பிடித்த பத்து

முத்திலக்கலப்புரைத்தல்

திருத்தோணிபுரத்தில் அருளியது

எழுசீர்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்

திருச்சிற்றம்பலம்

உம்பர்கட்கு அரசே ! ஒழிவு அற நிறைந்த

       யோகமே ! ஊற்றையேன் தனக்கு

வம்பு எனப் பழுத்து , என் குடி முழுது ஆண்டு

       வாழ்வு அற வாழ்வித்த மருந்தே !

செம்பொருள் துணிவே ! சீர் உடைக்  கழலே !

        செல்வமே! சிவபெருமானே !

எம்பொருட்டு உன்னைச் சிக்கெனைப் பிடித்தேன் ,

         எங்கு எழுந்தருள்வது இனியே ?

விடை விடாது உகந்த விண்ணவர் கோவே!

       வினையனேனுடைய மெய்ப்பொருளே !

முடை விடாது , அடியேன் மூத்து, அற மண் ஆய் ,

       முழுப் புழுக் குரம்பையில் கிடந்து ,

கடைபடா வண்ணம் காத்து எனை ஆண்ட

         கடவுளே ! கருணை மா கடலே !

இடைவிடாது உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்

        எங்கு எழுந்தருளுவது இனியே !

அம்மையே ! அப்பா ! ஒப்பிலா மணியே !

       அன்பினில் விளைந்த ஆர்அமுதே !

பொய்மையே பெருக்கி, பொழுதினைச் சுருக்கும் ,

        புழுத்தலைப் புலையனேன் தனக்கு ,

செம்மையே ! ஆய சிவபதம் அளித்த

         செல்வமே ! சிவபெருமானே !

இம்மையே , உன்னைச் சிக்கெனைப் பிடித்தேன் ,

            எங்கு எழுந்தருளுவது இனியே !

அருள் உடைச் சுடரே ! அளித்தது ஓர் கனியே !

        பெரும் திறல் அருந்தவர்க்கு அரசே !

பொருள் உடைக் கலையே ! புகழ்ச்சியை கடந்த

         போகமே ! யோகத்தின் பொலிவே !

தெருள் இடத்து அடியார் சிந்தையுள் புகுந்த

        செல்வமே ! சிவபெருமானே !

இருள் இடத்து, உன்னைச் சிக்கெனைப் பிடித்தேன் ,

            எங்கு எழுந்தருளுவது இனியே !

ஒப்பு உனக்கு இல்லா ஒருவனே ! அடியேன்

      உள்ளத்துள் ஒளிருகின்ற ஒளியே !

மெய்ப் பதம் அறியா வீறி இலியேற்கு ,

       விழுமியது அளித்தது ஓர் அன்பே !

செப்புதற்கு அரிய செழும் சுடர் மூர்த்தி !

      செல்வமே ! சிவபெருமானே !

எய்ப்பு இடத்து , உன்னைச் சிக்கெனைப் பிடித்தேன் ,

            எங்கு எழுந்தருளுவது இனியே !

அறவையேன்  மனமே கோயிலாக் கொண்டு ஆண்டு ,

அளவு இலா ஆனந்தம் அருளி ,

பிறவி வேர் அறுத்து , என் குடி முழுது ஆண்ட ,

பிஞ்ஞகா ! பெரிய எம் பொருளே !

திறவிலே கண்ட காட்சியே ! அடியேன்

செல்வமே ! சிவபெருமானே !

இறவிலே ,  உன்னைச் சிக்கெனைப் பிடித்தேன் ,

            எங்கு எழுந்தருளுவது இனியே !

‘பாச வேர் அறுக்கும் பழம்பொருள்’ தன்னைப்

          பற்றும் ஆறு அடியனேற்கு அருளி,

பூசனை உகந்து, என் சிந்தையுள் புகுந்து,

            பூங் கழல் காட்டிய பொருளே!

தேசு உடை விளக்கே! செழுஞ் சுடர் மூர்த்தி!

         செல்வமே! சிவபெருமானே!

ஈசனே! உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்.

       எங்கு எழுந்தருளுவது இனியே?

அத்தனே! அண்டர் அண்டம் ஆய் நின்ற

         ஆதியே! யாதும் ஈறு இல்லாச்

சித்தனே! பத்தர் சிக்கெனப் பிடித்த

        செல்வமே! சிவபெருமானே!

பித்தனே! எல்லா உயிருமாய்த் தழைத்து,

       பிழைத்து, அவை அல்லை ஆய் நிற்கும்

எத்தனே! உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்.

       எங்கு எழுந்தருளுவது இனியே?

பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப்

          பரிந்து, நீ பாவியேனுடைய

ஊனினை உருக்கி, உள் ஒளி பெருக்கி,

         உலப்பு இலா ஆனந்தம் ஆய

தேனினைச் சொரிந்து, புறம் புறம் திரிந்த

         செல்வமே! சிவபெருமானே!

யான் உனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்.

            எங்கு எழுந்தருளுவது இனியே?

புன் புலால் யாக்கை, புரை புரை கனியப்

          பொன் நெடும் கோயிலாப் புகுந்து, என்

என்பு எலாம் உருக்கி, எளியையாய் ஆண்ட

           ஈசனே! மாசு இலா மணியே!

துன்பமே, பிறப்பே, இறப்போடு, மயக்கு ஆம்

          தொடக்கு எலாம் அறுத்த நல்சோதி!

இன்பமே! உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்,

         எங்கு எழுந்தருளுவது இனியே?

திருச்சிற்றம்பலம்

Leave a Comment

error: Copying content is Prohibited, Instead you can share it! :)