Thiruneetru Pathigam Lyrics in Tamil
திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த இரண்டாம் திருமுறை திருநீற்றுப் பதிகம் (Thiruneetru Pathigam) .. திருநீற்றுப் பதிகம் என்பது பாண்டிய மன்னன் கூன் பாண்டியனின் வெப்ப நோயை நீக்க சிவபெருமானை நினைத்து திருஞானசம்பந்தர் பாடிய பாடல்கள் ஆகும்.இதனால் மன்னன் நோய் நீங்கி நலம் பெற்றான். இந்த திருநீற்று பதிகத்தின் பாடல் பொருள் கிழே கொடுக்கப்பட்டுள்ளது… ஒவ்வொரு பாடலின் பொருளும் ஒவ்வொரு பத்தியாக கொடுக்கப்பட்டுள்ளது… வெப்ப மிகுதியால் உண்டாகும் காய்ச்சல், அம்மை நோய்கள் நீங்க பாராயணம் செய்ய வேண்டிய திருப்பதிகம்!!!
Manthiramavathu neeru lyrics in tamil
மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான் திருநீறே… (1)
வேதத்தி லுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு
ஓதத் தகுவது நீறு வுண்மையி லுள்ளது நீறு
சீதப் புனல்வயல் சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே… (2)
முத்தி தருவது நீறு முனிவ ரணிவது நீறு
சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு
சித்தி தருவது நீறு திருஆல வாயான் திருநீறே… (3)
காண இனியது நீறு கவினைத் தருவது நீறு
பேணி அணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு
மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு
சேணந் தருவது நீறு திருஆல வாயான் திருநீறே… (4)
பூச இனியது நீறு புண்ணிய மாவது நீறு
பேச இனியது நீறு பெருந்தவத் தோர்களுக் கெல்லாம்
ஆசை கெடுப்பது நீறு அந்தம தாவது நீறு
தேசம் புகழ்வது நீறு திருஆல வாயான் திருநீறே… (5)
அருத்தம தாவது நீறு அவல மறுப்பது நீறு
வருத்தந் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு
பொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும்வெண் ணீறு
திருத்தகு மாளிகை சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே… (6)
எயிலது அட்டது நீறு இருமைக்கும் உள்ளது நீறு
பயிலப் படுவது நீறு பாக்கிய மாவது நீறு
துயிலைத் தடுப்பது நீறு சுத்தம தாவது நீறு
அயிலைப் பொலிதரு சூலத் தால வாயான் திருநீறே… (7)
இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு
பராவண மாவது நீறு பாவ மறுப்பது நீறு
தராவண மாவது நீறு தத்துவ மாவது நீறு
அராவணங் குந்திரு மேனி ஆல வாயான் திருநீறே… (8)
மாலொ டயனறி யாத வண்ணமு முள்ளது நீறு
மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு
ஏல உடம்பிடர் தீர்க்கும் இன்பந் தருவது நீறு
ஆலம துண்ட மிடற்றெம் மால வாயான் திருநீறே… (9)
குண்டிகைக் கையர்க ளோடு சாக்கியர் கூட்டமுங் கூட
கண்டிகைப் பிப்பது நீறு கருத இனியது நீறு
எண்டிசைப் பட்ட பொருளார் ஏத்துந் தகையது நீறு
அண்டத் தவர்பணிந் தேத்தும் ஆல வாயான் திருநீறே… (10)
ஆற்றல் அடல்விடை யேறும் ஆலவா யான்திரு நீற்றைப்
போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம் பந்தன்
தேற்றித் தென்ன னுடலுற்ற தீப்பிணி யாயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே… (11)
Thiruneetru Pathigam Lyrics Video
Thiruneetru Pathigam Lyrics Meaning
சிவந்த பவளம் போன்ற வாயினை உடைய உமைபங்கன் ஆகிய திருவாலவாயில் எழுந்தருளியிருக்கும் சிவபிரானது திருநீறு, மந்திரம் போல நினைப்பவரைக் காப்பது. வானவர் தம் மேனிமேல் பூசிக்கொள்ளப்படுவது. அழகு தருவது. எல்லா நூல்களாலும் புகழப்படுவது. ஆகமங்களில் புகழ்ந்து சொல்லப்படுவது. சிவமயத்தில் நிலைத்துள்ளது.
குளிர்ந்த நீர் நிரம்பிய வயல்கள் சூழ்ந்த திருஆலவாயிலில் விளங்கும் சிவபிரானது திருநீறு, வேதங்களில் புகழ்ந்து ஓதப்பெறுவது. கொடிய துயர்களைப் போக்குவது. சிவஞானத்தைத் தருவது. அறியாமை முதலியவற்றைப் போக்குவது. புகழ்ந்து போற்றத் தக்கது. உண்மையாக நிலைபெற்றிருப்பது.
திருஆலவாயான் திருநீறு வீடுபேறு அளிப்பது. முனிவர்களால் அணியப் பெறுவது. நிலையாக எப்போதும் உள்ளது. தக்கோர்களால் புகழப்படுவது. இறைவனிடம் பக்தியை விளைப்பது. வாழ்த்த இனியது. எண்வகைச் சித்திகளையும் தரவல்லது.
திருஆலவாயான் திருநீறு கண்களுக்கு இனிமை தருவது. அழகைக் கொடுப்பது. விரும்பி அணிவார்க்குப் பெருமை கொடுப்பது. இறப்பைத் தடுப்பது. அறிவைத் தருவது. உயர்வு அளிப்பது.
திருஆலவாயான் திருநீறு, பூசுதற்கு இனிமையானது. புண்ணியத்தை வளர்ப்பது. பேசுதற்கு இனியது. பெருந்தவம் செய்யும் முனிவர்கட்கு ஆசையை அறுப்பது. முடிவான பேரின்பநிலையை அளிப்பது. உலகோரால் புகழப்படுவது.
அழகிய மாளிகைகள் சூழ்ந்த திருஆலவாயான் திருநீறு செல்வமாக இருப்பது. துன்பம் போக்குவது. மனவருத்தத்தைத் தணிப்பது. துறக்க இன்பத்தை அளிப்பது. எல்லோருக்கும் பொருத்தமாக இருப்பது. புண்ணியரால் பூசப்பெறுவது.
கூர்மைக்கு விளக்கம் தருகின்ற சூலப்படையினை ஏந்திய திருஆலவாயான் திருநீறு, திரிபுரங்களை எரிக்கச் செய்தது. இம்மை மறுமை இன்பம் தர இருப்பது. பிறரோடு பழகும் பயன் அளிப்பது. செல்வமாக விளங்குவது. உறக்கநிலையைத் தடுப்பது. தூய்மையை அளிப்பது.
பாம்புகள் வளைந்து தவழும் திருமேனியனாகிய திருஆலவாயான் திருநீறு., இராவணன் பூசிப் பயன் பெற்றது. நல்லவர்களால் எண்ணத்தக்கது. பராசக்தி வடிவமானது. பாவம் போக்குவது. தத்துவங்களாக இருப்பது. மெய்ப்பொருளை உணர்த்துவது.
நஞ்சுண்ட கண்டனாகிய திருஆலவாயான் திருநீறு, திருமால் பிரமர்களால் அறியப்பெறாத தன்மையை உடையது. வானுலகில் வாழும் தேவர்கள் தங்கள் மேனிகளில் பூசிக்கொள்வது. பிறவியாகிய இடரைத் தவிர்த்து நிலையான இன்பம் அளிப்பது.
மேல் உலகில் வாழ்வோர் பணிந்து போற்றும் திருஆலவாயான் திருநீறு, குண்டிகை (கமண்டலத்தை) ஏந்திய கையர்களாகிய சமணர்கள் சாக்கியர்களின் கண்களைத் திகைக்கச் செய்வது. தியானிக்க இனியது. எட்டுத் திசைகளிலும் வாழும் மெய்ப்பொருளை அடைந்தவரும் ஏத்தப்பெறும் தகைமைப்பாடு உடையது.
ஆற்றலும், பிறரைக் கொல்லும் வலிமையும் உடைய விடையின்மீது ஏறிவரும் ஆலவாயான் திருநீற்றைப் போற்றிப் புகலியில் விளங்கும் பூசுரனாகிய ஞானசம்பந்தன் சைவத்தின் பெருமையைத் தெளிவித்துப் பாண்டியன் உடலில் பற்றிய தீமை விளைத்த பிணி தீருமாறு சாற்றிய இப்பதிகப்பாடல்கள் பத்தையும் ஓதவல்லவர் நல்லவராவார்.
தென்னாடுடைய சிவனே போற்றி
என்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
கயிலைமலையானே போற்றி போற்றி!!!
லிங்காஷ்டகம் தமிழ் பதிகம் | Lingashtagam Tamil song lyrics