மகாலட்சுமி (Mahalakshmi prayer benefits) தாமரைப் பூவில் வாசம் செய்பவள். சித்தி, புத்தி, போகம், முக்தி தருபவள்.
மகாலஷ்மி அம்மன் பற்றிய 100 அபூர்வ செய்திகள்
மகாலஷ்மீ 100 :
1.மகாலட்சுமி தாமரைப் பூவில் வாசம் செய்பவள். சித்தி, புத்தி, போகம், முக்தி தருபவள்.
2. மகாலட்சுமிக்கு ஈஸ்வரி, ஹரண்யமயி, ஹரிணி, சூர்யா, பிங்களா, புஷ்கரிணி, சந்திரா என்ற பெயர்களும் உண்டு.
3. லட்சுமிக்கு பிரியமான பூ செவ்வந்தி எனப்படும் சாமந்திப்பூ.
4. நெல்லிமரத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதால் துவாதசியன்று நெல்லிக்கனியை உணவில் சேர்த்துக் கொண்டால் ஏகாதசி விரதத்தின் பலன் கிடைக்கும்.
5. ஆதி சங்கரருக்கு துவாதசியன்று நெல்லிக்கனி தானம் செய்த பெண்மணிக்கு அவர் கனகதாரா ஸ்தோத்திரம் பாடி லட்சுமி அருளால் பெருஞ்செல்வம் கிடைக்கச் செய்தார்.
6. மகாலட்சுமி வில்வ மரத்தில் இருப்பதால் மாதப்பிறப்பு, அமாவாசை, பவுர்ணமி, சதுர்த்தி, அஷ்டமி, நவமி, திங்கட்கிழமை ஆகிய நாட்களில் வில்வத்தை மரத்திலிருந்து பறிக்கக் கூடாது.
7.பசுவின் பின்புறத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். இதனால் கோவில்களில் காலையில் கோபூஜை செய்தபின் தரிசனம் ஆரம்பமாகிறது.
8. மகாவிஷ்ணுவிற்குப் பிடித்த துளசி லட்சுமியின் அம்சம் ஆகும். வீட்டில் துளசி மாடம் வைத்து தினமும் அதை சுற்றி வந்து வழிபட்டு வந்தால் எல்லாச் செல்வங்களும் கிடைக்கும்.
9. வாழை, மாவிலை, எலுமிச்சம்பழம் ஆகியவைகளிலும் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். அதனால்தான் சுபகாரியங்களில் இவை பயன்படுத்தப்படுகின்றன.
10. தலைமுடியின் முன் வகிட்டில் மகாலட்சுமி வாசம் செய்வதால் திருமணமான பெண்கள் முன்வகிட்டில் குங்குமம் இட்டுக் கொள்கின்றனர்.
11. தீபாவளியன்று அதிகாலை மட்டும் மகாலட்சுமி நல்லெண்ணையில் வாசம் செய்கிறாள்.
12. யானையின் முகத்திலும் குதிரையின் முகத்திலும் லட்சுமி வாசம் செய்கிறாள்.
13. ஸ்ரீவைஷ்ணவத்தை நிலை நாட்டிய வேதாந்த தேசிகர் ஸ்ரீஸ்துதி என்னும் ஸ்தோத்திரத்தில் ஸ்ரீமகாலட்சுமியை மங்களத்துக்கெல்லாம் மங்களமானவள் என்று புகழ்ந்து பாடுகிறார்.
14. ஒரு பக்தனுக்கு பகவானின் அனுக்ரகம் வேண்டும் என்றால் புருஷகார பூதையான மகாலட்சுமியை முதலில் சரணடைய வேண்டும்.
15. நம்மாழ்வார் அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா என்று கணப்பொழுதுகூட பிரியாது மகாவிஷ்ணுவுடன் கூடி இருக்கும் மகாலட்சுமியை சரணடைவதே உயர்ந்தது என்று கூறியுள்ளார்.
16. திருமழிசையாழ்வாருக்கு குழந்தைப் பருவத்தில் ஞானப்பால் ஊட்டியது மகாலட்சுமியே.
17. குபேரனிடம் செல்வம் இருந்தாலும் அத்துடன் புகழ், ஆரோக்கியம், நல்வாழ்வு போன்ற பல செல்வங்களை உரியவர்களுக்கு வாரி வழங்குபவள் ஸ்ரீ மகாலட்சுமியே.
18. மகாவிஷ்ணுவுடன் இருக்கும் பொழுது லட்சுமிக்கு இரண்டு கரங்கள். ஆனால் தனியாக சன்னதியிலோ அல்லது தனிக் கோவிவிலோ நான்கு கரங்கள் கொண்டவள். முன் இரு கரங்கள் அபய வரத ஹஸ்தங்கள். பின் இரண்டு கரங்களில் தாமரை மலர் ஏந்தி இருப்பாள்.
19. வீரம் உடையவர்கள், சோம்பல் இல்லாமல் சுறுசுறுப்பாக இருப்பவர்கள், தவம் உடையவர்கள், ஈகை குணம் கொண்டவர்கள் செல்வத்தை நன்குஅனு பவிப்பவர்கள் ஆகியவர்களை நான் அடைகிறேன் என்கிறாள் மகாலட்சுமி.
20. மகாலட்சுமி ஓரிடத்தில் நிலைக்க மாட்டாள். அதனால் சஞ்சலா, சபலா என்ற பெயர்களும் அவளுக்கு உண்டு.
21. லட்சுமி பிரம்மனுடன் பிறந்தவள். இருவர் நிறமும் செம்பொன் நிறமாகும்.
22. லட்சுமிக்கு உலூகம் எனப்படும் ஆந்தை ஒரு வாகனம். மேற்கு வங்கத்தில் லட்சுமி பூஜையின்போது ஆந்தையை வழிபடுவது வழக்கம்.
23. மகாலட்சுமியின் பரிபூரண அருளைப் பெற்றது சுக்கிர வாரம் எனப்படும் வெள்ளிக்கிழமை. சுக்கிரனின் அதிதேவதை மகாலட்சுமி. எனவே வெள்ளிக்கிழமைகளில் சூரியன் உதயமான இரண்டு மணி நேரத்திற்குள் பூஜிப்பது. தரிசனம் செய்வது ஆகியவை மகாலட்சுமியின் அருள் பெற உதவும்.
24. லட்சுமிக்கு ஏற்ற நாள் வியாழக்கிழமை மாலை குபேர காலம் எனப்படுகிறது. பவுர்ணமியில் வரும் வியாழன் சிறப்பு. வளர்பிறை பஞ்சமி, வெள்ளியன்று வரும் அஷ்டமியும் சிறந்தது.
25. லட்சுமியின் திருக்கரங்கள் ஸ்வர்ண ஹஸ்தம் எனப்படுகிறது. எல்லா லட்சுமிகளும் அபய வரத ஹஸ்தத்துடன் அருள்புரிகின்றார்கள்.
26. லட்சுமியின் பெருமையை ஸ்ரீசூக்தம், ஸ்ரீசுதுதி, கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி அஷ்டகம், அஷ்டோத்திர சதநாமாவளி ஸ்தோத்திரம் போன்றவை விளக்குகின்றன.
27. வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்களுக்கு அஷ்டபோக பாக்கியங்களும் கிடைக்கும்.
28. லட்சுமி செல்வத்தின் அதிபதி. தீபாவளி அன்று லட்சுமி பூஜை செய்வதால் செல்வம் இரட்டிப்பாக பெருகும்.
29. புதுக்கணக்கு எழுதுபவர்கள் தீபாவளி அன்று லட்சுமி பூஜை செய்து விட்டு நோட்டுப் புத்தகங்களின் மீது சந்தனம், மஞ்சள், குங்குமம் வைத்து மலர்தூவி பூஜை செய்து பிறகு வியாபாரத்தை ஆரம்பிப்பார்கள்.
30. வருத்தத்தால் மகாவிஷ்ணுவைப் பிரிந்த மகாலட்சுமி விஷ்ணுவை திரும்பவும் சேர்ந்த இடம் ஸ்ரீவாஞ்சியம் என்ற தலம். நன்னிலத்திற்கு அருகில் உள்ளது. ஸ்ரீ என்றும், திரு என்றும் அழைக்கப்படும் மகாலட்சுமியை விஷ்ணு வாஞ்சையால் விரும்பி சேர்ந்த இடம் இத்தலம் என்பதால் இத்தலத்திற்கு ஸ்ரீவாஞ்சியம் (திருவாஞ்சியம்) என்ற பெயர் ஏற்பட்டது.
31. மகாலட்சுமியை நவராத்திரி நேரத்தில் வணங்க சகல நன்மை கிடைக்கும்.
32. அதிகாலையிலும், மாலையிலும் வீட்டில் பெண்கள் விளக்கேற்றி வைத்து லட்சுமியை வரவேற்க லட்சுமி சுலோகங்கள், அஷ்டகம் போன்றவற்றைச் சொல்லிக் கொண்டிருந்தால் லட்சுமியின் அருள் கிடைக்கும்.
33. இந்திரன் மகாலட்சுமியை 4 பாகங்களாக நிலை பெறச் செய்தான். அவை பூமி, அக்னி, நீர் மற்றும் உண்மை பேசும் மனிதர்கள். இந்த இடங்களில் மகாலட்சுமி நிலையாக இருப்பாள்.
34. கோமாதா (பசு)வை தெய்வமாக மகாலட்சுமியின் அம்சமாகக் கருதி பூஜை செய்வது நம் நாட்டில் உள்ள பழக்கம். பசுவின் பின்புறம் மகாலட்சுமி வசிக்கிறாள் என்பதால் அதிகாலையில் பசுவின் பின்புறத்தைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொள்ள வேண்டும்.
35. லட்சுமிக்கு முன் தோன்றியவள் மூதேவி. லட்சுமிக்குப் பிறகு பிறந்தவள் வாருணி. இவள் மது போன்ற மயக்கம் தரும் வஸ்துக்களுக்கு தேவதை.
36. லட்சுமியின் திருக்குமாரர்கள் கர்தமர், சிக்லீதர்.
37.மகாலட்சுமியை நாராயணன் திருப்பாற்கடலில் சித்திரை, தை, புரட்டாசி மாதங்களில் பூஜிக்கிறார்.
38.பிரம்ம தேவன் மகாலட்சுமியை புரட்டாசி மாத சுக்லாஷ்டமியில் பூஜிக்கிறார்.
39.மனுதேவன் மகாலட்சுமியை வருஷ முடிவிலும், தை, மாசில மாத சங்கராந்தியிலும் பூஜிக்கிறார்.
40.தேவேந்திரன் மகாலட்சுமியை பூஜித்து அஷ்ட ஐஸ்வர்யங்களையும், ஐராவத்தையும், அமராவதி பட்டணத்தையும் பெற்றார்.
41. செல்வத்தை ஒருவருக்கு வாரி வழங்கும் தெய்வம் மகாலட்சுமி. அவளது அருள் இருந்தால் ஒரே நாளில் குபேரன் ஆகிவிடலாம்.
42. பூரணகும்பம், மஞ்சள், குங்குமம், திருமண் சூர்ணம், கோலம், சந்தனம், வாழை, மாவிலை தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் ஆகிய மங்கள பொருட்களில் மகாலட்சுமி நித்தியவாசம் புரிகிறாள்.
43. வில்வ மரம், நெல்லி மரம், துளசி, மஞ்சள் செடிகளிலும் மகாலட்சுமி வாசம் செய்கிறாள்.
44. லட்சுமியை வில்வத்தால் அர்ச்சனை செய்து பூஜிக்கலாம்.
45. மகாலட்சுமியை சாமந்திப்பூ, தாழம்பூ இலைகளாலும் அர்ச்சிக்கலாம்.
46. வில்வமரத்தை வலம் வருவது மகாலட்சுமியை வலம் வருவதற்கு சமமாகும்.
47. வாமன புராணத்தில் மகாலட்சுமியின் திருக்கரங்களில் இருந்து வில்வ விருட்சம் தோன்றியது என்று கூறப்பட்டுள்ளது.
48. வில்வ மர முட்கள் சக்தி வடிவம், கிளைகள் வேதம், வேர்கள் 14 கோடி ருத்ரர்கள் என்று கருதப்படுகிறது. இவ்வளவு சிறப்பு கொண்ட வில்வ மரமே மகாலட்சுமி சொரூபமாக விளங்குகிறது.
49. நெல்லிக்கனி இருக்கும் இல்லத்தில் மகாலட்சுமி நிரந்தரமாக வாசம் புரிகிறாள் என்பது ஐதீகம்.
50. துளசி செடியிலும் மகாலட்சுமி எழுந்தருளி வாசம் செய்கிறாள். இதேபோல் மஞ்சளிலும் இருக்கிறாள். அதனால் துளசி செடியுடன் மஞ்சள் செடியையும் சேர்த்து நம் வீட்டில் வளர்ப்பது நல்லது.
51. ஸ்ரீ மகாலட்சுமிக்கு இரண்டு ரூபங்கள் உண்டு. ஒன்று ஸ்ரீதேவி என்ற லட்சுமி. மற்றொன்று பூதேவி என்ற பூமிதேவி வடிவம்.
52. லட்சுமிதேவி, வைகுண்டத்தில் ரமாதேவி, சொர்க்கத்தில் சொர்க்கலட்சுமி, பாதாள உலகில் நாகலட்சுமியாக இருக்கிறாள். அவள் ராஜாக்களிடம் ராஜ லட்சுமியாகவும் விளங்குகின்றாள். விலங்குகளிடத்தில் சோம லட்சுமியாகவும், புண்ணியவான்களிடம் ப்ரீதிலட்சுமியாகவும் வேதாந்திகளிடம் தயாலட்சுமியாகவும் இருக்கிறாள்.
53. திருமால் கோவில்களில் பகவானுடைய மார்பில் உள்ள லட்சுமிக்கு யோகலட்சுமி என்றும், இருபக்கமும் உள்ள தாயாருக்கு போகலட்சுமி என்றும், தனிச்சன்னதியில் அருள்புரிபவளுக்கு வீரலட்சுமி என்றும் பெயர்.
54. லட்சுமி மாதுளம் கனியிலிருந்து உதித்ததால் மாதுளங்கி என்றும், பத்மாசனால் வளர்க்கப்பட்டதால் பத்மா என்றும், அக்னி குண்டத்தில் வாசம் செய்ததால் அக்னிகர்ப்பை என்றும், ரத்தின வடிவம் எடுத்ததால் ரத்தினாவதி என்றும், ஜனக மகாராஜனுக்கு மகளானதால் ஜானகி என்றும், பூமிக்குள்ளே கலப்பையின் நுனியிலிருந்து வெளியேற்றப்பட்டமையால் சீதை என்றும் பாற்கடலிலிருந்து தோன்றியதால் ஸ்ரீ என்றும் போற்றப்படுகிறாள்.
55. தீபாவளித் தினத்தன்று லட்சுமியை கொண்டாடுவதால் மகாலட்சுமியின் பேரருளைப் பரிபூரணமாக பெறலாம்.
56. சாஞ்சி ஸ்தூபத்தில், ஒரு கம்பத்திலும் சாரநாத் தோரணத்திலும், யானைகள் உடைய திருமகள் உருவங்களைக் காணலாம்.
57. பல்லவர் காலத்துச் சிற்பங்களில் கஜலட்சுமியை காண முடியும். கஜலட்சுமியின் உருவங்கள் இரண்டு மாமல்லபுரத்தில் உள்ளது.
58. திருக் குறுங்குடியில் கோபுர முகப்பின் நடுவில் அபூர்வமான செதுக்கு வேலைப்பாடு அமைந்த கஜலட்சுமியைப் பார்க்கலாம்.
59. சீல கிரந்தம் எனும் புத்த நூல் மகாலட்சுமி வழிபாட்டினை விளக்குகிறது.
60. கி.பி. முதல் இரண்டாம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த குஷானர்களின் சிற்ப ரீதியில் அமைந்த, செந்நிறக் கல்லால் ஆன, சற்றுச் சிதைந்த லட்சுமியின் உருவம் ஒன்று டில்லி காட்சிச் சாலையில் உள்ளது.
61. ஜைனர்கள் மகாலட்சுமியை ஜீவஜகத்தின் தென்புறத்துப் பாதியைக் காக்கும் தேவதைகளில் ஒருத்தியாகப் பாவிக்கின்றனர். தீபாவளியின்போது இவளை வழிபடுகின்றனர்.
62. மகாலட்சுமி வடிவங்கள் எவ்வாறு அமைய வேண்டுமென லட்சண கிரந்தங்கள் உள்ளன. அம்சுபேதாகமத்தின் படி, திருமகள் தாமரையில் வீற்றிருப்பாள்.
63. வராக அவதாரத்தில் திருமால் பூமியை தோண்டி விட்டுத் தம் சிரமத்தை மறந்திருக்கத் திருமகளைத் தம் தொடை மீது நிறுத்தி இன்பமடைகிறார். மாமல்லபுரத்தில் இவ்வமைப்புடைய சிலை உள்ளது.
64. பில்லர்கள் எனும் தொல்குடியினரின் தெய்வம் லட்சுமியே.
65. தென்னாட்டில் மாலர் என்ற வகுப்பினர் ஆறு கலயங்களை அடுக்கி அவற்றைத் திருமகளாகப் பாவித்துக் கும்பிடுகின்றனர்.
66. குஜராத்தில் லட்சுமி பூஜை ஒரு விசேஷ நிகழ்ச்சியாகும். அவர்கள் வழிபடும் லட்சுமியின் கையில் வீணை இருக்கும்.
67. மகாராஷ் டிரத்தில் உழவர்கள் லட்சுமியை பயிர் வளத்தைக் காட்டும் தேவதையாக கருதுகிறார்கள். ஒரு மரத்தின் கீழ் ஐந்து கற்களை நிறுத்தி அதற்கு மஞ்சள் குங்குமம் இட்டுக் கோதுமை மாப்படையல் சாத்துவர். மாலைப்பொழுது இளங்கதிர்களைக் கொய்து வீட்டுக்குக் கொண்டு வருவார்கள். அத்துடன் துணியில் மறைத்த ஒரு விளக்கினையும் ஏந்தி வருவர். அதுவே அவர்களுடைய லட்சுமி.
68. ராஜஸ்தானில் லட்சுமியை அன்னபூரணியாக வழிபடுகின்றனர். தானியம் அளக்கும் காரி என்ற மரக்காலை லட்சுமி வடிவமாக அமைத்துத் தாமரைப் பூக்களால் அலங்கரித்து அவர்கள் வழிபடுவது உண்டு.
69. இந்தோசீனாவிலும் திருமகளின் வழிபாடு உள்ளது. அவள், தலையில் முத்துக்கிரீடமும், கைகளில் வளையல்களும் அணிந்திருப்பாள். மேற்புறக் கைகளில் சங்கு சக்கரம் இருக்கும். நாகக்குடை பூண்டிருப்பாள். கல்லறைகள் மீது திருமகள் உருவைப் பொறிப்பது அந்நாட்டு வழக்கம்.
70. கோஜாகர பூர்ணிமை விரதம் வங்காளிகளிடையே நிலவும் லட்சுமி பூஜையாகும்.
71. லட்சுமி பூஜை செய்யும் போது, நம் வீட்டுக்கு வரும் விருந்தினர்களை நாம் எப்படி உற்சாகமாக வரவேற்போமோ, அதே மாதிரி வாசலில் நின்று லட்சுமியை பாவனை செய்து அழைக்க வேண்டும்.
72. வரலட்சுமி விரத பூஜை நடத்தப்படும் வீடுகளில் மகாலட்சுமி வாசம் செய்வாள்.
73. லட்சுமி வழிபாட்டால் நீண்ட ஆயுள், புகழ், செல்வம், உடல் நலம் உண்டாகும்.
74. வரலட்சுமி விரத பூஜை செய்தால் உடனடியாக திருமண யோகம் கைகூடும்.
75. எட்டு விதச் செல்வங்களை தருவதுடன் தாலிப் பாக்கியத்தையும் வரலட்சுமி வழங்குகிறாள். இதனால் தான் மணமான பெண்கள் மகாலட்சுமியை போற்ற வரலட்சுமி விரதத்தை மேற்கொள்ளுகின்றனர்.
76.மகாலட்சுமிக்கு உகந்தது நெய் விளக்காகும். சகலவித செல்வத்தையும் வீட்டில் நலனையும் தருவது நெய் விளக்கு வழிபாடுதான். எனவே இதை மறக்கக்கூடாது.
77. பூஜை செய்யும் போது மகாலட்சுமிக்குரிய பாராயணப் பாடல்களை பாடித் தியானிக்கலாம்.
78. வரலட்சுமி நோன்பை கடைபிடித்தவர்கள் பெரும் பயனை அடைந்தார்கள் என்று பத்ம புராணம் கூறுகிறது.
79. வீடுகளில் லட்சுமி படம் வைத்து வெள்ளிக்கிழமைகளில் தூபம் காட்டி, தீபாராதனை செய்ய வேண்டும். உப்பு பாத்திரத்தில் உப்பு குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எட்டுவித நல்லெண்ணை கலந்து காலையும் மாலையும் தீபம் ஏற்றினால் லட்சுமிக்கு மிகவும் பிடிக்கும்.
80. நாம் செய்யும் பாவ, புண்ணியந்த்துக்கு ஏற்பவே லட்சுமி நமக்கு செல்வத்தை வழங்குவாள்.
81. மகாலட்சுமி நித்திய சுமங்கலி என்று அழைக்கப்படுகிறாள். எனவே தான் அவளை நினைத்து பெண்கள் வரலட்சுமி விரதம் மேற் கொள்கிறார்கள்.
82. வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்களிடம் அஷ்ட லட்சுமி களும் மகிழ்ந்து அன்புடன் இருப்பார்கள் என்பது ஐதீகம்.
83. மகாலட்சுமி கணவரின் மார்பில் பொறுமையுடன் இருப்பவள். எனவே அவளுக்கு நன்றி தெரிவிக்கும் விரதமாக வரலட்சுமி விரதம் கருதப்படுகிறது.
84. மகாலட்சுமிக்கு மஞ்சள் நிறப்பட்டு என்றால் பிரியம் அதிகம்.
85.லட்சுமி, அனைவருக்கும் நன்மை தருபவள் என்று அதர்வன வேதத்தில் கூறப்பட்டுள்ளது.
86. வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்களுக்கு மாங்கல்ய பலம் நீடிப்பதோடு செல்வம், தைரியம், வெற்றி, அரசு பதவி, குழந்தைப் பேறு, கல்வி உள்ளிட்ட எல்லா வளங்களும் வந்து சேரும்.
87. வரலட்சுமி தினத்தன்று அன்னம், பருப்பு, வடை, பாயசம், கொழுக்கட்டை, அப்பம், இட்லி முதலியவற்றுடன் பழவகைகளை நைவேத்தியம் செய்ய வேண்டும்.
88. வரலட்சுமி பூஜைக்கு கொழுக்கட்டை நைவேத்தியமே பிரதானமானது.
89. வரலட்சுமி பூஜையின் போது அருகம்புல்லை தூவி வழி பட்டால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.
90. வரலட்சுமி பூஜைக்கு பயன்படுத்தும் கும்பத்தை பிறகு பத்திரப்படுத்தி, சுத்தமான இடத்தில் வைத்துக் கொள்ளலாம். வேறு பூஜைகள் நடத்தும் போது அதை பயன்படுத்தலாம்.
91. வரலட்சுமி பூஜைக்கு பயன் படுத்தும் கும்பம் எதிர்பாராத விதமாக நெளிந்து விட்டாலோ, சேதம் அடைந்து விட்டாலோ, வீட்டில் வைத்துக் கொள்ளக்கூடாது. தானமாக கொடுத்து விட வேண்டும்.
92. வரலட்சுமி பூஜையின் போது சந்தனத்தில் லட்சுமி செய்து வழி படலாம். ஆனால் மறுநாள் அதை நீர் நிலைகளில் கரைத்து விட வேண்டும்.
93. வரலட்சுமி தினத்தன்று புண்ணிய நதிகளில் நீராடலாம். இது ஓராண்டு லட்சுமி வழிபாட்டுக்குரிய பலன்களை நமக்குத் தரும்.
94. வரலட்சுமி பூஜை தினத்தன்று 3 தடவை அம்மனை வணங் கினால் நல்லது.
95. வரலட்சுமியை எந்த அளவுக்கு தாமரை மலர்களால் அலங்கரித்து வழிபாடு செய்கிறோமோ, அந்த அளவுக்கு புண்ணியம் சேரும்.
96. சித்ரநேமி என்ற கணதேவதை வரலட்சுமி விரதத்தை அனுஷ்டித்து தன்னுடைய குஷ்ட ரோகம் நீங்கப் பெற்றாள்.
97. பார்வதி தேவி ஸத்புத்திர லாபத்திற்காக வரலட்சுமி விரதத்தை அனுஷ்டித்து சண்முகனைப்பெற்றாள்.
98. விக்ரமாதித்தன் இந்த விரதத்தை அனுஷ்டித்து இழந்த ராஜ்ஜியத்தை திரும்பப்பெற்றான்.
99. நந்தன் இந்த விரதத்தை கடை பிடித்து அழகிய மனைவியை அடைந்தான்.
100. லட்சுமி, வழிபாட்டின் போது மறக்காமல் அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம் சொல்வது மிகவும் நல்லது.
லட்சுமி வழிபாட்டின் போது மறக்காமல் அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம் சொல்வது மிகவும் நல்லது.
செல்வம் பெருக குபேர மந்திரங்கள்
தைப்பூசம் தைப்பூசம் அன்று முருகப்பெருமானுக்கு விசேஷ பூஜைகள் செய்யப்படுகிறது தைப்பூச விரதத்தை எளிமையான முறையில் வீட்டிலேயே கடைபிடிப்பது எப்படி? 🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔… Read More
Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன் இன்றைய பஞ்சாங்கம் _* _*பஞ்சாங்கம்*_ °°°°°°°°°°°°°° *தை -… Read More
Thaipusam 2025 - தைப்பூச திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும் தைப்பூசம் / Thaipusam என்பது சைவ சமயத்தவர்களால் கொண்டாடப்பட்டு வரும்… Read More
தைப்பூசம் வழிபாடு பற்றிய 40 சிறப்பு தகவல்கள், Thaipusam special informations 1. தைப்பூசம் (Thaipusam special informations) இந்தியாவில்… Read More
அள்ளிக் கொடுப்பதில் பாடல் வரிகள்| Alli koduppathil song lyrics tamil அள்ளிக் கொடுப்பதில் வல்லமை பெற்றவன் அப்பன் பழனியப்பன்… Read More
பச்சை மயில் வாகனனே பாடல் வரிகள்| Pachai Mayil Vahananae Lyrics Tamil பச்சை மயில் வாகனனே – சிவ… Read More