திருக்கடவூர் என்றதும் நம் நினைவுக்கு வருபவர் அபிராமிப்பட்டர். அவரின் வம்சத்தில் வந்தவர்தான் அம்பிகாதாசர. வெகு காலம் பிள்ளை இல்லாமல் இருந்து, பிறகு அன்னையின் அருளால் பிறந்தவன் மகன் சியாமளதாசன். திடுமென வைசூரி கண்டு பார்வையை இழந்தான். அதனால் உண்டான கவலை அம்பிகாதாசரை வாட்டியது.

கவலையுடன் படுத்திருந்தவர் அப்படியே கண்ணயர்ந்தார். அவரது கனவில் அன்னை அபிராமி தோன்றினாள் ‘தாசனே, வருந்தாதே! இந்தத் தலத்துக்குத் தெற்கே பர்வதராஜபுரம், திருமலை, ராஜசோளீச்சுரம் ஆகிய பெயர்களைக் கொண்ட திருத்தலம் ஒன்று உள்ளது. அங்கு, இறைவனின் இடப்பாகத்தில் நானே எழுந்தருளி உள்ளேன். வருகிற திங்கள்கிழமை அன்று, அங்குள்ள சிவ தீர்த்தத்தில் உன் மகனுடன் நீராடி, என்னை வழிபடு… உன் மகன் பார்வை பெறுவான்!

மேலும்… அங்கு, என்னை பூஜித்து வரும் சிவாசார்யர், தன் ஒரே மகளான கௌரிக்குத் திருமணம் நடத்த வேண்டும் என்றும், தனக்குப் பின் தன் மாப்பிள்ளையே எனக்குரிய பூஜைகளைக் கவனிக்க வேண்டும் என்றும் விரும்புகிறார். அதை நிறைவேற்றும் வகையில், உன் மகன் சியாமள தாசனை அங்கேயே பூஜை செய்துவர ஏற்பாடு செய்!’ என்று அருளி மறைந்தாள். அதேநேரம், பர்வதராஜபுரத்தில் உள்ள சிவாசார்யரது கனவிலும் தோன்றி, செய்ய வேண்டியதை விவரித்தாள் அன்னை அபிராமி.

விடிந்ததும் அம்பிகை அருளியதை அனைவரிடமும் தெரிவித்தார் அம்பிகா தாசர். பிறகு, மகன் சியாமளதாசனுடன், பர்வதராஜபுரத்தை அடைந்து, அங்குள்ள சிவ தீர்த்தத்தில் நீராடி அம்பிகை சந்நிதியை அடைந்தார். அன்னையை மனமுருகிப் பிரார்த்தித்தார்.

அப்போது, கோடி சூரியப் பிரகாசத்துடன், ராஜ சோளீஸ்வரருடன் காட்சி தந்தாள் அம்பிகை. ‘அம்மா… அம்பிகே!’ என்ற எழுந்த குரல்கள் சந்நிதி முழுக்க எதிரொலித்தன. அதையும் மீறி, ‘கண் கொடுத்த தாயே! உன் திருவடியைக் கண்டு கொண்டேன். காலமெல்லாம் உனக்குத் தொண்டு செய்வேன்’’ என்றொரு குரல் ஓங்கிக் கேட்டது.

அம்பிகாதாசர் திரும்பிப் பார்த்தார். கைகளைத் தலைக்கு மேல் கூப்பியபடி கதறிக் கொண்டிருந்தான் சியாமளதாசன். அவனுக்குப் பார்வை கிடைத்ததை அறிந்து அம்பிகாதாசர் மெய் சிலிர்த்தார்.

பின்னர், அம்பிகையின் ஆணைப்படி சியாமளதாசனுக்கும், கௌரிக்கும் திருமணம் நடந்தது. அங்கேயே இருந்து அம்பிகைக்கு தினமும் பூஜை செய்து வந்த சியாமளதாசன், சியாமளதாச பட்டர் என்ற திருநாமம் பெற்றார்.

தற்போது, திருமலைராயன் பட்டினம் என்று அழைக்கப்படும் இந்தத் தலம் (பர்வதராஜபுரம்), காரைக்காலில் இருந்து தெற்கே சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது. சியாமளதாசர் நீராடி, பார்வை பெற்ற சிவதீர்த்தம் ‘நேத்திர புஷ்கரணி’ எனப்படுகிறது. இதில் நீராடி, அம்பாளை வழிபட்டால், ஆரோக்கியம், ஐஸ்வர்யம் ஆகியவற்றைப் பெறலாம்.

முத்தாரம்மன் சத்சங்கம்

Leave a Comment