குபேர வாழ்வருளும் குசேல சரித்திர ஸ்லோகம் | Kannan kuselan story in tamil

பால்ய நண்பனான கண்ணனை தன் மனைவி கொடுத்தனுப்பிய அவலுடன் சென்று குசேலன் சந்தித்தது அட்சய த்ருதியை அன்று. அந்த நண்பன் கொண்டு சென்ற அவலை கண்ணனும் ருக்மிணியும் உண்டு குசேலனை குபேரனாக்கிய பொன்னாள் இது. இத்துதியை அட்சய த்ருதியை தினத்தன்று பாராயணம் செய்தால் வறுமை நீங்கும். சர்வ சௌபாக்கியங்களும் கிட்டும். உத்யோக லாபம், வியாபார லாபம், அனைத்து செயல்களிலும் வெற்றி என்று எல்லா நன்மைகளும் வந்து சேரும்.

இந்த குசேல சரித்திரத்தை நாராயண பட்டத்திரி குருவாயூரப்பனிடம் ஒவ்வொரு ஸ்லோகமாகக் கூறி, ‘‘அப்படியா?’’ எனக் கேட்க, அதற்கு குருவாயூரப்பன் ஒவ்வொரு ஸ்லோகத்திற்கும் ‘‘ஆமாம், அப்படித்தான் நடந்தது’’ என்று சொல்வதுபோல தலையாட்டினார் என்பது வரலாறு. அட்சய த்ருதியை அன்று இந்த ஸ்லோகங்களை உளமாற சொல்லி வந்தால் பொருள் வளர்ச்சி, மன வளர்ச்சி எல்லாம் கூடும்.

குசேலநாமா பவதஸ்ஸதீர்த்யதாம்
கதஸ்ஸ ஸாந்தீபனிமந்திரே த்விஜ:
த்வதேகராகேண தனாதிநிஸ்ப்ருஹோ
தினானி நின்யே ப்ரஸமீ க்ருஹாஸ்ரமீ

ஓ குருவாயூரப்பா! சாந்தீபினி முனிவரின் ஆஸ்ரமத்தில் அந்தணனான குசேலர் உன்னுடன் வேதங்களைப் பயின்றார். உன்னிடத்தில் கொண்ட பரிபூரண பக்தியினால் எந்தப் பொருளின் மீதும் பற்றற்றவராக, சாந்த சொரூபியாக, குடும்ப வாழ்க்கையையும் மேற்கொண்டு குசேலன் வாழ்ந்தாரல்லவா? கிரகஸ்த தர்மத்தை மேற்கொண்டாலும் எளிமையாக வாழ்ந்து வந்தாரல்லவா?

ஸமான ஸீலாபி ததீயவல்லபா
ததைவநோ சித்தஜயம் ஸமேயுஷீ
கதாசிதூசே பத வ்ருத்திலப்தயே
ரமாபதி: கிந்நஸகா நிஷேவ்யதே

குசேலருடைய பத்தினியானவள் அவரைப் போன்ற கூச்ச சுபாவமுள்ளவளாக இருந்த போதிலும் குடும்பப் பெண்ணுக்குரிய கவலையோடும் இருந்தாள். ஜீவனத்திற்கு ஏதேனும் செய்துதானே ஆகவேண்டும் என்கிற எண்ணம் அவளிடம் இருந்தது. அதனாலேயே ‘லக்ஷ்மீபதியான கோபாலன் தாங்களுக்கு நண்பனாயிற்றே, தாங்கள் ஏன் அவரை தரிசித்து விட்டு வரக்கூடாது?’ என்று ஒரு நாள் கேட்டாள். அது மிகவும் ஆச்சரியமான விஷயம் அல்லவா?

இதீரிதோயம் ப்ரியயா க்ஷுதார்த்தயா
ஜுகுப்ஸமானோபி தனே மதாவஹே
ததா த்வதாலோகன கௌதுகாத்யயௌ
வஹன் படாந்தே ப்ருதுகானுபாயனம்
குசேலரின் மனைவி இவ்வாறு பிரார்த்தித்துக் கொண்டதால் குசேலர் கிருஷ்ணனை காண புறப்பட்டார். லௌகீகமான பொருளைப் பெறும் ஆசையும் பேராசையான மதமும் அவரிடத்தில் இல்லை. ஆனாலும் உன்னைத் தரிசிக்கக் கிடைத்த வாய்ப்பாகவே மனைவியின் பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டார். அவலை தன் வேட்டியின் உத்திரியத்தில் முடிந்து கொண்டு உன்னைக் காணப் புறப்பட்டார் அல்லவா?

கதோயமாஸ்சர்யமயீம் பவத்புரீம்
க்ருஹேஷு ஸைப்யா பவனம் ஸமேயிவான்
ப்ரவிஸ்ய வைகுண்டமிவாப நிர்வ்ருதிம்
தவாதிஸம்பாவனயா து கிம் புன:
ஆச்சரியமான அழகைக் கொண்டுள்ள உன்னுடைய பட்டினத்தை அடைந்து ருக்மிணியுடன் நீ வசிக்கும் அரண்மனைக்குள் பிரவேசித்தபோது அவர் வைகுண்டத்தை அடைந்தவர்போல் ஆனந்தமானார். அதற்கும் மேலாக குசேலரை நீயே பூஜித்ததால் அவர் அடைந்த ஆனந்தத்திற்கு
எல்லையே இல்லை. அப்படித்தானே?

ப்ரபூஜிதம் தம் ப்ரியயா ச வீஜிதம்
கரே க்ருஹீத்வாகதய: புராக்ருதம்
யதிந்தனார்த்தம் குருதாரசோதிதை
ரபர்த்துவர்ஷந் தமமர்ஷி கானனே
நீ குசேலனைப் பூஜித்தாய்; ருக்மிணி தேவியும் பூஜித்தார்கள். குசேலர் பேரானந்தமடைந்தார். அப்போது பழைய சில சம்பவங்களை நினைவுகூர்ந்தீர்களே? ஒருமுறை குசேலரும் நீயும் குருபத்தினிக்கு உதவுவதற்காக விறகு கொண்டு வர காட்டிற்குச் சென்றீர்கள். வரும்போது பெருமழையில் சிக்கினீர்களே? பொறுமையாக அந்த மழையைப் பொறுத்துக் கொண்டு விறகு கொண்டு வந்து குருமாதாவிடம் கொடுத்தீர்களல்லவா?

த்ரபாஜுஷோஸ்மாத் ப்ருதுகம் பலாதத
ப்ரக்ருஹ்ய முஷ்டௌ ஸக்ருதாஸிதே த்வயா
க்ருதம் க்ருதம் நன்வியதேதி ஸம்ப்ரமாத்
ரமா கிலோபேத்யகரம் ருரோத தே
குசேலர் தான் வேட்டியின் உத்திரியத்தில் முடிந்து வைத்திருந்த அவலை கொடுக்க கூச்சப்பட்டார். நீதான் குசேலரிடமிருந்து அவலை வலுக்கட்டாயமாகப் பிடுங்கி எடுத்து ஒரு பிடி சாப்பிட்டாய். அப்போது லக்ஷ்மியான ருக்மிணிதேவி, ‘‘இவ்வளவு போதும் போதும்’’ என்று உன்னைத் தடுத்து
நிறுத்தினார்கள், இல்லையா?

பக்தேஷு பக்தேன ஸமானிதஸ்த்வயா
புரீம் வஸன்னேகநிஸாம் மஹாஸுகம்
பதாபரேத்யுர்த்ரவிணம் வினா யயௌ
விசித்ரரூபஸ்தவ கல்வனுக்ரஹ :

உன்னால் பூஜிக்கப்பட்ட அந்த குசேலர் ஓர் இரவு மகா சுகமாய் உன் பட்டினத்தில் தங்கி, மறுதினம் உன்னிடமிருந்து எந்தப் பொருளையும் யாசிக்கவோ, பெறாமலோ தன் இருப்பிடம் திரும்பினாரல்லவா? இப்படி குசேலருக்கு நீ செய்த அனுக்கிரகம் விசித்திரமானதல்லவா?

யதி ஹ்யயாசிஷ்யமதாஸ்யதச்யுதோ
வதாம பார்யாம் கிமிதி வ்ரஜன்னஸௌ
த்வதுக்திலீலாஸ்மிதமக்னதீ: புன:
க்ரமாதபஸ்யன் மணிதீப்ரமாலயம்
‘நான் யாசித்திருந்தால் அச்சுதன் கொடுத்
திருப்பார். மனைவியிடத்தில் என்னவென்று சொல்வேன்’ என்று யோசித்தபடியே தன் ஊருக்கு நடந்து சென்றாலும் அவர், உன் பேச்சின் ரஸம், அழகிய சிரிப்பு இவற்றி

ல் தம்மை மறந்தபடியே பயணப்பட்டார். ஆனால் ஊருக்குள் நுழைந்தபோது நவமணிகளால் பிரகாசிக்கும் தன் வீட்டைப் பார்த்துத் திகைத்தாரல்லவா?

கிம் மார்கவிப்ரம்ஸ இதி ப்ரமன்க்ஷணம்
க்ருஹம் ப்ரவிஷ்டஸ்ஸ ததர்ஸ வல்லபாம்
ஸகீபரீதாம் மணிஹேமபூஷிதாம்
புபோத ச த்வத்கருணாம் மகாத்புதாம்

‘ஆஹா, நான் கிருஷ்ண சிந்தனையில் திசை தவறி வந்து விட்டேனோ!’ என்று கண நேரம் குழம்பினார். பிறகு பிரமித்துப்போய் தனது வீட்டிற்குள் நுழைந்தார். சகிகளால் சூழப்பட்டவளும் ரத்தினம், தங்கம் முதலிய ஆபரணங்களினால் அலங்கரிக்கப்பட்டவளுமான பத்தினியைப் பார்த்தார். உடனே, மிகவும் ஆச்சரியமான உனது கருணையை
அப்போது அவர் உணர்ந்தாரல்லவா?

ஸ ரத்னஸாலாஸு வஸன்னபிஸ்வயம்
ஸமுன்னமத்பக்தி பரோம்ருதம் யயௌ
த்வமேவமாபூரித பக்தவாஞ்சிதோ
மருத்புராதீஸ ஹரஸ்வ மே மதான்.

ஹே குருவாயூரப்பா! ரத்தினமயமான வீட்டில் வசித்த அந்த குசேலர் மேலும் மேலும் செல்வ விருத்தியடைந்தது போலவே உன் மீதான பக்தியையும் விருத்தி செய்துகொண்டவராகவே வாழ்ந்து இறுதியில் மோட்சமடைந்தார் அல்லவா? இதைப்போலவே பக்தர்களின் இஷ்டத்தை பூர்த்தி செய்த நீ, எனது ரோகத்தையும் போக்க வேண்டும்.

செல்வம் பெருக குபேர மந்திரங்கள்

Leave a Comment