சிம்மம் ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள்.. Simmam sani peyarchi palangal 2017-20
சிறு கண்ணோட்டம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி சற்று மந்தமாகவே இருக்கும் என்றாலும் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. இதுவரை இருந்து வந்த தேவை இல்லாத மருத்துவ செலவுகள் சற்று குறையும். குழந்தைகள் விஷயத்தில் சற்று கவனம் தேவை. சிலர் தொழில் ரீதியாக குடும்பத்தை பிரிந்து செல்லவேண்டிய நிலை வரலாம். சொத்துவகையில் சிலருக்கு பிரச்சனைகள் வரலாம். ஆனால் எதற்கும் கவலை பட வேண்டும். இறைவன் மீது நம்பிக்கை வையுங்கள் அவர் அனைவரையும் காப்பார். சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் கோயிலிற்கு சென்று அவரை மனதார வணங்கி வாருங்கள் சனியின் தாக்கம் குறையும்.
(மகம், பூரம், உத்தரம் – 1ம் பாதம் (மா – பி – மு – மே – மோ – மௌ – ட – டி – டே) போன்ற எழுத்துகளில் பெயரை முதல் எழுத்தாக கொண்டவர்கள் ஆவணி மாதத்தில் பிறந்தவர்களுக்கு – இப்பலன்கள் ஓரளவு பொருந்தி வரும்)
வான மண்டலத்தில் 5வது ராசியாக வலம் வரும் உங்கள் ராசி நாதன் ஆகிய சூரியபகவான் நவக்கிரகங்களில் முதலாவது கிரகமாகும். உலக உற்பத்திக்கும், உயிர்கள் வாழ்வதற்கும் சீராக தன்னுடய கதிர்களை வாரி வழங்கும் வல்லமை பெற்ற சூரியன் கிரகங்களில் நம்முடைய கண்களுக்கு தெரியும் முதல் கிரகமும் ஆகும், மற்றும் எல்ல கிரகங்களுக்கு தலைமையாக உள்ள சூரிய பகவான் ராசி நாதனாக பெற்ற சிம்ம ராசியில் மகம், பூரம் உத்திரம் என்ற 3 நட்சத்திரங்களை தன்னகத்தே கொண்டது.
நவக்கிரகங்களில் முதன்மையானது சூரியன் ஆகும். அதுபோல் அரசாளும் யோகமும், எதிலும் முதன்மையாகவும் விளங்க விருப்பமுடையவர்கள். நீங்கள் பொன்னையும் பொருளையும் பெரிதாக மதிக்கும் இவ்வுலகில் புகழுக்காக இவ்வுலகில் எதையும் துணிந்து செயல்படுவீர்கள். நிர்வாகத் திறமை ஆட்சி அதிகாரம் மற்றும் பேச்சாற்றலுக்கு உரியவரான நீங்கள் எதையும் விட்டு கொடுக்காத தன்மையும் உண்மைக்கும், நேர்மைக்கும் போராடி வெற்றி பெறுவீர்கள் இக் குணநலன்கள் உடைய உங்களுக்கு சனிபகவான் தனுசு ராசியிலிருந்து சஞ்சாரம் செய்து அளிக்ககூடிய பலன்களை பார்க்க இருக்கிறோம்.
உங்களது ராசிக்கு 5ம் வீட்டில் சனி சஞ்சாரம் செய்வது இதுவரை தள்ளிப்போன சுபகாரியங்கள் இனிதே நடைபெற கூடிய வாய்ப்பாகும். அடிக்கடி சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்பாகும். சனிபகவான் பாபக்கிரகம் என்பதால் உங்களது ராசியின் 5ம் இடமான புத்தி ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வது புத்தியின் தன்மைகேற்ப செயல்படுவீர்கள், சிலசமயம் நல்ல அறிவும் ஆற்றலுடன் சிந்திக்கும் குண்முடைய நீங்கள் சில சமயங்களில் மறதியும், கவனச் சிதறலும் உடையவராக இருப்பீர்கள்.
உடல் ஆரோக்யம் சீராகி மகிழ்ச்சியாக இருக்கும் காலம். தீர்க்க முடியாத பிணி மற்றும் உடல் சோர்வு நீங்கி புத்துணர்வுடன் செயல்படுவீர்கள். பணப் புழக்கம் தாரளமாக இருந்து வரும் பேச்சில் சாமர்த்தியம் நன்மை உண்டாக்கும். குடும்பத்தில் புது வரவுகள் வந்து சேரும். புதிய விஷயங்களை ஆர்வமுடன் கற்பீர்கள். நம்பிக்கையுடன் முயற்சிக்க எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். எதையும் தீர ஆராய்ந்து முழு மூச்சுடன் செயல்பட வெற்றி கிட்டும். தாயாரின் உடல் நிலையில் ஆரோக்யம் காணப்படும்.
வண்டி வாகனங்கள் வீடு, நிலம், வாங்க வாய்ப்புகள் அமையும். தந்தை மற்றும் தாய் வழி சொத்துக்கள் எதிர்பாராமல் வர வாய்ப்புள்ளது. அதிர்ஷ்டத்தை நம்பாமல் உழைப்பை மட்டும் தாராக மந்திரமாக எண்ணி செயல்களில் வெற்றி பெற முடியும். பெரிய மனிதர்கள் சகவாசம். அதிகாரிகளின் சலுகை இவையெல்லாம் கிட்டும். குழந்தைகளால் பிரச்சனை ஏற்பட்டு நிம்மதியற்ற சூழல் ஏற்படும். அதே சமயம் நன்மையும் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்களது உழைப்பு மற்றவர்களுக்கு லாபகரமாக அமையும். உங்கள் பணம் பொருள் கண் முன்னே களவு போனது போல் காணாமல் போகும் அல்லது பறிபோகவோ திருடு போகவோ வாய்ப்பிருக்கிறது. விருந்து கேளிக்கைகளில் நாட்டம் குறையும். குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டு விலகும். பூஜை, புனஸ்காரங்கள், கோவில், குளம், பக்தி பிரார்த்தனைகள் இவற்றில் அதிக ஈடுபாடு ஏற்படக் கூடிய காலமாக உள்ளது.
காதல் விஷயங்கள் உற்சாகமாக இருந்து வரும். காதல் கை கூடி திருமணத்தில் ஒரு சிலருக்கு முடியும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைப்பது சற்று காலதாமதமாகும். விரும்பிய வேலை கிடைப்பதில் நிறையத் தடைகள் ஏற்படும். வழக்குகள் ஜெயிப்பது போல் தோன்றினாலும் எதிரி வலுவாக இருக்க வாய்ப்புண்டு போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற கடுமையாக போராட வேண்டி இருக்கும். அதிக உழைப்பு குறைந்த வருவாய் என்ற சூழ்நிலையிலே உங்களை இயங்க வைப்பார். பங்கு சந்தையில் தேவையற்ற முதலீடு கூடாது. விட்டதை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தவிர்த்தல் நலம்.
ரேஸ், லாட்டரி, கிளப், சூதாட்டம் இவைகளில் அதிகக் கவனம் தேவை. இவற்றிலிருந்து சற்று விலகியே இருப்பது நல்லது ஆகும். உயரதிகாரிகள் விஷயத்தில் அதிக எச்சரிக்கை தேவை. வேலையாட்களால் தேவையற்ற பிரச்சனைகளும் மன வருத்தங்களும் ஏற்படும். விரதம் போன்ற விஷயங்களைக் கைவிட்டு உணவு விஷயத்தில் அதிக கவனம் தேவை. சக ஊழியர்களின் எதிர்பாராத உதவியும் அவர்களின் ஒத்துழைப்பும் நமக்கு சாதகமாக இருந்து வரும். நண்பர்களால் தேவையற்ற வருத்தங்கள் ஏற்படும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு வலுவான போராட்டத்திற்கு பிறகே குழந்தை பாக்யம் அமையும். எந்த ஒரு விஷயத்தையும் தள்ளிபோடவோ ஒத்தி போடவோ கூடாது. காரியத்திலே கண்ணாய் இருத்தல் வேண்டும். அப்பொழுதுதான் போட்டியான உலகத்தில் ஜெயிக்க முடியும்.
பரிகாரம்: திருவண்ணாமலை மாவட்டம் சோகத்தூர் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீஅமிர்த வல்லி உடனுறை ஸ்ரீயோக நரசிம்மரை, ஏகாதசி திதி நடைபெறும் நாளில் சென்று நெய்தீபம் ஏற்றி வணங்கி வாருங்கள். சகலமும் நன்மையில் முடியும்.
மருத்துவ செலவிற்கு பணம் இன்றி தவிக்கும் ஏழைகளுக்கு மருத்துவ உதவு செய்யுங்கள். அருகில் உள்ள சிவன் கோயிலிற்கு சென்று இளநீர் அபிஷேகம் செய்தால் நல்ல பலன்களை பெறலாம். “ஓம் நமசிவாய” என்ற மந்திரத்தை தினமும் துதித்து வாருங்கள்.