காரைக்காலம்மை நாயனார்.

நாயன்மார் புராணம் அனைத்துமே சிறப்பு வாய்ந்தவையே. இருப்பினும் திருநீலநக்கர், காரைக்காலம்மை, விறண்மின்ட நாயனார்,நந்தனார், சிறு தொண்டர் போன்றவர்களின் வரலாறு கொஞ்சம் நம்மை உருக வைப்பவையாக இருக்கும்.ஈசனின் திருவிளையாடல் அனைத்துமே நம் உள்ளத்தை நெகிழ்விப்பவையே.கரையாத மனமும் உண்டோ.

காரைக்கால் அம்மையின் வரலாற்றை பல அடியார்கள் பலவிதமாக கூற அடியேன் கேட்டிருக்கிறேன். அடியேன் அறிந்ததை தங்களோடு பகிர்வதில் உள்ளம் மகிழ்கிறேன். அம்மையின் இயற்பெயர் புனிதவதி. மிகச்சிறந்த சிவபக்தை. அடியார்களுக்கு அமுதளிப்பதை தொண்டாக செய்துவருகிறார். பரமதத்தர் என்பவரை மணந்து காரைக்காலில் புதுகுடித்தனம் புகுகிறார்கள். பரமதத்தரின் நண்பன் ஒருவன் திருமணத்தின்போது வெளியூர் சென்றிருந்து காரைக்கால் திரும்புகிறான். வந்தவன் பரமதத்தருக்கு வாழ்த்துசொல்ல அவன் பரமதத்தன் வணிகம் செய்யும் இடத்திற்கு சென்று தான் வெளிதேசம் சென்றமையால் தம்மால் திருமணத்திற்கு வர இயலவில்லை என்கிறார்.தாம் வெளியூரிலிருந்து வாங்கிவந்த இரண்டு புதுரக மாங்கனியை திருமண பரிசாக அளிக்கிறான். பரமதத்தரும் நண்பன் அன்போடு வழங்கிய அக்கனிகள் இரண்டையும் உடனே இல்லத்திற்கு கொண்டுசென்று இந்தகனி இரண்டும் என் நண்பன் நமக்கு திருமண பரிசாக கொடுத்தது.மதியம் உணவின்போது நாம் இருவரும் இதை உண்போம் எனகூறி புனிதவதியிடம் கொடுத்துவிட்டு செல்கிறார்.

புனிதவதியாரும் மதிய உணவைசெய்ய ஆயத்தமாகிறார். சாதமும் சாம்பாரும் தயாராகிறது.ஈசன் அடியார் வேடத்தில் வந்து அம்மையே பசி உணவளிக்க வேண்டுமென்கிறார். புனிதவதியாரும் அடியவரை அன்புடன் அழைத்து திருவடிகளை வணங்கி பட்டாடை விரித்து அமரவைக்கிறார். தலைவாழை இலை விரித்து சாதம் சாம்பார் அளித்து கூட்டு தயாராகாத காரணத்தால் மாங்கனியில் ஒன்றை அடியாருக்கு அளித்துவிடுகிறார்.அடியார் கோலத்தில் இருந்த ஈசனும் உண்டு முடித்து ஆசிவழங்கி சென்றுவிடுகிறார்.

மதியம் பரமதத்தர் உணவருந்த வருகிறார். உணவருந்தும்போது மாங்கனியை கேட்க மீதமுள்ள ஒரு கனியை பரமதத்தருக்கு தருகிறார் அம்மை. அதன் சுவையில் மயங்கிய பரமதத்தர்,இதன் சுவை இனிது இன்னொரு கனியையும் எமக்கே அளிப்பாயாக என கேட்கிறார்.அம்மை செய்வதறியாது திகைத்து பூசையறை உள்ளே சென்று மனதிற்குள் ஈசனிடம் மாங்கனியை வேண்ட அக்கணமே ஈசன் மாங்கனியை அம்மைக்கு அருள்கிறார். அம்மையும் அதை கொடுக்க பரமதத்தர் உண்டு மகிழ்ந்து முன்பு உண்ட கனியைவிட இக்கனி தேவாமிர்தமாக இனிக்கிறது இது சாதாரண கனியன்று எனகூற அம்மையும் ஆவல் மிகுதியால் இது ஈசன் அருளியது தேவாமிருதமாகதான் இனிக்கும் என்கிறார்.

இதைகேட்ட பரமதத்தர் அப்படியாயின் இன்னொரு கனியை ஈசனிடம் பெருக அதை நான் பார்க்கவேண்டும் என்கிறார்.மீண்டும் அம்மை ஈசனிடம் கனி ஒன்றை மறுபடியும் வேண்ட ஈசன் கனியை அருள பரமதத்தர் பார்த்த உடனே கனி மறைந்துவிடுகிறது.அதை கண்டு அதிர்ந்துபோன பரமதத்தர் அம்மையை இறையருள் பெற்ற தாயாக நினைத்துவிடுகிறார்.

புனிதவதியையும் அம்மா என அழைக்கிறார். அம்மையே அடியேன் தமக்கு இனி தொண்டு செய்வேன் ஏற்க வேண்டும் என்கிறார். புனிதவதியாரோ அங்கனம் செய்வது மரபல்ல என்கிறார். இதைக்கேட்ட பரமதத்தர் இனி அந்த அம்மையுடன் சேர்ந்துவாழ இயலாது தெய்வகுற்றம் நிகழ்ந்துவிடும் என எண்ணி ஊரைவிட்டு கிளம்பி வேறு ஊர் சென்று ஒரு பெண்ணை மணந்து குடும்பம் நடத்தி வருகிறார்.ஒரு பெண்மகவை பெற்று புனிதவதி என்று அம்மையின் பெயரைசூட்டி வாழ்ந்து வருகிறார்.நம் சைவசமயத்தில் பிள்ளை ஒன்றை பெற்று அந்த பிள்ளையின் கைகளால் இறந்தபின் கொல்லியை பெற்றால்மட்டுமே ஈசனிடம் முக்திபெற முடியும் என்ற வழக்கம் இருந்தது.அதனால் அம்மை தான் சிவப்பேறு அடைய தமக்கு ஒரு பிள்ளை இல்லையே என்ற ஏக்கத்தில் இருந்தார்.கணவர் வேறொரு ஊரில் இருப்பதை அறிந்து அங்கே செல்கிறார் அம்மை.ஆனால் பரமதத்தர் அம்மையுடன் இல்லறம் நடத்துவது முறையன்று அவர் தனக்கு தாய் எனகூறி மறுத்துவிடவே இனி நமக்கு கொள்ளிபோட பிள்ளை இல்லை. நமக்கு ஈசனிடம் முக்திபெறும் பாக்கியம் கிட்டாது என நினைத்து இனி எம் கணவருக்கும், எம் முக்திக்கும் உதவாத இந்த இளமைகோலம் எமக்கு வேண்டாம் முதுமைகோலம் வழங்குக இக்கணமே என்று ஈசனிடம் வேண்ட உடனே முதுமைகோலத்தை அருளுகிறார் ஈசன்.

பல நாயன்மார்களுக்கு பலகாலம் துன்பம் நல்கி ஆடாத கூத்தெல்லாம் ஆடி கடைசியில் அருளும் ஈசன் அம்மைக்கு வேண்டிய அக்கணமே அதற்க்காகவே காத்திருந்தது போலவே உடனே அருள்கிறார். சிலகாலம் முதுமைகோலத்தில் வாழ்ந்த அம்மை இனி வாழ்ந்தும் என்னபேறு பெறப்போகிறேன். ஈசனின் முக்தி கிட்டாது.நடந்தே கயிலை சென்று ஈசனை ஒருமுறை கண்குளிர தரிசித்துவிட்டாவது வந்துவிடலாமே என நினைத்து கயிலைமலையை அடைகிறார்.

மலையை அடைந்தவுடன் அம்மலையை தாம் கால்களால் மிதித்து ஏறுவது தவறு என நினைத்து தனது முதுமைகோலம் நீக்கி எலும்புறு கொண்ட பேயுறு அளிக்கும்படி ஈசனை வேண்ட உடனே ஈசனும் பேயுறு அருள்கிறார். அம்மையும் தலைகீழாக தன் கரங்களை மலையில் ஊன்றி இருகரங்களால் கயிலைமலை மேலேறி செல்கிறார். தொலைவில் அம்மை எலும்புறு கொண்டு தலைகீழாக நடந்துவரும் காட்சியை கண்ட பார்வதிதேவி ஈசனிடம்,ஐயனே நம் இருப்பிடத்திற்கு யாரோ ஒருவர் வருவதுபோல் உள்ளதே யார் என்று வினவுகிறார்.ஈசனும் நம்மை பெற்ற அம்மைகாண் என்கிறார்.தேவியும் வரும் அம்மையை உற்றுநோக்கி ஐயனே வருவது பேயுறுபோல் உள்ளதே என வினவ ஈசனும் பேய் ஆனாலும் பெற்றதாய்
என்கிறார். அன்றுமுதல் வழக்கத்திற்கு வந்த பழமொழியே பேயானாலும் பெற்றதாய் எனும் பழமொழி.

இப்போது அம்மை கயிலைமலையை அடைந்து அம்மை அப்பனின் தரிசனம் பெற்று ஈசன் என்ன வரம் வேண்டும் எனகேட்க, அம்மையும் ஐயனே யான் பிள்ளை ஒன்றை பெறாத காரணத்தால் உங்களிடம் முக்தி பெறும்பேறை இழந்தேன் எனக்கு முக்தி கிட்டுமா என வினவ அம்மையே யானே உமக்கு மகனாக இருந்து தாங்கள் விரும்பிய அப்பேறை அருள்வேன்.இனி எமக்கு தாங்கள் அம்மையாவீர்.இனிமுதல் தாங்கள் காரைக்காலம்மை என்றே அழைக்கப்படுவீர் என அருள்கிறார். அன்னையின் ஆசையை நிறைவேற்ற வேண்டியது மகனின் கடமை தங்கள் ஆசை என்னவோ என ஈசன் கேட்க அம்மையும் தாங்கள் உமைஅம்மையுடன் இணைந்து ஆடும் அற்புத நடனத்தை எமக்கு காட்டி அருள்க எனகேட்க சிவகாமியுடன் ஆடும் அந்த ஆனந்த தாண்டவத்தை ஈசன் ஆட காரைக்கால் அம்மை கண்டு மகிழ்கிறார்.

திருவாலங்காடு வாருங்கள் தாயே. அங்கு தாங்கள் பாட அதற்கு ஏற்றார் போல் நானும் ஆட அங்கு வைத்துக் கொள்ளலாம் நம் கச்சேரியை என இறைவன் கூறுகிறார்.

சைவ சமயத்தின் மூத்த திருப்பதிகத்தை அரங்கேற்றி அதே மேடையில் இறைவன் திருநடனம் ஆடி புகழ் பெற்றதே பஞ்சசபைகளில் மூத்தசபையாம் இரத்தினசபையை தன்னகத்தே கொண்ட திருவாலங்காடு ஆகும். அன்பர்களுக்கு நெஞ்சை வருடும் அற்புதமான அன்பொழுகும் பாடலையும் கொண்டு காரைக்கால்அம்மை வழங்கியதே அற்புத திருவந்தாதி எனும் மூத்ததிருப்பதிகம் ஆகும்.அம்மை மூத்த திருப்பதிகம் எனும் விதையை பாடி சிலநூறு ஆண்டுகள் கழிந்தே ஏனைய பண்ணிரு திருமறை பாடல்கள் பிற அடியார் பெருமக்கள் பாடி நாளும் பண்ணிசையால் பண்ணிசையையும் தமிழையும் வளர்த்து அருளினார்.

மேலும் பல சிறப்புக்களை கொண்டது காரைக்கால் அம்மையின் புராணம் ஆகும். இந்த அம்மையின் பாடலின் வேகத்திற்கு ஆடப்பட்ட நடனம் ஊர்த்துவதாண்டவம் நடத்தி காட்டினார்..

அடுத்தபடியாக தமிழ் பண்ணிசைகளை பதிகத்தில் கொண்டுவந்து தமிழர் இசையை காத்தவரும் வளர்த்தவரும் அம்மையே.தமிழர் பயன்பாட்டில் இருந்த இசைக்கருவிகளின் பெயர்களையும் பதிகத்தில் இடம்பெறச்செய்து நமக்கு அருளியவரும் காரைக்கால் அம்மையே ஆவார்.

எந்நெஞ்சே நன் நெஞ்சாம், எம் நெஞ்சை அன்பு கொண்டு மெழுகி, எந்நெஞ்சத்தான் என்பேன் என இறைவன் நெஞ்சம் எனும் இதயத்தில் வாழ்வதை மிகஅற்புதமாக சுட்டிகாட்டியிருப்பார். மணிவாசகரும் இமைப்பொழுதும் எம்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க என அருளியிருப்பார். சிவபுரம்,குழகன், பிறந்த பிறப்பறு, பாசப்பற்றறு போன்ற சொற்கள் இருவரும் கையாண்டதால் இருவரும் சம காலத்தவர் என கணிக்க முடிகிறது.

பரமதத்தர் திருவடிகள் போற்றி.
காரைக்காலம்மை திருவடிகள் போற்றி.
அம்மையப்பன் மலரடிகள் போற்றி போற்றி.

Leave a Comment