கண்ணன் கதைகள் – 68

தெய்வ குற்றம்

குருவாயூரப்பனின் மகிமைகளை இக்கலியிலும் கண்கூடாகக் கண்டவர் பலர் உண்டு. சில ஆண்டுகளுக்கு முன் பக்தர் ஒருவருக்கு நிகழ்ந்த சம்பவம் இது.

பக்தர் ஒருவரின் மகனுக்குத் திடீரென்று புத்தி ஸ்வாதீனமில்லாமல் போய்விட்டது. ஒருவருடனும் பேசாமல், கேட்ட கேள்விகளுக்கும் பதில் சொல்லாமல் பித்துப் பிடித்தவன்போல் ஆகிவிட்டான். பல சிகிச்சைகள் செய்தும் சரியாகவில்லை. மிகுந்த கவலையடைந்த பக்தர், பகவானே கதி என்று, தனது மகனை அழைத்துக் கொண்டு குருவாயூர் சென்று, பல நாட்கள் சன்னதியிலேயே தங்கி, கைங்கர்யங்களும் செய்து வந்தார். தன் மகனை நினைத்து மிகுந்த கவலையுடன் இருந்தார்.

ஒரு நாள், குருவாயூரப்பன் அவரது கனவில் தோன்றி, ‘உன் மகன் முன் ஜென்மத்தில் ஒரு குரங்கைக் கொன்று, ராமருக்கு அபசாரம் செய்ததால், தெய்வ குற்றம் உண்டானதால், இவ்வாறு உள்ளான். நீ அவனை திருப்பரையாறு அழைத்துச் சென்று, ராமரை சேவித்தால் அவன் குணமடைவான்’ என்று கூறினார். உடனே, அவர் திருப்பரையாறு சென்றார். அங்கேயே தங்கி, தினமும் ராமரை சேவித்து வந்தார்.

இவ்வாறிருக்கையில், ஒரு நாள், அவர் ராமர் சன்னதியில் இருக்கும் போது, ஸ்ரீ ஹனுமார், கையில் சந்தனம், குங்குமம், துளசியுடன் அவர் மகனின் கண்ணுக்கு மட்டும் தெரியும்படியாகத் தோன்றி, ‘இதை வாங்கிக் கொள்’ என்று கூறினார். அந்த பக்தரின் கண்களுக்குத் தெரியவில்லை. அவர் மகன் அவரிடம், ‘அப்பா, ஒரு குரங்கு சந்தனம், குங்குமம் கொடுக்கிறது, வாங்கிக் கொள்ளட்டுமா?’ என்று கேட்டான். என்றுமில்லாமல் மகன் நன்றாகப் பேசுகிறானே என்று மகிழ்ந்த அவர், வாங்கிக் கொள் என்று கூறினார். பக்தரின் கண்களுக்குத் தெரியவில்லையே தவிர, மகனின் கையில் இப்போது பிரசாதங்கள் இருப்பது தெரிந்தது. பகவானின் அனுக்ரஹத்தையும், மகிமையையும் அறிந்த பக்தர் மனம் மகிழ்ந்து அப்பனுக்கு நன்றி கூறினார். அதுமுதல் அவர் மகன் நன்றாகப் பேச ஆரம்பித்து, சித்தமும் தெளிந்தது.

திருப்பரையாறு கோவிலில் அதிர்வெடி வழிபாடு ப்ரசித்தம். பிரச்சனைகள் தீர, அதிர்வெடி வழிபாடு செய்து மக்கள் தமது பிரச்சனைகள் தீரப் பெறுகிறார்கள். கேரளக் கோவில்களில் வெடி வழிபாடு நடைமுறை உண்டு.

இந்த வலைத்தளத்தில் அடியேன் பதிவேற்றியிருக்கும் அனேக குருவாயூரப்பன் கதைகள் என் பாட்டியும், அவரது சிநேகிதியுமான மற்றொருவரும் கூறக் கேட்டவைகளே

Leave a Comment