சோளிங்கர் நரசிம்மர் பற்றிய 50 தகவல்கள் ஒரு நாழிகை நேரம் இத்தலத்தில் தங்கியிருந்தாலே வீடுபேறு வழங்கும் புண்ணிய தலம் கார்த்திகை மாதம் நரசிம்மர் கண் திறப்பதால்
சோளிங்கர் நரசிம்மர் பற்றிய 50 தகவல்கள்

108 திவ்ய வைணவ தலங்களில் ஒன்றாக சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் திகழ்கிறது. சோளிங்கர் நரசிம்மர் பற்றிய 50 வழிபாட்டு தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
1. 108 திவ்ய வைணவ தலங்களில் ஒன்றாக சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் திகழ்கிறது.

2. இக்கோவிலில் லட்சுமி நரசிம்மர் யோக நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இவருடன் அமிர்தவல்லி தாயாரும் அருளாசி வழங்குகிறார்.

3. இந்த ஆலயம் வடக்கு நோக்கிய ராஜகோபுரத்துடன் இரண்டு திருச்சுற்றுகள் கொண்டுள்ளது.

4. பொதுவாக பெருமாள் கோவில்களில் மூலவரின் கருவறையிலேயே, உற்சவ திருமேனிகளையும் வீற்றிருக்கச் செய்வர். ஆனால் சோளிங்கரில் மட்டும் யோக நரசிம்மர், மூலவர் மட்டுமே கிழக்கு நோக்கியபடி, சிம்ம சோஷ்டாக்ருதி விமானத்துடன் கூடிய கருவறையில் காட்சி அளிக்கிறார்.

5. உற்சவர் பக்தோசித பெருமாள், சுதாவல்லி, அமிர்தவல்லி எனும் தனது இருதேவியருடன், மலை அடிவாரத்திலிருந்து 2 கி.மீ- தொலைவில் தனிக்கோவில் கொண்டுள்ளார். அங்கு அமிர்தவல்லித் தாயார் தனித்தனி சன்னதி கொண்டுள்ளார். அமிர்த தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் ஆகியவை பக்தோசித பெருமாள் கோவில் அருகில் உள்ளன.

6. பில்லி, சூனியம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பிரம்மதீர்த்தத்தில் நீராடி மலை மீது அமர்ந்து அருள்பாலிக்கும் யோக நரசிம்மரையும், யோக ஆஞ்சநேயரையும் வணங்கினால் நோய்கள் நீங்கப் பெறலாம் என்பது நம்பிக்கை.

7. ஒரே குன்றாலான பெரிய மலையின் மீது யோக லட்சுமி நரசிம்மரும், அமிர்தவல்லி தாயாரும் அருள்பாலிக்கின்றனர்.

8. ஆஞ்சநேயருக்கு நான்கு திருக்கரங்கள் உள்ளன. ஒரு கையில் சங்கு, ஒரு கையில் சக்கரம் மற்ற இரு கைகளில் ஜெபமாலை உள்ளன.

9.சிறிய மலையிலிருந்து பார்த்தால் யோக ஆஞ்சநேயரின் கண்கள் நேராக பெரிய மலையில் உள்ள யோக நரசிம்மரின் திருவடி நோக்கி அமைந்துள்ளது தெரியும்.

10. வேலூர்-திருத்தணி வழியில் இருக்கிறது சோளிங்கர். சென்னையிலிருந்து அரக்கோணம் வரை ரயில் பயணம் செய்து அங்கிருந்து சோளிங்கருக்கு பேருந்து மூலம் செல்லலாம். சோளிங்கருக்கு வேலூர், திருத்தணி மற்றும் திருவள்ளூரில் இருந்து பேருந்து வசதி உண்டு.

11.காஞ்சீபுரத்திற்கும், திருவேங்கடமலைக்கும் இடையிலுள்ள திருத்தலம்.

12. மிகச் சிறந்த பிரார்த்தனைத் தலம். மனஅமைதி தரும் அற்புதமான பூமி.

13. இந்த மலையில் உள்ள மூலிகை மரங்களால் ரத்தக்கொதிப்பு, இதயநோய் முதலான பக்தர்களின் பிரச்சினை விரைவில் குணமாகிறது.

14. சோளிங்கபுரத்தின் புராணப்பெயர் கடிகாசலம், இவ்விடத்தை ஆழ்வார்கள் திருக்கடிகை என அழைத்தனர் என்று அறியப்படுகிறது. ஆச்சாரியார்கள் சோளசிம்மபுரம் என்றும், சைவர்கள் சோழலிங்கபுரம் என்றும் அழைத்து, தற்போது சோளிங்கபுரம், சோளிங்கர் என்று அழைக்கப்படுகிறது.

15. ஸ்ரீநரசிம்மர் ‘உக்ராவதாரம்’ என்பதால் அவர் சாந்தமான நிலையில் இருப்பதை பூசிப்பதை மக்கள் அதிகம் விரும்புகிறார்கள். ஸ்ரீநரசிம்மர் லட்சுமியுடன் இருக்கும் பொழுது சாந்தமாக இருக்கிறார் என்பதால் சோளிங்கர் யோக நரசிம்மரை ‘ஸ்ரீ லட்சுமி நரசிம்மர்’ என்றும் பூசனைச் செய்கிறார்கள்.

16. இங்குள்ள திருகுளத்திற்கு ‘அனுமத் தீர்த்தம்’ என்பது திருநாமம்.

17. ஸ்ரீ யோக நரசிம்மருக்கு சோளிங்கரை தவிர மற்ற இடங்களிலும் கோவில்கள் உண்டு. ஆனால் யோக ஆஞ்சநேயருக்கு இங்கு மட்டுமே கோவில் உள்ளது. அவர் இங்கு யோக மூர்த்தியாக மட்டுமல்லாமல், அகிம்சை மார்க்கத்தை நிலை நாட்டியவரும் ஆவார்.

18. மலைக்கோவில்களின் உற்சவ மூர்த்திகள் இரண்டு கி.மீ. தொலைவில் ஊர் மத்தியில் உள்ள பக்தவத்சலம் கோவிலில் உள்ளது. நாயக்கர்கள் காலத்தில் கட்டப்பட்ட இக்கோவில் மிக விஸ்தாரமாகவும், அழகாகவும் உள்ளது.

19. ஒப்பற்ற திவ்யதேசமான சோளிங்கர் நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பேயாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது.

20. சோளிங்கர் திருத்தலம் 1000-2000 ஆண்டுகள் பழமையானது.

21. பேயாழ்வார், திருமங்கையாழ்வார், ஸ்ரீமந் நாதமுனிகள், திருக்கச்சி நம்பிகள், ராமனுஜர், மணவாள மாமுனிகள் ஆகியோர் இங்கு வந்து நரசிம்மரை தரிசனம் செய்திருக்கிறார்கள்.

22. ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களில் இது 65-வது திவ்ய தேசம். இத்தலத்தில் உள்ள ஸ்ரீநரசிம்மரை வணங்கினால் குழந்தையின்மை, திருமணத்தடை ஆகிய கஷ்டங்கள் தீரும். வியாபார நஷ்டம் விலகும். லாபம் பெருகும்.

23. புதிதாக நிலம் வாங்க வேண்டும் என நினைப்பவர்களும், வீடு கட்ட ஆசைப்படுபவர்களும் கோவில் மலைப்பாதைக்கு அருகில் வழிநெடுக கற்களை எடுத்து ஒன்றின் மேல் ஒன்றாக வைத்து கோபுரம் போல் கட்டி, வேண்டிக்கொண்டால், விரைவில் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை.

24. இங்கே உள்ள நரசிம்ம குளத்தில் நீராடினால் பிரம்மஹத்தி தோஷம் முதலான சகல தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.

25. இங்கு தானம், தர்மம் செய்வது கயையில் செய்வ தற்கு சமமானது என்கிறார்கள் பட்டாச்சார்யர்கள்.

26. கல்கண்டு படைத்தல், வெல்லம் படைத்தல், வாழைப்பழம் தருதல், நரசிம்மருக்கும், தாயாருக்கும் வேஷ்டி புடவை சார்த்துதல், தயிர்சாதம் செய்து பிரசாதம் படைத்தல் என வழிபட்டால், சகல ஐஸ்வரியங்களும் கிடைத்து இனிதே வாழலாம் என்கிறார்கள் பக்தர்கள்.

27. வெள்ளிக்கிழமை தோறும் பெருமாளுக்கும், தாயாருக்கும் திருமஞ்சனம் (அபிஷேகம்) நடைபெறும். அந்த நாளில் திருமஞ்சனம் செய்து பிரார்த்தனை செய்வது விசேஷம்.

28. சோளிங்கரில் முதலில் நரசிம்மரைத் தரிசித்து விட்டு பின் ஆஞ்சநேயரை தரிசிப்பது வழக்கம்.

29. சுவாமி ஸ்ரீ சாளக் கிராம மாலை அணிந்துள்ளார். இவரது வடிவத்தை சிலா வடிவம் என்கின்றனர்.

30. தாயார் அமிர்தவல்லி வேண்டும் வரம் தருபவராக அருள்பாலிக்கிறார்.

31. பெருமாளுக்கு ஒவ்வொரு கோவிலிலும் ஒவ்வொரு வழிபாட்டு முறை உள்ளது. சில கோவில்களில் மொட்டை போடுவது. சில கோவில்களில் உண்டியலில் காணிக்கை போடுவது. ஆனால் இத்தலத்து பெருமாள், ஒரே கல்லால் ஆன மலை மீது அருள்பாலிக்கும் தன்னை 1500 படிகள் ஏறி வந்து தரிசித்தாலே பலன் தந்து விடுவார் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.

32.பராங்குச சோழன் கட்டிய 3ம் நூற்றாண்டு கோவில் இது.

33. இந்த ஆலயத்தில் குறிப்பிட்ட தொகையை வழங்கினால் பிறந்த தினத்தன்று அர்ச்சனை செய்து குங்குமப் பிரசாதம் அனுப்பி வைக்கிறார்கள்.

34. திருக்கடிகை மலை ஏறி வழிபட இயலாத மெய்யன்பர்கள் ஒரு நாழிகை நேரம் திருக்கடிகையை மனத்தில் நினைத்துச் சிந்தித்தாலே போதும். மோட்சம் சித்திக்கும் எனப் புகழ்ந்துரைக்கின்றார் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்.

35. வைகுந்தம், திருப்பாற்கடல், திருவேங்கடத்திற்கு நிகரானது கடிகாசலம்.

36. வடமொழியில் பிரம்மகைவர்த்த புராணத்தில் காணப்படும் இத்திவ்விய தேசம் பற்றிய வரலாறுகள் யாவும் இனிய எளிய தமிழ் நடையில் கூறப்பட்டுள்ளன.

37. வியாழக்கிழமைகளில் பிரம்மதீர்த்தத்தில் நீராடி நரசிம்மசுவாமியைத் துதிப்பதால் வேண்டியதெல்லாம் பெறலாம்.

38. தூய மனத்துடன் நீராடி நம்பிக்கையுடன் சோளிங்கரில் பித்ரு தர்ப்பணம் தானம் தவம் முதலியன செய்தால் அவன் பரம்பரை தழைத்தோங்கும். ஒரு போதும் வம்சம் அழியாது. அத்தீர்த்தக்கரையில் மரம்செடி முதலியன வைத்து வளர்த்தால் இம்மையிலும், மறுமையிலும் எல்லா நன்மையையும் அடைவர்.

39. மாசி மாதத்தில் சூரியோதயத்தின் போது பிரம்ம தீர்த்தத்தில் நீராடிக் கடிகேசனை தியானித்தால் எல்லாப் பாவங்களும் நீங்கி நன்மைகளை அடையலாம்.

40. பிரம்மதீர்த்தினருகில் பைரவ தீர்த்தம் இருக்கிறது. அதில் திங்கட்கிழமையில் நியமுடன் நீராடினால் பூதபிசாசுகளால் எத்தொல்லையும் ஏற்படாது. அதில் நீராடும் புண்ணியவான்களைக் கண்டு அஞ்சி அவை விலகியே நிற்கும்.

41.சோளிங்கர் தலத்தில் வைகாசை ஆகமம் முறைப்படி பூஜை கள் நடத்தப்படுகிறது.

42. இத்தலத்தில் நரசிம்மருக்கும் தாயாருக்கும் வெள்ளிக் கிழமை மட்டுமே அபிஷேகம் நடத்தப்படும். ஆனால் ஸ்ரீயோக ஆஞ்சநேயருக்கு தினமும் அபிஷேகம் செய்யப்படுகிறது.

43.கார்த்திகை மாதம் நரசிம்மர் கண் திறப்பதால் வேலூர், அரக்கோணம், திருத்தணி, சித்தூர்,திருப்பதி, சென்னை உள்பட பல நகரங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் விடுகிறார்கள். தனியார் போக்குவரத்து நிறுவனங் களும் சோளிங்கருக்கு சிறப்பு பஸ்கள் இயக்குவது குறிப்பிடத் தக்கது.

44. சோளிங்கர் ஸ்ரீயோக நரசிம்மருக்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே பாரம்பரியமாக பூஜை செய்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது சோளிங்கர் தலத்து தலைமை அர்ச்சகராக ஸ்ரீதர் பட்டாச்சார்யா பூஜை செய்து வருகிறார்.

45. சோளிங்கர் தலத்தில் ஒரு நாழிகைக்கு வழிபாடு செய்தாலே போதும், 48 நாட்களுக்கு விரதம் இருந்து வழிபட்ட பலன் கிடைக்கும்.

46 கோவிலின் விமானம் சிம்ஹகோஷ்டாக்ருதி விமானம் ஆகும்.

47. கோயில்கள் நாயக்கர் மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டவை ஆகும்.

48. பெரிய மலையில் உள்ள அமிர்தவல்லி தாயாருக்கு வெள்ளிதோறும் பஞ்சாமிர்தத் திருமஞ்சனமும், கார்த்திகை மாதத்தில் உற்சவமும் நடைபெறுகின்றது.

49. ஞாயிற்றுக்கிழமைகளில் சிறிய மலையில் உள்ள ஆஞ்சநேயருக்கு முக்கிய வழிபாடுகள் சிறப்பாக நடைபெறுகின்றன.

50. சென்னையில் இருந்து சுமார் 100 கி.மீ. தொலைவில் சோளிங்கர் உள்ளது. ஸ்ரீபெரும்புதூர், திருவாலங்காடு, அரக்கோணம் வழியாக சென்றால் எளிதான பயணமாக இருக்கும்.