அன்னக்குழியும் வைகையும் அழைத்த படலம் | Thiruvilaiyadal vaigai story tamil

அன்னக்குழியும் வைகையும் அழைத்த படலம் (Thiruvilaiyadal vaigai story tamil) பசிநோயால் வாடிய குண்டோதரனின் பசியைப் போக்கி, அவனுடைய தாகத்தைத் தணிக்க வைகையை மதுரையில் தோன்றச் செய்ததை விளக்குகிறது.

இப்படலம் திருவிளையாடல் புராணத்தின் மதுரைக் காண்டத்தில் எட்டாவது படலமாக அமைந்துள்ளது. இது இதற்கு முந்தைய படலமான குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலத்தின் தொடர்ச்சியாகும்.

பசிக்காக உணவருந்தியதன் காரணமாக குண்டோதரனுக்கு ஏற்பட்ட தாகத்திற்காக வைகை ஆற்றினை இறைவன் உருவாக்கிய விதம், வைகையின் வேறு பெயர்கள், பசிநோய் நீங்கிய குண்டோதரனின் மகிழ்ச்சி ஆகியவற்றை இப்படலத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

குண்டோதரனின் பசிநோயினை நீக்க அன்னக்குழி தோன்றுதல்
வடவைத்தீ என்னும் பசிநோயினால் வாடிய குண்டோதரன் மீனாட்சி அம்மை தயார் செய்த திருமண விருந்து உணவு முழுவதையும் உண்டான். ஆனாலும் அவனுடைய பசிநோயானது தீராமல் அதிகரித்துக் கொண்டே சென்றது.
அவன் சோமசுந்தரரிடம் சென்று தனது பசிநோயினை போக்கி அருள வேண்டினான். சோமசுந்தரரும் அவன்மீது இரக்கம் கொண்டார். அவர் உலகிற்கு எல்லாம் உணவளிக்கும் தனது சக்தியான அன்னபூரணியை மனதில் நினைத்தார்.
உடனே அங்கே தயிர் அன்னத்தினை உடைய நான்கு பெரிய குழிகள் தோன்றின. சோமசுந்தரரும் குண்டோதரனிடம் “பசிநோயால் வாடும் குண்டோதரனே, இந்த குழிகளில் உள்ள தயிர் அன்னத்தினை உண்பாயாக” என்று அருளினார்.
குண்டோதரனும் இறைவனின் ஆணையின்படி தன்னுடைய இரு கைகளாலும் அன்னக்குழியில் இருந்த தயிர் அன்னத்தை எடுத்து உண்டான். இறைவனின் கருணையால் குண்டோதரனைப் பிடித்திருந்த பசிநோய் மறைந்தது.

குண்டோதரனின் நீர்வேட்கை
அன்னக்குழியில் இருந்து உணவினை உண்ட குண்டோதரனின் வயிரானது பருத்து பெரியதானது. உணவினை உண்ட மயக்கத்தால் அவன் பூமியில் வீழ்ந்தான். இங்கும் அங்கும் புரண்டான்.
சிறிது நேரத்தில் குண்டோதரனுக்கு உண்ட உணவின் காரணமாக நீர்வேட்கை ஏற்பட்டது. உடனே அவன் மதுரையில் நீர்இருக்கும் இடங்களைத் தேடிபோய் நீரினை அருந்தினான்.
குண்டோதரனின் நீர்வேட்கையின் காரணமாக மதுரையின் நீர்நிலைகள் வற்றின. ஆனாலும் அவனுடைய நீர்வேட்கை அடங்கவில்லை. இறுதியில் அவன் சோமசுந்தரரை சரண் அடைந்தான்.
கங்கையை அழைத்தல்
சோமசுந்தரரிடம் குண்டோதரன் “உலகினை காத்து அருளும் பெருமானே. அடியேனின் பசிநோய் போய் இப்போது நீர்வேட்கை அதிகரித்துள்ளது” என்றான்.
“இங்குள்ள நீர்நிலைகளின் நீரினை எல்லாம் குடித்தபின்னும் என்னுடைய தாகம் தணியவில்லை. பசிநோயினை போக்கிய தாங்களே என்னுடைய தாகத்தினையும் தீர்க்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தான்.
சோமசுந்தரரும் குண்டோதரனிடம் அன்பு கொண்டு தன் தலையில் சூடியிருந்த கங்கையை நோக்கி “பெண்ணே, நீ இம்மதுரை மாநகரின் பக்கத்தில் ஒரு பெரிய நதியாக விரைந்து ஓடி வருவாயாக” என்று கட்டளை இட்டார்.

வைகை உருவாதல்
கங்கை சிவபெருமானை நோக்கி “முன்னர் பகீரதன் பொருட்டு ஒருமுறை தீர்த்தமாக என்னை அழைத்தீர்கள். இப்போதும் அவ்வாறே அழைக்கிறீர்கள்” என்றாள் .
“என்னுள் மூழ்கியவருக்கு பக்தியும், அன்பும், மெய்ஞானமும், வீடுபேறும் பெறுமாறு தாங்கள் எனக்கு திருவருள் புரிய வேண்டும்.” என்று கங்கை வரம் வேண்டினாள். இறைவனும் அவ்வாறே அருள் புரிந்தார்.

உடனே கங்கை அளவற்ற வேகத்துடன் பெரிய நதியாக வரத் தொடங்கினாள். பெரிய ஆரவாரத்துடன் பெரிய மரங்களைப் பெயர்த்துக் கொண்டு அந்நதியானது வந்தது.
சிவபெருமான் குண்டோதரனிடம் அந்நதிநீரினைப் பருகக் கட்டளையிட்டார். குண்டோதரனும் ஆற்றின் அருகே சென்று இருகைகளையும் நீட்டி நீரை வாரிக் குடித்தான்.
உடனே அவனுடைய நீர்வேட்கைத் தணிந்தது. குண்டோதரன் கையை வைத்து நீர் குடித்த நதியாதலால் அது வைகை என்று அழைக்கப்பட்டது.
நீர்வேட்கை தணிந்த குண்டோதரன் மகிழ்ந்து இறைவனின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினான். ஆனந்தத்தில் பல பாடல்களைப் பாடினான்.
அவனது பாடல்களைக் கேட்ட சிவபெருமான் அவனை தனது பூதகணங்களுக்கு தலைமை ஏற்கும் பதவியை அவனுக்கு அருளினார்.

வைகையின் வேறு பெயர்கள்
சிவபெருமானின் தலையில் இருந்து இறங்கி வந்ததால் வைகை சிவகங்கை என்று அழைக்கப்படுகிறது. தன்னை பருகுபவர்களுக்கு தெளிந்த சிவஞானத்தை அளிப்பதால் இது சிவஞானத்தீர்த்தம் என்றும், காற்றைப் போல் வேகமாக வருவதால் வேகவதி என்றும், மதுரையை சூழ்ந்து வருவதால் கிருத மாலை என்றும் அழைக்கப்படுகிறது.

அன்னக்குழியும் வைகையும் அழைத்த படலம் கூறும் கருத்து

தனக்கு ஏற்பட்ட நீர்வேட்கையை தணிக்க முயற்சிகள் மேற்கொண்ட குண்டோதரன் இறுதியில் இறைவனைச் சரணடைந்து தனது தாகத்தை தீர்த்துக் கொண்டான்.
இறைவனை சரண் அடைபவர்களை இறைவன் கட்டாயம் காத்து அருளுவார் என்பதே அன்னக்குழியும் வைகையும் அழைத்த படலத்தின் என்பதன் கருத்தாகும்.

திருவிளையாடல் புராணம் என்பது சிவபெருமானது திருவிளையாடல்களைக் கூறும் பரஞ்சோதி முனிவர் எழுதிய நூல் ஆகும். சிவபெருமான் தன்னுடைய அடியார்கள் மீதும், சிற்றுயிர்கள் மீதும் கொண்ட அன்பினால் தாமே பூலோகத்திற்கு வந்து செய்த திருவிளையாடல்களின் தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது. மதுரை மீனாட்சியம்மை பராசக்தி பரஞ்சோதி முனிவரின் கனவில் தோன்றிச் சிவபெருமானின் திருவிளையாடல்களைப் பாடும் படி கூறியமையால் இந்நூலைப் பரஞ்சோதியார் இயற்றியதாக நம்பப்படுகிறது. பரஞ்சோதி முனிவர் திருமறைக்காடு (வேதாரணியம்) எனும் ஊரில் மீனாட்சி சுந்தர தேசிகர் என்பவருக்கு மகனாகப் பிறந்தவர். மதுரையில் சற்குருவை ஏற்று சைவ சந்நியாசம் பெற்றார்.