பெருமிழலை குறும்ப நாயனார்.

சோழநாட்டின் உள்நாடாகிய மிழலை நாட்டில் பெருமிழலை என்னும் ஊரின் தலைவராய் விளங்கியவர் மிழலை குறும்பனார் ஆவர்.இன்றைய புதுக்கோட்டை மாவட்டத்தில் மல்லாங்குடி கிராமத்தில் உள்ள தேவர்மலையே மிழலைக் குறும்பர் அவதார தலமும் பரமுத்தி தலமும் ஆகும்.இவர் சிவனடியார்களுக்கான திருப்பணிகளை விருப்பமுடன் செய்பவர். சிவபெருமான் திருவடிகளை நெஞ்சத்தாமைரையில் இருத்தி வழிபாடு செய்பவர். இறைவனது திருவைந்தெழுத்தினை இடைவிடாது நினைந்து போற்றுபவர்.தம் உடற் கொண்டும் இறைவனார்க்கும் அவர்தம் அடியார்க்கும் தொண்டுசெய்யும் அருளாலர். இறைவனை தமிழ் மறையால் தொழுதேத்தும் அடியாரும் ஆவார்.இவ்வாறு மனம் உடல் மொழி எனும் முப்பொருளால் இறைவழிபாடு செய்யும் சிறப்பு மிக்கவர் மிழலை குறும்பர்.

சிவபத்தியிலும், சிவனடியார் பத்தியிலும் சிறந்து வாழும் மெய்யடியார்கள் சித்தம் நிலவும் ஆருரில் திருத்தொண்டத்தொகை பாடிய நம்பியாரூரர் பெருமையைக் கேள்வியுற்றார். அவரைப் பணிந்து அவருடைய திருவடிகளை நினைந்து போற்றுதலை நியமமாகக் கொண்டார். நம்பியாரூரர் திருவடிகளைக் கையால் தொழுது வாயால் வாழ்த்தி மனதால் நினைக்கும் கடமையினால் இதுவே சிவபெருமான் திருவடிகளை அடைவதற்குரிய நெறியாகும் என்று அன்பினால் மேற்கொண்டார். நம்பியாரூரர் திருப்பெயரினை நாளும் நவின்ற நலத்தால் அணிமா முதலிய அட்டமா சித்திகளும் கைவரப்பெற்றார்.

இத்தகைய ஆற்றலும் இறையருளும் பெற்றவராக மிழலைக்குறும்பர் வாழ்ந்துவரும் நாளில், சுந்தரமூர்த்தி நாயனார் திருவஞ்சைக் களத்திற்சென்று திருப்பதிகம் பாட அவருக்குச் சிவபெருமான் அருளால் வடகயிலை அடையும் பேறு மறுநாள் கிடைக்க இருப்பதனைத் தம்முடைய ஊரில் இருந்து கொண்டே யோகக்காட்சியால் தம் ஞானத்தினால் அறிந்து கொண்டார். “திருநாவலூரில் திருக்கயிலை எய்த நான் அவரைப் பிரிந்து கண்ணிற் கரியமணி கழிய வாழ்வார் போல வாழேன்” என்றெண்ணி ‘இன்றே யோகத்தால் சிவன் தாள் சென்றடைவேன்’ என்று சொல்லி. நாற்கரணங்களாலும் ஒரு நெறிப்பட்டு நல்லறிவு மேற்கொண்டு, பிரமநாடிகளின் வழியே கருத்தைச் செலுத்த, யோக ஞான முயற்சிகளினால் பிரம்மகபாலம் திறந்து உடலின்று உயிர் பிரிந்து உச்சிவழியே வெளியேறி திருக்கயிலை வீற்றிருந்து அருளும் சிவபெருமானது திருவடி நீழலை அடைந்து சிவபுரம் சார்ந்தது. அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவராகும் அருளும் பெற்றது.பெருமிழலை குறும்பர் எனும் திருநாமமும் அடையப்பெற்றார்.

பெருமிழலை குறும்ப நாயனார் குருபூசை ஆடி மாதம் சித்திரை நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.

பெருமிழலை குறும்ப நாயனார் திருவடிகள் போற்றி

அம்மையப்பன் மலரடிகள் போற்றி போற்றி.