திருக்குறிப்புத் தொண்டர் நாயனார்.
திருக்குறிப்புத் தொண்டர் தொண்டை நாட்டில் இருந்த காஞ்சிபுரத்தில் அவதரித்த அடியவர். அடியார் சிவனடியார்களின் குறிப்பை உணர்ந்து அவர்களின் பணியை நிறைவேற்றி தந்தமையால் இவருக்கு திருகுறிப்புத் தொண்டர் என்பதே திருநாமமாக நிலைத்துவிட்டது. இவரின் இயற்பெயரை அறிய இயலவில்லை. துணிகளின் அழுக்கை நீக்கி சலவை செய்யும் பணி செய்பவர் அடியார்பெருமான்.
இவர் சிவனார் மேல் தீராத அன்பினைக் கொண்டிருந்தார்.
செய்யும் தொழிலிலும் அடியவர்களுக்கு தொண்டு செய்யலாம் என்பதற்கு திருக்குறிப்புத் தொண்ட நாயனார் ஓர் உதாரணம்.
திருக்குறிப்புத் தொண்டர் தம்முடைய பணியைச் செய்வதோடு, சிவனடியார்களின் துணிகளை அன்போடு சலவை செய்து தூய்மைப்படுத்தி அளிப்பதைத் தன்னுடைய தொண்டாகக் கொண்டு அதில் இன்பம் கண்டார்.
பிறருடைய ஆடைகளின் அழுக்கினை நீக்கும் தொழிலைச் செய்யதாலும், இறைவனை தன்னுடைய நினைவில் கொண்டு மனமாசு நீங்கி வாழ்ந்தார். சேறும் சகதியும் அழுக்கும் நிறைந்த குளத்தில் அழகிய தாமரை வளர்ந்து மலர்வது போல் ஊராரின் அழுக்காடையை தூய்மைசெய்யும் அடியவரின் தூய்மையான அன்பு உள்ளத்தில் மும்மலம் நீக்கி அவ்வுள்ளத்தில் எழுந்தருளி அருள்புரிய சித்தம் கொண்டார்.
இறையடியார்களுக்கு தொண்டு செய்வதற்கு பணம், பதவி, புகழ் ஏதும் தேவையில்லை; உடலுழைப்பு போதும். அதை உணர்ந்த திருக்குறிப்புத் தொண்டர், உண்மையான தொண்டுள்ளத்தோடு தம்முடைய உடலுழைப்பினைக் கொண்டு சிவனடியார்களுக்கு தொண்டு புரிந்து வந்தார் திருக்குறிப்புத் தொண்டரின் தொண்டுள்ளத்தை உலகறியச் செய்ய இறைவனார் விரும்பினார்.
ஆதலால் தாம் சிவனடியாராகி, இடுப்பில் அழுக்கேறிய கச்சையுடன் வெண்ணீறு அணிந்து திருக்குறிப்புத் தொண்டரின் முன் வந்தார்.
அது மழைகாலம். காலை வேளையில் இறையடியாரைக் கண்டதும் திருக்குறிப்புத் தொண்டருக்கு அன்பு பெருகியது.
அவரின் அருகில் சென்று பணிவாக ஐயா நலமா? தாங்கள் எங்கிருந்து வருகின்றரீர்கள்? தங்களின் திருமேனி ஏன் இவ்வாறு மெலிந்துள்ளது?’ என்று நலம் வினவினார்.
அதற்கு சிவனடியார் மெலிதாக புன்னகை பதிலாக தந்தருளினார்.
அடியாரின் அழுக்கேறிய கச்சையைக் கண்டதும் திருக்குறிப்புத் தொண்டர் “ஐயா, தங்களுடைய கச்சை மிகவும் அழுக்காக உள்ளது. நான் இதனை உங்களுக்கு நன்கு சலவை செய்து தூய்மையாக்கி தருகிறேன். ஆதலால் அதனைத் தருகிறீர்களா?” என்று பணிவுடன் வினவினார்.
சிலநாட்களாக மழை ஓய்ந்து இருந்தபடியால் எப்படியும் பொழுது சாய்வதற்குள் சலவை செய்து உலர்த்தி அடியாரிடம் தந்து விடலாம் என்ற நம்பிக்கை திருக்குறிப்புத் தொண்டருக்கு இருந்தது.
திருக்குறிப்புத் தொண்டர் கூறியதைக் கேட்டதும் சிவனடியார் “அழுக்காக இருந்தாலும் இதுதான் எனக்கு கவசம். இந்த குளிர்காலத்தில் என்னுடைய உடலைப் போர்த்திக் கொள்ள இது பயன்படும். இதனைக் கொடுத்துவிட்டால் நான் இரவில் குளிரில் நடுங்க நேரிடும்.” என்றார்.
“ஐயா, நான் இரவு வருவதற்குள் இதனை சலவை செய்து உலர்த்தி உங்களுக்கு போர்த்திக் கொள்ள தயாராக தருகிறேன்.” என்று அடியவருக்கு தம்மால் ஆன தொண்டைச் செய்ய வேண்டும் என்ற நோக்கில் திருக்குறிப்புத் தொண்டர் கெஞ்சினார்.
“இரவு வருவதற்கு முன் இதனை சலவை செய்து உலர்த்தி தருகிறேன் என்று உறுதியளிப்பாதால் இதனைத் தருகிறேன். கண்டிப்பாக உலர்த்தித் தந்துவிட வேண்டும்.” என்றபடி திருக்குறிப்புத் தொண்டரிடம் அழுக்குக் கச்சையைக் கொடுத்தார்.
அதனை பெற்றுக் கொண்ட திருக்குறிப்புத் தொண்டர் நேரே சலவை செய்யும் இடத்திற்குச் சென்றார். வெள்ளாவியில் அழுக்குக் கச்சையை வேக வைத்தார். பின்னர் அதனைப் பிரித்து கச்சையை சலவை செய்ய ஆரம்பித்தார்.
அப்போது எதிர்பாராத வண்ணம் மேகங்கள் திரண்டு கருத்தன. முற்பகல் வேளையும் பிற்பகல் போல் இருந்தது. மழை கொட்டத் தொடங்கியது.
அதனைக் கண்டதும் திருக்குறிப்புத் தொண்டர் ‘இன்னும் சற்று நேரத்தில் மழை நின்று வானம் வெளுக்கும். அதுவரைப் பொறுத்திருப்போம்.’ என்று தம்மைத் தாமே தேற்றினார்.
ஆனால் மழை நிற்கவில்லை. அடைமழை பெய்ய ஆரம்பித்து விட்டது.பொழுது போய்க் கொண்டே இருந்தது. நேரம் செல்ல செல்ல திருக்குறிப்புத் தொண்டரின் உள்ளத்தில் புயல் புகுந்தது.
‘ஐயோ, இதனை முன்பே வெளுத்துக் கொண்டு போய் வீட்டில் காற்றாட உலர்த்தியிருக்கலாமே. நான்தான் சரியாகிவிடும் என்று நேரத்தைக் கடத்தி விட்டேன். அடியவர் வந்து கேட்டால் என்ன செய்வேன?;. அவரின் உடல் குளிரில் நடுங்க காரணமாகி விட்டேனே.’ அடியவருக்கு தீங்குசெய்து பெரும்பாவி ஆகிவிட்டேனே என மனதிற்குள் தினைத்து மருவி உருகினார்.
அழுக்குக் கச்சையாக இருந்தாலும் குளிரிலிருந்து அவரைக் காக்குமே? நான்தான் அவரிடம் வலுக் கட்டாயமாக வெளுத்து உலர்த்தி தருகிறேன் என்று பிடுங்கினேன் இப்பாவம் எம்மை சும்மாவிடாது. அடியவரை நான் எவ்வாறு காண்பேன்? அடியாருக்கு துன்பம் இளைத்த நான் இம்மண்ணில் வாழ்வதைவிடவும் உயிரை விடுவதே சரி’ என்று எண்ணினார்.
துணி துவைக்கும் பாறையில் தன்னுடைய தலையை மோதிக்கொள்ள எண்ணி தலையைச் சாய்த்தார். அப்போது அப்பாறையின் அருகே ஏகாம்பரநாதர் தம்முடைய மலர்கரத்தால் திருக்குறிப்புத் தொண்டர் தலை பாறையில் மோதாமல் தடுக்கச் செய்தார்.
திருக்குறிப்புத் தொண்டர் தொண்டுக்கு உறுதுணையாக இருந்த துணி வெளுக்கும் பாறை, இறைவனின் திருக்கரம் எழுந்தருளிய ஆலயமாக மாறியது.
மேகங்கள் மறைந்தன. பொன்னொளி எங்கும் பரவியது. சிவனார் உமையம்மையுடன் இடபவாகனத்தில் எழுந்தருளினார்.
இறைவன் “உலகம் முழுவதும் உன்னுடைய திருத்தொண்டின் பெருமையை அறிவித்தோம். நீ எம்முடன் இருந்து இன்புறுவாயாக” என்று திருவாய் மலர்ந்தருளினார்.
திருக்குறிப்புத் தொண்டர் நிலைத்த வீடுபேறாகிய சிவபுரத்தில் மூழ்கி இன்புற்று இருந்தார்.
அறுபத்துமூன்று நாயன்மார்களிலும் ஒருவராக இறைவனால் அருளப்பெற்றார்.
திருக்குறிப்புத் தொண்ட நாயனார் குருபூசை சித்திரை மாதம் சுவாதி நட்சத்திரத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது.
திருகுறிப்புத்தொண்ட நாயனார் திருவடிகள் போற்றி
அம்மையப்பன் மலரடிகள் போற்றி போற்றி.
Lalitha Sahasranamam Lyrics Tamil இந்த பதிவில் ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம் பாடல் வரிகள் (lalitha sahasranamam lyrics tamil)… Read More
ஸ்ரீ லலிதா பஞ்சரத்னம் ப்ராதஹ: ஸ்மராமி லலிதா வதநாரவிந்தம் பிம்பாதரம் ப்ரதுல மௌக்திக ஷோபிநாசம் ஆகர்ண தீர்க்க நயனம் மணிகுண்டலாட்யம்… Read More
ஸ்ரீ காலபைரவர் ஜெயந்தி (Kala Bhairava Jayanti 2023) Date ஸ்ரீ காலபைரவர் ஜெயந்தி (Kala Bhairava Jayanti 2023)… Read More
ஸ்ரீ மஹா விஷ்ணுவின் 10 அவதார (தசாவதாரம்) காயத்ரி மந்திரங்கள் ஸ்ரீ மகா விஷ்ணுவின் காயத்ரி மந்திரம் (maha vishnu… Read More
சின்ன சின்ன முருகா முருகா பாடல் வரிகள் | chinna chinna muruga lyrics tamil சின்ன சின்ன முருகா… Read More
வில்லாளி வீரன் ஐயா பாடல் வரிகள் வில்லாளி வீரன் ஐயா வீர மணிகண்டனையா பாடல் வரிகள் அல்லது (Villali Veeran… Read More
Leave a Comment