்டாவது வீட்டில் நுழைகிறார். சாதுர்யமான பேச்சால் சாதிக்கப் பாருங்கள். ஆனால் சில நேரங்களில் வீண் வம்பில் சிக்கிக் கொள்வீர்கள். பல் வலி, பார்வைக் கோளாறு வந்து நீங்கும். சேமிப்புகள் கரையும் அளவிற்கு அத்தியாவசியச் செலவுகள் அதிகமாகும்.

மகனின் கல்யாணப் பேச்சுவார்த்தையிலிருந்த சிக்கல்கள் நீங்கித் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். மகளுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். உங்களை சிலர் குறைத்து மதிப்பீடார்களே! இப்பொழுது அவர்கள் ஆச்சர்யப்படும்படி பல விதங்களில் சாதிப்பீர்கள். விலை உயர்ந்த பொருட்களை கவனமாகக் கையாளப்பாருங்கள். வழக்குகளில் அலட்சியப் போக்கு வேண்டாம். தேவைப்பட்டால் வழக்கறிஞரை மாற்றுங்கள். வறட்டு கவுரவத்திற்கும், போலிப் புகழ்ச்சிக்கும் மயங்காதீர்கள். தேடிக்கொண்டிருந்த தொலைந்துப் போன பழைய ஆவணம் ஒன்று கிடைக்கும். அயல்நாட்டுப் பயணங்கள் தேடி வரும். வாகனத்தை கவனமாக இயக்கப்பாருங்கள். தூக்கமின்மை, மன உளைச்சல் வந்துபோகும்.

கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்

செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் 27.07.2017 முதல் 29.11.2017 வரை கேது பகவான் செல்வதால் மதிப்பு, மரியாதைக் கூடும். சொத்துப் பிரச்சினை தீரும். அரசால் ஆதாயமடைவீர்கள். திடீர் பணவரவு உண்டு. பழைய கடனைத் தீர்க்க புது உதவிகள் கிடைக்கும். பிள்ளைகள் உங்கள் பேச்சுக்கு மதிப்பு, மரியாதை அளிப்பார்கள். சகோதரர்கள் உதவுவார்கள்.

சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் 30.11.2017 முதல் 06.08.2018 வரை கேது செல்வதால் கொஞ்சம் அலைச்சல் இருக்கும். குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளியிட வேண்டாம். யாரையும் விமர்சித்துப் பேசாதீர்கள். சொந்த வாகனத்தில் இரவு நேரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. விலை உயர்ந்த பொருட்களை இரவல் தர வேண்டாம். பணப் பற்றாக்குறை நீங்கும். முன்கோபத்தை குறைப்பது நல்லது. வேலைக் கிடைக்கும். வேற்று மதம், மொழியினரால் ஆதாயம் உண்டு. கூடாப் பழக்க வழக்கங்கள் இலவசமாக நுழையப் பார்க்கும். கவனமாக இருங்கள்.

07.08.2018 முதல் 13.02.2019 வரை கேது செல்வதால் வராது என்று நினைத்திருந்த பணம் கைக்கு வரும். பழைய கடனை பைசல் செய்வீர்கள். திருமணம் கூடி வரும். புதுமனைப் புகுவீர்கள். வங்கிக் கடன் கிடைக்கும். தந்தையாருடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். பிதுர்வழி சொத்து கைக்கு வரும். பாகனப் பிரிவினை சுமுகமாகும்.

இந்த ராகு, கேது மாற்றம் புது அனுபவங்களை தருவதுடன், ஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொள்ள வைக்கும்.

பரிகாரம்: பஞ்சமி திதி நடைபெறும் நாட்களில் அல்லது வியாழக்கிழமைகளில் ஸ்ரீசத்ய சாய்பாபாவுக்கு மஞ்சள் நிறத் துணி தந்து வணங்குங்கள். தென்னை மரக்கன்று நட்டு பராமரியுங்கள். வீடு, மனை, உத்யோகம் அமையும்.

Leave a Comment