Aanmeega Kathaigal

சிவபக்தராக இருந்த ஜோதிடரை சோதித்த சிவபெருமான்

சிவபக்தராக இருந்த ஜோதிடரை சோதித்த சிவபெருமான்

அண்ணாமலை ஈசனே எனை ஆளும் நேசனே சிவனடியை சிந்திப்போம்

சிவபக்தராக இருந்த ஜோதிடரை சோதித்த சிவபெருமான்:

உலகையே காத்தருளும் சிவபெருமான், ஜோதிடர் ஒருவரை சித்தராக வந்து சோதித்த சம்பவம் தெரியுமா? பண்ருட்டி அருகே பாக்கம் கிராமத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கணிக்கர் என்ற ஜோதிடர் வாழ்ந்து வந்தார்.

சிறந்த சிவபக்தரான இவர் தினமும் ஈசனை வணங்கிய பின்னரே ஜோதிடம் பார்க்க அமர்வார்.ஒருநாள் அருகிலுள்ள சித்தர் சாவடியில் இருந்து, ஒரு சித்தர் ஓலைச்சுவடிகளுடன் வந்தார்.

சிவபூஜை முடிந்த பின்னரே ஜோதிடம் பார்க்க முடியும் என்று கணிக்கரின் உதவியாளர் கூறியதை ஏற்க மறுத்த சித்தர், அவசரப்படுத்தினார்.

அதிக பொன்னும் பொருளும் தருவதாக ஆசை காட்டினார்.ஆனாலும் கணிக்கர் மறுத்துவிட்டார். ‘‘யாராக இருந்தாலும் எவ்வளவு பொருள் கொடுத்தாலும், தான் அனுதினமும் வணங்கும் சிவபெருமானுக்கு பூஜை செய்யாமல் எந்த காரியத்தையும் தொடங்குவதில்லை என்று கூறினார். அதற்கு சித்தர், ‘‘சரி, பூஜையை முடித்துக்கொண்டு வாருங்கள் என்று கூறி காத்திருந்தார்.

பூஜை முடிந்து வந்த கணிக்கரிடம், தன்னை வீரசித்தர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, சுவடிக்கட்டை கொடுத்து, ஜாதகம் பார்க்குமாறு கேட்டுக் கொண்டார்.

ஜாதகக் கட்டை வாங்கிப் பார்த்த கணிக்கர், ‘‘இதில் எந்த குறையும் இல்லையே, வேறு என்ன சந்தேகம்? என்று கேட்டார். சித்தரோ, ‘‘எனக்கு திருமணம் நடக்குமா? பிள்ளைப்பேறு உண்டா? என்று கேட்டார்.

மறுபடியும் ஜாதகத்தை பார்த்த கணிக்கர், ‘‘சுவாமி, தங்களுக்கு ஜாதகப்படி திருமணம் நடந்து விட்டது, 2 பிள்ளைகளும் இருக்கிறார்கள் என்று கூறினார்.

திடுக்கிட்ட வீரசித்தர், ‘‘நீர் என்னய்யா ஜோதிடர், அப்பட்டமான பொய் சொல்லி என்னை அவமானப்படுத்தி விட்டீரே! நானோ பிரம்மச்சாரி சித்தன்.

ஜோதிடம் கணிக்கத் தெரியாத உம்மிடம் வந்ததே நான் செய்த குற்றம்தான் என்று கோபித்துக்கொண்டார்

கணிக்கரோ, ‘‘எனது கணிப்பில் இதுவரை பிழை ஏற்பட்டதில்லை. இனியும் ஏற்படாது என்று கூற, வீரசித்தரோ, ‘‘பிழைதான்.

இதை ஊர் முழுக்க கூறப்போகிறேன். சிவபூஜை செய்து அருள் மகிமையோடு ஜோதிடம் கூறுகிறேன் என்று மக்களை ஏமாற்றும் உம்மிடம் இனி யாரும் ஜாதகம் கணிக்க வரப்போவதில்லை என்று ஆவேசத்துடன் கூறினார்.கணிக்கரோ, ‘‘சுவாமி நீங்கள் சித்தராக இருப்பதால் நான் ஆத்திரப்படாமல் கூறுகிறேன்.

உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. மனைவி, மக்கள் இருக்கிறார்கள். உங்கள் ஜாதகம் அப்படித்தான் சொல்கிறது. இது நான் வணங்கும் சிவபெருமான் மீது சத்தியம் என்று நிதானமாக கூறினார்.

வீரசித்தரோ, ‘‘நான் பற்றற்ற துறவி, மனைவி, மக்களுக்கு வாய்ப்பில்லை என்று சொல்லுங்கள். அதற்கு ஈடாக இந்த பொற்காசுகளை வைத்துக் கொள்ளுங்கள் என்று பொற்காசுகளை ஜோதிடரிடம் நீட்டினார்.

அதுவரை பொறுமையாக இருந்த கணிக்கர், ‘‘ஒருபோதும் நான் பொய் சொல்ல மாட்டேன். கணித்துக்கூறியது கூறியதுதான். தாங்கள் சாபமிட்டு, நான் பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை என்றார்

உடனே வீரசித்தர் ஜாதகச் சுவடியை மீண்டும் கணிக்கரிடம் கொடுத்து, ‘‘நீ தினமும் பூஜை செய்து வணங்கும் சிவபெருமான் திருமுன்பு இந்த சுவடியை வைத்து ‘நான் கணித்துக்கூறிய ஜாதகத்தில் தவறில்லை, பொய்யுமில்லை, அனைத்தும் உண்மைதான் என்று சத்தியம் செய்து விட்டு, பின்னர் ஓலைச்சுவடியை பிரித்துப்பார், உண்மை புரியும் என்று கூறினார்.

கணிக்கனார் அவ்வாறே ஓலைச்சுவடியை வாங்கி சிவலிங்கத்தின் முன்பு வைத்து கண்மூடி வணங்கினார்.

சிறிதுநேரத்தில் கண்திறந்து பார்த்தபோது என்ன ஆச்சரியம்! சுவடியில் இருந்த சாதக குறிப்புகள் அனைத்தும் மறைந்து போயிருந்தன. அதற்கு பதிலாக திருவதிகை வீரட்டானமுடைய மகாதேவர் என்று ஒவ்வொரு சுவடியிலும் இருந்தது.

மெய்சிலிர்த்த கணிக்கர், வெளியே ஓடிவந்து பார்த்தபோது சித்தரைக் காணவில்லை. அப்போது அவர்முன் ஒரு பேரொளி தோன்றியது.

சிவபெருமான் ரிஷபவாகனத்திலும் உடன் அம்மை, விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் என பஞ்சமூர்த்திகளும் காட்சியளித்தனர்.

மெய்சிலிர்த்து விழுந்து வணங்கிய கணிக்கனார், ‘‘எல்லாம் வல்ல பரம்பொருளே, இது என்ன சோதனை! என்று கேட்டு நெகிழ்ந்தார்.

சிவபெருமான், ‘‘சோதனை அல்ல கணிக்கரே, உம் சாதனைகளை மெச்சவே வந்தோம். ஜோதிடம் கணிக்கும்போது உண்மையை கூற வேண்டும், பொய்கூறி பிழைத்தல் தவறு என்பதை உணர்த்திய உமக்கு அருள்புரிந்தோம். உமக்கு என்ன வரம் வேண்டும்? என்று கேட்டார்.

அதற்கு கணிக்கர், ‘‘உலகையே கணிக்கும் பரம்பொருளே, நீங்கள் ஜோதிடம் கணிக்க வந்த இந்தத் திருவிளையாடலால் கணி ஈசராக, கணிச்சபுரீஸ்வரராக இவ்வூரில் கோயில் கொண்டு நாடி வருவோருக்கு நலம்புரிய வேண்டும்.

அவரவர் ஜாதகத்தை கொண்டு வந்து தங்கள் திருவடியில் வைத்து வணங்கி செல்வோருக்கு இடையூறுகளை போக்கி நன்மைகளை தந்தருள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

உடனே சிவபெருமான் கணிக்கரிடம், ‘‘இனி இவ்வூர் உன்பெயரால் கணிச்சப்பாக்கம் எனும் கணிச்சபுரி என்று விளங்கும். உன் ஜாதக கணிப்பில் நீ மென்மேலும் புகழ்பெற்று என் பதம் அடைவாய் என்று ஆசியருளினார்.

இந்த நிகழ்ச்சியை கேட்டறிந்த அரசன், கணிக்கனாரின் விருப்பப்படி கணீஸ்வரர் ஆலயத்தை நிர்மாணித்தார்.

கணிச்சபுரீஸ்வரர், கணிச்சநாதர் என்று இந்த இறைவன் அழைக்கப்படுகிறார். இறைவியின் பெயர் பெரியநாயகி. தலவிருட்சம் வேங்கை மரமாகும்.

தற்போது சுயம்புவாக தோன்றிய வேம்பு மரம் உள்ளது. கோயில் சிவலிங்க அமைப்பை வைத்துப் பார்க்கும்போது இது 8&9ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகத் தெரிகிறது. 1200 ஆண்டுகளுக்கு முன்பு பிரசித்தி பெற்றிருந்தது.

பல கல்வெட்டுகள் காலப்போக்கில் பகைவர்களால் அழிக்கப்பட்டிருக்கலாம். மிகப்பெரிய அளவில் கோயில் இருந்ததற்கான அடித்தளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ராஜராஜசோழனின் மகன் முதலாம் ராஜேந்திரசோழன் இவ்வூரின் கிழக்கே பெரிய ஏரியை அமைத்துக் கொடுத்துள்ளான்

திருவதிகை கோயிலின் முதல் பிராகாரத்தில் மடப்பள்ளி அருகில் தென்புற சுவரில் உள்ள கல்வெட்டில் இந்தத் தகவல் தெரியவருகிறது.

திருமணத்தடை, குழந்தையின்மை, தீராத நோய், தொழில் முடக்கம், குடும்ப பிரச்னை உள்ளிட்ட எந்த பிரச்னை என்றாலும் கணீஸ்வர பெருமான் அவற்றை தீர்த்து வைப்பார் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.

குறிப்பாக ஜாதகம் பார்க்கச் செல்பவர்கள், சென்று விட்டு வந்தவர்கள் இந்த கோயிலில் வந்து வழிபட்டால் ஜாதகத்தில் உள்ள தோஷங்களின் வீரியம் குறைந்து மன நிம்மதி அடைவார்கள் என்பது ஐதீகம்.

பண்ருட்டியில் இருந்து 7 கி.மீ. தொலைவில் கணிச்சப்பாக்கத்தில் இந்தக்கோயில் உள்ளது.

மினிபஸ் வசதி உண்டு. ஆட்டோவிலும் செல்லலாம். .

Share
ஆன்மிகம்

Leave a Comment
Published by
ஆன்மிகம்
  • Recent Posts

    Girivalam benefits | திருவண்ணாமலை கிரிவலம் பலன்கள் | கிரிவலம் வரலாறு

    பக்தியோடு பக்தர்களால் சுற்றிக் கும்பிடப்படும் நிகழ்வு மலைவலம் அல்லது கிரிவலம் எனப்படும். கிரி என்றால் மலை ; வலம் என்றால் சுற்றுதல்… Read More

    4 days ago

    வைகாசி விசாகம் விரதமுறை மற்றும் பலன்கள் | Vaikasi Visakam Fasting Benefits

    வைகாசி விசாகம் விரதமுறை மற்றும் பலன்கள் | Vaikasi Visakam Fasting Benefits வைகாசி விசாகம் (Vaikasi Visakam) விரதம்… Read More

    6 days ago

    செல்வ வளம் தரும் சித்ரா பௌர்ணமி | Chitra Pournami

    செல்வ வளம் தரும் சித்ரா பவுர்ணமி::°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°ஒவ்வொரு மாதமுமே பவுர்ணமி வரும். ஆனால் மற்ற எந்தப் பவுர்ணமிக்கும் இல்லாத சிறப்பு, சித்ரா… Read More

    1 month ago

    ஶ்ரீ நரசிம்மர் ஜெயந்தி ஸ்பெஷல்

    🌻🙏ஶ்ரீ நரசிம்மர் ஜெயந்தி ஸ்பெஷல் (4/5/23, வியாழக் கிழமை) 🌻🕉️ 🍒ஶ்ரீ லக்ஷ்மீந்ருஸிம்ஹ பரப்ரஹ்மணே நம🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾 🌹 ஸ்ரீ லக்ஷ்மி… Read More

    1 month ago

    அட்சய திரிதியை பூஜை முறையும் பலனும் | Akshaya Tritiya benefits

    அட்சய திரிதியை பூஜை முறையும் பலனும் Akshaya Tritiya benefits சித்திரை (10) நாள் 23.4.2023 ஞாயிற்றுக்கிழமை அட்சய திருதியை… Read More

    2 months ago