Mantra meaning in tamil

மந்திரம் என்றால் என்ன? (Mantra meaning in tamil) –  ஆலய வழிபாட்டில் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது மந்திரங்கள். ஒவ்வொரு கடவுளுக்கும், ஒவ்வொரு வகையான மந்திரங்கள் உள்ளன. இந்த மந்திரங்களை தெரிந்து கொண்டு உரிய முறையில் உச்சரித்து வழிபாடு செய்யும் போது கடவுள் மனம் மகிழ்ந்து, நமக்குத் தேவையானதை கொடுப்பார். எனவே அவசியம் மந்திரங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்.

மந்திரம் என்றால் என்ன?

மனம் + திறம் = மந்திரம். மனதுக்கு திடம் கொடுப்பதுதான் மந்திரம்.

கடவுள்களின் மூலமந்திரத்தை மீண்டும், மீண்டும் சொல்லும் போது, முதலில் நமது மனது திடப்படும்.

பிறகு, அந்த மந்திர ஒலிகள் இடையூறுகளை விலக்கி, இனிய பாதைக்கு உங்களை அழைத்து செல்லும்.

இந்த உண்மையை நம் முன்னோர்கள் பலஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெரிந்துகொண்டனர். சரியான மந்திரங்களை உச்சரித்து பலன் பெற்றனர்.

மந்திரங்களில் 7 கோடி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த மந்திரங்கள் சித்தர்களாலும், மகான்களாலும் இறைவனிடம் இருந்து வரங்களாக பெறப்பட்டவையாகும்.

எந்த ஒரு மந்திரமும் சப்த பிரபஞ்ச மண்டலத்தில், அதற்கான அலைவரிசையில் குறிப்பிட்ட அதிர்வுகளை ஏற்படுத்துவதன் மூலம் விளைவுகள் ஏற்படுகின்றன என்பது ஆன்மிக நியதி.

மந்திரம் என்பது, ‘உச்சரிப்பவரை காக்கும் சொல்’ என்ற பொருள் கொண்டது. மந்திரங்கள் அவற்றின் பயன்களின் அடிப்படையில் தூய மந்திரங்கள், மாய மந்திரங்கள், ஆக்கும் மந்திரங்கள், காக்கும் மந்திரங்கள் உள்ளிட்ட பல நிலைகளில் அமைந்துள்ளன. எந்த ஒரு மந்திரமும் சப்த பிரபஞ்ச மண்டலத்தில், அதற்கான அலைவரிசையில் குறிப்பிட்ட அதிர்வுகளை ஏற்படுத்துவதன் மூலம் விளைவுகள் ஏற்படுகின்றன என்பது ஆன்மிக நியதி.

மந்திரங்கள் பல வகைப்படும்.

பிரணவ மந்திரம், காயத்ரி மந்திரம், பீஜாட்சர மந்திரங்கள், அஷ்ட கர்ம மந்திரங்கள், வழிபாட்டு மந்திரங்கள் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

சில மந்திரங்களை வீடுகளில் மட்டுமே உச்சரிக்க வேண்டும். சில மந்திரங்களை ஆலயங்களில் தான் சொல்ல வேண்டும்.

ஒவ்வொரு சன்னதியிலும் உள்ள மூர்த்தத்துக்கு ஏற்ப மந்திரங்களை சொன்னால் நிச்சயம் பலன் தேடி வரும்.

சில மந்திரங்கள் காடு மற்றும் குகைக்குள் மட்டுமே ஜெபிக்க வேண்டும். சில மந்திரங்கள் திருமணம் ஆனவர்கள் மட்டுமே சொல்ல வேண்டும். ஆனால், ஆன்மிகத் தகுதி பெறாமல் மந்திரங்களை சொல்லக்கூடாது.

இறைவனிடம் மனதை சரண் அடையச் செய்த ஒவ்வொருவரும் மந்திரங்களை ஜெபிக்கவேண்டும்.

தினமும் ஏதாவது ஒரு மந்திரத்தை 108 தடவை சொல்வது மிகவும் நல்லது.

ஆலய பிரகாரங்களில் அமர்ந்து மந்திரங்களை சொல்லும் போது அது நிச்சயம் பல மடங்கு பலன்களை அள்ளித்தரும்.

மந்திரம் என்றதும் நிறைய பேர் என்னவோ… ஏதோ என நினைத்து பயந்து விடுகிறார்கள். சிலர் அது நமக்கு ஒத்து வராது என்று முயற்சி செய்யாமலே விட்டு விடுகிறார்கள்.

சிலர் எல்லா மந்திரங்களும் சமஸ்கிருதத்தில்தானே இருக்கிறது. அதை உச்சரிக்க தெரியாது என்று நினைப்பார்கள். இப்படியெல்லாம் நினைத்து, மனதைப் போட்டு குழப்பிக்கொண்டு வீணாக கவலைப்பட வேண்டியதில்லை. ஏனெனில் மந்திரங்கள் மிக, மிக எளிமையானவை.

தமிழிலேயே ஏராளமான மந்திரங்கள், பதிகங்கள், பாடல்கள் உள்ளன.

இந்த மந்திரங்களை உச்சரிப்பது போல குலதெய்வத்தின் பெயரையும் மந்திரமாக உச்சரிக்கலாம். இந்த மந்திர உச்சரிப்புக்கு இணையான மகிமை உலகில் வேறு எதுவும் இல்லை.

‘வாழ்க வளமுடன்’ என்று சொல்வது கூட மிகவும் சக்தி வாய்ந்த ஒரு மந்திரமாக கருதப்படுகிறது.

திருமந்திரம், பெரியபுராணம், கந்த சஷ்டி கவசம், கந்தரலங்காரம் ஆகியவற்றில் உள்ள பாடல்கள் சக்தி வாய்ந்தவை.

பன்னிரு திருமுறைகளில் சகல காரிய சித்தியளிக்கும் மந்திரங்கள் ஏராளமாக புதைந்து கிடைப்பதை காணலாம்.

செல்வம் வேண்டுமா? உடனே திருமணம் நடைபெற வேண்டுமா? கடன் பிரச்சினை தீர வேண்டுமா? நோய்கள் தீர வேண்டுமா? ஏழ்மையில் இருந்து விடுபட வேண்டுமா? எல்லாவற்றுக்குமே தமிழ் வேத மந்திரங்கள் உள்ளன.

 

காலையில் படுக்கையில் இருந்து எழும் போதே சிவ… சிவ என்று சொல்லிக் கொண்டே எழுந்திருக்கலாம். அல்லது உங்களுக்கு பிடித்த சாமி பெயரை சொல்லலாம்.

தீராத வியாதிகளால் அவதிப்படுபவர்கள் ஆலய சன்னதியில் அமர்ந்து திருநீல கண்டப் பதிகத்தின் முதல் திருமுறையைப் பாட நோய் பஞ்சாக பறந்து விடும்.

 

சிலருக்கு சனிக்கிரக பாதிப்பு மிகக் கடுமையாக இருக்கும். அத்தகைய பாதிப்புக்குள்ளானவர்கள் திருஞானசம்பந்தர் திருநள்ளாறில் பாடிய பதிகத்தை 108 தடவை பாராயணம் செய்தால் பயன் அடையலாம்.

 

அது போல திருஞான சம்பந்தர், திருநெடுங்குளம் எனும் தலத்தில் பாடிய இடர்களையும் பதிகத்தை பாடினால் எவ்வளவு பெரிய தடைகளும் உடைபட்டு விலகி ஓடி விடும்.

 

திருச்சோற்றுத்துறை எனும் தலத்தில், திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடினார். அந்த பதிகத்தை ஜெபித்தால் வசதியான வாழ்வை பெற முடியும். அது போல அவர் திருமருகல் எனும் தலத்தில் பாடிய பதிகத்தை ஆலய பிரகாரத்தில் அமர்ந்து படித்தால் உடனே திருமணம் கை கூடி விடும்.

 

இப்படி நோய்கள் நீங்கவும், கிரக தோஷங்கள் விலகவும் பதிகங்களும், மந்திரங்களும் நிறைய உள்ளன.

 

அவற்றையெல்லாம் தெரிந்து கொண்டு ஜெபித்தால் நிச்சயமாக உரிய பலன்கள் கிடைக்கும்.

பதிகங்களை படிப்பதால் எப்படி பலன் கிடைக்கும் என்று சிலருக்கு சந்தேகம் எழக்கூடும்.

 

மந்திரங்கள், பதிகங்களில் உள்ள ஒவ்வொரு சொற்களும் சித்தர்கள், ஆழ்வார்கள், நாயன்மார்களால் சக்தி வாய்ந்த அதிர்வை பெற்றுள்ளன.

 

இந்த அதிர்வுகள் ஒலி சக்திகளாகும். இந்த அதிர்வுகள் ஒன்று சேரும் போது சக்தி பல மடங்கு அதிகரித்து, நமக்கு பலனைப் பெற்றுத் தரும். நோய் தீர்க்கும் தன்வந்த்ரி ஸ்லோகத்தை 27 தடவை சொன்னால் இத்தகைய பலன்களை பெற முடியும்.

 

ஆதிசங்கரர் சவுந்தர்யலஹரியில் கூறியுள்ள ஒரு மந்திரப் பாடலை பாடினால் எவ்வளவு பெரிய காய்ச்சலும் உடனே நீங்கி விடும்.

 

ஆஞ்சநேயர் சன்னதியில் வழிபடும்போது ஆஞ்சநேயர் மந்திரத்தை கூறினால் கொடிய நோய்கள் குணமாகும்.

 

அது போல அனுமன் கவசத்தை ஜெபித்தால் சுறுசுறுப்பாக இருக்கலாம்.

 

அம்பாள் சன்னதிகளில் வழிபடும்போது, ரோக நிவரண அஷ்டகத்தை சொல்லலாம்.

 

மந்திரங்கள், பதிகங்களை படிக்கும் போதோ, சொல்லும் போதோ வாய் விட்டு சொல்வதை விட மனதுக்குள் சொல்வது நல்லது.

 

நமது புராணங்கள், இதிகாசங்கள், வேதங்கள், உபநிடதங்களில் ஏராளமான மந்திரங்கள் உள்ளன.

 

திருமந்திரம், கந்தர் அணுபூதி, கந்த சஷ்டி கவசம் போன்றவற்றில் மந்திரங்கள் மறைந்து கிடக்கின்றன. எனவே மந்திரச் சொற்கள் நிறைந்த பாடல்களை தெரிந்து கொண்டு உள்ளம் உருகப் பாடினால் நிம்மதியான வாழ்வு பெறலாம்.

 

அதிலும், ஆலயங்களில் பாடல்களை பாடும் போது நிச்சயம் இரட்டிப்பு பலன் கிடைக்கும்.

சில பதிகங்கள், மந்திரங்களை குறிப்பிட்ட ஊர்களில் உள்ள ஆலயங்களில் அமர்ந்து,

ஜெபிப்பது நல்லது என்று வரையறுக்கப்பட்டுள்ளது.

 

ஏனெனில் குறிப்பிட்ட தலத்தில், குறிப்பிட்ட மந்திரத்தை உச்சரிக்கும்போது 100 சதவீதம் பலன் கிடைப்பதை அனுபவப்பூர்வமாக உணரலாம்.

 

சில மந்திரங்களை ஆலயங்களில் சில செயல்கள் செய்யும் போது உச்சரிக்க வேண்டும்.

உதாரணத்துக்கு திருநீறு பூசும் போது “ஓம் சிவாய நம” என்று சொல்லிக் கொண்டே பூசவேண்டும்.

 

அது போல ஒரு செயலை தொடங்கும் போது “ஸ்ரீகணேச பஞ்ச ரத்னம்” எனும் மந்திர வலிமையுள்ள சுலோகங்களை உச்சரித்தால் நமது நற்காரியங்கள் அனைத்தும் தடை இல்லாமல் நிறைவேறும்.

 

“ஸ்ரீ விஸ்வநாதாஷ்டகம்” எனும் 8 சுலோகங்கள் மந்திர வலிமை பெற்றவை. இந்த சுலோகங்களை திங்கள் தோறும் சிவபெருமான் சன்னதியில் நின்று கூறி வழிபட்டால் வாழ்வில் எதற்கும், எந்த இடையூறும் வராது.

 

அதிகாலை நேரத்தில் சக்தி தலங்களுக்கு சென்றால் மறக்காமல் “ஆதிசங்கரர் அருளிய கவுரி சத்கம்” பாட வேண்டும். இந்த மந்திரம் நிம்மதியான வாழ்வைத் தேடித்தரும்.

 

வசிஷ்ட முனிவர் சிவநாம மந்திரங்கள் நிறைய எழுதியுள்ளார். அந்த மந்திரங்களை தினமும் மனதுக்குள் 3 தடவை சொன்னால் போதும், தரித்திரங்கள் ஓடி விடும்.

 

கந்தபுராணத்தில் வரும் சங்கர சம்ஹிதை மந்திரத்தை சிவாலயத்தில் அமர்ந்து படித்தால் எல்லாவித சுக போகங்களும் தேடி வரும்.

 

அது போல ஆதிசங்கரர் இயற்றிய ஸாம்ப பரப்பிரம்ம சுலோகத்தை தினமும் ஆலய பிரகாரங்களில் அமர்ந்து படித்து வழிபட்டு வந்தால் அஷ்டமா சித்திகளைப் பெறலாம்.

 

ப்ருதி வீஸ்வராய ஸ்தோத்திரம் எனும் மந்திரத்தை சிவாலய கருவறை முன்பு நின்று உச்சரித்தால் குடும்பத்தில் அமைதி உண்டாகும்.

 

துர்கா தேவி முன்பு நின்று ஸ்ரீ துர்கா கவசம் பாடினால் கணவன்-மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள்.

 

ஸ்ரீ சுப்பிரமணிய பஞ்சரத்னம் பாடினால், முருகன் அருள் பெறலாம்.

 

ஸ்ரீ மகாலட்சுமி சன்னதி முன்பு நின்று, அவருக்குரிய அஷ்டக மந்திரத்தை கூறினால் நமது பொருளாதார நிலை உயரும்.

 

குங்கும பஞ்சதசி என்றொரு மந்திரம் உள்ளது. காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்தில் இதை சிறப்பாக செய்வார்கள். இந்த பஞ்சதசியை பாடினால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

இப்படி ஒவ்வொரு சன்னதிலும் உச்சரிக்க தனி, தனி மந்திரங்கள் உள்ளன.

 

அருளும் பொருளும் பெற அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம் சொல்ல வேண்டும்.

 

சகல கலைகளிலும் சிறக்க சகலகலா வல்லி மாலை சொல்ல வேண்டும்.

 

இத்தகைய மந்திரங்களில் “காயத்ரி மந்திரம்” உயர்வானது. இது வேதங்களின் தாய் என்று போற்றப்படுகிறது.

 

அது போல “பிரணவ மந்திரம்” (ஓம்) மிக, மிக சக்தி வாய்ந்தது. சூரியனில் இருந்து வெளியாகும் ஓசை “ஓம்” என்று ஒலிப்பதாக சமீபத்தில் நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அனைத்து மதங்களிலும் மந்திர உச்சாடனைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் தருகின்றனர்.

இஸ்லாத்தில் ஓதுவது, கிருஸ்துவத்தில் ஜெபம் செய்வது, என மட்டுமல்லாமல் பல்லாயிரமாண்டுகளுக்கு முன்பிருந்தே ஹிந்து மத இதிகாசங்களிலிருந்தும், புராணங்களில் இருந்தும் மந்திரங்களின் மகத்துவத்தை ஹிந்துக்கள் புரிந்து, உணர்ந்து உலகிற்கு அளித்துள்ளது இம் மானுடப்பிறப்பு பயன் பெறும் அளப்பறியா மகத்துவம்.

மந்திரங்களுக்குள் மறைந்திருக்கும் அர்த்தங்கள்

சப்த பிரபஞ்ச வடிவமாக உள்ள வேதங்களில் பொதிந்துள்ள மந்திரங்களை கண்டறிந்து வெளிப்படுத்தியவர்கள், ‘ரிஷிகள்’ ஆவார்கள். இந்த ரிஷிகளில், மகரிஷி, பிரம்மரிஷி, ராஜரிஷி, வைஸ்யரிஷி, ஜனரிஷி, தபரிஷி, ஸத்யரிஷி, காண்டரிஷி, தேவரிஷி, சூதரிஷி என்ற பல்வேறு வகையினர் உள்ளதாக ஆன்மிக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ரிஷிகள் கண்டறிந்த மந்திரங்களுக்கு 7 விதமான பண்புகள் உள்ளன. அவை, 1) ‘ரிஷி’ – மந்திரத்தை கண்டறிந்தவர் 2) ‘சந்தஸ்’ – மந்திரம் உச்சரிக்கப்படும் முறை 3) ‘தேவதை’ – மந்திரத்திற்குரிய கடவுள் 4) ‘பீஜம்’ – மூல சக்தியாக உள்ள சொல் 5) ‘சக்தி’ – அதன் சக்தி நிலை 6) ‘கீலகம்’ – அனைத்து பகுதிகளையும் ஒருங்கிணைக்கும் பகுதி 7) ‘நியாசம்’ – உச்சரிப்பின்போது உடலின் பகுதிகளை ஒழுங்குபடுத்துவது ஆகியவையாகும். இந்த ஏழு விதமான பண்புகளைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

ரிஷி

எவரும் கண்டறியாத மறை பொருளாக இருந்து கொண்டிருந்த மந்திரங்களைக் கண்டுபிடித்து, அதனை நமக்கு அளித்தவர்கள் ரிஷிகள். எனவே அந்த ரிஷிகள், மந்திரத்துக்குரிய தேவதை, ‘சந்தஸ்’ எனப்படும் மந்திரம் உச்சரிக்கப்படும் முறை ஆகிய மூன்றும் போற்றப்பட வேண்டும் என்பது நியதி. ஆதி குருவான மந்திரத்தை கண்டறிந்த ரிஷி, அதை உபதேசித்த மானிட குரு ஆகியோரை வணங்குவதற்காக, வலது கையால் தலையை தொட்டு அதற்கு உரிய மந்திரம் சொல்வது ‘ரிஷி நியாசம்’ ஆகும்.

சந்தஸ்

குறிப்பிட்ட ஒரு மந்திரத்தின், சொல் அமைப்பு இதுவாகும். அந்த முறைக்கு வணக்கம் தெரிவிக்கும் முறையில், உதட்டின் வெளியே வலது கையால் தொட்டுக்கொள்ளும் முறை ‘சந்தஸ் நியாசம்’ ஆகும்.

தேவதை

மந்திரத்தின் மையப் பொருளாக உள்ள இறை சக்தியையே, ‘தேவதை’ என்கிறோம். அதை இதயத்தில் அமர்ந்திருக்கும் பாவனையுடன், இதய ஸ்தானத்தை தொட்டு வழிபடும் முறை ‘தேவதா நியாசம்’ ஆகும்.

பீஜம்

‘பீஜம்’ என்பதற்கு ‘விதை’ என்பது பொருள். சிறிய விதைக்குள் மாபெரும் மரம் வளர்வதற்காக காத்திருக்கும் நிலையை இது உணர்த்துகிறது. இந்த பிரபஞ்சம் மற்றும் பஞ்சபூதங்கள் யாவும் அதன் சூட்சுமமான நிலையில் இருந்துதான் தற்போது பார்க்கப்படும் நிலைக்கு வந்துள்ளன. அதன் தோற்ற நிலைக்கு அடிப்படையாக உள்ள நுட்பமான ஒலி வடிவமே ‘பீஜம்’ ஆகும். அதன் அடிப்படையில், ஒவ்வொரு தேவதைக்கும் தனித்தனியான ‘பீஜ மந்திரம்’ உள்ளது.

சக்தி

‘பீஜம்’ என்ற விதைக்குள் இருந்து வெளிப்பட காத்திருக்கும் அதன் பலன், ‘சக்தி’ என்று குறிப்பிடப்படுகிறது. இந்த சக்தியானது, வீரியம், தேஜஸ், பலம் என்ற நிலைகளிலும் வெளிப்படுகிறது.

கீலகம்

மந்திரத்தின் சக்தி சிதறாமல் பாதுகாப்பாக ஒருங்கிணைக்கும் வழிமுறை ‘கீலகம்’ ஆகும். ஓடும் தேரின் சக்கரத்திற்கு அச்சாணி அமைந்திருப்பதுபோல, ஒவ்வொரு மந்திரத்துக்கும் ‘கீலகம்’ என்ற ஒருங்கிணைப்பு அவசியமானது.

நியாசம்

மந்திர உச்சரிப்பு மற்றும் அதன் அமைப்பு ஆகிய நிலைகளில் உடலின் பகுதிகளை சம்பந்தப்படுத்தி வணக்கம் தெரிவிக்கும் உடல்மொழி ‘நியாசம்’ எனப்படும். அவை ‘அங்க நியாசம்‘, ‘கர நியாசம்’ உள்ளிட்ட பல வகைகளில் அமைந்துள்ளன.

சொற்களின் சேர்க்கையாக உள்ள பல மந்திரங்களை பிரித்து, அர்த்தம் காண்பது இயலாது. இருந்தாலும், தன்னளவில் அவற்றின் சப்த அலைவரிசைக்கு சக்தி உள்ளதாக பல்வேறு ஆய்வுகள் மூலமாக கண்டறியப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், குறிப்பிட்ட உயர் எண்ணிக்கையில் ஒரு மந்திரத்தை இடம், பொருள், காலம் என்ற அளவீடுகளுக்குள் உட்பட்டு, உச்சாரணம் செய்யப்படும் நிலையில், மந்திரத்திற்கான உருவம், அதை உச்சரிப்பவருக்கு தென்படும் என்று ஆன்மிக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

குறிப்பிட்ட அந்த தேவதா உருவம், ஒரு சில காரியங்களை செய்யும் சக்தி படைத்தது என்றும் சொல்லப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட உருவங்களை தோற்றுவிக்கக்கூடிய ‘பீஜாட்சரங்களை’ கச்சிதமாக ரிஷிகள் தமது ஞான திருஷ்டியால் கண்டறிந்து, அவற்றை உலக நலனுக்காக அளித்துள்ளனர். குறிப்பிட்ட பீஜாட்சரங்களின் மூலம் மந்திரங்களை அமைத்து, அதற்குரிய தேவதையின் பெயரை அளித்து, அவற்றின் சக்தியையும் ரிஷிகள் காட்டிய வரலாறு உலகமெங்கும் சொல்லப்படுகின்றன.

மந்திர தேவதைகளில் சிறு தேவதைகள், தேவதைகள், அதிதேவதைகள் என்று மூன்று பிரிவுகள் உள்ளன. அதாவது, கருப்பணசாமி, குட்டிச்சாத்தான், யட்சிணி போன்ற தேவதைகள் சிறு தெய்வங்களாக சொல்லப்படுகின்றன. காளி, துர்க்கை, ஆஞ்சநேயர், நவக்கிரகங்கள் போன்றவை ‘தேவதைகள்’ என்று குறிப்பிடப்படுகின்றன. சிவன், விஷ்ணு, பார்வதி, முருகன், கணபதி ஆகியோர் அதிதேவதைகள் என்று அழைக்கப்படுகிறார்கள். சம்பந்தப்பட்ட தேவதைக்குரிய உருவத்தை பார்த்துத் தரிசிக்கும் விதமாக மந்திரங்கள் செயல்படுகின்றன.

மந்திர உபாசனை பெற விரும்பும் ஒரு உபாசகர், அவரது உடல் மற்றும் உள்ளம் ஆகியவற்றின் அமைப்புக்கு ஏற்ற விதத்தில், சரியான குருவிடம் இருந்து தக்க சமயத்தில் மந்திர உபதேசம் பெற வேண்டும் என்பது ஆன்மிக நியதியாகும். ஆன்மிக முன்னேற்றம் அடைய விரும்புபவருக்கு அடித்தளங்களாக இஷ்ட தெய்வம், மந்திரம், தகுதிவாய்ந்த குரு ஆகிய மூன்று விஷயங்கள் அமைந்துள்ளன. அவற்றின் அடிப்படையில் மனதின் பக்குவத்துக்கு ஏற்ப இஷ்ட தெய்வத்தை தேர்ந்தெடுத்து, ஒரு குருவின் மூலம் பெறப்பட்ட அதற்கான மந்திரங்களை உச்சரித்து, உரிய முறையில் பூஜைகள் செய்தால் பலன் கிடைக்கும் என்று ஆன்மிக சான்றோர்கள் தெளிவாக குறிப்பிட்டுள்ளனர்…

 

Leave a Comment