சோமாசிமாற நாயனார்.

சோழ நாட்டிலுள்ள திருவம்பர் என்னும் திருத்தலத்தில் அவதரித்தவர் தான் மாற நாயனார் என்பவர். இவர் அறவொழுக்கங்களில் நெறிபிறழாது முறையோடு வாழ்ந்து யாவராலும் போற்றப்படும் அளவிற்கு மேம்பட்டு விளங்கினார். இவரது திருமேனியிலே எந்நேரமும் பால்வெண்ணீறு விளங்கும். திருவாயில் நமசிவாய திருவைந்தெழுத்து நாமம் ஒலிக்கும். பாதங்கள் சிவ ஆலயங்களை எந்நேரமும் தொழுது வலம் வந்தவண்ணம் இருக்கும்.

இவ்வாறு நலம் தரும் நாயகனை நாளெல்லாம் போற்றிப் பணிந்தார் அடிகளார். இறைவனின் திருவடி நீழலையே பற்றி வீடு பேற்றை அடைவதற்கான ஒப்பற்ற வேள்விகளையும் நான்மறை ஓதுதலையும் பின்பற்றி வந்தார். இவர் நடத்தி வந்த வேள்விகள் பலவற்றிலும் சோமனுக்கு ஏற்புடைய திங்கள்கிழமை நடத்துகின்ற வேள்விதான் மிகமிகச சிறந்தாக இருக்கும். எண்ணற்ற சோமவார வேள்விகளைச் செய்தமையால்தான் இவருக்குச் சோமாசி மாறர் என்ற சிறப்புப் பெயர் உண்டாயிற்று.

இவர் எண்ணற்ற சிவத்தலங்கள் தோறும் சென்று சிவதரிசனம் செய்து வந்தார்.ஒருமுறை திருவாரூரை அடைந்து தேவாசிரியத் திருமண்டபத்தைத் தொழுது நின்றார். அப்பொழுது சுந்தரமூர்த்தி சுவாமிகள் பரவை நாச்சியாரோடு திருவாரூருக்கு எழுந்தருளியிருந்தார். அவர்களைக் கண்டதும் சோமாசிமாறருக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!

சோமாசிமாறர் சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருப்பாதம் பணிந்து வழிபட்டார். இவருக்கு சுந்தரமூர்த்தி நாயனாரின் அன்பும் அருளும் கிடைத்தது. இவ்வாறு சிவதொண்டு பல புரிந்து வாழ்ந்து வந்த சோமாசி மாற நாயனார், நமசிவாய திருவைந்தெழுத்து மகிமையால் விடைமீது எழுந்தருளும் சடைமுடிப் பெருமானின் திருவடிப்பேறு பெற்று சிவபுரத்தில் வாழும் அருந்தவப் பேற்றினைப் பெற்றார். அறுபத்துமூன்று நாயன்மார்களிலும் ஒருவராகும் பேற்றினையும் பெற்றார். சோமாசிமாற நாயனாரின் குருபூசை வைகாசி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.

சோமாசிமாற நாயனார் திருவடிகள் போற்றி

அம்மையப்பன் மலரடிகள் போற்றி போற்றி.