ஆனாய நாயனார்.

ஆனாய நாயனார் மழநாட்டில் உள்ள திருமங்கலம் என்னும் திருத்தலத்தில் இடையராக அவதரித்தார்.

மழநாடு என்பது இன்றைய திருச்சி அருகே உள்ள‌ திருவானைக்கா மற்றும் அதனைச் சுற்றிலுள்ள பகுதிகளைச் சார்ந்தது.
திருமங்கலம் என்னும் திருத்தலம் லால்குடி ரயில் நிலையத்திலிருந்து வடமேற்கில் சுமார் 4 கிமீ தொலைவில் உள்ளது.

இவர் தோன்றிய இடையர் குலத்திற்கு ஏற்ப ஆவினங்களை மேய்த்து வரும் தொழிலைச் செய்து வந்தார்.இவர் ஆவினங்களை முல்லை நிலத்திற்கு ஓட்டிச் செல்லும் போது கையில் கோலும் புல்லாங்குழலும் கொண்டிருப்பார்.

இடையராக இருந்த போதிலும் இவருக்கு சிவனாரிடம் அலாதிப் பிரியம். எப்போதும் வெண்ணீறு அணிந்த சிவனாரை எண்ணிக் கொண்டே இருப்பார்.

கார்காலத்தில் ஓர்நாள் ஆனாய நாயனார் நெற்றியில் வெண்ணீறு அணிந்து கோலோடும் புல்லாங்குழலோடும் ஆவினங்களை மேய்க்க காட்டிற்குப் புறப்பட்டார்.

கால்களிலே பாதுகையை அணிந்துக் கொண்டார். கையிலே கோலும் வேங்குழலும் எடுத்துக் கொண்டார், ஆநிரைகளை ஓட்டிக்கொண்டு, முல்லை நிலத்திற்குப் புறப்பட்டார். அப்பொழுது கார் காலம் என்பதால் முல்லை நிலம் பூத்துக் குலுங்கும் புது மலர்ச்சோலை போல் காட்சி அளித்தது. ஆங்காங்கே கொன்றை மரங்கள் புது மலர்களைத் தாங்கிய வண்ணம் எழிலுறக் காட்சி அளித்தன. ஆனாயர் முல்லை நிலத்தின் இயற்கை எழிலில் இன்பத்தை அளிக்கும் வண்ண மலர்களின் நறுமணத்தினில் உள்ளத்தைப் பறிகொடுத்தார். தம்மை மறந்து வேங்குழலின் இன்ப இசையை இனிமையாக எழுப்பி வாசித்துக் கொண்டே இருந்தார். அப்பொழுது ஆனாயர் பார்வை கொன்றை மரத்தின் மீது பதிந்தது. அம்மரத்திலிருந்த மலர்கள் கொத்து கொத்தாக மாலை போன்ற வடிவத்தில் தொங்கிக் கொண்டிருந்தன.எந்நேரமும் சிவனைப் பற்றியும், திருவெண்ணீற்றை பற்றியும் எண்ணிக் கொண்டிருக்கும் ஆனாயர்க் கண்களுக்கு கொன்றை மரத்தின் வடிவத்தைப் பார்த்ததும் கொன்றை மாலையை அணிந்த சிவபெருமான் எழுந்தருளி இருப்பது போல் தோன்றியது. அத்திருத்தோற்றப் பொலிவினில், சிவனையே பார்த்து விட்டாற் போன்ற பெருமகிழ்ச்சி பூண்டார் அடியார். அவரது ஐம்புலன்களும் பக்தியால் பூரித்தன. ஆனாயர் அம்மரத்தை வலம் வந்து வணங்கினார். தாம் வைத்திருந்த வேங்குழலை எடுத்தார். ஆனாயர் பரமனை நினைத்தபடியே பண் ஒன்றை அமைத்தார். அவர் சுத்த சுரத்திலே திருவைந்தெழுத்தை இசையுடன் அமைத்து முறையோடு சுருதி சேர்த்து வாசிக்கலானார். வேங்குழலின் இசை இன்பவெள்ளம் போல் பாய்ந்து ஓடியது. கல்லும் கரையும் தன்மை பெற்ற அவ்வின்ப இசை அமுதகானம் போல் அமைந்தது. புற்களை அசை போட்டபடியாக நின்று கொண்டிருந்த ஆநிரைகள் ஆனாயர் இசைக்கு மயங்கி அவரது அருகே வந்து நின்றன. கன்றுகளோ தாய்ப்பாலையும் மறந்து இன்ப இசையில் உணர்விழந்து ஆனாயரைச் சுற்றி நின்றன.

முல்லை வனத்து விலங்குகளான மான், புலி, கரடி, யானை, பாம்பு, மயில் உள்ளிட்டவைகள் தம்நிலை மறந்தன.
முல்லை நிலத்து விலங்குகள் தம்முடைய இயல்பு மாறி பகைமையை மறந்து எல்லாம் ஒன்றாக ஆனாயரைச் சுற்றி நின்றன.

சிவனாரும் ஆனாயனாரின் இசையில் ஒன்றி அவ்விடத்தில் உமையம்மையோடு காட்சி அளித்தார்.

சிவபெருமான் “ஆனாயா, நீ இந்த நிலையிலேயே எம்மை வந்து அணைவாயாக.” என்று அருளினார்.

இறைவனின் விருப்பப்படி ஆனாயனாரும் திருஐந்தெழுத்தை புல்லாங்குழலில் இசைக்க பரமுத்தி அடையப்பெற்று சிவபுரம் சார்ந்தார்.

ஆனாய நாயனார் குருபூசை கார்த்திகை மாதம் அசுதம் நட்சத்திரத்தில் போற்றப்படுகிறது.
ஆனாய நாயனார் திருவடிகள் போற்றி.
அம்மையப்பன் மலரடிகள் போற்றி போற்றி.

Leave a Comment