திருப்புலம்பல்
சிவானந்த முதிர்வு
திருவாரூரில் அருளியது
கொச்சகக் கலிப்பா
திருச்சிற்றம்பலம்
பூங்கமலத்து அயனொடு மால் அறியாத நெறியானே.
கோங்கு அலர் சேர் குவி முலையாள் கூறா, வெண்ணீறு ஆடீ,
ஓங்கு எயில் சூழ் திருவாரூர் உடையானே, அடியேன். நின்
பூங் கழல்கள் அவை அல்லாது, எவை யாதும் புகழேனே!
சடையானே, தழல் ஆடீ, தயங்கு மூவிலைச் சூலப்
படையானே, பரஞ்சோதீ! பசுபதி, மழ வெள்ளை
விடையானே, விரி பொழில் சூழ் பெருந்துறையாய், அடியேன் நான்
உடையானே உனை அல்லாது உறு துணை மற்று அறியேனே!
உற்றாரை யான் வேண்டேன்; ஊர் வேண்டேன்; பேர் வேண்டேன்.
கற்றாரை யான் வேண்டேன்; கற்பனவும் இனி அமையும்;
குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா! உன் குரை கழற்கே,
கற்றாவின் மனம் போலக் கசிந்து, உருக வேண்டுவனே.
திருச்சிற்றம்பலம்
