Annabishekam in tamil

அன்னாபிஷேகம் 28-10-2023, சனிக்கிழமை – (Annabishekam history in tamil)

அன்னாபிஷேகம் நடத்துவது ஏன்?
*************
கல்லினுள் தேரை முதல் கருப்பை உயிர்வரை எண்ணாயிரம் கோடி உயிர்களுக்கு உணவு அளிப்பவன் ஈசன். அதனை நினைவுகூர்ந்து நன்றி செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஐப்பசி மாத பௌர்ணமி நாளில் எல்லா சிவாலயங்களிலம் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது.
சிவலிங்கத்தை அன்னத்தினால் முழுமையாக மூடி ஆராதனைகள் செய்வதையே அன்னாபிஷேகம் என்கிறோம். அதை ஏன் ஐப்பசி மாத பௌர்ணமியில் செய்ய வேண்டும்? மற்ற மாதங்களில் செய்யலாமே?
ஐப்பசி மாதப் பௌர்ணமிக்கு ஒரு சிறப்பு உண்டு. அன்றுதான் சந்திரன் தனது சாபம் முழுமையாகத் தீர்ந்து பதினாறு கலைகளுடன் முழுப் பொலிவுடன் திகழ்கிறான்.
அன்னத்தின் பெருமை
*********
ஐப்பசி பௌர்ணமி நாளன்று அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் எனப்படும் சிறப்பு வழிபாடு லிங்க மூர்த்திக்கு நடத்தப்படுகிறது. அனைத்து உயிர்களுக்கும் அன்னமான உணவை அளித்துப் பாதுகாக்கும் சிவபெருமானுக்கு சுத்தமாக சமைக்கப்பட்ட சாதத்தால் இறைவனை அலங்கரிப்பது இதன் சிறப்பம்சமாகும்.
“அன்னம் பரப்பிரம்மம்” என்பர். உணவை இறைவனாகப் பார்க்கிறது ஆன்மிகம். உடலை வளர்ப்பதுடன், உள்ளத்தையும் வளர்ப்பது அன்னம் தான். இதனால் தான், ஐப்பசி பவுர்ணமி அன்று, சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நடத்தப் படுகிறது. பிரசாதத்தை “ப்ர+சாதம்” என சொல்ல வேண்டும். “சாதம்” சாதாரண உணவு; “ப்ர” என்றால், கடவுள். அதுவே கடவுளுக்கு படைக்கப்பட்டு விட்டால், அதிலுள்ள தோஷங்கள் விலகி, “பிரசாதம்” ஆகி விடுகிறது. இதனால் தான், சிவனுக்கு அன்னாபிஷேகம் நடத்தி, உணவளித் தனர்.
முனிவர் ஒருவர், ஒரு தேசத்தின் ராஜாவைச் சந்தித்தார். அவரை வரவேற்ற அவன், தனியறையில் தங்க வைத்து, சகல வசதிகளையும் செய்து கொடுத்து, சாப்பிட்டு விட்டுப் போகும்படி கட்டாயப்படுத்தினான்; முனிவர் மறுத்தார். இருப்பினும், நியமத்துடன் சமைத்துப் போடுவதாக வாக்களித்து, சமையலுக்கும் தனியாட்களை ஏற்பாடு செய்தான்; முனிவரும் சாப்பிட்டார். பலவகை உணவுகளால் வயிறு மந்தமாயிற்று; தூக்கம் வந்தது. சற்று நேரம் தூங்கி, பின் விழித்ததும், கண் எதிரே இருந்த சுவரில் ஒரு முத்துமாலை தொங்கியதைப் பார்த்தார். உள்ளே சென்ற உணவின் தாக்கமோ என்னவோ… அதை எடுத்து வைத்துக் கொண்டால் என்ன என்று முனிவருக்கு தோன்றியது. அதையெடுத்து தன் வஸ்திரத்தில் முடிந்து வைத்துக் கொண்டார்.
சற்று நேரம் கழித்து, ராஜாவிடம் விடைபெற்று, தன் ஆசிரமத்துக்குப் போய் விட்டார். அவர் சென்ற பிறகு தான், மாலை காணாமல் போன விஷயம் வெளிப்பட்டது. அதிகாரிகள் விசாரணையை ஆரம்பித்தனர். அந்த அறைக்கு வந்து போன அப்பாவிகளுக்கெல்லாம் உதை விழுந்தது; ஆனால், அவர்களோ ஒரேயடியாக மறுத்தனர். முனிவர் மீது சந்தேகம் என்ற சிந்தனை கூட யாருக்கும் வரவில்லை. அவர் முற்றும் துறந்தவர் என்பதில் எல்லாருக்கும் முழு நம்பிக்கை.
அன்றிரவு, முனிவருக்கு வயிறு, “கடமுடா” என்றது; கடும் பேதி. வயிறு குறைய, குறைய மனசும் பழைய நிலைக்கு வந்து விட்டது. “அவசரப்பட்டு தப்பு செய்து விட்டோமே… விசாரணையில் அப்பாவிகளெல்லாம் அடி வாங்கியிருப்பரே… என்ன நடந்தாலும் பரவாயில்லை. ராஜாவிடம் இதை ஒப்படைத்து, கொடுக்கிற தண்டனையைப் பெற்றுக் கொள்வோம்” என்று சென்றார். ராஜாவிடம் உண்மையைச் சொல்லி, மாலையை ஒப்படைத்தார் .
“யாரோ ஒருவன் இதைத் திருடி உங்களிடம் ஒப்படைத்திருக்கிறான். அவனைக் காப்பாற்ற நீங்கள் திருடியது போல் நாடகமாடுகிறீர்கள். நீங்களாவது, திருடுவதாவது…இதைக் கேட்கவே மனம் சகிக்கவில்லை…” என்றான் ராஜா. அவ்வளவு நம்பிக்கை! முனிவரோ, தன் கருத்தில் விடாப்பிடியாய் நின்றார். ராஜா அவரிடம், “நீங்கள் சொல்வது உண்மையாயினும், அதற்கும் ஒரு காரணம் இருந்திருக்க வேண்டுமே…
அதுபற்றி ஏதாவது உங்கள் பேரறிவுக்கு புலப்படுகிறதா?” எனக் கேட்டான். “மன்னா… நேற்றைய உணவை சமைத்தது யார்? அதற்கு பயன்படுத்திய பொருட்கள் எந்த வழியில் வந்தன என சொல்…” என்றார். “சுவாமி… திருடன் ஒருவன் ஒரு அரிசிக் கடையை உடைத்து மூடையை தூக்கிச் சென்ற போது, பறிமுதல் செய்த அரிசி அது. அரிசிக்குரியவர் உரிய ஆவணம் தராததால், அரண்மனை கிட்டங்கியில் சேர்க்கப்பட்டது…” என்றான். “பார்த்தாயா… திருட்டு அரிசியை சாப்பிட்டதால், திருட்டு புத்தி வந்துள்ளது…” என்றார் முனிவர்.
“அப்படியே இருந்தாலும் கூட, அப்படி ஒரு அரிசியை சமைக்க காரணமான நான் தான் குற்றவாளி…” என்ற ராஜா, முனிவரை அனுப்பி விட்டான். உணவு பயிரிடும் விதம், பயிரிடுபவர், சமைப்பவர் இவற்றைப் பொறுத்தே சாப்பாட்டின் தரம் அமையும். அதைச் சாப்பிடும் போது, அந்த குணநலன்கள் மனிதனை தாக்கும். அதனால் தான், இறைவனுக்கு படைத்து பிரசாதமாக சாப்பிடுகிறோம். பயிரிடும் போதும், சமைக்கும் போதும், சாப்பிடும் போதும் நல்லதையே சிந்தித்தால், நாம் உண்ணும் உணவே பிரசாதம் ஆகிவிடும்.
அது என்ன சாபம்?
********
தெரிந்த கதைதான். சந்திரன், அஸ்வினி முதல் ரேவதி வரையிலான தனது நட்சத்திர மனைவியருள் ரோகிணியிடம் மட்டும் தனி அன்பு செலுத்தி மற்றவர்களிடம் பாரபட்சம் காட்டியதால், மாமனார் தட்சனால் உடல் தேயட்டும் என்று சாபம்.
சந்திரனுக்கும் ஒவ்வொரு கலையாக தேய ஆரம்பித்தது. அவன் மிகவும் வருந்திக் கெஞ்சவே, திங்களூரில் சிவனை பூஜித்தால் சாப விமோசனம் கிடைக்கும் என்றார், தட்சன். உடனே அவன் திங்களூர் வந்து சிவனை நோக்கி தவம் செய்யத் துவங்கினான். அவன் மேனியின் ஒளி நாளுக்கு நாள் மங்கத் துவங்கியது. மூன்றே மூன்று கலைகள் மிச்சமிருக்கும் போது சிவனார், அவன்பால் மனமிரங்கி அந்தப் பிறையைத் தனது தலையில் அணிந்து கொண்டார்.
கொடுத்த வாக்கை மீறிய அவனுக்கு பதினாறு கலைகளும் கிடைக்கப் பெற்றாலும் முழுப்பொலிவும் வருடத்தின் ஒருநாள் அதாவது ஐப்பசி பௌர்ணமி அன்று மட்டுமே கிடைக்கும். அது மட்டுமல்ல அவனது ஒளி தினமும் தேயும் முழுவதும் மறைந்து பின் படிப்படியாக வளரும். இது எப்போதும் நடக்கும் ஒரு சுழற்சியாக இருக்கும் என்று அருளிச் செய்தார் விடைவாகனர்.
திங்கள் முடிசூடியவருக்கு, மதி முழுமையான ஒளியுடன் இருக்கும் நாளில் சிறப்பு வழிபாடு செய்வதுதானே சிறப்பு!
ஆன்மிக ரீதியாக மட்டுமன்றி அறிவியல் ரீதியாகவும் இதற்கு ஆதாரம் இருக்கிறது. அக்டோபர் (ஐப்பசி) மாதத்தில்தான் நிலவு, பூமிக்கு மிக அருகில் வந்து தனது முழு ஒளியையும் பூமியை நோக்கி வீசுகிறது என்கிறது வானவியல்.
நவகிரகங்களில் சந்திரனுக்கு உரிய தானியம் அரிசி. இதை உணர்ந்த நமது ரிஷிகள் அந்த மாதத்தில் அன்னாபிஷேகம் செய்வது சிறப்பு என்று கண்டறிந்து அதனை நடைமுறைப்படுத்தினார்கள்.
அன்னாபிஷேகத்தின் சிறப்புகள்:
*************
அம்பிகைபாகன் சதா அபிஷேகப் பிரியர். அதனால் அவருக்குப் பதினொரு வகையான பொருட்களால் அபிஷேகம் செய்வது வழக்கம். அவை தூய நீர், பசும்பால், இளநீர், கருப்பஞ்சாறு, சந்தனம், விபூதி, தயிர், பஞ்சாமிர்தம், மாப்பொடி, மஞ்சள், அன்னம் ஆகியன. இவற்றுள் மிகச் சிறப்பானது அன்னாபிஷேகமே.
அன்னம் பிராணன் என்றும், அஹமன்னம் எனவும் வேதங்கள் போற்றுகின்றன. ஒருவன் எத்தகைய உணவு உண்கிறானோ அதைப் பொறுத்தே அவனது மனம் இருக்கும் என்கின்றன நமது உபநிடதங்கள்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த அன்னத்தை கொஞ்சம் கூட வீணாக்கலாகாது என்பதை உணர்த்தவும், அன்னத்தின் தெய்வீகத் தன்மையை எடுத்துக் காட்டவுமே அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.
அது மட்டுமல்ல, நமது பேரண்டம் நிலம், நீர், ஆகாயம், காற்று, நெருப்பு என்னும் பஞ்ச பூதங்களால் ஆனது. அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் என்ற திருமூலர் வாக்குப்படி நமது உடலும் பஞ்சபூதங்களுக்கும் தலைவன் சிவபிரான்.
அந்தப் பஞ்சபூதங்களை சரியான வகையில் செயல்படச் செய்து, உயிர்களுக்கு உணவும் நீரும் குறைவின்றிகிட்ட அருள் செய்த ஈசனுக்கு நன்றி சொல்லும் வகையிலும், நாட்டிலும் வீட்டிலம் எக்காலத்திலும் உணவுப் பஞ்சம் வராமல் இருக்கவும் இறைவனுக்கு அன்னாபிஷேகம் செய்யும் பழக்கத்தை ஏற்படுத்தினர்.
அன்னம் என்பது பஞ்ச பூதங்களின் சேர்க்கையால் உண்டாவது நிலத்தில் விழும் நெல், ஆகாயத்திலிருந்து பெய்யும் மழை நீரின் உதவியால் வளர்ந்து, காற்றினால் கதிர்பிடித்து, சூரியனின் வெப்பத்தீயினால் பால் இறுகி விளைச்சலைத் தருகிறது. காற்றின் உதவியுடன் கதிரடித்து எடுக்கப்படும் நெல், உமி நீக்கப்பட்டு அரிசியானபின் மண்ணால் ஆன பானையில் நீரில் இடப்பட்டு, காற்றின் துணையால் எரியும் நெருப்பில் வெந்து, அன்னமாகி ஆகாயத்தின் கீழுள்ள அனைத்து உயிர்களுக்கும் உணவாகிறது. அந்த அன்னத்தினால் செய்யப்படுவதால்தான், அன்னாபிஷேகம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகப் போற்றப்படுகிறது.

அன்னாபிஷேகம் செய்யும் முறை:

ஐப்பசி மாத முழுநிலவு நாளில் முதலில் ஐந்து வகைப் பொருட்களால் இறைவனுக்க அபிஷேகம் செய்து, பின்னர் நன்கு வடித்து ஆறவைத்த அன்னத்தைக் கொண்டு (தேவையானால் சற்று நீர் கலந்து) அன்னாபிஷேகம் செய்யப்படும். சமீபகாலமாக அன்னாபிஷேகத்தின் போது அப்பம், வடை உள்ளிட்ட பலகாரங்களையும் காய்கறி, கனி வகைகளையும் கொண்டு லங்காரம் செய்வது வழக்கமாயிருக்கிறது.
சிவலிங்கத் திருமேனியின் மேலிருந்து அன்னத்தை வைத்துக் கொண்டே வருவார்கள். சிவலிங்கத்தை மூன்று பகுதிகளாகப் பிரிக்கிறார்கள். கீழ்ப்பகுதி, பிரம்ம பாகம். நடுப்பகுதி, விஷ்ணு பாகம். இதுவே ஆவுடை. மேற்பகுதி பாணம், சிவபாகம். அன்னாபிஷேகம் சிவலிங்கத் திருமேனியின் எல்லா பாகங்களுக்குமாக முழுமையாகவே செய்யப்படும்.
இந்த அபிஷேகம் மட்டும்தான் இரண்டு நாழிகை நேரம், அதாவது கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் அப்படியே வைக்கப்பட்டிருக்கும். அந்தச் சமயத்தில் யஜுர் வேத பாராயணமும், ருத்ரம், சமகம் போன்ற மந்திரங்களின் பாராயணமும் நடைபெறும்.
நாழிகை நேரம் முடிந்த உடன் அன்னத்தை அகற்றி விடுவார்கள். பின்னர் மீதமிருக்கும் ஐந்து வகைப் பொருட்கள் கொண்டு அபிஷேகம் நடைபெறும்.
லிங்கத்தின் ஆவுடையிலும் பாணத்தின் மீதும் சாத்தப்பட்ட அன்னம் மிகவும் கதிர்வீச்சுடன் இருக்கும். எனவே அதனை எவரும் உண்ணாமல் அப்படியே எடுத்துச் சென்று கோயில் குளத்திலோ இல்லை ஆற்றிலோ கொண்டு கரைப்பார்கள். நீர்வாழ் உயிர்களுக்கு உணவு!
நமது இந்து மதம் எப்போதும் மனிதனை மட்டுமே முன்னிறுத்தி எதையும் இறைவனிடம் வேண்டுவதில்லை. எல்லா உயிரினங்களும் வாழ வேண்டும். அவ்வாறு வாழ்ந்தால் தான் மனிதனுக்குத் தேவையான உணவு தடையின்றிக் கிடைக்கும் என்பதை இயற்கையின் சமன்பாட்டு விதியை நன்கு அறிந்திருந்தனர் நம் முன்னோர்.
அதனால்தான் அன்னாபிஷேகப் பிரசாதம் நீரில் வாம் புழு, பூச்சிகள், மீன்கள், மற்ற நீர் வாழ் உயிரினங்கள் எல்லாமும் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கம் கொண்டு நீரில் கரைக்கப்படுகிறது.
நல்ல அதிர்வுகளும், உடலுக்குத் தேவையான கதிர் வீச்சுகளும் நிறைந்திருக்கும் பிரும்ம பாகத்தில் சாத்தப்பட்ட அன்னம் மனிதர்களுக்கே அளிக்கப்படுகிறது. ஏனெனில் அவற்றைத் தாங்க சிறு உயிர்களால் முடியாது என்ற ஜீவகாருண்யமே காரணம்.
பக்தர்களுக்கு பிரசாதமாக வினியோகிக்கப்படும் அன்னத்தில் சில கோயில்களில் தயிர் சேர்த்துக் கொடுக்கப்படுகிறது. இந்தப் பிரசாதத்தை உண்டால் நோய் நொடிகள் வராது, குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதிகம்.

சோற்றுக்குள் சொக்கன்

‘சோறுதான் சொக்கநாதர்’ ‘சோறுகண்ட இடம் சொர்க்கம்‘ என்று இன்றும் மக்கள் சொல்வதுண்டு. நாம் உண்ணும் அன்னமே ஆண்டவன். அவனே இதில் இருக்கிறான். நமக்கு படியளப்பவன். சிவலிங்கத்தின் மீது வடித்த சாதத்தை அப்பிவைத்து, பல வித காய்கள் கனிகள் எல்லாம் அலங்காரம் செய்து வைப்பார்கள். ருத்ரம் சமகம் பாராயணம் செய்தபின், தீபாராதனைக் காட்டுவார்கள்.
சிவலிங்கத்தின் மேல் பகுதியில் மனிதனால் தாங்கமுடியாத அதிர்வுகள் அதிகம் இருக்கும் என்று கருதுவதால், அதை பிரித்து குளத்தில் மீன்களுக்கும், பட்சிகளுக்கும், பசுவுக்கும் கொடுத்தபின், எஞ்சிய அடிபாகம் சோறு மனிதன் தாங்கவல்ல அதிர்வுகளை பெற்றுள்ளதால் அதைத்தான் நமக்கு பிரசாதமாக விநியோகம் செய்வார்கள் என்பது ஐதீகம்.
ஈசனை அன்னாபிஷேகத்தில் வழிபட்டால் உணவுக்கு குறைவின்றி படியளப்பான். நேரில் தரிசிக்க முடியாதவர்கள் அன்னாபிஷேக ஈசனை மனதில் எண்ணிக்கொள்ளுங்கள். (பிக்ஷாண்டார்) ஈசனுக்கே படியளந்த அன்னபூரணியின் ஆசிகள் கிட்டும். சற்றுமுன் கோயிலில் சிவதரிசனம் செய்து மகிழ்ந்தேன்.
“ஊனுடம்பில் குடிகொண்டவனே
ஊழ்வினை பாராது படியளந்திடு”
மாமன்னன் ராஜராஜ சோழன் தஞ்சை பெரியகோயிலைக் கட்டியபோது அன்னாபிஷேகத்தைத் தொடங்கி வைத்தான் என்பது கல்வெட்டில் உள்ளது.

சமையல் ஒரு தவம்!

சிவாலயங்களில், ஐப்பசி மாதம் பவுர்ணமியன்று அன்னாபிஷேகம் நடைபெறும். பால், தயிர், எண்ணெய், தேன், சந்தனம், திருநீறு, இளநீர் போன்றவற்றால் சுவாமிக்கு அபிஷேகம் செய்வது வழக்கம். ஆனால், வடித்த சோறு கொண்டு அபிஷேகம் செய்வது எதற்காக?
மனிதன் உண்ணும் உணவுப்பொருளில் முக்கிய இடம் பிடிப்பது சோறு; இதை சுவாமிக்கு படைக்கும் போது, பிரசாதம் ஆகிறது. ‘ப்ர’ என்றால் தெய்வத்தன்மை; தெய்வத்தன்மை பொருந்திய சோறு என்பது இதன் பொருள்.
ஒரு வீட்டில் துறவி ஒருவரை சாப்பிட அழைத்தனர்; துறவியும் சாப்பிட்டார். பின்பக்கம் சென்று கையைக் கழுவப் போனவர், வீட்டுக்குள் திரும்ப வரவில்லை; எல்லாரும் தேட ஆரம்பித்தனர். பின்பக்க கதவு திறந்து கிடந்தது; அங்கே கட்டியிருந்த பசுவையும், கன்றையும் காணவில்லை.
அப்போது ஒருவன் ஓடி வந்து, ‘ஐயா… உங்கள் வீட்டுப் பசுவை சாமியார் ஒருவர் ஓட்டிக்கொண்டு செல்கிறார்…’ என்றான்.
உரிமையாளர் பதறியடித்து ஓடினார். துறவியை வழி மறித்து விட்டார்.
‘துறவியான உமக்கு இது அழகா… அன்னமிட்ட வீட்டில் கன்னமிடலாமா?’ என்று கேட்டார்.
அப்போது தான் துறவிக்கே புரிந்தது; தான் ஒரு மாட்டையும், கன்றையும் கையில் பிடித்திருக்கிறோம் என்பது! உடனே, ‘ஓ’வென்று அழ ஆரம்பித்து விட்டார்.
‘ஏன் அழுகிறீர்…’ என்று சுற்றியுள்ளவர்கள் கேட்க, ‘ஐயையோ… இவர் வீட்டைப் பற்றி விசாரிக்காமல் சாப்பிட்டு விட்டேனே… இவர் வீட்டில் யாரோ ஒருவர் பிறர் பொருளை அபகரிக்கும் எண்ணத்துடன், சமையல் செய்திருக்கிறார். அந்த உணவை சாப்பிட்டதால், எனக்கும் திருடும் புத்தி வந்து விட்டது…’ என்றார்.
உண்மையில், அன்னதானம் அளித்தவரின் மனைவி, அன்று சமையல் செய்யும் போது, அடுத்த வீட்டுக்காரி அசந்திருக்கும் சமயத்தில், அவள் அடிக்கடி அணியும் நகையை எப்படியாவது திருடி வந்து விட வேண்டும் என்ற எண்ணத்துடன் சமைத்துள்ளாள்.
உணவு சமைக்கும் போது, நல்ல எண்ணத்துடன் சமைக்க வேண்டும்; இது எல்லாருக்கும் சாத்தியமல்ல தான். ஆனாலும், எப்படி சமைத்தாலும், அதை ஆண்டவனுக்கு படைத்த பின் சாப்பிட்டால், அது, புனிதமடைந்து விடுகிறது; அதைப் பிரசாதமாக நாம் சாப்பிடலாம்.
இந்த அடிப்படையில் தான் சிவலிங்கத்திற்கு அன்னத்தால் அபிஷேகம் செய்து, அதில் தயிர் சேர்த்து சாப்பிடுகின்றனர்.
வீட்டில் சமைக்கும் போது, நல்ல எண்ணத்துடன் சமையுங்கள். ‘டிவி’யில் கண்ட கண்ட தொடர்களை பார்த்துக் கொண்டே சமைக்காதீர்கள். இதனால், உடலும், மனமும் கெட்டுப் போகும். இன்று மனிதர்களின் ஆரோக்கியம் கெட்டுப் போனதற்கு காரணமே, சமையல் செய்யும் போது, எரிச்சலுடனும், பொறுமையில்லாமலும் சமைப்பதுதான்.
சமையல் ஒரு தபஸ்(தவம்). இதனால் தான் சமையல் செய்பவரை, ‘தவசுப்பிள்ளை’ என்று சொல்வர். மனதை ஒருநிலைப்படுத்தி சமையல் செய்வதால் தான் சமையல் தவம் ஆகிறது. இதன் காரணமாகவே, அன்னாபிஷேகம் போன்ற விழாக்களை முன்னோர் ஏற்படுத்தினர்.
அன்னாபிஷேகத் திருநாளில் மட்டுமல்ல என்றுமே நல்ல எண்ணங்களுடன் சமையுங்கள்; ஆரோக்கிய வாழ்வைப் பெறுங்கள்.

அன்னாபிஷேகம் பலன்கள்