Arthamulla Aanmeegam

ஆடி அமாவாசையும் பித்ருக்கள் ஆசியும் | Aadi Amavasai viratham

adi Amavasai viratham

ஆடி அமாவாசையும் நமக்கு நல்ஆசிர்வாதம் அளிக்கும் நமது முன்னோர்களும்:

ஒரு வருடத்தில் வரும் பன்னிரண்டு அமாவாசைகளில் ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி அமாவாசை ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்தவை.
சூரியன் தெற்குநோக்கிப் பயணிக்கும் தட்சிணாயன காலத்தின் தொடக்கத்தில் வருவது ஆடி அமாவாசை.

(சூரியன் வடக்குநோக்கி சஞ்சரிக்கும் உத்தராயன காலத்தின் தொடக்கத்தில் வருவது தை அமாவாசை).

ஒரே ராசியில் சூரியனும் சந்திரனும் ஒன்றுசேரும் புனிதநாள் அமாவாசையாகும்.
ஜோதிட சாஸ்திர கணக்கின்படி வடக்கேயுள்ள கடக ரேகையில் சூரியனும் சந்திரனும் இணைவது ஆடி அமாவாசை. தெற்கேயுள்ள மகர ரேகையில் சூரியனும் சந்திரனும் இணைவது தை அமாவாசை. மேற்சொன்ன கடக ராசியும், மகர ராசியும் நீர் ராசிகள் என்று ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன.

எனவே இவ்விரு அமாவாசை நாட்களில் நீர் நிலைகளில் அதிசயத்தக்க மாறுதல்கள் ஏற்படுவதாக ஆன்மிகம் கூறுகிறது. இதை அறிவியலும் ஏற்றுக்கொள்கிறது.
அமாவாசையன்று நீர் நிலைகளில் ஏற்படும் மாறுதல்களால் கடலில் வாழும் ஜீவராசிகளான சங்கு, சிப்பி, பவளம் போன்றவை புத்துயிர் பெறுகின்றன. அதன் சந்ததிகளும் பரம்பரை பரம்பரையாக வாழ வழிவகுக்கின்றன. அதிலும், ஆடி அமாவாசையன்று ஏற்படும் மாறுதல்களால் கடல்நீரில் ஓர் புதிய சக்தி ஏற்படுகிறது.

எனவே, அன்று புனிதத்தலங்களிலுள்ள கடலில் நீராடுவது உடல்நலத்திற்கு வளம் தரும். மேலும் நம்முடன் வாழ்ந்த, காலஞ்சென்றவர்களுக்கு தர்ப்பணம் மற்றும் பிதுர்பூஜை செய்வது நல்ல பலன்களைக் கொடுக்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது.
பொதுவாக, நீர் நிலைகளை தெய்வமாக வழிபடுவது இறையன்பர்களின் வழக்கம்.

ஆடி அமாவாசையன்று முக்கடல் கூடும் கன்னியாகுமரி, தனுஷ்கோடி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம், திருப்புல்லாணி, தேவிப்பட்டினம் நவபாஷாணம் உள்ள கடல், வேதாரண்யம், கோடியக்கரை, பூம்புகார், திருப்பாதிரிப்புலியூர், கோகர்ணம் போன்ற இடங்களில் கடல் நீராடுவது சிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆடி அமாவாசையன்று, தமிழகத்தில் காவேரிப் பூம்பட்டினத்தில் காவேரி சங்கம முகத்தில் நீராடுவது சிறப்பாகப் பேசப்படுகிறது. வைகை, தாமிரபரணி, மயிலாடுதுறையில் ஓடும் காவேரி, திருவையாறு, குடந்தை அரிசலாறு, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவேரிப் படித்துறை, திருச்சிக்கு அருகி லுள்ள முக்கொம்பு ஆகிய தீர்த்தக்கரைகளில் இந்த நாளில் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும்.

அன்றைய தினம் வேதவிற்பன்னர் மேற்பார்வையில் பிதுர் பூஜை செய்வதால் குடும்பத்தில் சுபகாரியங்கள் தடையின்றி நடைபெறுவதுடன்,

மேற்கண்ட ஊர்களுக்கு அருகில் இல்லாதவர்கள், அவரவர் ஊல்களுக்கு அருகில் இருக்கும் ஆறுகள் (நீரோடும் இடங்களில்) பித்ரு பூஜை செய்து முன்னோர்களின் ஆசியை பெறலாம்.

இந்த காரியங்களுக்கு தட்சிணாயன கால ஆடி அமாவாசை உகந்த நாளாகக் கருதப் படுகிறது. அன்று நீர் நிலையில் பிதுர்பூஜை செய்து வேதவிற்பன்னருக்குரிய சன்மானம் அளித்தபின், அன்னதானம் செய்வதும், மாற்றுத்திறனாளிக்கு வசதிக்கேற்ப ஆடை தானம் வழங்குவதும் முன்னோர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

ஆடி முதல் தை மாதம் வரை தேவர்கள் ஓய்வெடுப்பதாக ஐதீகம். அப்போது நம் முன்னோர்கள் நம்மைப் பாதுகாப்பதற்காக பூலோகத்திற்கு வருவார்களாம்.

அவர்களை வரவேற்று ஆடி அமாவாசை தினத்தில் வழிபடவேண்டும் என்று சாஸ்திரம் வலியுறுத்துகிறது. அன்று நீர்நிலையில் பிதுர்பூஜைகள் மேற்கொள்ளப்பட்டபின் வீட்டிற்கு வந்ததும், பூயைறையில் (முன்னோர்களின் படங்கள் இருந்தால் அந்தப் படங்கள் முன்னிலையில்) அவர்களை நினைத்து தலைவாழை இலையில் பலவிதமான காய்கறிகளை சமைத்து, வடை, பாயசத்துடன் பெரிய அளவில் படையல்போட்டு வழிபடவேண்டும்.

அவரவர் குல வழக்கப்படி இந்தப் பூஜையை மேற்கொள்ளவேண்டும் என்பது விதியாகும்.
இதனால் முன்னோர்களின் ஆசிகிட்டுவதுடன், வீட்டில் தீய சக்தி இருந்தால் அது விலகியோடும். இல்லத்தில் உள்ளவர் களும் சௌபாக்கியங்களுடன் வாழ்வர்.

*ஆடி அமாவாசைக்கு பித்ரு தர்ப்பணம் மந்திரம்*….
சூரியனை பார்த்துக்கொண்டு கைகளில் காகத்திற்கு வைக்கும் சாதத்தை எடுத்துக்கொண்டு சூரியனைப் பார்த்து பிறகு உங்கள் கைகளில் இருக்கும் அன்னத்தை பார்த்து இந்த மந்திரத்தை படிக்கவும் உங்கள் முன்னோர்களின் ஆசீர்வாதம் உங்களுக்கு கிடைக்கும்

*ஓம் சர்வ பிண்ட ரட்சகம் பரிபூரண பித்ரு அனுக்கிரகம் நமோ நமஹ*….ஓம்குருவே துணை….

*ஆடி அமாவாசை ஸ்பெஷல் !*
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
நீங்கள் சந்தோஷமாக , நிம்மதியாக சௌபாக்கியத்தோடு இருக்கின்றீர்களா?

“இல்லை” என்றால் உங்களுக்கு பித்ருக்களின் ஆசி கிடைக்கவில்லை, அல்லது அவர்களின் ஆசி கிடைக்கும்படி நீங்கள் நடந்துகொள்ளவில்லை என்று அர்த்தம்.

மறைந்த உங்கள் முன்னோர்கள் எப்போதும் உங்கள் நினைவாகவே இருப்பார்கள். அவர்களை நினைத்து, எல்லா நலனும் கிடைக்கவேண்டும் என்று நினைத்தாலே போதும் அவர்களின் ஆசி உங்களுக்குக் கிடைத்துவிடும்.

மறைந்த நம் முன்னோர்களின் திதி வரும் நாளில், அவர்களுக்கு நாம் சிராத்தம் கொடுக்கவேண்டும். சிரத்தையுடன் செய்யவேண்டும் என்பதால்தான் சிராத்தம் என்று சொல்லப்படுகிறது.

அன்று அவர்களுக்காகப் படைக்கப்படும் உணவுகளை உண்பதற்காகப் பசியோடு காத்திருப்பார்கள். காக்கை உருவத்தில் வந்து நாம் படைத்த உணவு வகைகளை அவர்கள் உண்பார்கள் என்பது நம்பிக்கை.

அன்றைய தினத்தில் சில நிமிடங்களாவது நம் முன்னோர்களை நினைத்து, பிரார்த்தனை செய்யவேண்டும். அவர்கள் நிச்சயம் நம்முடைய பிரார்த்தனையை நிறைவேற்றுவார்கள்.

ஆண்கள் மட்டும்தான் திதி கொடுக்கவேண்டும் என்ற சமூக நியதி உண்டு. ஆனால், ராமாயணத்தில் சீதையே திதி கொடுத்திருக்கிறாள்.

அதுவும் தன்னுடைய மாமனார் தசரதருக்கு! தசரதருக்குத் திதி கொடுக்க ராமன் இருக்கும்போது, சீதை திதி கொடுக்கவேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது?

இந்தக் கேள்வியின் பின்னணியில் அமைந்திருக்கும் சம்பவம்…

ராமபிரான், மனைவி சீதா, தம்பி லட்சுமணன் மூவரும் வனவாசம் சென்ற காலம் அது. அச்சமயத்தில் கயா (பீகார்) பகுதியில் இருந்த ஒரு வனத்தின் வழியாக நடந்துகொண்டிருந்தனர்.

மரங்களும் மலைகளும் நிறைந்த செழிப்பான காடு. அருகில் கங்கையைப் போல பல்குணி ஆறு ஓடிக்கொண்டிருந்தது. அன்றைய நாள் தசரத மன்னரின் நினைவு நாள்.

அதிகாலை நேரமாகிவிட்டதால் பல்குணி நதிக்கரையிலேயே தந்தைக்குத் திதி கொடுத்துவிடலாம் என்று முடிவெடுத்தார் ராமர்.

தன் தம்பியை அழைத்து, “லட்சுமணா, நீ அருகில் இருக்கும் கிராமத்திற்குச் சென்று, சிராத்தத்துக்குத் தேவையான தானியங்கள், வளமான தர்ப்பைகளை எடுத்து வருவாயாக” என்று கூறினார்.

லட்சுமணனும் அண்ணன் சொல்லைக் கேட்டு கிராமத்திற்கு விரைந்தான். சீதை காட்டில் இருக்கும் பழங்களைப் பறித்து வந்தாள். ராமனோ ஆற்றில் நீராடிவிட்டுத் திதி செய்வதற்காக இடத்தைச் சுத்தப்படுத்தினார்.

சிராத்த நேரம் நெருங்கிவிட்டது, கிராமத்திற்குச் சென்ற லட்சுமணன் இன்னும் திரும்பவில்லையே,பித்ருக்கள் உணவிற்காகக் காத்திருப்பார்களே என்று கவலையுடன் சீதாவை ஆற்றங்கரையில் அமரவைத்துவிட்டு தன் தம்பியைத் தேடி தானும் கிராமத்திற்குச் சென்றார்.

நேரம் சென்றுகொண்டிருந்தது, தனியாக நின்றுகொண்டிருந்தாள் சீதா, கிராமத்திற்குச் சென்ற இருவரும் இன்னும் திரும்பவில்லையே, சிராத்தப் பொருள்களைக் கொண்டுவந்தால்தானே சமைக்க முடியும் என்று மிகவும் கலக்கத்துடன் இருந்தாள்.

தான் பறித்து வந்த பழத்தைச் சுத்தப்படுத்தினாள், அருகில் இருக்கும் தாழம்பூப் புதரிலிருந்து தாழம்பூவைப் பறித்து இலையில் வைத்தாள்.

இன்னும் சற்று நேரத்தில் அசுர கணம் வந்துவிடுமே, அதற்குள் தன்னுடைய மாமனாருக்கு உணவைப் படைக்காவிட்டால் பட்டினியாக இருப்பாரே என்று கலங்கினாள். வேறுவழியின்றி, இலையில் தான் பறித்து வந்த பழங்களை நைவேத்தியமாக வைத்து தன் மாமனாரை நினைத்து மனதார பிரார்த்தனை செய்தாள்.

அப்போது வானில் இருந்து ஒரு குரல் ஒலித்தது, “சீதையே, நீ படைத்த உணவை நான் ஏற்றுக்கொண்டேன். நலமுடன் வாழ்க” என்றது. சீதைக்குச் சந்தோஷம் தாங்கவில்லை. ஆயினும், ‘தான் முறையாகப் பூஜை செய்யவில்லை,

அறுசுவை உணவையும் படைக்கவில்லை, ராமனும் சிராத்தத்தில் பங்கெடுக்கவில்லை, அப்படியிருக்க இது எப்படி சாத்தியம்?’ என்று குழம்பி, “நன்றி, நீங்கள் யார் என்பதை நான் தெரிந்துகொள்ள ஆசைப்படுகின்றேன்”

என்று கூறினாள். அவள் ஆசையை நிறைவேற்ற தசரதனே எதிரில் தோன்றி, “சீதையே நான்தான் உன் மாமனார்” என்று கூறி ஆசிவழங்கி மறைந்தார்.

சீதா தேவிக்கு மிகுந்த சந்தோஷம், ஆயினும் தான் கண்ட இந்த அற்புதக்காட்சியை யாரும் நம்ப மாட்டார்களே, ராமனும் லட்சுமணனும் கூட நம்புவார்களா என்பது சந்தேகம்தான், இருப்பினும் தான் பறித்துவந்த தாழம்பூவும், பல்குணி ஆறும், அருகில் இருக்கும் பசுவும் சாட்சி சொல்லும் என்று தனக்குள்ளேயே கூறிக்கொண்டாள்.

“காட்டிலிருந்து கிராமம் தொலைவில் இருப்பதால், தானியங்கள், கனி, ஆகியற்றைக் கொண்டுவரத் தாமதம் ஆகிவிட்டது, சிராத்தம் செய்ய நேரம் குறைவாகத்தான் இருக்கின்றது,

உடனே உணவைத் தயார் செய்வாயாக..” என்று சீதாவை நோக்கி ராமன் கூறினார். சீதா தயங்கியபடியே, நடந்த அனைத்தையும் கூறினாள். சீதா கனவு கண்டிருப்பாள் என்று நினைத்துக்கொண்டு சீதை கூறியதை ராமனும் லட்சுமணனும் நம்ப மறுத்தனர்.

”சாட்சிக்கு வேண்டுமெனில் பல்குணி நதியையும், பசுவையும், தாழம்பூவையும் கேட்டுப்பாருங்கள்” என்றாள் சீதை. ஆனால், ராமனுக்கு பயந்து பசுவும், பல்குணியும், தாழம்பூவும் சாட்சி கூறவில்லை.

சீதா கூறியதை நம்பாமல், திதி கொடுக்கத் துவங்கினார் ராமன். அப்போது வானில் இருந்து பித்ருக்களின் குரல் கேட்டது, “ராமா. நிறுத்து சீதா பரிமாறிய பழங்களை நாங்கள் ஏற்கெனவே ஏற்றுக்கொண்டோம், திருப்தியும் அடைந்துவிட்டோம்” என்றது.

ராமன் சீதா கூறியதை நம்பாமல் போனதற்கு மிகவும் வருந்தினார். சீதாவோ, சாட்சி கூறாமல் அமைதியாக இருந்த பல்குணி நதியைப் பார்த்து,

”இனி நீ பூமிக்கு மேலே செல்லாமல், பூமிக்குக் கீழே யார் கண்ணுக்கும் தெரியாமல் ஓடுவாயாக,

தாழம்பூவே இனி நீ ஈஸ்வரன் பூஜைக்குப் பயன்படாமல் போவாயாக, பசுவே நீ வாயைத் திறந்து உண்மையைக் கூறாததால் உன் முகத்தில் வசிக்கும் லட்சுமி தேவி பின்புறம் செல்லட்டும் என்று சபித்தாள்.

அதன் படியே ஆயின. எனவே நம் பித்ருக்களை அன்போடு அழைத்தாலே உங்களுக்காக ஓடி வருவார்கள். அவர்களை மறக்காமல் நினைவில் வைத்திருப்பதே அவர்களுக்கு நாம் செய்யும் மிகப்பெரிய தொண்டாகும்.

*!!ஜெய் ஸ்ரீ சீதாராம்!!*

பித்ரு 108 போற்றி

தர்ப்பணம் செய்யும் முன்பாக 33 விஷயங்களை கவனத்தில் கொள்ளுங்கள்

 

Share
ஆன்மிகம்

Leave a Comment
Published by
ஆன்மிகம்
Tags: aadi masam
  • Recent Posts

    Today rasi palan 20/04/2024 in tamil | இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் சனிக் கிழமை சித்திரை – 07

    Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன் _*பஞ்சாங்கம்*_ °°°°°°°°°°°°°°°° *சித்திரை - 07* *ஏப்ரல் -… Read More

    20 hours ago

    Kolaru Pathigam Song lyrics in Tamil | கோளறு பதிகம் பாடல் வரிகள் மற்றும் விளக்கம்

    Kolaru Pathigam Song lyrics in Tamil கோளறு பதிகம் (Kolaru pathigam lyrics in Tamil) - நவகிரஹங்களால்… Read More

    2 days ago

    Karpaga Vinayagar Temple History | கற்பக விநாயகர் திருக்கோயில் வரலாறு

    அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில் வரலாறு பிள்ளையார்பட்டி – 630207,  சிவகங்கை மாவட்டம். *காலை 6 மணி முதல் 12… Read More

    2 days ago

    Ramar Slogam | ராமர் ஸ்லோகம்

    ராமர் ஸ்லோகம் : ராம நாம சுர வந்தித ராம் ரவிகுல ஜனநிதி தந்தவராம் சாகேதஸ்தலம் வந்தவராம் தசரத கோசலை… Read More

    1 month ago

    Gomatha stotram in tamil | பசுமாடு ஸ்தோத்ரம்

    கோமாதா ஸ்தோத்திரம் நமோ தேவ்யை மஹா தேவ்யை ஸுரப்யை ச நமோ நம கவாம் பீஜஸ்வ ரூபாயை நமஸ்தே ஜகதம்பிகே… Read More

    2 weeks ago

    Asta Kaali Deviyar Varalaru | அஷ்ட காளி தேவியர் வரலாறு

    அஷ்ட காளி தேவியர் வரலாறு! *தொடர் பகுதி-5* *5வதாக பிறந்த அரியநாச்சி என்ற அங்கையற்கன்னி* *வரலாறு*! அரியநாச்சி என்ற அங்கையற்கன்னி… Read More

    1 month ago