சிவவாக்கியர் பாடல்கள் 21 – 40

அஞ்சும் அஞ்சும் அஞ்சுமே அனாதியானது அஞ்சுமே
பிஞ்சு பிஞ்சது அல்லவோ பித்தர்காள் பிதற்றுறீர்
நெஞ்சில் அஞ்சு கொண்டு நீர் நின்று தொக்க வல்லிரேல்
அஞ்சும் இல்லை ஆறும் இல்லை அனாதியானது ஒன்றுமே (21)

நீளவீடு கட்டுறீர் நெடுங்கதவு சாத்துறீர்
வாழவேண்டும் என்றலோ மகிழ்ந்திருந்த மாந்தரே
காலன் ஓலை வந்தபோது காயகன்று நிற்பிரே
ஆலம்உண்ட கண்டர்பாதம் அம்மைபாதம் உண்மையே (22)

ஓடம் உள்ள போதலோ ஓடியே உலாவலாம்
ஓடம் உள்ள போதலோ உறுதிபண்ணிக் கொள்ளலாம்
ஓடம்உடைந்தபோதில் ஒப்பிலாத வெளியிலே
ஆடும் இல்லை கோலும் இல்லை யாரும் இல்லை ஆனதே (23)

கிரியை நிலை
வீடெடுத்து வேள்விசெய்து மெய்யினோடு பொய்யுமாய்
மாடுமக்கள் பெண்டிர் சுற்றம் என்றிருக்கும் மாந்தர்காள்
நாடுபெற்ற நடுவர் கையில் ஓலைவந்து அழைத்திடில்
ஓடுபெற்ற அவ்விலை பெறாதுகாண் இவ்வுடலமே (24)

உற்பத்தி நிலை
அண்ணலே அனாதியே அநாதிமுன் அநாதியே
பெண்ணும் ஆணும் ஒன்றலோ பிறப்பதற்கு முன்னெலாம்
கண்ணிலா நீர்ச் சுக்கிலம் கருதிஓங்கும் நாளிலே
மண்ணுளோரும் விண்ணுளோரும் வந்தவாறு எங்கனே (25)

அறிவு நிலை
பண்டுநான் பறித்தெறிந்த பன்மலர்கள் எத்தனை
பாழிலே செபித்து விட்ட மந்ததிரங்கள் எத்தனை
மிண்டனாய்த் திரிந்தபோது இரைத்த நீர்கள் எத்தனை
மீளவும் சிவாலயங்கள் சூழ வந்தது எத்தனை

அண்டர்கோன் இருப்பிடம் அறிந்துஉணர்ந்த ஞானிகள்
ஆண்டறிந்த பான்மைதன்னை யார் அறியவல்லரே
விண்டவேத பொருளை அன்றி வேறு கூற வகாயிலா
கண்டகோயில் தெய்வம்என்று கையெடுப்பது இல்லையே (26)

தூரம் தூரம் தூரம் என்று சொல்லுவார்கள் சோம்பர்கள்
பாரும் விண்ணும் எங்குமாய்ப் பரந்த இப்பராபரம்
ஊருநாடு காடுதேடி உழன்றுதேடும் ஊமைகாள்
நேரதாக உம்முளே அறிந்துணர்ந்து நில்லுமே (27)

தங்கம் ஒன்று ரூபம் வேறு தன்மையான வாறுபோல்
செங்கண்மாலும் ஈசனும் சிறந்திருந்த தும்முளே
விங்களங்கள் பேசுவீர் விளங்குகின்ற மாந்தரே
எங்குமாகி நின்ற நாமம் நாமம் இந்த நாமமே (28)

யோக நிலை
நெருப்பை மூட்டி நெய்யைவிட்டு நித்தம் ந்ததம் நீரிலே
விருப்பமோடு நீர் குளிக்கும் வேதவாக்யம் கேளுமின்
நெருப்பும் நீரும் உம்முளே நினைந்து கூற வல்லிரேல்
சுருக்கம் அற்ற சோதியை தொடர்ந்து கூடல் ஆகுமே (29)

பாட்டிலாத பரமனைப் பரமலோக நாதனை
நாட்டிலாத நாதனை நாரிபங்கர் பாகனை
கூட்டிமெள்ள வாய்புதைத்து குணுகுணுத்த மந்திரம்
வேட்டகாரர் குசுகுசுப்பை கூப்பிடா முடிந்ததே (30)
40 வரை

செய்யதெங்கிலே இளநீர் சேர்ந்த காரணங்கள் போல்
ஐயன் வந்து என்னுளம் புகுந்து கோயில் கொண்டனன்
ஐயன் வந்து என்னுளம் புகுந்து கோயில் கொண்டபின்
வையகத்தில் மாந்தர் முன்னம் வாய் திறப்பது இல்லையே (31)

மாறுபட்ட மணி துலக்கி வண்டின் எச்சில் கொண்டுபோய்
ஊறுபட்ட கல்லின்மீதே ஊற்றுகின்ற மூடரே
மாறுபட்ட தேவரும் அறிந்து நோக்கும் என்னையும்
கூறுபட்டு தீர்க்கவோ குருக்கள் பாதம் வைத்ததே (32)

கோயிலாவது ஏதடா குளங்களாவது ஏதடா
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே
கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே
ஆவதும் அழிவதும் இல்லை இல்லை இல்லையே (33)

செங்கலும் கருங்கலும் சிவந்த சாதி லிங்கமும்
செம்பிலும் தராவிலும் சிவன் இருப்பன் எனகிறீர்
உம்பதம் நிந்துநீர் உம்மை நீர் அறிந்தபின்
அம்பலம் நிறைந்த நாதர் ஆடல் பாடல் ஆகுமே (34)

பூசை பூசை என்று நீர் பூசை செய்யும் பேதை காள்
பூசையுன்ன தன்னிலே பூசை கொண்டது எவ்விடம்
ஆதிபூசை கொண்டதோ அனாதிபூசை கொண்டதோ
ஏதுபூசை கொண்டதோ இன்னதென்று இயம்புமே (35)

இருக்குநாலு வேதமும் எழுத்தை அறவோதிலும்
பெருக்கநீறு பூசிலும் பிதற்றலும் பிரான் இரான்
உருக்கி நெஞ்சை உட்கலந்த உண்மை கூற வல்லிரேல்
சுருக்கம் அற்ற சோதியை தொடர்ந்து கூடலாகுமே (36)

கலத்தின் வார்த்து வைத்த நீர் கடுத்த தீ முடுக்கினால்
கலத்திலே கரந்ததோ கடுத்த நீ குடித்ததோ
நிலத்திலே கரந்ததோ நீள்விசும்பு கொண்டதோ
மனத்தின் மாயை நீக்கிலே மனத்துளே கரந்ததோ (37)

பறைச்சியாவது ஏதடா பணத்தியாவது ஏதடா
இறைச்சிதோல் எலும்பினும் இலக்கமிட்டு இருக்குதோ
பறைச்சிபோகம் வேறதோ பணத்திபோகம் வேறதோ
பறைச்சியும் பணத்தியும் பகுந்து பாரும் உம்முளே (38)

வாயிலே குடித்த நீரை எச்சில் என்று சொல்லுறீர்
வாயிலே குதப்புவேத மெனப்படக் கடவதோ
வாயில் எச்சில் போக என்று நீர்தனைக் குடிப்பீர்காள்
வாயில் எச்சில் போன வண்ணம் வந்திருந்து சொல்லுமே (39)

ஓதுகின்ற வேதம் எச்சில் உள்ள மந்திரங்கள் எச்சில்
போதங்களானது எச்சில் பூதலங்கள் ஏழும் எச்சில்
மாதிருந்த விந்து எச்சில் மதியும் எச்சில் ஒலியும் எச்சில்
ஏதில் எச்சில் இல்லதில்லை இல்லை இல்லை இல்லையே (40)

Leave a Comment