18/09/24 – 03/10/24 – தர்ம சாஸ்த்ரம்
கேள்வி 1: தினமும் செய்யும்பொழுது மஹாளய தர்பணம் 15 நாட்களா அல்லது 16 நாட்களா?
பதில் 1 : சாஸ்த்ரங்கள் இரண்டையுமே ஒத்துக் கொண்டுள்ளது. தங்களின் குடும்பப் பழக்கப்படி 15 அல்லது 16 நாட்கள் செய்யலாம். நீங்கள் புதிதாக ஆரம்பிப்பதாக இருந்தால், குடும்பப் பழக்கம் தெரியாத நிலையில் 16 நாட்கள் செய்வது உத்தமம். மஹாளயத்தில் 16 நாட்கள் மிகவும் முக்கியமாகக் கருதப்படுகிறது.
கேள்வி 2: என்னால் எல்லா நாளும் தொடர்ந்து தர்பணம் செய்ய முடியவில்லை என்றால் என்ன செய்வது?
பதில் 2 : ஒரு நாள் ஶ்ராத்தமும் தர்பணமும் செய்யவும். மஹாளயத்தில் ஒரே ஒரு நாள் செய்யும் ஶ்ராத்தத்தை ஸக்ருன் மஹாளய ஶ்ராத்தம் என்று கூறுவார்கள். “ஸக்ருத்” என்றால் “ஒன்று” என ஸம்ஸ்க்ருதத்தில் பொருள்.
கேள்வி 3: நான் ஒரு நாள் ஸக்ருன் மஹாளய ஶ்ராத்தமும் தர்பணமும் செய்வதென்றால் அதைச் செய்வதற்கு ஏதாவது முக்கியமான நாட்கள் உண்டா ?
பதில் 3 : முக்கியமான நாட்கள்
1) பரணி நக்ஷத்ரம் உள்ள நாள் (மஹாபரணி) – 21/09/24
2) வ்யதீபாத யோகம் உள்ள நாள் (மஹாவ்யதீபாதம்) – 24/09/24
3) அஷ்டமி திதி (மத்யாஷ்டமி) – 25/09/24
4) த்ரயோதசி உள்ள நாள் (கஜச்சாயை) – 30/09/24
இந்த நாட்களில் ஶ்ராத்தமும் தர்பணமும் செய்தால், இதை கயா க்ஷேத்திரத்தில் செய்ததற்குச் சமம்.
கேள்வி 4: அனைத்து 15 அல்லது 16 நாட்களில் தர்பணம் செய்வதற்குப் பதிலாக ஏதாவது 2 அல்லது 3 முக்கியமான நாட்களில் செய்யலாமா?
பதில் 4 : மஹாளயத்தில் இரண்டு வகையான தர்பண முறைகள்தான் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஒன்று ப்ராம்ஹணர்களை வீட்டுக்கு ஒரு நாள் அழைத்து ஸக்ருன் மஹாளய ஶ்ராத்தமும் தர்பணமும் செய்வது . இரண்டாவது, அனைத்து 15 அல்லது 16 நாட்களும் தொடர்ந்து தர்பணம் செய்து, மற்றும் ஏதாவது ஒரு நாளில் ப்ராம்ஹணர்களை வீட்டிற்கு அழைத்து ஶ்ராத்தம் செய்வது. உங்கள் விருப்பப்படி சில முக்கியமான நாட்களில் மட்டும் தர்பணம் செய்யக்கூடாது.
கேள்வி 5: ஸக்ருன் மஹாளய ஶ்ராத்தம் தாய் அல்லது தந்தை இறந்த திதியில்தான் செய்யவேண்டும் என்று கட்டாயம் உண்டா?
பதில் 5 : இந்த 15 நாட்களில் ஒரு நாள் ஸக்ருன் மஹாளய ஶ்ராத்தம் செய்யவேண்டும் என்பது கட்டாயம். மற்றும் அதை தாய், தந்தை இறந்த திதியில் பண்ணலாம். ஆனால் அது கட்டாயமல்ல. நீங்கள் மூன்றாவது பதிலில் சொல்லியபடி ஏதாவது ஒரு சுப அதிகத் தகுதிகள் உள்ள நாட்களை எடுத்துக் கொள்ளலாம்.
கேள்வி 6: ஏதாவது ஒரு நாளில் ஸக்ருன்மஹாளய ஶ்ராத்தமும் தர்பணமும் செய்த பிறகு அமாவாசை அன்று மறுபடியும் மஹாளய தர்பணம் செய்யவேண்டுமா?
பதில் 6 : ஒரு நாள் ஸக்ருன் மஹாளய ஶ்ராத்தமும் தர்பணமும் செய்த பிறகு அமாவாசை அன்று மஹாளய தர்பணம் செய்யவேண்டாம்..அமாவாசை தர்பணம் செய்தால் மட்டும் போதுமானது. அனைத்து 15 அல்லது 16 நாட்கள் மஹாளய தர்பணம் செய்பவர்கள் அமாவாசை அன்றும் மஹாளய தர்பணமும் மற்றும் அமாவாசை தர்பணமும் செய்யவேண்டும். இவர்கள் முதலில் அமாவாசை தர்பணம் முடித்துவிட்டு மஹாளய தர்பணத்தைச் செய்யவேண்டும்.
கேள்வி 7: ஸக்ருன் மஹாளய ஶ்ராத்தம் செய்ய உசிதமான நாட்களைத் தேர்ந்தெடுக்க வரைமுறைகள் உள்ளதா?
பதில் 7 : நீங்கள் ஒரு நாள் ஸக்ருன் மஹாளயம் செய்வதற்குப் ப்ரதமை முதல் சதுர்த்தி வரை உள்ள திதிகளைத் தவிர்க்க வேண்டும். உங்கள் பெற்றோரின் இறந்த நாட்கள் ப்ரதமை அல்லது சதுர்த்தி திதிகளில் இருந்தால் மற்றும் பதில் 3ல் கொடுத்துள்ள நாட்களில் இருந்தால் தவிர்க்கவேண்டியதில்லை. கட்டாயமாகச் சதுர்த்தசியில் செய்யக் கூடாது.
கேள்வி 8: ஏன் சதுர்த்தசியில் செய்யக் கூடாது?
பதில் 8 : இயற்கைக்கு மாறான மரணம் எய்தியவர்கள், ஆயுதத்தாலோ, விபத்திலோ, தற்கொலையிலோ, விஷத்திலோ துர்மரணம் அடைந்தவர்கள், ஆகிய இவர்களுக்காக சதுர்த்தசி ஒதுக்கப்பட்டுள்ளது.
கேள்வி 9: என்னுடைய பெற்றோர்கள் பஞ்சமியிலோ, சஷ்டியிலோ அல்லது மற்ற திதிகளிலோ இயற்கைக்கு மாறான துர்மரணம் அடைந்திருந்தால் (பதில் 8ன் படி) என்று நான் மஹாளய ஶ்ராத்தம் செய்யவேண்டும்?
பதில் 9 : நீங்கள் சதுர்த்தசி அன்றுதான் செய்யவேண்டுமே தவிர அவர்கள் இறந்த திதியில் செய்யக் கூடாது. இது போன்ற இயற்கைக்கு மாறான துர்மரணம் அடைந்தவர்களுக்காகவே சதுர்த்தசி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகவே இறந்த திதியைப் பொருட்படுத்த வேண்டாம்.
கேள்வி 10: இயற்கைக்கு மாறான துர்மரணம் எய்திவர்களுக்குச் சதுர்த்தசியில் மஹாளய ஶ்ராத்தம் செய்வதற்கு முன் ஏதாவது முக்கியமான விஷயங்களை மனதில் கொள்ள வேண்டுமா?
பதில் 10 : ஆமாம். இந்த ஶ்ராத்தத்தை “ஏகோதிஷ்ட விதானம்” முறைப்படி செய்யவேண்டும். இந்த மஹாளயம் இயற்கைக்கு மாறான துர்மரணம் எய்தியவர்களுக்கு மட்டுமே செய்யவேண்டும். இதில் மற்ற மூதாதையர்கள், காருணிக பித்ருக்கள் (அவர்களுடைய தந்தை, தாத்தா, தாய், ஆகியோர்) பங்கு ஏற்க மாட்டார்கள். மேலே குறிப்பிட்ட மூதாதையர்களுக்கு மற்ற வேறொரு நாளில்தான் மஹாளயம் செய்யவேண்டும்.
கேள்வி 11: நான் அனைத்து 15 அல்லது 16 நாட்கள் தர்பணம் செய்யும்பொழுது ஏதாவது திதிகளைத் தவிர்க்கவேண்டுமா?
பதில் 11 : இந்த சிறப்பு வரைமுறைகள் அல்லது சில நாட்களைத் தவிர்ப்பது போன்றவை ஒரு நாள் ப்ராம்ஹணர்களை வீட்டிற்கு அழைத்து ஹிரண்ய ஶ்ராத்தமும் தர்பணமும் (ஸக்ருன் மஹாளய ஶ்ராத்தம்) செய்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும். அனைத்து நாட்களிலும் மஹாளய தர்பணம் மட்டும் செய்பவர்கள் எல்லா 15 அல்லது 16 நாட்களும் செய்யவேண்டும்
கேள்வி 12: நான் மஹாளயத்தில் ஹிரண்ய ஶ்ராத்தம் செய்வதற்கு எத்தனை ப்ராம்ஹணர்களை அழைக்கவேண்டும்.
பதில் 12 : ஆறு ப்ராம்ஹணர்கள் மிகவும் ஏற்றதாகும்
அவர்கள்:
1. விஶ்வே தேவர் (இந்த தேவதைகள் நமது பித்ருக்களை அவர்களுடன் பூமிக்கு அழைத்து வருகிறார்கள்)
2. தந்தை வழி (3 தலைமுறை)
3. தாய் வழி (3 தலைமுறை)
4. தாயின் தாய் மற்றும் தந்தையர் வழி (3+3 தலைமுறை)
5. காருணிக பித்ருக்கள் (நெருங்கிய உறவினர்கள்)
6. மஹாவிஷ்ணு (ஶ்ராத்தத்தைப் பாதுகாப்பவர்)
தற்பொழுது பல இடங்களில் 5 ப்ராம்ஹணர்கள் மட்டுமே வருவது பழக்கமாக உள்ளது. இந்த மஹாளய நேரத்தில் ப்ராம்ஹணர்கள் கிடைக்காத காரணத்தினால் மஹாவிஷ்ணுவுக்குப் பதிலாக விஷ்ணு பாதம்/சாலிக்ராமம் அல்லது கூர்ச்சம் வைக்கிறார்கள்.
கேள்வி 13: யாரெல்லாம் காருணிக பித்ருக்கள்?
பதில் 13 : இறந்துபோன உங்கள் தந்தை மற்றும் தாய் வழி உறவினர்கள் – மாமா, தந்தை , தாய் சகோதரர்கள், சகோதரிகள், ஆகியோர். இவர்களுக்குத் தர்பணம் செய்து, த்ருப்திப்படுத்தி அவர்களின் ஆசீர்வாதத்தைப் பெறுவதற்கு இந்த மஹாளயம் ஒரு சிறப்பான நேரமாகும்.
கேள்வி 14: என் தந்தை உயிரோடு இருந்து என் தாய் உயிரோடு இல்லை என்றால் மஹாளயம் எனக்கு பொருந்துமா?
பதில் 14 : இல்லை. உங்களது தந்தைக்குத்தான் அதைச் செய்யும் உரிமை உள்ளது.
அவிதவா நவமி (மஹாளய பக்ஷத்தில் வரும் நவமி-26/09/24) அன்று சுமங்கலிகளை அகத்திற்கு வரவழைத்துப் புடவை வாங்கி கொடுத்துச் சாப்பிடச் செய்யலாம்.
கேள்வி 15: எனது தாய் உயிரோடு இருந்து தந்தை இல்லை என்றால் நான் என்ன செய்யவேண்டும்?
பதில் 15 : தந்தை இறந்த ஒரு வருஷம் வரை மஹாளயமோ, அமாவாசை தர்பணமோ கிடையாது. இறந்து ஒரு வருஷம் முடிந்த பிறகு மஹாளயம் அல்லது அமாவாசை தர்பணம் ஆரம்பிக்கவேண்டும். எனவே ஒரு வருஷம் கழித்து நீங்கள் ஆரம்பிக்கலாம்.
கேள்வி 16: சில தவிர்க்கமுடியாத காரணத்தினால் மஹாளய ஶ்ராத்தம்/தர்பணம் இந்த 15 நாட்களில் செய்யமுடியவில்லை என்றால் என்ன செய்வது?
பதில் 16 : சில தவிர்க்கமுடியாத காரணத்தினால் மஹாளய ஶ்ராத்தம்/தர்பணம் செய்யத் தவறிவிட்டால் நமது சாஸ்திரங்கள் மற்றுமொரு காலத்தையும் கொடுத்திருக்கிறது.. இது வரும் மாதத்தில் உள்ள அடுத்த க்ருஷ்ண பக்ஷத்தில் , அதாவது, தமிழில் ஐப்பசி மாதம், சாந்த்ரமான நாட்காட்டிபடி ஆஶ்வீனம் அல்லது ஸௌரமான நாட்காட்டிப்படி துலா மாதத்தில் செய்யவேண்டும்.
இந்த மிக உயர்ந்த சடங்கான மஹாளயத்தைப் பொதுவாகப் புரிந்துகொள்ள முக்கியமான 16 கேள்விகளுக்கு மேலே பதில்களை விளக்கியிருக்கிறோம்.
முன்னோர்களின் ஆசியை பெற மகாளய அமாவாசை
Ramakrishnar bird life story பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ணரின் எளிய கதைகளில் ஒன்று. கர்ம வினையும் அதைக் கடந்து போகும்… Read More
பெருமாளை ஏன் கோவிந்தா என்று தெரியுமா? Govindha name history and meaning *புரட்டாசி சிறப்பு பகிர்வு* *கோவிந்தா! கோவிந்தா!!*… Read More
நவராத்திரி 2024 சிறப்பு பதிவு கொலு வைக்க உகந்த நேரம்: 03.10.2024 புரட்டாசி 17 ஆம் தேதி வியாழக்கிழமை முதல்… Read More
Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன் இன்றைய பஞ்சாங்கம் _*பஞ்சாங்கம்*_ °°°°°°°°°°°°°° *புரட்டாசி - 28*… Read More
கார்த்திகேய ப்ரபாவம் எனும் சண்முக போற்றி மந்திரம் | Shanmuga mantram lyrics tamil மஹா பாரதத்தில் வன பர்வத்தில்… Read More
Athma and Anathma ஆத்மா, அனாத்மா, பரமாத்மா பற்றிய அழகிய விளக்கம் - Athma and Anathma ஆத்மா, அனாத்மா,… Read More
Leave a Comment