சிவவாக்கியர் பாடல்கள் 61 – 80

மை அடர்ந்த கண்ணினார் மயக்கிடும் மயக்கிலே
ஐஇறந்து கொண்டு நீங்கள் அல்லல் உற்று இருப்பீர்காள்
மெய்அறிந்த சிந்தையாய் விளங்குஞானம் எய்தினால்
உய்யறிந்து கொண்டு நீங்கள் ஊழிகாலம் வாழ்விரே (61)

கரு இருந்த வாசலால் கலங்குகின்ற ஊமைகாள்
குரு இருந்து சொன்ன வார்த்தை குறித்து நோக்க வல்லிரேல்
உரு இலங்கு மேனியாகி உம்பராகி நின்ற நீர்
திரு இலங்கு மேனியாகச் சென்றுகூடல் ஆகுமே (62)

தீர்த்தம் ஆட வேண்டுமென்று தேடுகின்ற தீனர்காள்
தீர்த்தம் ஆடல் எவ்விடம்தெளிந்து நீர் இயம்பிலீர்
தீர்த்தமாக உம்முளே தெளிந்து நீர் இருந்தபின்
தீர்த்தமாக உள்ளதும் சிவாயஅஞ் செழுத்துமே (63)

கழுத்தையும் நிமிர்த்திநல்ல கண்ணையும் விழித்துநீர்
பழுத்துவாய் விழுந்து போன பாவம் என்ன பாவமே
அழுத்தமான வித்திலே அனாதியாய் இருப்பதோர்
எழுத்திலோ எழுத்திலே இருக்கலாம் இருத்துமே (64)

கண்டு நின்ற மாயையும் கலந்து நின்ற பூதமும்
உண்டுறங்கு மாறுநீர் உணர்ந்திருக்க வல்லிரேல்
பண்டை ஆறும் ஒன்றுமாய்ப் பயந்த வேத சுத்தராய்
அண்டைமுத்தி ஆகிநின்ற ஆதிமூலம் ஆவிரே (65)

ஈன் றவாசலுக்கு இரங்கி எண்ணிறந்து போவீர் காள்
கான் றவாழை மொட்டலர்ந்த காரணம் அறிகிலீர்
நான் றவாசலைத் திறந்து நாடி நோக்க வல்லிரேல்
தோன் றுமாயை விட்டொழிந்து சோதி வந்து தோன்றுமே (66)

உழலும் வாசலுக்கு இரங்கி ஊசலாடும் ஊமைகாள்
உழலும் வாசலைத் துறந்து உண்மைசேர எண்ணிலீர்
உழலும் வாசலைத் துறந்து உண்மைநீர் உணர்ந்தபின்
உழலும் வாசல் உள்ளிருந்த உண்மைதானும் ஆவிரே (67)

மூலநாடி தன்னிலே முளைத்தெழுந்த சோதியை
நாலு நாழி உம்முளே நாடியே இருந்தபின்
பாலனாகி வாழலாம் பரப்பிரமம் ஆகலாம்
ஆலம் உண்ட கண்டர் ஆனை அம்மை ஆணை உண்மையே (68)

இருக்கவேண்டும் என்றபோது இருத்தலாய் இருக்குமோ
மரிக்க வேண்டும் என்றலோ மண்ணுளே படைத்தனர்
சுருக்கமற்ற தம்பிரான் சொன்ன அஞ்செழுத்தையும்
மரிக்குமுன் வணங்கிடீர் மருந்தெனப் பதம் கெடீர் (69)

அம்பத்தொன்றில் அக்கரம் அடக்கம் ஓர் எழுத்துளோ
விண்பரந்த மந்திரம் வேதம் நான்கும் ஒன்றலோ
விண்பரந்த மூல அஞ்செழுத்துளே முளைத்ததே
அங்கலிங்க பீடமாய் அமர்ந்ததே சிவாயமே (70)

சிவாயம் என்ற அக்ஷரம் சிவன் இருக்கும் அக்ஷரம்
உபாயம் என்று நம்புதற்கு உண்மையான அக்ஷரம்
கபாடம் உற்ற வாசலைக் கடந்து போன வாயுவை
உபாயம் இட்டு அழைக்குமே சிவாய அஞ் செழுத்துமே (71)

உருவும் அல்ல வெளியும் அல்ல ஒன்றைமேவி நின்றதல்ல
மருவும் அல்ல காதம் அல்ல மற்றதல்ல அற்றதல்ல
பெரியதல்ல சிறியதல்ல பேசும் ஆவி தானும் அல்ல
அரியதாகி நின்ற நேர்மை யாவர் காண வல்லரே (72)

ஆத்துமா அனாதியோ ஆத்துமா அனாதியோ
மீத்திருந்த ஐம்பொறி புலன்களும் அனாதியோ
தர்க்கமிக்க நூல்களும் சதாசிவமும் அனாதியோ
வீக்கவந்த யோகிகாள் விரைந்து உரைக்க வேணுமே (73)

அறிவிலே பிறந்திருந்த ஆகமங்கள் ஓதுறீர்
நெறியிலே மயங்குகின்ற நேர்மை ஒன்று அறிகிலீர்
உறியிலே தயிர் இருக்க ஊர்புகுந்து வெண்ணெய் தேடும்
அறிவிலா மாந்தரோடு அணுகுமாறது எங்ஙனே (74)

அன்பு நிலை
இருவர் அரங்க மும்பொருந்தி என் புருகி நோக்கிலீர்
உருவரங்கம் ஆகி நின்ற உண்மை ஒன்றை ஓர்கிலீர்
கரு அரங்கம் ஆகிநின்ற கற்பனை கடந்து பின்
திருஅரங்கம் என்று நீர் தெளிந்திருக்க வல்லிரே (75)

தன்னைத் தான் அறியவேண்டும் எனல்
கருக்குழியில் ஆசையாய்க் காதலுற்று நிற்கிறீர்
குருக்கிடுக்கும் ஏழைகாள் குலாவுகின்ற பாவிகாள்
திருத்துருத்தி மெய்யினால் சிவந்த அஞ்செழுத்தையும்
உருக்கழிக்கும் உம்மையும் உணர்ந்துணர்ந்து கொள்ளுமே (76)

சமயவாதிகள் செய்கையை மறுத்தல்
மண்ணிலே பிறக்கவும் வழக்கலாது உரைக்கவும்
எண்ணிலாத கோடி தேவர் என்னது உன்னது என்னவும்
கண்ணிலே மணி இருக்கக் கண்மறந்த வாறுபோல்
எண்ணில் கோடி தேவரும் இதின் கணார் இழப்பதே (77)

மண்கலம் கவிழ்ந்தபோது வைத்துவைத்து அடுக்குவார்
வெங்கலம் கவிழ்ந்தபோது வேணும் என்று பேணுவார்
நம்கலம் கவிழ்ந்தபோது நாறும் என்றஃ போடுவார்
எண் கலந்து நின்றமாயம் என்ன மாயம் ஈசனே (78)

மிக்க செல்வம் நீர்படைத்த விறகு மேவிப் பாவிகாள்
விறகுடன் கொளுத்திமேனி வெந்துபோவது அறிகிலீர்
மக்கள் பெண்டீர் சுற்றம் என்று மாயை காணும் இவையெலாம்
மறலிவந்து அழைத்தபோது வந்து கூடலாகுமோ

ஒக்கவந்து மாதுடன் செறிந்திடத்தில் அழகியே
ஒருவராகி இருவராகி இளமைபெற்ற ஊரிலே
அக்கணிந்து கொன்றை சூடி அம்பலத்தில் ஆடுவார்
அஞ்செழுத்தை ஓதிடில் அனேக பாவம் அகலுமே (79)

மாடுகன்று செல்வமும் மனைவி மைந்தர் மகிழவே
மாடமாளிகைப் புறத்தில் வாழுகின்ற நாளிலே
ஓடிவந்து காலதூதர் சடுதியாகவே மோதவே
உடல் கிடந்து உயிர்கழன்ற உண்மை கண்டும் உணர்கிலீர்

பாடுகின்ற உம்பருக்கு ஆடுபாதம் உன்னியே
பழுதிலாத கர்மகூட்டம் இட்ட எங்கள் பரமனே
நீடு செம்பொன் அம்பலத்துள் ஆடுகொண்ட அப்பனே
நீலகண்ட காளகண்ட நித்திய கல்வியாணனே (80)

Leave a Comment