Sashti Viratham

சஷ்டி விழாவைக் கொண்டாடினால் சகல யோகமும் கிடைக்கும். Sashti Viratham benefits

சஷ்டி திதியில் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டால் மண மாலை சூடும் வாய்ப்பு உருவாகும். மகப்பேறு உண்டாகும் வாய்ப்பும் வந்து சேரும்.

சில தெய்வங்களுக்கு நட்சத்திரங்களில் விழா எடுத்துக் கொண்டாடுவர். சில தெய்வங்களுக்கு திதிகளில் விழா எடுத்துக் கொண்டாடுவர். ஆவணி பிறந்து விட்டால் சதுர்த்தி திதியில் விநாயகப் பெருமானுக்கு விழா எடுப்பார்கள். அதை ‘விநாயகர் சதுர்த்தி’ என்று சிறப்புத் திதியாகச் சொல்வர். அதே போல ஐப்பசி பிறந்து விட்டால் ஆறுமுகனுக்கு விழா எடுக்கும் நாள் சஷ்டி திதியாகும்.

சஷ்டி திதி என்பது ஆறாவது திதியாகும். ஆறுமுகனுக்கு ஆறாவது திதியில், ஐப்பசியில் எடுக்கும் இந்த விழாவில் நாம் கலந்து கொண்டாலோ அல்லது விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டாலோ மண மாலை சூடும் வாய்ப்பு உருவாகும். மகப்பேறு உண்டாகும் வாய்ப்பும் வந்து சேரும்.

வந்தவினையும் வருகின்ற வல்வினையும்
கந்தன் என்று சொல்லக் கலங்கிடுமே
தென்பழநி சேவகா என்று திருநீர் அணிவார்க்கு
மேவ வாராதே வினை.

-என்பது முன்னோர்கள் மொழி. வந்தவினை மட்டுமல்ல வரப்போகும் வினையையும், முன்கூட்டியே தீர்க்கின்ற ஆற்றல் வேலன் வழிபாட்டிற்கு உண்டு.

‘சஷ்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்’ என்பது பழமொழி. இந்தப் பழமொழி நாளடைவில் மருவி ‘சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்’ என்று மாற்றம் பெற்றுவிட்டது. அதன் உண்மையான விளக்கம் சஷ்டி திதியிலே முருகனுக்கு விரதமிருந்தால், ‘அகப்பை’ எனப்படும் கருப்பையில் குழந்தை உருவாகும் என்பதைக் குறிப்பதாகும். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர் இந்த விரதத்தை முறையாக மேற்கொண்டு முருகப்பெருமானை வழிபட்டால் அழகான குழந்தையை பத்துத் திங்களில் பெற்று மகிழ்வர்.

விரதங்கள் மூன்று வகைப்படும். ஒன்று வார விரதம், மற்றொன்று திதி விரதம், மூன்றாவது நட்சத்திர விரதமாகும். வாரத விரதத்தை மேற்கொண்டால் சீரான வாழ்க்கை அமையும். நட்சத்திர விரதமிருந்தால் உச்சம் பெற்ற வாழ்க்கை அமையும். திதி விரதமிருந்தால் விதி மாறும். எனவே ஒருவருக்கு விதிக்கப்பட்ட ‘விதி’ மாற வேண்டுமானால், திதி பார்த்து விரதமிருந்து அதற்குரிய தெய்வத்தை வழிபாடு செய்ய வேண்டும்.

 

மார்க்கண்டேயனுக்கு ‘என்றும் பதினாறு’ என்று விதியை, இறைவன் மாற்றியமைத்த கதையை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதைப்போல நமக்கு விதிக்கப்பட்ட விதி எதுவாக இருந்தாலும், அதை மாற்றும் ஆற்றல் விரதங்களுக்கு உண்டு.

ஒவ்வொரு மாதமும் வரும் சஷ்டியன்று விரதமிருந்து ஆலயங்களுக்குச் சென்று, முருகப்பெருமானை வழிபட்டு வருபவர்களும் உண்டு. அதைப்போல ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று கந்தனை வழிபட்டால் மிகுந்த நற் பலன்கள் கிடைக்கும். அமாவாசை அடுத்த ஆறு நாட்களிலும் அதிகாலையில் குளித்து, தூய ஆடை அணிந்து, கந்தனுக்கு உகந்த அப்பமான கந்தரப்பத்தை நைவேத்தியமாக வைத்து, கந்தசஷ்டி கவசம் பாடி வழிபாடு செய்தால் சந்தான விருத்தி கிடைக்கும். சங்கடங்கள் தீரும். வந்த துயரம் விலகி வளமான வாழ்க்கை கிடைக்கும்.

ஆறு நாட்களும் விரதம் இருக்க இயலாதவர்கள், சஷ்டியன்று மட்டும் முழுமையாக விரதம் இருப்பது நல்லது. அந்தத் திருநாள் ஐப்பசி மாதம் 8-ம் நாள் (25.10.2017) புதன்கிழமை வருகிறது. அன்று சூரசம்ஹாரம் முடிந்த பிறகு, முருகப்பெருமானை வழிபட்டு இனிப்பு பொருள் உண்டு விரதத்தை நிவர்த்தி செய்வது நல்லது.

முருகப்பெருமான் செந்தூரில் சூரசம்ஹாரம் செய்ததாக புராண வரலாறு சொல்வதால், தெய்வாம்சம் பொருந்திய அந்த திருத்தலத்திற்கு சென்று வழிபட்டு வரலாம். அருகில் இருக்கும் முருகப்பெருமான் ஆலயத்திற்குச் சென்றும் ஆறுமுருகனை வழிபடலாம். வீட்டிலுள்ள பூஜை அறையிலும் முருகப்பெருமான், வள்ளி-தெய்வானையுடன் கூடிய படத்தை வைத்து வழிபடலாம்.

புத்திரப்பேறு மட்டுமல்லாமல் புகழ், கீர்த்தி, செல்வாக்கு போன்ற பதினாறு பேறுகளும் பெற்று, செல்வ வளத்தோடு வாழ இந்த வழிபாடு கைகொடுக்கிறது.

‘முருகா’ என்று நீங்கள் ஒருமுறை சொல்கிற பொழுது, முருகனோடு மும்மூர்த்திகளும் அருள் வழங்க வருவார்கள். ‘மு’ என்றால் ‘முகுந்தன்’ என்று அழைக்கப்படும் திருமாலைக் குறிக்கும். ‘ரு’ என்றால் ‘ருத்ரன்’ என்றழைக்கப்படும் சிவனைக் குறிக்கும். ‘க’ என்றால் கமலத்தில் அமர்ந்திருக்கும் கமலனான பிரம்மாவைக் குறிக்கும்.

மும்மூர்த்திகளுக்கும் உள்ள முதல் எழுத்துக்களை இணைத்தால் ‘முருக’ என்று வருவதால், முருகனைக் கும்பிட்டால் மும் மூர்த்திகளின் அருளும் முருகன் மூலமாக நமக்கு வந்து சேரும்.

பெரியசாமி என்றழைக்கப்படும் கந்தசாமிதான் நமக்குச் சொந்தசாமி, அந்தச் சாமியை நாம் சஷ்டியில் விரதமிருந்து வழிபட்டால் சேமிப்பு உயரும். செயல்பாட்டில் வெற்றி கிடைக்கும்.

நாளென் செயும் வினைதான் என்செயும் எனை நாடிவந்த
கோளென் செயும் கொடுங்கூற்றென் செயும் குமரேசர் இரு
தாளும் சிலம்பும் சதங்கையும் சண்முகமும் தோளும் கடம்பும்
எனக்கு முன்வந்து தோன்றிடினே!

என்ற பாடல் மூலம் முருகப்பெருமானின் சிறப்புகளை நாம் அறிந்து கொள்ளலாம். சஷ்டியில் முருகப்பெருமானை வழிபட்டு சந்தோஷமான வாழ்க்கையை அமைத்துக்கொள்ளுங்கள்…

108 முருகர் போற்றி

கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்

கந்த குரு கவசம் பாடல் வரிகள்

அழகென்ற சொல்லுக்கு முருகா பாடல் வரிகள்

1 Comment

Leave a Comment