Aanmeega Kathaigal

கண்ணன் கதைகள் – 28 பூதனா மோக்ஷம்

கண்ணன் கதைகள் – 28
பூதனை மோக்ஷம் / பூதனா மோக்ஷம்

நந்தகோபன், கப்பம் கட்டுவதற்காக மதுரா நகரம் சென்றார். அசுரர்களின் முயற்சியை அறிந்த வசுதேவர், அதுபற்றி நந்தகோபனிடம் கூறினார். மேலும்,“உனக்குப் பிள்ளை பிறந்ததைக் கேட்டு எனக்குப் பிறந்ததைப் போல மகிழ்ச்சி அடைகிறேன். சில கெட்ட சகுனங்கள் காணப்படுகிறது, ஆகையால் நீ விரைந்து கோகுலத்திற்குச் செல்” என்று கூறினார். நந்தகோபனும் கண்ணனுக்கு ஆபத்து வருமோ என்று கவலை கொண்டு விரைந்து சென்றார்.

அதே சமயம், கம்ஸனால் ஏவப்பட்ட பூதனை என்கிற கோர ரூபமுள்ள ராக்ஷஸி, தன்னை மிக அழகிய பெண்ணாக மாற்றிக் கொண்டு, கோகுலத்திற்கு வந்தாள். தன் நடவடிக்கைகளால் அனைவரின் மனதையும் கவர்ந்தாள். எல்லாக் குழந்தைகளுடைய உள்ளத்தையும் கவரும் அவளைக் கண்டு கோபியர்கள் “இவள் யார்?” என்று யோசித்தனர். ஒய்யாரமாக நடந்து வந்து கண்ணனைக் கையில் எடுத்தாள். பின்னர், வீட்டின் உள்ளே அமர்ந்து, கண்ணனை மார்போடணைத்து விஷப் பாலூட்டினாள். பயமின்றி அவள் மடிமீது ஏறிய கண்ணன், விஷம் நிறைந்த அவளுடைய முலையில் வாய் வைத்து, பெரிய மாம்பழத்தை உறிஞ்சுவதுபோல் உறிஞ்சத் தொடங்கினான்.

ஏற்கனவே, அவள் பல குழந்தைகளைக் கொன்றதால், கண்ணன் அவள் மீது கோபமுற்றிருந்தான். பால் சாப்பிடுவது போல அவளுடைய உயிரையும் சேர்த்துக் குடித்தான். அவள், இடிபோலக் கூச்சலிட்டுக் கொண்டு, ராக்ஷஸ உருவத்துடன், இரண்டு கைகளையும் நீட்டிக் கொண்டு, கண்கள் பிதுங்கி, உயிரற்றுக் கீழே விழுந்தாள். அக்குரலைக் கேட்ட அனைவரும் நடுங்கினர். பகவானான கண்ணன், அவளுடைய மார்பில் பயமே இல்லாமல் விளையாடிக்கொண்டிருந்தான்.
உயிரற்ற அவள் மார்பின்மீது விளையாடிக் கொண்டிருந்த கண்ணனை, கோபிகைகள் வாரி எடுத்துத் தூக்கினார்கள். அவன்தான் திருமால் என்று அறியாமல், மங்கலங்களைக் கொடுக்கும் திருமாலின் நாமங்களைக் கூறிக்கொண்டே, ரட்சை செய்து அவனுக்கு அணிவித்தார்கள்.

வசுதேவர் கூறியதைக் கேட்ட நந்தகோபர் விரைந்து கோகுலத்திற்குத் திரும்பினார். வழியில் மரங்களை எல்லாம் வேரோடு சாய்த்து, வீழ்ந்து கிடந்த ஒரு பெரிய உருவத்தைக் கண்டு பயந்து, குழந்தையைக் காக்க வேண்டும் என்று திருமாலை வேண்டினார். கோபியர்கள் மூலம் விஷயம் அறிந்த இடையர்கள், பயத்தாலும், ஆச்சரியத்தாலும் பேச்சற்று இருந்தனர். பிறகு, கீழே கிடந்த அந்த பயங்கரமான ராட்சத உருவத்தைக் கோடாரியால் துண்டு துண்டாக வெட்டி, வெகுதூரத்திற்கப்பால் கொண்டு சென்று எரித்தார்கள். அப்போது, குழந்தையான கண்ணன் பால் அருந்தியதாலும், மடியில் அமர்ந்ததாலும், தூய்மை அடைந்த அந்த ராக்ஷஸியின் உடலிலிருந்து, சந்தனம், குங்கிலியம் போன்ற உயர்ந்த வாசனையுடைய புகை உண்டானது. என்ன ஆச்சர்யம்!!

இந்த தெய்வக் குழந்தையைத் தொடுகிறவர்களுக்கும், பார்ப்பவர்களுக்கும் மோக்ஷம் உடனேயே கிடைக்கும், காத்திருக்க வேண்டியதில்லை என்பதை இடையர்களுக்குச் சொல்வதுபோல், பூதனையை மணமுள்ளவளாகக் கண்ணன் செய்தான்.

வசுதேவனுக்கு இது எப்படி முன்னமேயே தெரிந்தது என்று நந்தகோபன் வியந்தார். “இது என்ன அதிசயம்!! இந்த அரக்கியால் குழந்தை கொல்லப்படவில்லையே!! ஆச்சர்யம்” என்று கோபர்கள் பேசிக் கொண்டார்கள். கண்ணனின் அழகிய திருமுகத்தைப் பார்த்து ஆனந்தத்தில் மூழ்கினார்கள்.

கண்ணனின் பிறப்பால், கோகுலத்தில் வாழ்ந்தவர்கள் செல்வங்கள் நிரம்பப் பெற்று, மங்கள காரியங்கள் செய்தனர். கோகுலம் முழுவதும் ஆனந்தத்தில் மூழ்கியது. கோபியர்கள் வீட்டில் வேலை செய்யும்போது கூட கண்ணனின் அழகைப் பற்றியும், புன்சிரிப்பைப் பற்றியும் பேசி மகிழ்ந்தனர். வேலை முடிந்ததும் கண்ணனைக் காண தினமும் நந்தகோபர் வீட்டிற்குச் சென்றனர். இடைப்பெண்கள் ஒவ்வொருவரும், “குழந்தை என்னைப் பார்க்கிறது, என்னைப் பார்த்து சிரிக்கிறது, என்னிடம் வா” என்று கூறி மகிழ்ந்து குழந்தையிடம் அன்பைப் பொழிந்தார்கள். கண்ணனைத் தொட வேண்டும் என்ற ஆசையால், மாற்றி மாற்றித் தூக்கிக்கொண்டு மகிழ்ந்தார்கள்.

நந்தகோபன், பரவசத்துடன் கண்ணனைக் கைகளில் எடுத்து, உச்சிமுகர்ந்து மகிழ்ந்தான். யசோதை, கண்ணனை மடியில் கிடத்தி, பாலூட்டி, அவன் முகத்தைப் பார்த்துச் சிரித்து ஆனந்தத்தை அடைந்தாள்.

கண்ணனால், பூதனையின் உயிர் மாத்திரம் உறிஞ்சப்படவில்லை; அவளுடைய பாபங்களும் சேர்த்து உறிஞ்சப்பட்டன. அதனால். அவள் மோக்ஷம் அடைந்தாள்.  இந்த பூதனா மோக்ஷத்தை, படிப்பவர்களுக்கும், கேட்பவர்களுக்கும், சொல்பவர்களுக்கும் மீண்டும் ஒரு தாயின் பாலைக் குடிக்கும் நிலைமை உண்டாகாது என்று அறிந்தோர் சொல்வார்கள். அதாவது, இவ்வுலகில் மீண்டும் பிறக்கமாட்டார்கள் என்று அர்த்தம்.

ஸ்வாமி தேசிகன், ‘யாதவாப்யுதயம்’ என்னும் காவியத்தில்,
“ஸ்தன்யேந க்ருஷ்ண: ஸஹ பூதநாயா:
ப்ராணாந் பபௌ லுப்த புநர்ப4வாயா:
யத் அத்3பு4தம் பா4வயதாம் ஜநாநாம்
ஸ்தநந்த4யத்வம் ந புநர் ப3பூ4வ”
என்று கூறுகிறார்.
பூதனையின் பாலைக் கண்ணன் உறிஞ்சினான். பாலை மட்டுமல்ல, அவள் உயிரையும் உறிஞ்சினான். உயிரை மட்டுமல்ல, அவள் பாபங்களையும் சேர்த்து உறிஞ்சினான். அவள் மீண்டும் பிறவாதபடி செய்தான். அவளுக்கு மோக்ஷத்தை அளித்தான். கண்ணனின் இந்த லீலையைப் படிப்பவர்களும், கேட்பவர்களும்,  பிறப்பு, இறப்பு அற்ற பேரின்ப நிலையை அடைவார்கள் என்று கூறுகிறார்.

Share
ஆன்மிகம்

Leave a Comment
Published by
ஆன்மிகம்
  • Recent Posts

    Today rasi palan 19/04/2024 in tamil | இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் வெள்ளிக் கிழமை சித்திரை – 06

    Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன் _* *பஞ்சாங்கம் ~ க்ரோதி ~ சித்திரை ~… Read More

    21 hours ago

    Kolaru Pathigam Song lyrics in Tamil | கோளறு பதிகம் பாடல் வரிகள் மற்றும் விளக்கம்

    Kolaru Pathigam Song lyrics in Tamil கோளறு பதிகம் (Kolaru pathigam lyrics in Tamil) - நவகிரஹங்களால்… Read More

    23 hours ago

    Karpaga Vinayagar Temple History | கற்பக விநாயகர் திருக்கோயில் வரலாறு

    அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில் வரலாறு பிள்ளையார்பட்டி – 630207,  சிவகங்கை மாவட்டம். *காலை 6 மணி முதல் 12… Read More

    23 hours ago

    Ramar Slogam | ராமர் ஸ்லோகம்

    ராமர் ஸ்லோகம் : ராம நாம சுர வந்தித ராம் ரவிகுல ஜனநிதி தந்தவராம் சாகேதஸ்தலம் வந்தவராம் தசரத கோசலை… Read More

    1 month ago

    Gomatha stotram in tamil | பசுமாடு ஸ்தோத்ரம்

    கோமாதா ஸ்தோத்திரம் நமோ தேவ்யை மஹா தேவ்யை ஸுரப்யை ச நமோ நம கவாம் பீஜஸ்வ ரூபாயை நமஸ்தே ஜகதம்பிகே… Read More

    2 weeks ago

    Asta Kaali Deviyar Varalaru | அஷ்ட காளி தேவியர் வரலாறு

    அஷ்ட காளி தேவியர் வரலாறு! *தொடர் பகுதி-5* *5வதாக பிறந்த அரியநாச்சி என்ற அங்கையற்கன்னி* *வரலாறு*! அரியநாச்சி என்ற அங்கையற்கன்னி… Read More

    1 month ago