திருமூலர் பயணித்த விண்வெளி பயணம்
சுந்தரநாதர் என்றும் அழைக்கப்படும் திருமூலர் , ஒரு தமிழ் சைவ மறைபொருள் அறிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார் , நாயனார் என்று அழைக்கப்படும் அறுபத்து மூன்று கவிஞர்-துறவிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார் , மேலும் சித்தர்கள் என்று அழைக்கப்படும் 18 முனிவர்களின் குழுவில் பட்டியலிடப்பட்டுள்ளார் . அவரது மகத்தான படைப்பான திருமந்திரம் , 3000 க்கும் மேற்பட்ட வசனங்களைக் கொண்டது, இது திருமுறை எனப்படும் தமிழ் சைவ சித்தாந்தத் தொகுப்பின் முக்கிய உரையின் ஒரு பகுதியாகும்.
என் குரு திருமூலர் பெருமான் எழுதிய வைத்திய சாரம் என்ற திருமூலர் கருக்கடை வைத்தியம் நூலில் அவர் அண்டம் விட்டு அண்டங்களுக்கு சென்ற அனுபவத்தை சொல்கிறார். இன்று ஆன்மீகம் வாயிலாக உங்களுடன் பகிர்கிறேன்…..
இன்றைய அறிவியல் உலகின் நமது சிந்தனைகள் முழுக்க முழுக்க “விண்வெளிப் பயணத்தைச்” சுற்றிச் சுற்றிதான் வருகிறது.
அவர்களின் தேவையெல்லாம்;
(1) விண்வெளிக்குச் செல்வதற்கு இன்னும் அதிக ஒளி வேகத்தில் பயணம் செய்யும் சாதனம்.
(2) விண்வெளிப் பயணத்தில் மனிதர்களை ஈடுபடுத்துதல்.
(3) விண்வெளிக்கு மனிதன் பயணம் செய்தால் பத்திரமாகத் திரும்பி வரும் சாத்தியம்.
அவர்கள் எழுப்பும் வினா எல்லாம்;
(1) பூமியைத் தவிர வேறு கோள்களில் அல்லது அண்டங்களில் மனிதர்கள் வசிக்கிறார்களா?
(2) வேறு கோள்களில் அல்லது அண்டங்களில் மனிதர்கள் அல்லது மனிதர்களைப் போன்ற உயிரினங்கள் வசித்தால் அவர்களின் தோற்றம், அவர்களின் வாழ்க்கை முறை, பேசும்மொழி எப்படி இருக்கும்.
(3) அப்படி உயிரினங்கள் வசித்தால் அவர்கள் பூமியைத் தொடர்பு கொள்கிறார்களா?
(4) தொடர்பு கொண்டால் அவர்களது தகவல் தொடர்பு சாதனம் என்னவாக இருக்கும்?
(5) பறக்கும் தட்டுகளைப் பற்றிய புதிர்கள் அவிழ்க்கப்படுமா?
அறிவியல் உலகம் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் இன்னும் விடை தேடிக் கொண்டே இருக்கிறது. அவைகளைப் பற்றிய ஆராய்ச்சிகள் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அவர்களின் இந்த அத்தனை கேள்விகளுக்கும் விடை திருமூலரின் விண்வெளிப் பயண அனுபவங்களில் இருக்கின்றன என்பதை அறிவியல் உலகம்தான் ஏற்க மறுக்கிறது.
அறிவியல் ஆய்வின்படி, திருமூலர் என்பவர் பூமியில் வாழ்ந்த ஒரு சித்தர். அவர் எப்படி விண்வெளிப் பயணத்தை மேற்கொண்டிருக்க முடியும்? அது கற்பனையான ஒரு நிகழ்வாகத்தான் இருக்க முடியும் என்கிறார்கள். சித்தர்களின் அனுபவங்கள் அறிவியலுக்கும் அப்பாற்பட்டது. நம்பிக்கை இருந்தால் மட்டுமே அந்த அனுபவத்தை பெற இயலும்.
இப்பொழுது திருமூலரின் அடிச்சுவடுகளைப் பின்தொடர்ந்து கயிலைக்குச் செல்லுவோம். இறைவன் பூமியில் தனக்கிட்ட பணியை முடித்து திருமூலர் கயிலைக்குத் திரும்பி தன் குருவான நந்தி தேவரிடம் தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். தன் சீடனின் மண்ணுலகப் பயண அனுபவங்களைக் கேட்ட நந்திதேவர் அந்தப் பயணங்களில் தான் எதிர்பார்த்த ஏதோ ஓர் அனுபவம் அவரிடம் ஏற்படவில்லை என்பதும் புரிந்தது.
ஒருகால் விண்ணுலக சித்தர்கள் வசிக்கும் அண்டங்களைப் போய்ப் பார்த்து அவர்களை சந்தித்து வந்தால் அவர் எதிர்பார்த்த அந்த அனுபவம் திருமூலருக்கு ஏற்படலாம் என்று தோன்றியதால், விண்ணுலக அண்டங்களைப் பற்றியும் அங்கு செல்வதற்கான வழிமுறைகளையும் அவருக்குச் சொல்லலானார்.
சித்தர்களின் சித்திகளிலேயே உச்சபட்ச சித்தியான “கெவுணம் பாய்தல்” என்ற சித்தியை நந்திதேவர் திருமூலருக்கு உபதேசிக்கலானார். கெவுணம் பாய்தல் என்பது உடலையே ஒரு சாதனமாகக் கொண்டு விண்வெளியில் பறத்தல். அதுவும் ஒளியின் வேகத்தையும் கடந்த அதி விரைவான வேகத்துடன் பறந்து செல்வது. இந்த விண்வெளிப் பயணத்தின் மூலமாக, கோள்களுக்கும் நட்சத்திர மண்டலங்களுக்கும், ஏன் அண்டம் விட்டு அண்டத்திற்கு கூட சித்தர்களால் பயணம் செய்ய முடியும்.
ஆச்சரியம்தான்!!
“அண்டம் இருந்த அடவு சொன்னார் நந்தி
தாண்டியது அஞ்சும் தனித்த அடுக்காக ஒண்டி இருந்தது…..”
இந்த பிரபஞ்சம் தனித்தனியான ஐந்து அடுக்குகளைக் கொண்டது என்றும், அது 1,008 அண்டங்களை உடையது என்றும் கூறிய நந்திதேவர் அந்த அண்டங்களுக்கு எந்த வித சாதனங்களும் இல்லாமல் உடலை மட்டுமே சாதனமாகப் பயன்படுத்தி விண்வெளிப் பயணம் செய்யும் முறையையும் அவருக்கு உபதேசிக்கிறார். விண்வெளிப் பயணத்திற்கு சிவயோகம் செய்து காயசித்தி அடைந்து உடலை ஒளி உடலாக மாற்ற வேண்டும் என்று கூறும் நந்தி தேவர் அதற்கு குளிகைகளைத் தயாரிக்க வேண்டும் என்கிறார்.
குளிகைகளை எப்படித் தயாரிப்பது?
திரவ பாதரசத்தை அணுமாற்றம் செய்து திடப்பொருளாக மாற்ற வேண்டும். அதன்பின் உலோகங்கள், ரத்தினங்கள் (உபரசங்கள் 120) பாசாணங்கள் ஆகியவற்றின் திடரூப பாதரசத்துக்குக் கொடுத்து சாரணை செய்ய வேண்டும். அதாவது பாதரசத்தின் நிறையைத் தங்கத்தின் நிறைக்குச் சமமாகக் கொண்டு வரவேண்டும். இவ்விதம் ஒரு முறை சாரணை செய்து உருவாக்கப்படும் குளிகைக்குச் சகம் என்பது பெயர். பதினான்கு முறை சாரணை செய்து உருவாக்கப்படும் குளிகைக்கு கமலினி என்பது பெயர். பதினேழு முறை சாரணை செய்து உருவாக்கப்படும் குளிகைக்கு சொரூபம் என்பது பெயர்.
வாய்மொழி உபதேசங்கள் முடிந்தன. இனி செயல்முறை பயிற்சிதான். திருமூலர் கமலினி என்ற குளிகையை உடலில் அணிந்தார். சொரூபம் என்ற குளிகையை வாயில் அடக்கினார் இந்த அண்டத்தின் வேகமும் அவரது வேகமும் ஒத்துப் போகவேண்டுமல்வா அதனால் திருமூலர் ஒளி உடம்புக்கு மாறுகிறார். “ஓடி வந்து அண்டத்திற்குள் நுழை” என்று நந்திதேவர் சொல்கிறார். திருமூலரும் தம் குருவான நந்திதேவரின் வழிகாட்டுதலின் படியே தமது உடலை ஒளி உடலாக மாற்றிக் கொண்டு விண்வெளியில் பறப்பதற்குத் தயாரானார்.
“ஒண்டி இருந்து ஓடி நுழை”
என்றார் நந்தி…..
சொரூபக் குளிகையை வாயில் வைத்துக் கொண்டு, கமலினி என்னும் குளிகையை உடலில் அணிந்து கொண்டு ஜோதிபோல் காட்சியளித்த அண்டவெளியில் மிக வேகமாக ஓடிவந்து நுழைந்து விட்டார் திருமூலர்.
“சொரூபத்தை வாய்வைத்துச் சூட்டிக் கமலினி
சொரூபத்தைச் சோதி போல் அண்டம் நுழைந்திட்டேன்”
விண்வெளியில் ஒளி உடலுடன் பயணம் செய்த திருமூலர் சோதிபோல் காட்சியளித்த ஓர் அண்டத்தில் இறங்குகிறார்….
முதல் அண்டம்:-
—————————–
அங்கே;
கற்பத்தை உட்கொண்டு சித்தி பெற்ற யோகிகளையும், ஞானிகளையும் தரிசிக்கின்றார். அந்த அண்டத்தில் சித்தர்கள் யாராவது இருக்கிறார்களா என்று தேடியதில் ஓரிடத்தில் கோடிக்கணக்கான சித்தர்கள் இருப்பது தெரிகிறது. அவர்களைத் தேடிச் சென்று வணங்கி மகிழ்கின்றார். சித்தர்களான அவர்கள் கூட்டத்தில் தானும் ஒரு சித்தர் என்று தன்னையும் அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.
நீர் சித்தரா! என்று திருமூலரை ஆச்சரியமாகத் திரும்பிப் பார்க்கின்றனர் அங்கிருந்த சித்தர்கள். இதுவரை அந்த அண்டத்தில் தங்களை மட்டுமே சித்தர்கள் என்று நினைத்திருந்தது போக, புதிதாக ஒருவன் வந்துத் தன்னை சித்தர் என்று கூறிக்கொள்வது அவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.
சித்தரென்றால் சித்திகள் தெரிந்திருக்க வேண்டுமே, “சித்தரே உங்களுக்கு எத்தனை விதமான சித்துக்கள் தெரியும்?” என்று கேட்டார் அங்கிருந்த சித்தர்களில் ஒருவர்.
“எனக்கு அறுபது கோடி சித்துக்கள் தெரியும்” என்றார் திருமூலர்.
“அறுபது கோடி சித்துக்களா? என்று சற்று இகழ்ச்சியாக சிரித்த அந்தச் சித்தர், சித்துக்களின் பயணத்தில் நீங்கள் மிகவும் இளையவர்தான், இன்னும் கற்றுக் கொள்ள வேண்டியது எவ்வளவோ இருக்கிறது, எங்களில் யாரிடமாவது போட்டியிட விரும்பினால் தாராளமாகப் போட்டியிடலாம் என்றார் அந்த சித்தர்களின் தலைவர்.
“சித்தரைக் கண்டேன் தெவிட்டாதே பாழித்தேன்
ஒத்திய சித்து உனக்கென்ன ஆச்சென்றார்
அத்தியகோடி அறுபது ஆச்சென்றேன்
எத்தி இளஞ்சித்து இன்னம் பார் என்றாரே”
அந்தச் சித்தர்களைப் பார்த்தாலே பெரிய ஞானியர் போலத் தோன்றியதால் திருமூலர் அவர்களிடம் தன் தோல்வியை ஏற்றுக் கொண்டவராய் கொண்டார். அவ்வண்டத்திலுள்ளோரிடம் விடைபெற்றுக் கொண்டார்….
இரண்டாம் அண்டம்:-
————————————–
முதல் அண்டத்திலிருந்து இரண்டாம் அண்டத்திற்குப் பறந்து சென்றார் திருமூலர். அங்கேயும் பல சித்தர்கள் இருந்தனர். ஆனால் எல்லோரும் அசைவற்று சிலையைப் போல ஓரிடத்தில் அமர்ந்து இருந்தனர்.
“…..அயலொரு அண்டத்தில்
கண்டேன் சித்தரைக் கடிபதுமை போல”
அது மோன சமாதிநிலை. அவர்களைக் கண்டு பாதத்தில் வீழ்ந்து வணங்கி கைகூப்பி நின்றார் திருமூலர். ஆனாலும் அவர்கள் அசைய வேண்டுமே! மோன சமாதி நிலையை விட்டு அவர்கள் சிறிதுகூட அசையவேயில்லை. அவர்களின் பாதங்களைத் தொட்டு வணங்கினார் திருமூலர். ஆனால் அவர்களில் யார் பாதங்களும் தட்டுப்படவில்லை.
இதுதான் அரூப சித்தியோ? உடலைத் தொட்டால்கூட அது தட்டுப்படவில்லையே! உருவம் மட்டும் அசலாகத் தெரிகிறதே என்று வியந்து நின்றார்.
அங்கிருந்த சித்தர்களை வணங்கி நின்றதுமல்லாமல் அவர்களைப் பலமுறை வலம் வந்தார். அப்போதும் அந்தச் சித்தர்கள் அசைந்தபாடில்லை. அதற்கு மேல் அங்கே இருந்தால் அந்தச் சித்தர்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்று தோன்றியதால் அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.
மூன்றாவது அண்டம்:-
—————————————-
இரண்டாவது அண்டப் பயணத்தை முடித்துக் கொண்ட திருமூலர் அருகிலிருந்த மற்றொரு அண்டத்திற்குப் பயணமானார்.
மூன்றாவது அண்டத்தை அவர் அடையும்போது, அங்கே இருந்த சித்தர்கள் கூட்டம் எதைப்பற்றியோ தீவிரமாக விவாதித்துக் கொண்டிருந்தது தெரிந்தது. அவர்களைச் சுற்றிலும் கட்டுக்கட்டாக ஒலைச் சுவடிகள் இருந்தன.
திருமூலர் அவர்களை வணங்கினார். “நான் திருமூலன் என்னும் சித்தன், பூவுலகில் இருந்து வருகிறேன். சித்தர்களாகிய உங்களுக்கு எனது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நீண்ட மௌனம்… பதிலேதும் இல்லை. அந்த மௌனத்தைத் திருமூலரே கலைத்தார்.
“நான் வரும்போது இங்கே நீங்கள் எதையோ படித்து விவாதித்துக் கொண்டிருந்தீர்கள், உங்கள் விவாதம் எதைப்பற்றி என்று நான் தெரிந்து கொள்ளலாமா?”
தங்கள் உலகத்துக்கு வந்த புதியவன் ஒருவன் தங்கள் அனுமதியில்லாமலேயே தங்கள் இடத்துக்கு வந்தது மட்டுமல்லாமல் சம்பந்தமில்லாமல் தங்களது பிரச்சனைகளிலும் தலையிட்டது. அவர்களுக்கு அதிகப் பிரசங்கித் தனமாகப்பட்டது. ஆனாலும் திருமூலரது பணிவு சித்தர்களின் கோபத்தை சிறிது குறைத்தது. அதனால் திருமூலரிடம் எதிர்கேள்விகளைக் கேட்கத் தொடங்கினர்.
எங்களின் விவாதப் பொருள் உனக்குத் தேவையில்லா ஒன்று, உனக்கு இங்கு என்ன வேலை? எதைத் தேடி இங்கே வந்தாய்? சித்தர் ஒருவர் சற்று கோபமுடனே திருமூலரிடம் பேசினார். ஆனாலும் திருமூலர் அவ்விடத்தை விட்டு நகர்வதாயில்லை. அவர்கள் கையிலிருக்கும் அந்த ஓலைச் சுவடிகளையே பார்த்தபடியிருந்தார்.
சித்தர்கள் இயல்பு நிலைக்குத் திரும்பினார்கள். “இந்த ஒலைச்சுவடிகள் ஈசன் உமைக்குச் சொன்ன உபதேசங்கள். ஏழு இலட்சம் பாடல்கள். அந்த ஏழு இலட்சம் பாடல்களையும் இப்போதுதான் படித்துப் பார்த்து அதற்கான விளக்கங்களை விவாதித்து முடித்தோம்” நீர் சித்தர் என்று கூறியதால் விபரம் சொன்னோம். என்றார் அந்த சித்தர்.
“ஏழு இலட்சம் பாடல்களா! இந்த பெரிய நூலினைப் படித்து அதன் உட்பொருளை முழுவதுமாக அறிந்துள்ள சித்தர்களே, இதனைப் படித்து முடிக்கவே உங்களுக்கு நீண்ட காலம் தேவைப்பட்டிருக்கும் என்று தெரிகிறது. அடுத்த முறை உங்களைப் போன்ற சித்தர்கள் எவரேனும் இன்னொருமுறை இந்த நூலைப் படிக்க விரும்பினால் மறுபடியும் உங்களைப் போலவே நீண்ட காலம் தேவைப்படுமே? அதைவிட நீங்கள் படித்துத் தெளிந்த இந்த ஏழு இலட்சம் பாடல்களையும் மற்ற சித்தர்கள் அந்நூலை சீக்கிரமாகப் படித்துப் பயன்பெறும் வண்ணம் அதன் கருத்துக்களை மட்டும் சுருக்கி மறுநூலாக எழுதியிருக்கலாமே” என்றார் திருமூலர்.
“என்ன சிவபெருமான் எழுதிய இந்தப் பெரிய நூலினைப் படித்து அதன் உட்பொருளைச் சுருக்கி மறுநூலாக எழுதுவதா? அது எங்களால் மட்டுமல்ல இந்த நூலை எழுதிய அந்த சிவபெருமானால்கூட முடியாது”
“ஏன் முடியாது? வாசியோகம் கைவரப் பெற்ற சித்தர்களால் அதனைச் செய்வது அரிதான செயல் அல்லவே, அவர்கள் அந்தப் பாடல்களைப் புரிந்து கொண்டு அதன் சாரத்தை அப்படியே சுருக்கிச் சொல்லி விடுவார்களே”
“எங்களால் சுருக்க முடியாது என்று கூறிவிட்டோம் உங்களால் முடியும் என்றால் அதற்கான வழிமுறைகளைக் கூறுங்கள்”
“சிவஞான சித்தர்களே, நீங்கள் இப்பொழுது படித்து முடித்திருக்கும் இந்த ஏழு இலட்சம் என்னும் நூலின் சாரத்தை எங்கள் குருவான நந்தி பகவான் ஆயிரம் பாடல்களாக “நந்தி ஆயிரம்” என்னும் நூலாகச் சுருக்கிக் கூறியுள்ளார். அது கல்வெட்டு எழுத்துக்கள் போல தெளிவாக உள்ளது, படித்துப் பாருங்கள், உங்கள் நூலின் கருத்துக்கள் எவ்வித மாறுபாடும் இல்லாமல் முழவதுமாக அதில் கூறப்பட்ருப்பது தெரியவரும்.”
“படித்துப் பாருங்கள், படித்துப் பாருங்கள் என்று கூறுகிறீர்களே, அத்தகைய நூல் எங்கு இருக்கிறது என்பதை நீங்கள் கூறவே இல்லையே”
“தெய்வீகச் சித்தர்களே, இந்த அண்டத்திலிருந்து அதற்குத் தெற்குப் பாகத்தில் உள்ள அறுபதாவது அண்டத்தில் (பூமியில்) உள்ள சித்தர்களிடத்து அத்தகையதொரு ஓலைச்சுவடி இருக்கிறது. அதனை வாங்கிப் படித்துப் பாருங்கள்”
“மூலரே, நீங்கள் சொல்லும் அந்த நூலினைப் படித்தும் பார்த்தால் அதில் சிவன் சொன்ன அனைத்துக் கருத்துக்களும் இடம் பெற்று இருக்குமா?” அந்த நூலில் தங்கத்தை குருமருந்தாக மாற்றும் முறை சொல்லப் பட்டிருக்கிறதா?”
“அதற்குச் சாரணை செய்யும் முறைகள் கூறப்பட்டிருக்கிறதா?”
“பதினாறு மாற்றுத் தங்கம் செய்வதற்கான வழிமுறைகள் அதில் கூறப்பட்டுள்ளதா?”
சித்தர்கள் ஆளாளுக்குக் கேள்விகள் கேட்கத் தொடங்கினர். திருமூலர் சொன்னதில் அவர்களுக்கு முழு நம்பிக்கை வரவில்லை.
“சந்தேகப்படாதீர்கள் சித்தர்களே, நான் சொன்ன அந்த நூலில் அறுபத்து நான்கு சித்தாடும் முறைகளும், தங்கம் உருவாக்கும் இரசவாத முறைகளும் கூறப்பட்டுள்ளன. அவை அனைத்தும் சித்தர்களுக்கு மட்டுமே சித்தியாகும், அதனை முறையாகப் பார்ப்பவர்களுக்கு சிவயோகத்தின் மூலம் பூரணம் காட்சியளிக்கும். அங்கு தூங்காமல் தூங்கும் சமாதியில் லயித்து, சொரூபக் காட்சிகளையும் காணலாம்.
“இவ்வளவு ஆற்றல் மிக்கதா அந்த நூல், அற்புதமான அந்த நூல் யார் பெயரில் உள்ளது என்பதைக் கூறுங்கள்.”
“சொல்லுகிறேன் சித்தர்களே, சிவபெருமானால் கூறப்பட்ட ஏழு லட்சம் பாடல்களை உடைய அந்த நூலை சுருக்கி என்னுடைய குருவான நந்தி தேவர் எனக்கு உபதேசித்தார். அவர் கூறிய அந்த உபதேசங்களை மேலும் சுருக்கி நானும் ஒரு நூல் செய்துள்ளேன். அதனை திருமூலர் ஆக்கிய நூல் என்று கூறுவார்கள், என்றார் சற்று தயக்கத்துடன் திருமூலர்.
சித்தர்களுக்கு இத்தனை நேரமாக அந்த நூலைப் பற்றிய விவரங்களை திருமூலர் ஏன் தயங்கித் தயங்கிக் கூறிவந்தார் என்பதற்கான உண்மைக் காரணம் புரிந்தது.
“திருமூலரே, தாங்கள் செய்த பெருமைக்குரிய அந்த நூலையா இத்தனை நேரமும் மறைமுகமான வார்த்தைகளால் தயங்கித் தயங்கிக் கூறி வந்தீர்கள்? இதனை முன்பே ஏன் வெளிப்படையாகக் கூறவில்லை? தன்னடக்கமா, அல்லது உங்களது திறமையை குறைத்து மதிப்பீடு செய்துவிடுவோம் என்கிற ஐயப்பாடா? அல்லது ஏழு லட்சம் என்னும் நூலின் சாரம் அதில் முழுமையாக இருக்குமோ இருக்காதோ என்கிற தயக்கமா? எதனால் இப்படிப் பூடகமாகக் கூறினீர்?”
சித்தர்கள் ஆச்சரிப்பட்டுத்தான் அப்படிக் கேட்டனர், அவர்கள் சாதாரணமாகக் கேட்டாலும் திருமூலருக்கு அது என்னவோ அதிகப்படியான புகழ்ச்சியாகத் தோன்றியது.
“சித்தர்களே! நான் முன்னமேயே அந்த நூலைப் பற்றித் தெளிவாகத் தங்களுக்குக் கூறாததற்குக் காரணம் நீங்கள் நினைப்பது போல் ஏழு லட்சத்தின் சாரமும் அதில் இருக்காது என்பதற்கல்ல, என்னுடைய பெருமையை நானே கூறிக் கொள்ளக் கூடாது என்ற தன்னடக்கத்தின் காரணமாகத்தான் கூறவில்லை.
மூலத்தில் வாசியை நிலை நிறுத்தினால் ஏழு லட்சத்தின் சாரமும் மிக எளிதாகவே கிடைக்கும். அது மட்டுமல்ல, என் குருவான நந்திபகவானே அதனை மிகக் குறுக்கி ஆயிரமாக உபதேசித்து உள்ளார். அதனையே மிகவும் சுருக்கி எளிமையாக எழுநூறாக நான் செய்துள்ளேன். அதனால் அந்நூலின் சாரம் எந்த வகையிலும் ஏழு இலட்சத்திற்கும் குறைவாக இல்லாமல் நிறைவாகவே இருக்கும்” என்று திருமூலர் சொல்லி முடித்தார்.
திருமூலர் சொன்னதில் உள்ள திருப்தி சித்தர்களின் முகக்குறிப்பில் முழுமையாகவேத் தெரிந்தது, தொடர்ந்து அவர்கள் “சுருக்கப்பட்ட ஏழு இலட்சம் எனும் நூலின் சிறப்பைக் கூறிய நீங்கள் அதில் உள்ள செயல்முறைகள் என்னென்ன என்பதையும் கூறுங்கள்” என்றனர்.
திருமூலர் சுருக்கப்பட்ட தனது நூலில் உள்ளவற்றைக் கூறுகிறார்:
“அந்த நூலில் பிரபஞ்சப் பயணம் செய்ய குளிகை செய்வதும் அதற்கு சாரணை ஏற்றுவதும் உள்ளது. மூலப்பொருட்களின் அணுத்தன்மையை மாற்றி கட்டினங்க உருவாக்கும் தொழில் நுட்பங்கள் உள்ளன. பொருட்களை மாற்றி அமைக்கும் குடோரி முறைகள் உள்ளன. பலவித திராவகங்கள் செய்முறைகளும் உள்ளன. தங்கத்தை நீற்றுப் போகச் செய்து அதை குருமருந்தாக உருவாக்கும் முறையும் சொல்லப்பட்டு உள்ளது. பலவித செந்தூரங்கள் செய்யும் வழி விரிவாக உள்ளது. பலவித செயநீர்கள் செய்வது பற்றி எழுதப்பட்டு இருக்கிறது. பலவித செம்புகள் செய்முறை இருக்கிறது. பல பொருட்களைச் சேர்த்து உருவாக்கும் களங்குகள் செய்முறை உள்ளது. ஒன்றில் இருந்து மற்றொன்றை உருவாக்கும் சலனங்கள் பற்றி கூறப்பட்டுள்ளது. பொருட்களில் இருந்து சத்துக்களைப் பிரித்து எடுக்கும் விதம் கூறப்பட்டுள்ளது. பலவகை கற்ப மூலிகைகள் பற்றிய செய்திகளும் உள்ளன. ஒரு பொருளை பல சொற்களால் அழைக்கும் நிகண்டுகூட அதில் உள்ளது.
சிவன் சொன்ன அந்த ஏழு இலட்சம் பாடல்களை அப்படியே பதினேழு அங்கங்களாகப் பிரித்து எழுநூறு பாடல்களாகப் பாடியுள்ளேன்” என்றார்.
மேலும் அந்த ஏழு இலட்சம் பாடல்களும் ஆயிரம் பாடல்களில் எவ்விதம் சுருக்கமடைந்தது என்ற விவரத்தையும் திருமூலர் அவர்களிடம் விளக்கமாகத் தெரிவித்தார்.
“சிவபெருமானால் உபதேசிக்கப்பட்ட அந்த ஏழு இலட்சம் பாடல்களை முதலில் எட்டாயிரமாகவும், பிறகு மூவாயிரமாகவும் நான் சுருக்கிக் கூறினேன். ஆனால் அதற்கு முன்பாகவே என்னுடைய குருவான நந்தி பகவான் அவைகள் எல்லாவற்றையும் ஆயிரம் பாடல்களாகச் சுருக்கி எழுதியதை அறிந்தேன். அதனால் அந்தப் பாடல்களை எழுநூறாகச் சுருக்கி நான் எழுத நேர்ந்தது.
ஆனால் ஒன்று மட்டும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். என்ன இருந்தாலும் நாங்கள் சுருக்கமாகச் செய்த நூல்கள் அத்தனையும் ஈசன் செய்தருளிய ஏழு இலட்சம் மூலநூலுக்கு எவ்விதத்திலும் ஒப்பாக முடியாது. அந்த நூல்களின் மேன்மை குறித்து சோதித்து அறிய வேண்டுமென்றால் என் பின்னால் தொடர்ந்து வாருங்கள், அவைகளை உங்களுக்கும் காட்டுவதற்குச் சித்தமாயிருக்கிறேன்.” என்றார் திருமூலர்.
சித்தர்களும் ஆர்வ மிகுதியால் அவருடன் புறப்படத் தயாரானார்கள்.
நான்காவது அண்டம்:-
—————————————-
நான்காவது அண்டத்திற்குள் மூன்றாவது அண்டத்திலுள்ளச் சித்தர்களுடன் நுழைகிறார் திருமூலர். அது அவர் கொண்டு வருவதாகச் சொன்ன ஓலைச் சுவடிகள் இருக்கும் அண்டம். ஆனால் அண்டம் முழுவதும் தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்ததால் அவர்களால் உள்ளே நுழைய முடியவில்லை. தீயின் வெம்மையைத் தாங்க இயலாத திருமூலர் திரும்பிவிடலாமா என்பதுபோல சித்தர்களைப் பார்த்தார். அவர்களும் பிரிதொரு சமயம் வந்து பார்க்கிறோம் என்று கூறி அவரிடம் விடைபெற்றுச் சென்றனர்.
திருமூலர் அங்கிருந்து தப்பித்து அருகிலிருக்கும் மற்றொரு அண்டத்திற்குள் நுழைகிறார். அது ஐந்தாவது அண்டம்.
ஐந்தாவது அண்டம்:-
————————————-
ஐந்தாவது அண்டம், இந்தப் புது அண்டத்திலும் சித்தர்களைத் தேடியே திருமூலரது பயணம் அமைகிறது. ஐந்தாவது அண்டம் பாய் போல் தட்டையாக இருந்தது. ஐந்தாவது அண்டத்திற்குள் நுழைந்ததும் அங்கு திருமூலர் கண்ட காட்சியானது அவரைப் புல்லரிக்க வைத்தது. அவர் சென்ற இடம் சித்தர்களின் தவச்சாலை. அங்கே சில சித்தர்கள் ஒடுங்கி உட்கார்ந்த நிலையில் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார்கள். சில சித்தர்கள் உலாவிக் கொண்டிருந்தார்கள். அவர்களது திருமேனியானது தங்கத்தைப் போன்று பிரகாசித்துக் கொண்டிருந்தது.
“ஒடுங்கியே பாயில் உலாவறு சித்தர்கள்
தடுக்கியே மேனிதான் தங்கமும் ஒவ்வாது”
– பாடல்:372
“வாருங்கள் சித்தரே!”
உள்ளே நுழைந்த திருமூலருக்கு ஒன்றும் புரியவில்லை. கண்களைத் திறக்காமலேயே தன்னை இனங்கண்டு வரவேற்கிறார்களே! என்ற ஆச்சரியத்துடன் உள்ளே நுழைகிறார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து வந்த அடுத்தடுத்த கேள்விகள் அவருக்கு இன்னும் ஆச்சரியத்தை அளித்தது.
“நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்? நீங்கள் பெற்ற சித்தி என்ற அறிவு முதிர்ச்சி நிலையால் பிரபஞ்சத்தில் உள்ள அண்டங்களைச் சுற்றி வருகிறீர்களா? காயசித்தி என்ற அழியா உடல் பெறவும், உயர்ந்த அறிவு பெறவும், முக்தி பெறவும் எந்த நூல் உங்களுக்கு வழிகாட்டியது? யாரிடம் இந்த அபூர்வ சக்திகளைப் பெற்றீர்?
திருமூலரும் ஆச்சரியம் நீங்காமலேயே, அவர்களது உருவத்தைப் பார்க்காமலேயே அவர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
“பூமி அண்டத்திலிருந்து வந்திருக்கும் என் பெயர் திருமூலன்.”
“அண்டம் விட்டு அண்டம் பறந்து வந்திருக்கும் நீர் சாதாரண மானுடனாக இருக்க முடியாது, இந்தப் பறக்கும் சித்தியையும், பக்குவம் செய்யும் தூய சித்தி முறைகளையும் யாரிடம் கேட்டு அறிந்து கொண்டீர்கள்? அல்லது எந்த நூலைப் படித்துக் கற்றுக் கொண்டீர்?
இந்தக் கேள்விகளை தன்னிடம் யார் கேட்கிறார்கள் என்பது அவருக்குத் தெரியவில்லை யாரிடம் பதிலைச் சொல்லுவது….?
அங்கிருந்த ஒவ்வொரு சித்தரின் முகத்தையும் உற்று நோக்கினார் திருமூலர், யார் முகத்திலும் எந்த உணர்ச்சியுமில்லை, அசைவுமில்லை, ஒருவேளை அசரீரியாகக் கேள்வி வந்ததோ?
அங்கிருக்கும் சித்தர்களுள் ஒரு சித்தரின் கண்கள் மட்டும் திறந்திருந்தது. அதே சமயம் எல்லோர் முகமும் திருமூலர் சொல்லும் பதிலுக்காக காத்திருப்பது போலவும் தெரிந்தது. திருமூலர் எல்லோருக்கும் நடுவாக நின்று பதில் சொல்ல ஆரம்பித்தார்.
“முதலில் சித்தர்களாகிய உங்களுக்கு என்னுடைய பணிவான வணக்கத்தைத் தெரிவிக்கிறேன், என்னுடைய வணக்கத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்கிறேன். நான் இப்படி அண்டம் விட்டு அண்டம் பறந்து செல்லும் சித்திகளையும், மேலும் பல அரிய சித்திகளையும், உடலைத் தூய சித்தியால் பக்குவப்படுத்தும் முறைகளையும் ஈசனால் உமைக்கு உபதேசிக்கப்பட்ட ஏழு இலட்சம் என்னும் நூலைப் படித்து அறிந்து கொண்டேன்.
அதில் குறிப்பிட்டிருக்கும் சித்தர்கள் வசிக்கும் பதினேழு அதிசய அண்டங்களைக் காணவே நான் அண்டம் விட்டு அண்டம் வந்துள்ளேன். அண்டங்களைத் தேடி வந்த பயணத்தில் பார்த்ததுதான் இந்த அண்டம். என் அதிர்ஷ்டம் வந்த இடத்தில் தங்களைப் போன்ற பெரும் சித்தர்களைத் தரிசிக்கும் பேறும் பெற்றேன்.
பதினேழு அண்டமா..? எல்லா நூல்களிலும் பதினாறு அண்டங்கள் இருப்பதாகத்தானே சொல்லியிருக்கிறார்கள், அப்படி இருக்கும் போது அண்டங்கள் பதினேழு என்று ஒன்றை நீங்கள் அதிகமாகக் கூறுகிறீர்களே!
இப்பொழுது எல்லா சித்தர்களுக்கும் கண் திறந்திருந்தது. அது ஆச்சரியத்தால் இருந்திருக்கும்.
“ஈசன் அருளிய “ஏழு இலட்சம்” என்னும் நூலில் அப்படித்தான் சொல்லியிருக்கிறது, நூலை வேண்டுமானால் படித்துப் பாருங்கள் உங்களுக்கு உண்மை புரியும்.”
“நாங்கள் அதனை முழுமையாகவே படித்துள்ளோம், அந்நூலில் அப்படி ஒன்றும் குறிப்பிடப்படவில்லையே?”
“குறிப்பிட்டிருக்கிறது சித்தர்களே! நீங்கள் அந்த நூலில் அறியப்படாத ஒரு விஷயம் பதினேழாவது அத்தியாயத்தில் உள்ளது.”
“பதினேழாவது அத்தியாயமா? நான் படித்த ஒரு லட்சத்தில் பதினேழாவது அத்தியாயம் இல்லையே”
“ஒரு லட்சம் நூலில் நீங்கள் காணமுடியாத அந்தப் பதினேழாவது அத்தியாயத்தில் நந்தி என்ற சிவன் மறைப்பாக சொல்லி உள்ள விஷயம்தான் சொரூபக் குளிகையாகும். அந்தக் குளிகையினால் வேதாந்தப் பொருள் வெளிப்படையாகத் தோன்றும். அதுவே உங்களுக்கு வெட்ட வெளியாகவும் தோன்றும். ஆனால் அதில் பூரண சொரூபத்தைக் காணுவதற்கான வழிமுறைகளை எனது குருநாதரான நந்தி பகவான் எனக்கு அருளியுள்ளார். அந்தச் சொரூபக் குளிகை காட்டியதுதான் பதினேழாவது அண்டம்.” எனக்குக் சொரூபக் குளிகையைப் பற்றி திருமூலர் சொல்லியதும் சித்தர்கள் அனைவரது கண்களிலும் ஆச்சரியம் விரிந்தது.
“என்ன….! சொரூபக் குளிகையா…! எங்கே காட்டுங்கள் பார்க்கலாம்.” என்று கையை நீட்டினார் ஒரு சித்தர்.
“தங்களிடமுள்ள சொரூபக் குளிகையை என்னிடம் கொடுங்கள், ஒரு முறை சோதித்துப் பார்த்துவிட்டு அதனை மீண்டும் உங்களிடமே கொடுத்து விடுகிறேன்” என்று ஆவலுடன் கையை நீட்டினார் மற்றொரு சித்தர்.
ஆனால் திருமூலர் குளிகையை யாரிடமும் கொடுக்கவில்லை, பார்த்துவிட்டுத் தருகிறேன் என்று வாங்கிய குளிகையை நீங்கள் திருப்பித் தராமல் கொண்டு சென்று விட்டால், மீண்டும் நான் என்னுடைய அண்டத்திற்கு எப்படித் திருப்பிச் செல்ல முடியும்?” என்று சொன்னார்.
இதைக் கேட்டதும் குளிகையைப் பார்த்து விட்டுத் தருவதாகச் சொன்ன அந்தச் சித்தருக்கு பயங்கரமான கோபம் வந்தது, உடனே அந்தச் சித்தர், “குளிகையை எடுத்துக் கொண்டு சென்று விடுவதற்கு நாங்கள் என்ன ஆடா.. மாடா..? அல்லது அறிவு இல்லாத ஜென்மமா? பயப்படாமல் அந்தக் குளிகையைக் கொடுங்கள், நீங்கள் சொல்லுவது உண்மைதானா என்று சோதித்துப் பார்த்துவிட்டுத் திரும்பக் கொடுத்து விடுகிறோம்”
“ஆடோ மாடோ நான் அறிவற்ற சென்மமோ
நாடாங் குளிகையை நானிட்டுத் தாரேன் காண்”
– பாடல்:378
என்றார் சித்தர்…..
இப்போதும் தயக்கமாகத்தான் இருந்தது திருமூலருக்கு, வீரவசனம் பேசும் இந்தச் சித்தர் குளிகையைத் திரும்பத் தராமல் எடுத்துச் சென்று விட்டால் தன்னுடைய நிலைமை என்னாவது? எப்படி கயிலைக்குத் திரும்பிச் செல்வது என்று யோசித்தாலும், சித்தர்கள் ஏமாற்ற மாட்டார்கள் என்ற நம்பிக்கை இருந்ததால் ஆர்வமுடன் கைநீட்டிய சித்தரின் வாயில் அந்தச் சொரூபக் குளிகையை வைத்தார். அவ்வளவுதான் அடுத்த கணம் அவர் பூரண மார்க்கத்தில் மாயமாய் மறைந்து விட்டார்.
திரும்பி வருவார், திரும்பி வருவார் என எல்லோரும் காத்திருக்கையில் நீண்ட நேரமாகியும் அந்தச் சித்தர் திரும்பி வரவேயில்லை. அப்போதுதான் அந்தச் சித்தர் திருமூலரை ஏமாற்றியிருப்பது அவருக்குப் புரிந்தது. எந்தச் சித்தரும் ஏமாற்றிய அந்தச் சித்தரின் செயலுக்காக வருத்தப்படவில்லை அவர்களது இயல்பே அதுதான் போலும். அல்லலுற்றார், அவதிப்பட்டார் யாரும் அவருக்கு ஆறுதல் கூறக்கூட முன்வரவில்லை, ஓடிப்போன அந்தச் சித்தரைக் கண்டுபிடிக்கும் வழியைக்கூடச் சொல்லவில்லை. தங்களுக்கும் அந்தச் சித்தரது செயலுக்கும் எந்தவித சம்பந்தமுமில்லை என்பதுபோல நடந்து கொண்டார்கள். இனியும் காத்திருப்பது வீண் என்று தெரிந்ததால் நேரத்தை வீணடிக்காமல் தன் கையிலிருந்த கமலினி என்னும் குளிகையின் உதவியினால் அந்தச் சித்தரைத் தேடிச் சென்றார் திருமூலர்.
அந்தச் சொரூபக் குளிகையானது மிகவும் சக்தி வாய்ந்தது. அதை வைத்திருக்கும் யாரையும் ஒளியினும் மிகுந்த வேகமாகப் பயணிக்க வைப்பது, அதனால் அந்தச் சித்தர் அண்டங்கள், பேரண்டங்கள், புவனங்கள் என்று மிகுந்த வேகத்துடன் ஓடிக்கொண்டேயிருந்தார். திருமூலர் அவரை ஒவ்வொரு அண்டமாகத் தேடிச் சென்றார்.
ஒரு அண்டத்தில் தட்டுப்பட்டு அவரைப் பின் தொடருவதற்குள் வேறொரு அண்டத்திற்குத் தாவி ஓடிவிடுவார் அந்தச் சித்தர். திருமூலரும் அவரை விடாமல் துரத்திச் சென்றார். ஆனாலும் அந்தச் சித்தர் அண்டங்களைக் கடந்து, பேரண்டங்களைக் கடந்து, புவனங்களையும் கடந்து சென்று கொண்டே இருந்தார். எல்லாவற்றையும் கடந்து கடைசி புவனத்தைக் கடக்கும்போது அவரின் முன்னேச் சென்று எட்டிப் பிடித்தார் திருமூலர்.
“தொடர்ந்து அண்டந்தோறும் துரத்தியே யான் சொல்லிற்
கடந்தானே பேரண்டங்களை ஆயிரத்து எட்டும்
நடந்தானே புவனமும் நானும் பின்சென்றிட
வடந்தான் பதந்தாண்டி அப்பால் பிடித்தேனே”
– பாடல்:380
திருமூலரைத் திரும்பிப் பார்த்த அந்த மோசடிச் சித்தர், அவரைச் சட்டென்று தள்ளி விட்டார். திருமூலரின் பிடியிலிருந்து நழுவி, தப்பித்து அண்டவெளியில் பறந்தார். திருமூலரும் விட்டபாடில்லை, விட்டால் அவர் கயிலாயம் திரும்ப முடியாதே, மோசடிச் சித்தரைப் பின்தொடர்ந்து பறந்துச் சென்றார். விண்வெளியின் மூன்று பால்வெளிகளையும் கடந்து சென்று மனோன்மணியின் வாசலருகே செல்லும்போது சித்தர் தபித்துச் சென்று விடாதபடி சட்டென்று தாவி, அவரை இறுக்கமாகக் கட்டிப் பிடித்தார் திருமூலர்.
ஆனாலும் லாவகமாகத் திரும்பித் திருமூலரிடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்ட அந்தச் சித்தர் நிஷ்களமான ஏகவெளியில் சென்றார். ஆனாலும் திருமூலர் விடாமல் அவரைப் பின்தொடர்ந்தார். மோசடி சித்தர் பயன்படுத்திய சொரூப குளிகையானது அதிக வீரியம் உடையது. பயன்படுத்திய சித்தருக்கும் அதன் உபயோகம் புதிது ஆகையால் மிகவேகமாகப் பறந்ததனால் தளர்ச்சியுற்று, சோர்வுற்று, களைத்து நின்றார்.
சிறிது இளைப்பாறுவதற்காக நின்றிருந்த அந்தச் சித்தரை சட்டென்றுத் தாவிப்பிடித்த திருமூலர் அவர் வாயில் வைத்திருந்தக் குளிகையை கையை நுழைத்துப் பிடுங்கி எடுத்துக் கொண்டார்.
இதை எதிர்பார்க்காத அண்டவெளியின் மோசடிச் சித்தருக்கு ஆத்திரம் தாங்க முடியவில்லை, “எதற்காக அந்தக் குளிகையை வாயிலிருந்து எடுத்தீர்கள்? இன்னும் பார்க்க வேண்டிய ஒன்றிரண்டு அண்டங்களையும் பார்த்துவிட்டு நானே அதனை உங்களிடம் திருப்பித் தந்துவிட எண்ணியிருந்த வேளையில் நீங்கள் இப்படி முந்திக் கொண்டீர்களே” என்று நல்லவர் போல திருமூலரிடம் சமாதானம் சொன்னாலும் அது நடிப்பென்பது அவர் முகபாவத்திலேயே தெரிந்தது.
அவர் மறுபடியும் அந்தக் குளிகையை எடுத்துக் கொண்டு ஓடிவிடுவதற்குத் தயாராக இருப்பதும் புரிந்தது. அந்தச் சித்தரின் கள்ளத்தனத்தைத் தெரிந்து கொண்ட திருமூலர் பறக்கத் தயாரானார்.
திருமூலர் கிளம்புவதைக் கண்ட அந்த வேற்று அண்ட சித்தர் பதட்டத்துடன் “ஐயா, நான் திருடனாக, போக்கற்றவனாக, பொறுப்பற்றவனாக எதுவாக இருந்தாலும் நான் செய்த தவறை மன்னித்து மீண்டும் என்னுடைய அண்டத்திற்கு நான் செல்லுவதற்கு வழி செய்யுங்கள் என்று கெஞ்சத் தொடங்கினார்.
“கரிப்பான கள்ளனோ காக்கனோ போக்கனோ
குறிப்பாயத் தொடர்ந்து குறிசொல்லீர் என்றானே”
– பாடல்:383)
ஆனால் மறுபடியும் ஏமாறுவதற்கு திருமூலர் தயாராக இல்லை.
“நேர்மையற்ற சித்தரான உங்களுக்கு ஒருக்காலும் நான் வழிகாட்ட மாட்டேன். அப்படி நான் உங்களுக்கு உதவினால் அந்த அண்டத்திலிருக்கும் சித்தர்களே என் செயல் கண்டு எள்ளி நகையாடுவர், நல்ல சிந்தனையும் அறிவுமில்லாத உங்களுக்கு முன்பின் யோசிக்காமல் குளிகையைக் கொடுத்ததற்கான தண்டனையை நான் அனுபவித்து விட்டேன், போகட்டும், நெறியில்லாத நீங்கள் உங்கள் அண்டத்திற்குப் போனால் எனக்கென்ன, போாகாவிட்டால் எனக்கென்ன, போக முடிந்தால் போங்கள் இல்லாவிட்டால் இங்கேயே இருப்பதானாலும் இருங்கள் அது உங்கள் பிரச்சனை, எனக்கென்ன வந்தது. உங்களுக்கு உதவினால் எனக்குத்தான் பாவம் வந்து சேரும்… என்று சொன்ன திருமூலர் மறுநிமிடமே சொரூபக் குளிகையின் உதவியால் அடுத்த அண்டத்தை நோக்கிப் பறந்துவிட்டார்.
ஆறாவது அண்டம்:-
————————————
ஆறாவது அண்டம் இந்த அண்டத்தைப் பற்றிய செய்திகளேதும் கூறப்படவில்லை. அந்த அண்டத்தைச் சுற்றிப்பார்த்த திருமூலர் அதற்குக் கீழாக உள்ள அண்டங்களைப் பார்ப்பதற்காகச் சென்றார்.
இப்போது திருமூலர் பயணம் செய்வது கீழடுக்கு அண்டங்கள்.
ஏழாவது அண்டம்:-
———————————-
திருமூலர் இப்போது அடுத்த அடுக்கிருக்கும் அண்டங்களுக்கு செல்கிறார். அதில் ஒரு அண்டத்தில் சங்கின் வெண்மைநிறம் கொண்ட சித்தர்கள் இருந்தனர். அவர்கள் எல்லோருமே இறைவனுடன் ஒன்றி இருந்தார்கள். அதனால் தொந்தரவு செய்யாமல் அவர்களை வணங்கிவிட்டு பிற அண்டங்களைப் பார்ப்பதற்காகப் பயணத்தைத் தொடர்ந்தார்.
எட்டாவது அண்டம்:-
————————————
அடுத்த அண்டத்திற்குச் சென்ற திருமூலர் அங்கு இரத்தச் சிகப்பு நிறமுடைய மேனியைக் கொண்ட சித்தர்களைச் சந்திக்கிறார். அங்கு சிவப்பு நிறம் ஒளிவீசும் உடல் பெற்ற சித்தர்கள் சிவ மந்திரத்தைச் சொல்லிக்கொண்டு உலாவிக் கொண்டிருந்தனர். சித்தர்களைக் கண்ட திருமூலர் அவர்கள் முன் சென்று கைகூப்பி வணங்கி நின்றார்.
திருமூலரைக் கண்ட அவர்கள் அவரை யார் என்று கேட்கிறார்கள்….
…… சித்தர்
தொண்டன் அடியேன் காண் சொற்பெறு மூலன்காண்
– பாடல்:387
மூலரும் “நான் சித்தர்களின் அடியவன், என் பெயர் மூலன்” என்று பணிவோடு சொன்னார். அவர்களும் தங்களையொத்த சித்தர் ஒருவர் வேற்று அண்டத்திலிருந்து தங்கள் அண்டத்திற்கு வந்திருப்பதை எண்ணி மகிழ்ச்சியடைந்து “நல்லது கொஞ்ச காலம் இங்கேயே விருந்தினராகத் தங்கிவிட்டுச் செல்லுங்கள் என்றனர்.
அந்த அண்டத்தில் திருமூலர் தங்கியிருந்த காலத்தில் அங்கே சித்தர் ஒருவர் ரசமணி ஒன்றுக்கு சாரணை செய்து கொண்டிருப்பதைக் கண்டு அவரிடம் அந்த மணியின் பெயர் என்ன என்று கேட்டார்.
சித்தரும் அதனை அஷ்டமாசித்தி குளிகை என்று தெரிவித்தார்.
“அஷ்டமா சித்தி குளிகை என்றால் அது கமலினி குளிகைக்குச் சமமான குளிகையா? அல்லது அதைவிட சக்தி குறைவு உள்ளதா என்பது எனக்குத் தெரியாது. ஆனாலும் நீங்கள் வைத்திருக்கும் அந்த மணிக்கு நீங்கள் கொடுத்த சாரணையானது போதாது. சாரணையை இன்னும் அதிகப்படுத்த வேண்டும்” என்றார் திருமூலர்.
திருமூலரின் பேச்சு அந்தச் சித்தருக்கு ஆச்சரியத்தை அளித்தது. மூலர் சொன்ன சாரணை என்பதற்கு பொருள் புரியாமல் அவரை நோக்கி அதற்கு விளக்கம் கேட்டார்.
“திருமூலரும் சாரணை என்பது பாதரசத்தைத் திடப் பொருளாக்கி அதை உருண்டை வடிவ குளிகையாகச் செய்வார்கள். அதன் பின்னர் தங்கம், வெள்ளி போன்ற உலோகங்கள், வைரம், முத்து போன்ற சிலாசத்து, நிமிளை போன்ற 1200 உபரசங்களின் சத்துக்களைப் பிரித்து எடுத்து அதை திடநிலை பாதரசத்திற்கு ஏற்றும் முறைக்குத்தான் சாரணை என்பது பெயர். இப்படி சாரணை ஏற்றப்பட்ட குளிகையை மணி என்றும் சொல்லுவார்கள். சாரணை கொடுப்பதன் தன்மைக்கு ஏற்ப குளிகையின் தன்மையும், சக்தியும் அதன் பெயரும் மாறும்” என்று சாரணைக்கு விளக்கம் அளித்தார்.
நீங்கள் செய்து கொண்டிருக்கும் குளிகைக்குப் போதுமான சாரணையை நீங்கள் அளிக்காததனால் அதனுடைய வீரியமும் போதுமானதாக இருக்காது என்பதனாலேயே சாரணையின் தன்மாத்திரை போதாது என்றேன்
“சித்தரே, எங்களுக்குத் தங்கத்தை குருவாகச் செய்து, அதை பாதரசத்துடன் இணைத்து குளிகை செய்யும் முறையைப் பற்றித் தெரியாது, அதேசமயம் நாங்கள் செய்யும் குளிகையில் பயன்பாடு அதிகம் இல்லாததால் நாங்கள் கொடுத்த சாரணையில் வீரியமும் இல்லை. நீங்கள் சாரணை செய்வதில் தகுந்த தொழில்நுட்பம் இருப்பதாகச் சொன்னீர்கள், தங்கத்தை குருவாக்கும் முறையைச் சொல்லிக் கொடுங்கள் அதன்படியே சாரணை ஏற்றுகிறோம்,
நீங்கள் சொல்லிக் கொடுக்கும் இந்தத் தொழில் நுட்பத்திற்கு குரு தட்சணையாக எங்கள் புவனத்தில் இருக்கும் ஆயிரம் மாற்றுத் தங்கம், இருபத்து நான்கு வகை ரத்தினங்கள், மற்றும் பலவித உபரசங்களை உங்களுக்குக் காணிக்கையாகத் தருகிறோம்.” ஏன்றார் சித்தர்.
திருமூலரும் சிரித்தவாரே, சரி சித்தரே, ரசமணிகளுக்குச் சாரணை ஏற்றும் நுட்பமான விபரங்களைக் கூறுகிறேன் கேளுங்கள். சூட்சுமங்கள் நிறையப் பெற்ற ரசமணியால் கற்களும் பழுத்துத் தங்கமாகும். அத்தகையதொரு ரசமணியால் ஆகாயத்தில் பறக்கலாம், பஞ்ச பூதங்களையும் அதனுள் ஐக்கியமாக்கிக் கொள்ளலாம் அத்தனை ஆற்றல் மிக்கது இந்த ரசமணி. இதனைக் கமலினி குளிகை என்றும் சொல்லுவார்கள்.
இனி கமலினி செய்முறை பற்றிக் கூறுகிறேன் கவனமாக கேளுங்கள்.
சூதத்துடன் கார்முகில் பாசாணத்தைச் சேர்த்து எண்பது முறை புடமிட்டு அத்துடன் மித்திரத்தைக் கட்டி, சூதத்தின் எடைக்கு எடை தங்கம் சேர்த்து உருக்கி, ஏழுவகை சரக்குகள் சேர்த்து சூரியப் புடமிட்டால் கிடைப்பதுதான் குரு மருந்து. இந்தக் குரு மருந்தைக் கொண்டு சூதத்தைத் தொந்தித்தால் கிடைப்பதுதான் கமலினி குளிகையாகும். என்று குரு மருந்தை சாரணை செய்யும் விவரங்களைத் தெரிவித்தார் திருமூலர்
குரு மருந்து தயாரிக்கும் முறை பற்றி திருமூலர் சொன்னதைக் கேட்ட அந்தச் சித்தர் பெருமகிழ்ச்சியடைந்தார். அத்துடன், “குரு மருந்தைக் கொண்டு குளிகை செய்யும் முறையைப் பற்றிக் கூறிய மூலரே, இது போன்ற சாதனையை எவராலும் செய்ய முடியாது நீங்கள் சொன்னது இந்த சித்தர் உலகுக்கே பெரிய வரப்பிரசாதம்” என்றும் புகழ்ந்தார். அத்துடன் “குரு மருந்தைச் சொல்லிக் கொடுத்ததற்கு குரு தட்சணையாக எது வேண்டுமானாலும் கேளுங்கள்” என்றார்.
திருமூலரும், “எனக்கு குரு தட்சணை எதுவும் வேண்டாம், தரமான குளிகைக்கு ரத்தினத்தோடு சுத்தமான தங்கத்தையும் சேர்த்து சாரணை ஏற்றி வாயில் வைத்துக் கொண்டால், கோடி சூரியனைப் போன்ற ஒளி தேகத்தில் உண்டாகும். நான் சொல்லிய முறை தப்பாமல் குளிகை செய்து, தவறான வழிக்குப் பயன்படுத்தாமல் ஞானத்தில் நிற்பதே எனக்களிக்கும் குரு தட்சணையாகும்” என்று கூறி அண்டத்துச் சித்தரிடம் விடைபெற்றார்.
அந்த அண்டத்திற்கு வந்த வேலை முடிந்து விட்டதால், குளிகையின் ஆற்றலால் அடுத்த அண்டத்திற்குப் பயணமானார்…
ஒன்பதாவது அண்டம்:-
——————————————
அவர் இறங்கிய அண்டம் அவரது பயணத்தில் ஒன்பதாவது அண்டமாகும். அந்த அண்டம் முழுவதும் தண்ணீரால் சூழப்பட்டிருந்தது. அந்த அண்டத்தில் இறங்கி அந்தத் தண்ணீரின் உள்ளே நடந்து சென்று பார்க்கிறார். தண்ணீருக்குள்ளே எண்ணற்ற சித்தர்கள் சமாதி நிலையில் கீழே அமர்ந்து இருப்பது தெரிகிறது. அவர்களைத் தரிசிக்க கீழே இறங்குகிறார்.
இவர் கீழே இறங்கியதில் தண்ணீரில் நீரலைகள் இடம்மாறி சலனம் ஏற்பட்டன. அந்த சலனத்திலும் கொஞ்சம்கூட சித்தர்கள் கண் விழிக்கவில்லை. அத்துணை ஆழ்ந்த தவம். எவ்வளவு நாள் காத்திருந்தும் அவர்கள் கண்ணைத் திறப்பதாய் இல்லை, ஆகவே அவர்களை வலம் வந்து வணங்கிவிட்டு அடுத்த அண்டத்திற்குப் பயணமானார்.
பத்தாவது அண்டம்:-
————————————-
திருமூலர் சென்ற அடுத்த அண்டம் பத்தாவது அண்டமாகும். அந்த அண்டம் வெளிச்சமான ஆகாயத்தைப் பெற்றிருந்தது. அதனால் அங்கு பட்டப்பகலில் இருப்பது போன்று வெளிச்சமாக இருந்தது. திருமூலர் இறங்கியது சித்தர்கள் தவம் செய்யும் வனப்பகுதி.
வானத்திலிருந்து இறங்கிய சித்தர் ஒருவர் தங்கள் வனப்பகுதிக்கு வருவதைக் கண்ட அங்கிருந்த சித்தர்கள் திருமூலரைத் திரண்டு வந்து அன்புடன் வரவேற்று உபசரித்தனர். சில காலம் அவர்களுடனே தங்கிய திருமூலர் பின்னர் விடைபெற்றுக் கொண்டு தனது அண்டவெளிப் பயணத்தைத் தொடர்ந்தார்.
இப்படியாக நந்திதேவன் வழிகாட்டுதலால் ஐந்து அடுக்குகளுக்கும் அதில் உள்ள ஆயிரத்தெட்டு அண்டங்களுக்கும் சுற்றிப் பார்த்து சித்து விளையாடினார் திருமூலர். அத்தனையும் சுற்றிப் பார்த்து மகிழ்ந்து தம் குரு நாதர் இருக்கும் கயிலைக்குத் திரும்பினார்.
அவருக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை.
“………ஆயிரத்தெட்டு
முழைந்தே ரிந்த ஆசையும் வர்ச்சித்தேன்
நுழைந்தேன் சகலமும் ஓடினேன் ஆடினேன்”
– வைத்திய வைத்திய சாரம்:404
ஆயிரத்தெட்டு அண்டங்களையும் சுற்றிப் பார்த்து வருதல் என்பது அவ்வளவு எளிதான செயலா, யாருக்குக் கிடைக்கும் இந்த அரிய வாய்ப்பு! அத்தகைய அரிய வாய்ப்பு தனக்குக் கிடைத்ததை நினைத்து ஆடினார், ஒடினார், வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த நந்தி தேவருக்கு நன்றிகள் ஆயிரம் சொன்னார். பின்னர் அமைதியாக சமாதியில் அமர்ந்தார். அப்பொழுதுதான் அவர் யார் என்பதையும் உணர்ந்தார்.
குறிப்பு:-
—————
மொத்தத்தில் என்குரு திருமூலர் பெருமானின் ஒட்டுமொத்த பிரபஞ்ச பயணப் பதிவின் சாரம் இதுதான்…..
திருமூலர் தன்னுடைய விண்வெளிப் பயண அனுபவங்களை தமது பாடல்களில் பதிவு செய்திருக்கிறார். உலகில் தன்னுடைய பிரபஞ்சப் பயணத்தைப் பதிவு செய்த முதல் விண்வெளிப் பயணி திருமூலராவார்.
தமிழ்ச் சித்தர் பலரிருக்க திருமூலர் மட்டும்தான் விண்வெளிப் பயணம் செய்தாரா என்ற கேள்விக்கு, சித்தர் பலரும் விண்வெளிப் பயணம் செய்துள்ளனர்.
சித்தர்களின் உச்சபட்ச சித்தி “கெவுணம் பாய்தல்” என்ற பிரபஞ்சப் பயணம். இந்த விண்வெளிப் பயணத்துக்கு சிவயோகம் செய்து, காயசித்தி செய்து உடலை ஒளிஉடலாக மாற்ற வேண்டும். விண்வெளிப் பயணம் செய்வதாயின் ஒளிஉடலைப் பெற வேண்டும். ஒளி உடலைப் பெறுவதற்கு சுகம், கமலினி, சொரூபம் போன்ற குளிகைகள் தேவை.
பிரபஞ்சத்தின் எல்லை எதுவென்று அறிவியல் உலகம் ஆய்வு செய்து கொண்டிருக்கும் நிலையில் அது ஐந்து மடக்குடன் 1008 அண்டம் கொண்டது என திருமூலர் பிரபஞ்சம் பற்றிய சித்தர்களின் கணக்கீட்டைக் கூறுகின்றார்.
இந்த பிரபஞ்சத்தில் பூமியானது எந்த இடத்தில் உள்ளது என தேடிக் கொண்டிருக்கும் நிலையில் பாடல்:361 இல் அது தட்சண பாகத்தில் 1600வது அண்டத்தில் உள்ளது என்று பதிலளிக்கிறார்.
“பார்த்திடு என்றிறே நீர்பார்க்கும் நூல் எங்குண்டு
தேர்த்து மடக்குந் தச்சன பாகத்தில்
ஆர்த்திடு ஒரு நூற்று அறுபதாம் அண்டத்தில்
கோர்த்திடு சித்தர் குலாவிப் படிப்பதே”
இப்படி திருமூலர் சொன்ன பூமி இருக்குமிடத்தை இன்றைய அறிவியலார், ஒரு லட்சம் ஒளியாண்டு தூரமான விட்டத்தைக் கொண்ட பால்வழி மண்டலத்தில் ஓரியன் எனப்படும் நட்சத்திரக் கூட்டத்தின் ஒரு ஓரத்தில் உள்ள சூரிய குடும்பத்தில் சூரியனுக்கு மூன்றாவது கிரகமாக இருப்பதாக் கூறுகின்றனர்.
திருமூலரின் இந்தப் பிரபஞ்ச பயணப் பதிவின் மூலம் சிவ வழிபாடு என்பது இப்பூமியில் மட்டுமல்லாது பிரபஞ்சம் முழுக்க இருப்பதையும், மனிதர்கள் இந்த பூமியில் மட்டுமல்லாது மற்ற அண்டங்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதும், சிவபெருமான் சித்தர்களுக்கு தமிழ் மொழி கற்பித்து இருக்கிறார் என்பதும், அந்தத் தமிழ் மொழியே பிரபஞ்சமெங்கும் பேசப்படுகிறது என்பதும் தெளிவாகிறது.
வேற்று அண்டங்களில் இருக்கும் சித்தர்கள் சிவவழிபாடு செய்து சிவன் எழுதிய ஏழுலட்சம் பாடல்களைப் படிப்பதையும் அந்த ஏழு லட்சம் பாடல்களையும் திருமூலர் ஆயிரமாக, எழுநூறாகச் சுருக்கி அந்த நூல் இருக்கும் இடத்தையும் அவர்களுக்குத் தெரியப்படுத்தி இருக்கின்றார். சிவன் இந்த பூமியிலுள்ளவர்களுக்கு அறிவியல் போதித்து உள்ளார். அதே அறிவியலை வேற்று உலக மக்களுக்கும் சொல்லிக் கொடுத்து இருப்பதை திருமூலர் அங்குள்ள அண்டங்களில் உணர்ந்து இருக்கிறார்.
சொரூபக் குளிகை, கமலினி குளிகைப் பற்றி அறியாத வேற்று அண்டத்துச் சித்தர்களுக்கு அவைகளைப் பற்றி சொல்லிக் கொடுத்திருக்கிறார். குளிகைகள் வீரியமுள்ளவைகளாக இருப்பதற்கு சாரணை செய்யும் முறையை வேற்று அண்டத்துச் சித்தர்களுக்கு திருமூலர் செயல்முறை பயிற்சி அளித்து வந்துள்ளார்.
வேற்றுகிரக சித்தர்களுக்கு தங்க குரு செய்யும் தொழில் நுட்பம் தெரியவில்லை. திருமூலர் அவர்களுக்கு தங்க குரு செய்யும் தொழில் நுட்பத்தைச் சொல்லிக் கொடுத்திருக்கிறார். இன்றைய வானியல் அறிஞர்கள் கண்டுபிடித்துள்ள கருந்துளை பற்றிய செய்திகளை அவர் காலத்திலேயே கண்டுபிடித்துப் பயணப் பதிவும் செய்துள்ளார்.
அண்டவெளி உள்ளே நுழைய அண்டத்தின் வேகமும் நமது வேகமும் ஒத்துப் போகவேண்டும் என்ற அறிவியல் கருத்து இங்கு சொல்லப்படுகிறது.
திருமூலரின் இரண்டாவது பயணத்தில் பாய் போன்ற தட்டையான உருவ அமைப்புடைய அண்டங்களையும், முழுமையான நெருப்புக் கோளங்கள் பலவற்றையும் கண்டு வந்துள்ளார். பூமியில் இருப்பது போலவே பிற அண்டங்களிலும் திருடர்கள் மோசடி செய்பவர்கள், ஏமாற்றுக்காரர்கள் உண்டு என்பதை எடுத்துக்காட்டுடன் சொல்கிறார்.
இன்றைய அறிவியலில் ஒரு ராக்கெட்டை இன்னொரு ராக்கெட் துரத்திப் பிடிப்பது போலவே ஒரு குளிகையை இன்னொரு குளிகை துரத்திப் பிடிப்பதை செயல்முறையாக்கிக் காட்டுகின்றார்.
– நன்றி – WhatsApp குழு..