சிவவாக்கியர் பாடல்கள் 501 – 526
பிறப்பதெல்லாம் இறப்பது உண்டு பேதைமக்கள் தெரிகிலாது
இறப்பது இல்லை என மகிழ்ந்து எங்கள் உங்கள் சொத்தெனக்
குறிப்புப்பேசித் திரிவரன்றிக் கொண்ட கோலம் என்னவோ
நிறப்பும் பொந்தி அழிந்தபோது நேசமாமோ ஈசனே (501)
சுட்டெரித்த சாந்துபூசும் சுந்தரப்பெண் மதிமுகத்
திட்டநெட்டு எழுத்தறியாது ஏங்கிநோக்கு மதவலீர்
பெட்டகத்துப் பாம்புறங்கும் பித்தலாட்டம் அறியிரோ
கட்டவிழ்த்துப் பிரமன் பார்க்கில் கதி உமக்கும் ஏதுகாண் (502)
வேதம் ஓது வேலையோ வீணதாகும் பாரிலே
காதகாத தூரம் ஓடிக் காதல் பூசை வேணுமோ
ஆதிநாதன் வெண்ணெயுண்ட அவனிருக்க நம்முளே
கோது பூசை வேதம் ஏது குறித்து பாரும் உம்முளே (503)
பரம் இலாதது எவ்விடம் பரம் இருப்பது எவ்விடம்
அறம் இலாத பாவிகட்குப் பரம் இலை அது உண்மையே
கரம் இருந்தும் பொருளிருந்தும் அருளிலாத போதது
பரம் இலாத சூன்யமாகும் பாழ் நரகம் ஆகுமே (504)
மாதர்தோள் சேராத தேவர் மாநிலத்தில் இல்லையே
மாதர் தோள் புணர்ந்தபோது மனிதர் வாழ் சிறக்குமே
மாதராகுஞ் சத்தியொன்று மாட்டிக் கொண்ட தாதலால்
மாதராகும் நீலிகங்கை மகிழ்ந்து கொண்டான் ஈசனே (505)
சித்தர் என்றும் சிறியர் என்றும் அறியொணாத சீவர்காள்
சித்தர் இங்கு இருந்தபோது பித்தன் என்று எண்ணுவீர்
சித்தர் இங்கு இருந்தும் என்ன பித்தன் நாட்டிருப்பரே
அத்தன் நாடும் இந்தநாடும் அவர்களுக்கெலாமொன்றே (506)
மாந்தர் வாழ்வு மண்ணிலே மறந்தபோது விண்ணிலே
சாந்தனான ஆவியை சரிப்படுத்த வல்லிரேல்
வேந்தன் ஆகி மன்றுளாடும் விமலன் பாதம் காணலாம்
கூந்தலம்மை கோணல் ஒன்றும் குறிக்கொணாது இது உண்மையே (507)
சருகருந்தி நீர்குடித்துச் சாரல்வாழ் தவசிகாள்
சருகருந்தி தேகங்குன்றிச் சஞ்சலம் உண்டாகுமே
வருவிருந்தோடு உண்டு உடுத்தி வளர்மனை சுகிப்பிரேல்
வருவிருந்தோன் ஈசனாகி வாழ்வளிக்கும் சிவாயமே (508)
காடுமேடு குன்றுபள்ளம் கானின் ஆறகற்றியும்
நாடுதேசம் விட்டலைவர் நாதன் பாதம் காண்பரோ
கூடுவிட்டு அகன்று உன் ஆலி கூத்தனூர்க்கே நோக்கலால்
வீடுபெற்று அரன் பதத்தில் வீற்றிருப்பர் இல்லையே (509)
கட்டையால் செய் தேவரும் கல்லினால்செய் தேவரும்
மட்டையால்செய் தேவரும் மஞ்சளால்செய் தேவரும்
சட்டையால்செய் தேவரும் சாடியால்செய் தேவரும்
வெட்டவெளிய தன்றிமற்று வேறுதெய்வம் இல்லையே (510)
தங்கள் தேகம் நோய் பெறின் தனைப்பிடாரி கோயிலில்
பொங்கல் வைத்து ஆடுகோழிப் பூசைப்பலியை இட்டிட
நங்கச் சொல்லு நலிமகுந்து நாளும் தேய்ந்து மூஞ்சூராய்
உங்கள் குலதெய்வம் உங்கள் உருக்குலைப்பது உண்மையே (511)
ஆசைகொண்டு அனுதினமும் அன்னியர் பொருளினை
மோசம் செய்து அபகரிக்க முற்றிலும் அலைபவர்
பூசையோடு நேமநிட்டை பூரிக்கச் செய் பாதகர்
காசினியில் ஏழுநரகைக் காத்திருப்பது உண்மையே (512)
நேசமுற்றுப் பூசை செய்து நீறுபூசிச் சந்தனம்
வாசமோடு அணிந்து நெற்றி மைதிலர்தம் இட்டுமே
மோசம் பொய்புனை சுருட்டு முற்றிலும் செய் மூடர்காள்
வேசரிக ளம்புரண்ட வெண்ணீறாகும் மேனியே (513)
வாதம் செய்வேன் வெள்ளியும் பொன் மாற்றுயர்ந்த தங்கமும்
போதவே குருமுடிக்கப் பொன் பணங்கள் தர வெனச்
சாதனை செய் தெத்திச் சொத்து தந்ததைக் கவர்ந்துமே
காததூரம் ஓடிச் செல்வர் காண்பதும் அருமையே (514)
யோகசாடை காட்டுவார் உயரவும் எழும்புவார்
வேகமாக அட்டசித்து வித்தைகற்று நெட்டுவார்
மோகம்கொண்டு மாதரின் மூத்திரப்பை சிக்கிப்பின்
பேயது பிடித்தவர் போல் பேருலகில் சாவரே (515)
காயகாயம் உண்பதாகக் கண்டவர் மதித்திட
மாயவித்தை செய்வது எங்கு மடிப்பு மோசம் செய்பவர்
நேயமாக் கஞ்சா அடித்துநேர் அபினைத் தின்பதால்
நாயதாக நக்கிமுக்கி நாட்டினில் அலைவரே (516)
நீரினில் குமிழிஒத்த நிலையிலாத காயம் என்று
ஊரினில் பறை அடித்து உதாரியாய்த் திரிபவர்
சீரினில் உனக்கு ஞான சித்திசெய்வேன் பாரென
நேரினில் பிறர்பொருளை நீளவும் கைப்பற்றுவார் (517)
காவியும் சடைமுடி கமண்டலங்கள் ஆசனம்
தாவுருத்தி ராட்சம் யோகத் தண்டு கொண்ட மாடுகள்
தேவியை அலையவிட்டுத் தேசம் எங்கும் சுற்றியே
பாவியேன்ன வீடெலாம் பருக்கை கேட்டு அலைவரே (518)
முத்திசேரச் சித்தி இங்கு முன்னளிப்பேன் பாரென
சத்தியங்கள் சொல்லி எங்கும் சாமிவேடம் பூண்டவர்
நித்தயம் வயிறு வளர்க்க நீதிஞானம் பேசியே
பத்தியாய்ப் பணம் பறித்துப் பாழ்நரகில் வீழ்வரே (519)
செம்மை சேர்மரத்திலே சிலைதலைகள் செய்கிறீர்
கொம்மையற்ற கிளையில்பாத குறடு செய்து அழிக்கிறீர்
நும்முளே விளங்குவோனை நாடி நோக்க வல்லிரேல்
இம்மளமும் மும்மளமும் எம்மளமும் அல்லவே (520)
எத்திசை எங்கும் எங்கும் ஓடி எண்ணிலாத நதிகளில்
சுற்றியும் தலைமுழுகச் சுத்த ஞானி யாவரோ
பத்தியோடு அரன்பதம் பணிந்திடாத பாவிகாள்
முத்தி இன்றி பாழ்நரகில் மூழ்கி நொந்து அலைவரே (521)
கல்லு வெள்ளி செம்பிரும்பு காய்ந்திடும் தராக்களில்
வல்லதேவ ருபபேதம் அங்கமைத்துப் போற்றிடில்
தொல்லை அற்றிடப்பெரும் சகந்தருமோ சொல்லுவீர்
இல்லை இல்லை இல்லை இல்லை ஈசன் ஆணை இல்லையே (522)
இச்சகம் சனித்ததுவும் ஈசன் ஐந்து எழுத்திலே
மெச்சவும் சராசரங்கள் மேவம் ஐந்து எழுத்திலே
உச்சிதப் பலுயிர்கள் ஓங்கல் அஞ்சு எழுத்திலே
நிச்சயம் மெய்ஞ் ஞானபோதம் நிற்கும் ஐந்து எழுத்திலே (523)
சாத்திரங்கள் பார்த்துப் பார்த்து தான் குருடு ஆவதால்
நேத்திரம் கெட வெய்யோனை நேர்துதி செய் மூடர்கள்
பாத்திரம் அறிந்து மோன பக்தி செய்ய வல்லிரேல்
சூத்திரப்படி யாவரும் சுத்தர் ஆவர் அங்ஙனே (524)
மனவுறுதி தானிலாத மட்டிப் பிண மாடுகள்
சினமுறப் பிறர் பொருளைச் சேகரித்து வைத்ததைத்
தினந்தினம் ஊர் எங்கும் சுற்றி திண்டிக்கே அலைபவர்
இனமதில் பலர்கள் வையும் இன்பம் அற்ற பாவிகள் (525)
சிவாயவசி என்னவும் செபிக்க இச்சகம் எலாம்
சிவாயவசி என்னவும் செபிக்க யாவும் சித்தியாம்
சிவாயவசி என்னவும் செபிக்க வானம் ஆளலாம்
சிவாயவசி என்பதே இருதலைத் தீ ஆகுமே (526)
சிவவாக்கியர் சித்தர் வாழ்க்கை வரலாறு