கண்ணன் கதைகள் – 67
மன நிம்மதி
சென்ற பதிவில் நாராயண பட்டத்ரி பற்றியும் அவர் எப்படி நாராயணீயம் எழுதினார் என்பது பற்றியும் பார்த்தோம்.
நாராயண பட்டத்ரியின் வாழ்வில் நிகழ்ந்த மற்றொரு சம்பவம் இது.
நாராயணீயத்தை இயற்றிய நாராயண பட்டத்ரிக்கு பாகவதத்தின் சாரமாக
நாராயணீயத்தைத் தான் இயற்றிவிட்டதாக சிறு கர்வம் ஏற்பட்டது.
மன நிம்மதியை இழந்தார். பகவான் அவரது கனவில் தோன்றி முக்திபுரியில் (மலையாளத்தில் முக்கோலக்கல்) இருக்கும் பவானியின் கோவிலுக்குச் செல் என்று கூற, முக்திபுரியில் உள்ள முக்கோல தேவியின் கோவிலுக்குச் சென்றார். அப்போது அவர் முக்கோலக தேவியை வழிபட்டு, தேவியின்மீது ஸ்லோகத்தை எழுதத் தொடங்கினார். எழுபது ஸ்லோகங்கள் எழுதி முடித்துவிட்ட நிலையிலும் அவரால் தேவியின் திருப்பாதங்களைப் பற்றி மட்டுமே சொல்ல முடிந்திருந்தது. அதற்குமேல் எழுத வரவில்லை. அப்போது, தாம் இயற்றியதெல்லாம் பகவானின் திருவருளால்தான் என்பதை அவர் உணர்ந்தார். மிகுந்த மன நிம்மதியும் அடைந்தார்.
பின்னர், தேவியைத் துதித்து, தம் இறுதிக் காலம் வரை அங்கேயே கழித்தார். ‘ஸ்ரீபாத ஸப்ததி’ என்ற தேவியின் புகழ் பாடும் அந்த ஸ்லோகம் தான் அவர் கடைசியாக எழுதியது. ஒரு நாள் தேவியைத் தரிசனம் செய்துவிட்டுத் திரும்பியதும் நிம்மதியாக பகவானின் திருவடியை அடைந்தார்.
நாமும் அப்பனின் பாதாரவிந்தங்களை வணங்கி அவள் அருளைப் பெற்று மகிழ்வோமாக!