எல்லாம் வல்ல சித்தரான படலம் | Ellam Valla sittharaana padalam

எல்லாம் வல்ல சித்தரான படலம் (Ellam Valla sittharaana padalam) இறைவனான சிவபெருமான் சித்தர் வடிவம் கொண்டு மதுரை மக்களிடையே நடத்திய செயற்கரிய செயல்களை விளக்கிக் கூறுகிறது.
அபிடேகப்பாண்டியனுக்கு வீடுபேறினை அளிக்கும் நோக்குடன் இறைவனார் சித்தர் வடிவம் தாங்கி வந்ததை நாம் இப்படலத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
சித்தரின் செயல்பாடுகளால் மதுரைமக்கள் தன்னிலை மறந்து அதிசயத்த விதம், அபிடேகப்பாண்டினின் அமைச்சர்கள் சித்தரைக் கண்டு தங்களின் வேலையை மறந்து நின்றது ஆகியவை இப்படலத்தில் அழகாக விவரிக்கப்படுள்ளன.

எல்லாம் வல்ல சித்தரான படலம் திருவிளையாடல் புராணத்தின் கூடல் காண்டத்தில் இருபதாவது படலமாக வைக்கப்பட்டுள்ளது. இது இதற்கு முந்தைய படலமான நான் மாடக்கூடலான படலத்தின் தொடர்ச்சியாகும்.

இறைவனார் சித்தராகத் தோன்றுதல்
வருணன் ஏவிய மேகங்களைத் தடுத்து மதுரையை நான் மாடக்கூடலாக்கிய இறைவனார் அபிடேகப்பாண்டியனுக்கு வீடுபேற்றினை அளிக்க திருஉள்ளம் கொண்டார்.
இதனால் அவர் சித்தம் வடிவம் தாங்கி மதுரையில் தோன்றினார். அவர் ஜடாமுடி, காதுகளில் வெள்ளிக் குண்டலங்கள், ஸ்படிகம், ருத்ராட்சமாலைகள் அணிந்தமார்பு, உடலெங்கும் திருநீறு, கையில் தங்கப்பிரம்பு, மழு என்னும் ஆயுதம், புலித்தோலாகிய கோவணம் ஆகியவற்றை அணிந்து இருந்தார்.
முகத்தில் யாவரையும் மயக்கும் புன்முறுவலும் கொண்டு திருக்கோவிலில் வீற்றிருந்தார்.
அவர் அவ்வப்போது மதுரையின் கடைவீதிகளிலும், நாற்சந்தி கூடும் இடங்களிலும், வீதியிலும், மாளிகைகளின் வாயிலிலும், திண்ணைகளிலும் தோன்றி பல சித்து வேலைகளை செய்தருளினார்.
மதுரை மக்கள் அவரின் சித்து வேலைகளைக் காணும் பொருட்டு அவர் இருக்கும் இடத்தில் கூட்டமாகத் திரண்டனர். அவர் ஓரிடத்தில் சித்து வேலைகளைச் செய்து கொண்டிருக்கும் போதே திடீரென அந்த இடத்தில் இருந்து மறைந்து விடுவார்.
மக்கள் அவரைத் தேடிக் கொண்டிருக்கும்போதே வேறு ஒரு இடத்திற்குச் சென்று ஏதாவது செய்து கொண்டிருப்பார். மக்கள் சித்தர் இருக்கும் இடத்திற்கு ஓடி சித்தரின் சித்து வேலைகளைக் காண முயல்வர்.
சித்தரை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் இளைஞர்களை முதியவராக்குவார். முதியவர்களை இளைஞர்களாக்குவார். ஆண்களைப் பெண்களாக மாற்றுவார். பெண்களை ஆண்களாக்குவார்.
பிறவியிலேயே பார்வையற்றவர், காது கேளாதோர், பேச முடியாதோர் ஆகியோர்களை பார்க்க, கேட்க, பேச வைத்து அதிசயம் காட்டுவார்.
ஊனமுற்றவர்களை குணமாக்குவார். ஏழைகளை பணக்காராக்கியும், பணக்காரர்களை ஏழையாக்கியும் காட்டுவார். கடல் நீரை நன்னீராக்கியும், நன்னீரை உப்பு நீராக்கியும் அதிசயங்கள் புரிந்தார்.
கசப்பு சுவையினை உடைய எட்டி மரத்தில் இனிப்புச் சுவையுடைய பழங்களை உண்டாக்கினார். திடீரென வைகையில் வெள்ளத்தைப் பெருக்கச் செய்தும், பின் அவ்வெள்ளத்தை வற்றச் செய்தும் காட்டினார்.
பட்டமரத்தில் இலையையும், பூவையும் உண்டாக்கி பசுமையாக்கினார். இவ்வாறாக சித்தர் பல சித்து வேலைகளைச் செய்து மக்களின் மனதினைக் கொள்ளை அடித்தார்.
சித்தரின் சித்து வேலைகளால் மதுரை மக்கள் தன்னிலை மறந்து தங்களின் வேலைகளையும் மறந்து கூட்டம் கூட்டமாக சித்தரிடமே இருந்தனர்.

சித்தர் அரசனின் அழைப்பினை ஏற்க மறுத்தல்
சித்தரின் சித்து விளையாடல்களையும், மதுரை மக்கள் மனம் மயங்கிய நிலையினையும் கேட்ட அபிடேகப்பாண்டியன் தனது அமைச்சர்களை அழைத்தான்.
அமைச்சர்களிடம் “மதுரை மாநகருக்கு வந்து சித்து வேலைகளைச் செய்யும் சித்தரைப் பற்றி கேள்விப்பட்டீர்களா?. மதுரை மக்கள் எப்போதும் அவரைச் சுற்றியே நின்று கொண்டிருக்கிறார்களாமே?. நீங்கள் விரைந்து சென்று அவரை அரண்மனைக்கு அழைத்து என்னை வந்து பார்க்கச் சொல்லுங்கள்” என்று கட்டளையிட்டான்.
அமைச்சர்களும் சித்தர் இருக்கும் இடத்திற்கு விரைந்து சென்றனர். சித்தரின் சித்து விளையாட்டுகளில் மெய் மறந்து நின்றனர்.
சிறிது நேரத்தில் சுயநினைவு திரும்பியவர்களாய் சித்தரை அணுகி “தங்களின் திருவிளையாடல்களை கேட்டறிந்த எங்கள் மன்னர் தங்களை அரண்மனைக்கு அழைத்து வரச் சொன்னார்” என்று கூறினர்.
அதற்கு சித்தர் “உங்களின் மன்னவனால் எனக்கு ஆக வேண்டிய காரியம் ஒன்றுமில்லை. உங்கள் மன்னவனுக்கு என்னால் ஆகவேண்டியது ஏதும் இருப்பின் உங்கள் மன்னரை வந்து என்னைக் காணச் சொல்லுங்கள்” என்று கூறினார்.
சித்தரின் பதிலினைக் கேட்ட அமைச்சர்கள் வருத்தத்துடன் அரண்மனைக்குத் திரும்பினர். அபிடேகப்பாண்டியனிடம் சித்தர் வரமறுத்து அவர் கூறிய காரணத்தையும் கூறினர்.
அபிடேகப்பாண்டியனும் “முதல்வனாகிய சிவபெருமானின் திருவருளைப் பெற்று இம்மை மறுமைப் பயன்களை வெறுத்த யோகிகள் இந்திரன், திருமால், பிரம்மா முதலிய தேவர்களை மதிக்க மாட்டர். இப்பூமியை ஆளும் மன்னரையா மதிப்பர்” என்று கூறினான்.

எல்லாம் வல்ல சித்தரான படலம் கூறும் கருத்து
அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி யாரையும் கட்டாயப்படுத்த முடியாது என்பதே எல்லாம் வல்ல சித்தரான படலத்தின் கருத்தாகும்.