Arthamulla Aanmeegam

எறிபத்த நாயனார் | 63 நாயன்மார்கள் வரலாறு

எறிபத்த நாயனார்.

கொங்கு நாட்டிலே உள்ள கருவூரிலே அவதரித்தார். அவ்வூரிலுள்ள ஆனிலை என்னும் திருக்கோயிலில் எழுந்தருளிய பெருமானை வழிபட்டுச் சிவனடியார்களுக்கு திருத்தொண்டு செய்து வந்தார். எறிபத்தர் சிவனடியார்களுக்கு ஓர் இடர் வந்து உற்றவிடத்து உதவும் இயல்பினை உடையவர்; அடியார்களுக்கு இடையூறு வந்த காலத்து அங்கு விரைந்து சென்று அடியார்களுக்குத் தீங்கு புரிந்தோரைப் பரசு என்னும் மழுப்படையால் எறிந்து தண்டிப்பார். அதன் பொருட்டு அவர் கையிலே எப்பொழுதும் மழுப்படை இருக்கும்.

அந்நகரிலே திருவானிலைத் திருக்கோயிலில் வீற்றிருக்கும் இறைவர்க்கு பூக்களைக்கொய்து பூமாலை தொடுத்து பூசைக்கு அளிக்கும் பணி செய்துவந்த சிவகாமியாண்டர் என்னும் முதிய அடியவர் ஒருவரும் இருந்தார்.அவர் ஒருநாள் வைகறையில் துயிலெழுந்து நீராடித் தூய்மை உடையவராய், வாயைத் துணியாற்கட்டி திருநந்தவனம் சென்றார். அங்கு பூக்களைக்கொய்து பூக்கூடையில் நிறைத்து, பூக்கூடையைத் தண்டில் மேல் வைத்து உயரத் தாங்கிக் கொண்டு திருக்கோயிலை நோக்கி விரைந்து வந்தார். அன்று மகாநவமியின் முதல் நாள்.அந்நகரில் அரசு வீற்றிருக்கும் புகழ்சோழரது பட்டத்து யானை, ஆற்றில் நீராடி, அலங்கரிக்கப் பெற்று மதச் செருக்குடன் பாகர்க்கு அடங்காது விரைந்து வந்தது.

அது சிவகாமியாண்டரை பின்தொடர்ந்து ஓடி அவர் தம் கையிலுள்ள பூக்கூடையைப் பறித்துச் சிதறியது. யானை மேல் உள்ள பாகர்கள் யானையை விரைந்து செலுத்திச் சென்றனர். சிவகாமியாண்டாராகிய அடியவர் இறைவர்க்கு சாத்தும் திருப்பள்ளி தாமத்தைச் சிதறிய யானையின் செயல் கண்டு வெகுண்டு, அதனைத் தண்டு கொண்டு அடிப்பதற்கு விரைந்து ஓடினார். ஆனால் முதுமை காரணமாக இடறிவிழுந்து நிலத்திலே கைகளை மோதி அழுதார்.

சடாமுடியில் ஏறும் பூக்களை யானை சிந்துவதோ எனப் புலம்பினார். ‘சிவதா, சிவதா’ எனும் அடியாரது ஓலத்தைக் கேட்டு விரைந்து அங்கு வந்த எறிபத்தர், யானையின் செய்கை அறிந்து வெகுண்டார். சிவகாமியாண்டாரைக் கண்டு வணங்கி, “உமக்கிந்த நிலைமையைச் செய்த யானை எங்கே போய்விட்டது?” என்று கேட்டார். சாமிக்குச் சாத்தக் கொண்டு வந்த பூவைச் சிதறிவிட்டு, இந்தத் தெருவழியேதான் போகிறதெனக் கூறினார். ‘இந்த யானை பிழைப்பதெப்படி’ என யானையைப் பின்தொடர்ந்து சென்று யானையின் துதிக்கையை மழுவினால் துணித்தார்; அதற்கு முன்னும் இருமருங்கும் சென்ற குத்துக்கோற்காரர் மூவரையும் யானை மேலிருந்த பாகர் இருவரையும் மழுவினால் வெட்டி வீழ்த்தி நின்றார்.

தமது பட்டத்து யானையும், பாகர் ஐவரும் பட்டுவீழ்ந்த செய்தியைக் கேட்ட புகழ்ச்சோழர் வெகுண்டார். ‘இது பகைவர் செயலாகும்’ என எண்ணி, நால்வகைச் சேனைகளுடன் அவ்விடத்தை அடைந்தார்; யானையும், பாகரும் வெட்டப்பட்டிருந்த அவ்விடத்தில் பகைவர் எவரையும் காணாதவராய் யானைபோல் தனித்து நிற்கும் எறிபத்தராகிய சிவனடியாரைக் கண்டார். தம் யானையையும் பாகர்களையும் கொன்றவர் அங்கு நிற்கும் அடியவரே என அருகிலுள்ளார்கள் கூறக் கேட்டறிந்த வேந்தர், சிவபெருமானுக்கு அன்பராம் பண்புடைய இச்சிவனடியார் பிழைகண்டாலல்லது இவ்வாறு கொலைத்தண்டம் செய்யமாட்டார்.

எனவே என்னுடைய யானையும், பாகர்களும் பிழை செய்திருக்கவேண்டும் எனத் தம்முள்ளே எண்ணியவராய், தம்முடன் வந்த சேனைகளைப் பின்னே நிறுத்தி விட்டு, குதிரையினின்று இறங்கி, ‘மலைபோலும் யானையை இவ்வடியார் நெருங்கிய நிலையில், அந்த யானையால் இவர்க்கு எத்தகைய தீங்கும் நேராது விட்ட தவப்பேறுடையேன். அம்பலவானரடியார் இவ்வளவு வெகுளியை (கோபத்தை)அடைவதற்கு நேர்ந்த குற்றம் யாதோ? என்று அஞ்சி, எறிபத்தரை வணங்கினார். எறிபத்தர், யானையின் சிவபாதகச் செயலையும், பாகர் விலகாதிருந்ததனையும் எடுத்துரைத்தார். அதனை உணர்ந்த புகழ்ச்சோழர், ‘சிவனடியார்க்குச் செய்த இப்பெருங் குற்றத்திற்கு இத்தண்டனை போதாது. இக்குற்றத்திற்கு காரணமாகிய என்னையும் கொல்லுதல் வேண்டும்; ஆனால் மங்கலம் பொருந்திய மழுப்படையால் கொல்வது மரபன்று. வாட்படையாகிய இதுவே என்னைக் கொல்லுவதற்கு ஏற்ற கருவியாம் என்று தமது உடைவாளை ஏற்றுக் கொள்ளும்படி எறிபத்தரிடம் நீட்டினார்.

அதுகண்ட எறிபத்தர், ‘கெட்டேன், எல்லையற்ற புகழனாராகிய வேந்தர் பெருமான் சிவனடியார்பால் வைத்த அன்பிற்கு அளவில்லாமையை உணர்ந்தேன்’ என்று எண்ணி, மன்னர் தந்த வாட்படையை வாங்கமாட்டதவராய் தாம் வாங்காது விட்டால் மன்னர் அதனைக் கொண்டு தம்முயிரைத் துறந்துவிடுவார் என்று அஞ்சித் தீங்கு நேராதபடி அதனை வாங்கிக் கொண்டார். உடைவாள் கொடுத்த புகழ்ச்சோழர், அடியாரை வணங்கி ‘இவ்வடியார் வாளினால் என் குற்றம் நீங்கும் பேறு பெற்றேன்’ என தலைவணங்கி நின்றார்.

அதுகண்ட எறிபத்தர் தமது பட்டத்து யானையும், பாகரும் என் மழுப்படையால் மடிந்தொழியவும், உடைவாளும் தந்து, ‘எனது குற்றத்தைப் போக்க என்னைக் கொல்லும், என்ற பேரன்புடைய இவர்க்கு யான் தீங்கு இழைத்தேனே என மனம் வருந்தி, இவ்வாளினால் எனது உயிரை முடிப்பதே இனிச் செய்யத்தக்கது’ என்று எண்ணி வாட்படையினால் தம் கழுத்தினை அரிதற்கு முற்பட்டார். அந்நிலையில் புகழ்ச்சோழர், ‘பெரியோர் செய்கை இருந்தவாறு இது கெட்டேன்’ என்று எதிரே விரைந்து சென்று வாளையும் கரத்தையும் பிடித்துக் கொண்டார்.

அப்பொழுது சிவபெருமான் திருவருளால், ‘யாவராலும் தொழத்தகும் பேரன்புடையவர்களே! உங்கள் திருத்தொண்டின் பெருமையினை உலகத்தார்க்குப் புலப்படுத்தும் பொருட்டு, இன்று வெகுளிமிக்க யானை பூக்கூடையினை சிதறும்படி, இறைவனருளால் நிகழ்ந்தது” என்ற ஓர் அருள்வாக்கு எழுந்தது. அதனுடனே பாகர்களோடு யானையும் உயிர் பெற்றெழுந்தது. எறிபத்தர் வாட்படையை நெகிழவிட்டுப் புகழ்சோழர் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினார். வேந்தரும் வாட்படையைக் கீழே எறிந்து விட்டு, எறிபத்தர் திருவடிகளைப் போற்றி நிலமிசை வீழ்ந்து இறைஞ்சினார். இருவரும் இறைவன் அருள்மொழியினை வியந்து போற்றினர்.

இறைவன் திருவருளால் சிவகாமியாண்டாரது பூக்கூடையில் முன்புபோல தூய நறுமலர்கள் வந்து நிரம்பின. பாகர்கள் யானை நடத்திக் கொண்டு மன்னரை அணுகினர். எறிபத்தர் புகழ்ச்சோழரை வணங்கி, அடியேன் உளங்களிப்ப இப்பட்டத்து யானைமேல் எழுந்தருளுதல் வேண்டும்’ என்று வேண்டிக் கொண்டார். புகழ்ச்சோழர் எறிபத்தரை வணங்கி, யானைமேலமர்ந்து சேனைகள் சூழ அரண்மனையை அடைந்தார். சிவகாமியாண்டார் திருப்பூங்கூடையைக் கொண்டு இறைவர்க்கு பூமாலை தொடுத்தணித்தல் வேண்டித் திருக்கோயிலை அடைந்தார். எறிபத்த நாயனார் இவ்வாறு அடியார்களுக்கு இடர் நேரிடும்போதெல்லாம் முற்பட்டுச் சென்று, தமது அன்பின் மிக்க ஆண்மைத் திறத்தால் இடையூறகற்றித் திருக்கயிலையை அடைந்து சிவகணத்தார், சிவகணங்களுக்கும் தலைவராக அமர்ந்தார். அறுபத்துமூன்று நாயன்மார்களிலும் ஒருவர் ஆகப்பெற்றார்.

எறிபத்தநாயனார்
திருவடிகள் போற்றி.
அம்மையப்பன் மலரடிகள் போற்றி போற்றி.

Share
ஆன்மிகம்

Leave a Comment
Published by
ஆன்மிகம்
  • Recent Posts

    கோளறு பதிகம் பாடல் வரிகள் மற்றும் விளக்கம் | Kolaru Pathigam lyrics in Tamil

    Kolaru Pathigam lyrics in Tamil கோளறு பதிகம் (Kolaru pathigam lyrics in Tamil) - நவகிரஹங்களால் உண்டாகும்… Read More

    11 hours ago

    Karpaga Vinayagar Temple History | கற்பக விநாயகர் திருக்கோயில் வரலாறு

    அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில் வரலாறு பிள்ளையார்பட்டி – 630207,  சிவகங்கை மாவட்டம். *காலை 6 மணி முதல் 12… Read More

    1 week ago

    Ramar Slogam | ராமர் ஸ்லோகம்

    ராமர் ஸ்லோகம் : ராம நாம சுர வந்தித ராம் ரவிகுல ஜனநிதி தந்தவராம் சாகேதஸ்தலம் வந்தவராம் தசரத கோசலை… Read More

    1 week ago

    Komatha Stothram | பசுமாடு ஸ்தோத்ரம்

    பசுமாடு ஸ்தோத்ரம்       ஸ்ரீமன் நாராயணனும், பரமனும், இந்திரனும், ஆதி விஷ்ணுவும், அவருடைய அச்சுதரும், “பசுவம்மா ஸ்தோத்திரத்தை… Read More

    1 week ago

    Asta Kaali Deviyar Varalaru | அஷ்ட காளி தேவியர் வரலாறு

    அஷ்ட காளி தேவியர் வரலாறு! *தொடர் பகுதி-5* *5வதாக பிறந்த அரியநாச்சி என்ற அங்கையற்கன்னி* *வரலாறு*! அரியநாச்சி என்ற அங்கையற்கன்னி… Read More

    1 week ago

    Shri Narashimma vaibhavam | ஸ்ரீ நரஸிம்ம வைபவம்

    ஸ்ரீ நரஸிம்ம வைபவம்*!  வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணனின் ‘*ஸ்ரீ நரஸிம்ம வைபவம்*! -26- *அடியவர்க்கு எளியவன்*! தூணிலிருந்து நரசிம்மமாக பகவான்… Read More

    1 week ago