சென்னையின் நவக்கிரக ஸ்தலங்கள்!!..

சென்னைக்கு அருகிலேயே பல ஆண்டுகளுக்கு முன்பே நமது முன்னோர்கள் நவக்கிரக ஸ்தலங்களை அமைத்துள்ளனர்.

சென்னைக்கு அருகிலுள்ள நவக்கிரக ஸ்தலங்கள்:

1. கொளப்பாக்கம் (சூரியன்)

2. சோமங்கலம் (சந்திரன்)

3. பூந்தமல்லி (அங்காரகன்)

4. கோவூர் (புதன்)

5. போரூர் (குரு)

6. மாங்காடு (சுக்ரன்)

7.பொழிச்சலூர் (சனி)

8. குன்றத்தூர் (ராகு)

9. கெருகம்பாக்கம் (கேது)

1. சூரியன் ஸ்தலம் (கொளப்பாக்கம்)

போரூருக்கு அருகில் உள்ள கொளப்பாக்கத்தில் அருள்மிகு ஆனந்தவல்லி அம்பாள் சமேத ஸ்ரீஅகத்தீஸ்வரர் கோயில் உள்ளது. இது சூரிய பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோயில் 1,300 ஆண்டுகள் பழமையானது. சூரியதேவனுக்கு உஷா, பிரத்யுஷா என்று இரண்டு தேவியர். உஷாதேவிக்கான காலத்தையே உஷத் காலமாகவும், பிரத்யுஷாவுக்கான காலத்தை பிரதோஷ காலம் என்றும் புராணங்கள் கூறுகின்றன. இவர்களில் உஷாதேவியை அடையும் பொருட்டு சூரிய பகவான் சிவனாரை வழிபட்ட தலம் இது. இங்கே தனி சன்னிதியில் சூரிய பகவான் ஈஸ்வரனை நோக்கிய வண்ணம் உள்ளார்.

ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த ஸ்தலத்துக்குச் சென்று, சூரியனுக்குச் சிவப்பு வஸ்திரம் அணிவித்து, செந்நிற மலர்களால் அர்ச்சனை செய்து, மேலும் சூரியனுக்குரிய தானியமான கோதுமையில் செய்த பிரசாதத்தை நைவேத்தியம் செய்து மனமுருக வேண்டினால் நமது பிரச்னைகள் நீங்கி நற்பலன்கள் கிட்டும்.

போரூர் சந்திப்பிலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் இந்த கோயில் உள்ளது.

2. சந்திர ஸ்தலம் (சோமங்கலம்)

குன்றத்தூர் அருகே சோமங்கலத்தில் அருள்மிகு காமாக்ஷி அம்பாள் சமேத சோமநாதீஸ்வரர் கோயில் உள்ளது. இது சந்திரனுக்கு உரிய பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோயில் 1,500 ஆண்டுகள் பழமையானது. சந்திரனே இத்தலத்திலுள்ள ஈசனை பூஜித்து, தான் இழந்த கலையை மீண்டும் பெற்றதால் இவ்வூருக்குச் சோமங்கலம் என்ற பெயர் உண்டானது. அதாவது, சந்திரன் மங்கலம் பெற்ற ஸ்தலம் இது. இங்கு சந்திரன் தனிச் சந்நதியில் அருட்பாலிக்கிறார். திங்கட்கிழமை இந்த ஸ்தலத்துக்குச் சென்று, வெள்ளை நிற வஸ்திரத்தை அணிவித்து, வெள்ளை அல்லி மலர்களால் அர்ச்சனை செய்து, நெய் கலந்த பால் பாயசம் நைவேத்தியம் செய்து சந்திரனை வணங்க வேண்டும். இங்கு ஈசன் சோமநாதரையும் சந்திரனையும் தரிசித்தால் நல்ல தேக ஆரோக்கியத்தையும், சகல இன்பங்களும் பெற்று வாழலாம்.

இந்த கோயில் குன்றத்தூருக்கு அருகே உள்ளது. சென்னை, தாம்பரத்திலிருந்தும், குன்றத்தூரிலிருந்தும் இக்கோயிலுக்குச் செல்லலாம். இரண்டு ஊர்களிலிருந்தும் பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

3. அங்காரகன் ஸ்தலம் (பூந்தமல்லி)

பூந்தமல்லியில் அருள்மிகு தையல் நாயகி சமேத வைத்தீஸ்வரன் கோயில் உள்ளது இது செவ்வாய் பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. இத்தலத்துக்கு “உத்தர வைதீஸ்வரன் கோயில்” என்ற பெயரும் உண்டு. இக்கோயில் 1,300 ஆண்டுகள் பழமையானது. சாபம் பெற்ற இந்திரனுடைய சருமநோயை தீர்த்து மோட்சம் அருளிய ஸ்தலம் இது. அங்காரகன் தனக்கு ஏற்பட்ட தோஷத்தால் பலம் குறைந்து, இத்தலத்திலுள்ள மங்கள தீர்த்தத்தில் நீராடி தனது முழுமையான பலத்தை பெற்றார். இங்கு தாளிப்பனையின் கீழே அங்காரகன் அருவமாக பூஜிக்கும் விதமாக சிவலிங்கமும், திருவடிகளும் உள்ளன. செவ்வாய் தோஷத்தால் திருமணத் தடை உள்ளவர்கள் இங்கு வந்து பிரார்த்தித்துக்கொண்டால், வெகுவிரைவிலேயே திருமணம் நடைபெற்றும் என்பது ஐதீகம்.

இந்த கோயில் பூந்தமல்லியின் மையப் பகுதியில் உள்ளது. ஆவடி, தாம்பரம், கோயம்பேடு என எல்லா பகுதிகளிலிருந்தும் பூந்தமல்லிக்குச் செல்லலாம்.

4. புதன் ஸ்தலம் (கோவூர்)

போரூருக்கு அருகில் உள்ள கோவூரில் அருள்மிகு சௌந்தராம்பிகை சமேத சுந்தரேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள இறைவனை காமதேனு வழிபட்டதால், இத்தலம் ‘கோவூர்’ என்று வழங்கப்படுகிறது. இது புதன் பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோயில் 1,200 ஆண்டுகள் பழமையானது. இந்த ஸ்தலத்தில் புதன் ஈசனோடு இணைந்த அம்சமாக விளங்குகிறார். அதனால், புதனுக்கு தனி சந்நதியில்லை. சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர் இத்தல இறைவன் மீது கோவூர் பஞ்சரத்னகீதம் பாடியுள்ளார்.

புதன்கிழமை அன்று, சிவபெருமானுக்கு செந்நிற வஸ்திரத்தை அணிவித்து செண்பக மலர்களால் அர்ச்சனை செய்து, பால் அன்னம் நைவேத்தியம் செய்து வழிபட்டால் புதனருள் கிட்டி கல்வி மற்றும் சகல கலைகளிலும் தேர்ச்சிப் பெறலாம்.

போரூரில் இருந்து குன்றத்தூர் செல்லும் வழியில் 5 கி.மீ. தொலைவில் கோவூர் உள்ளது.

5. குரு ஸ்தலம் (போரூர்)

போரூரில் குடிகொண்டுள்ள அருள்மிகு சிவகாமசுந்தரி அம்பாள் சமேத இராம நாதேஸ்வரர், ஸ்ரீராமருக்கு போர்த் தந்திரங்களை கற்பித்ததால், இந்த ஊரே போரூர் என்றானது புராண வரலாறு ஆகும். இத்தலத்துக்கு“உத்தர ராமேஸ்வரம் ” என்ற பெயரும் உண்டு. இக்கோயில் 500 ஆண்டுகள் பழமையானது.

ஶ்ரீராமருக்கு குருவாக சிவன் விளங்கிய காரணத்தால் இந்த கோயில் குருவுக்குரிய பரிகார ஸ்தலமாக கருதப்படுகிறது. குரு பகவானுக்கு உரிய பூஜைமுறைகள் யாவும் இந்த இராம நாதேஸ்வரருக்கு செய்யப்படுகிறது. ராமேஸ்வரம் போலவே இங்கும் விபூதியுடன் பச்சைக்கற்பூரமும், ஏலக்காயும் மணக்கும் தீர்த்தமும் பிரசாதமாகக் கிடைக்கிறது; அதோடு, பக்தர்களின் தலையில் சடாரி சாத்தும் மரபும் உள்ளது. இங்கு வியாழக்கிழமை விரதம் இருந்து, மஞ்சள் வஸ்திரம் அணிவித்து, முல்லை மலரால் அர்ச்சனை செய்து,நெய் தீபம் ஏற்றி, கொண்டக்கடலை சுண்டல், தயிர்சாதம், நைவேத்தியம் செய்து குருவான சிவனையும் வணங்கினால், குருவருள் பெருகும். இங்கு சிவபெருமானுக்கு திராட்சை மாலை அணிவித்து வணங்குவது சிறப்பு. புத்திரபாக்கியம் இல்லாதவர்கள், திருமணத்தடையுள்ளவர்களும் இவரை வழிபட்டால் குருவின் அருளை பெறலாம்.

போரூர் சந்திப்பிலிருந்து குன்றத்தூர் செல்லும் சாலையில் சுமார் அரை கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

6. சுக்ரன் ஸ்தலம் (மாங்காடு)

பூந்தமல்லிக்கு அருகே உள்ள மாங்காட்டில் அருள்மிகு திருவல்லீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. அம்பாள் காமாட்சி அம்மன் அருகிலேயே தனி கோயில் கொண்டுள்ளார். இக்கோயிலில் சுவாமி சன்னதி எதிரே அம்பாள் பாதம் மட்டும் உள்ளது. சுக்கிரனுக்கு அருள் புரிந்ததையொட்டி ‘வெள்ளீசுவரர்’ என்றும் ‘பார்கவேஸ்வரர்’ என்றும் அழைக்கப்படுகிறார். இக்கோயில் 1,000 ஆண்டுகள் பழமையானது. இது சுக்கிரன் பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள் மாங்காடு வெள்ளீஸ்வரரை தரிசித்து பார்வை திறனை பெறுகின்றனர். வெள்ளிக்கிழமைகளில் அல்லது பரணி, பூரம், பூராடம் நட்சத்திரங்களில் சுக்கிரனுக்கு பரிகார பூஜைகள் செய்கிறார்கள். இங்கு வெள்ளீசுவரருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்து வெண்பட்டு உடுத்தி, வெள்ளைத் தாமரையால் அலங்கரித்து, மொச்சை பயறு சுண்டல் நைவேத்தியம் செய்து வழிபட, திருமணத் தடை நீங்குகிறது மற்றும் பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்கிறார்கள்.

இக் கோயில் மாங்காடு பேருந்து நிலையத்திலிருந்து சுமார் ஒரு கி.மீ தொலைவில் அமைந்துள்ளது

7. சனி ஸ்தலம் (பொழிச்சலூர்)

பல்லாவரம் அருகே உள்ள பொழிச்சலூரில் அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோயில் உள்ளது. இது சனி பகவானுக்குரிய பரிகாரத் தலம். இவ்வூர் பூம்பொழிலோடு மலர்ந்திருந்ததால் பொழில் சேரூர் என்று அழைக்கப்பட்டு அதுவே மருவி, பொழிச்சலூர் என்றானது என வரலாறு கூறுகிறது. இக்கோயில் 1,000 ஆண்டுகள் பழமையானது. ‘மற்றவர்களின் பாவங்களை நீக்கிய சனி பகவான், இங்கு வந்து தனது பாவங்களை நீக்கிக் கொண்டார்’ எனத் தல வரலாறு கூறுகிறது. சனீஸ்வர பகவான் இத்தலத்தில் உள்ள நள்ளாறு என்ற தீர்த்தத்தில் நீராடி, சிவனை பூஜித்து தன் தோஷம் நீங்கப்பெற்று, தனிச் சந்நதி கொண்டு அருட் பாலிக்கிறார். எனவே, இவ்வூர் வடதிருநள்ளாறு என்று வழங்கப்படுகிறது. இங்கு தனிச் சந்நிதியில் சின்முத்திரையுடன் சனி பகவான் காட்சியளிக்கின்றார்.

சனிக் கிழமைகளில் இங்கு வந்து ஈசனை வழிபடுவதுடன், சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபட்டால், எல்லாவித சனி தோஷங்களும் நீங்கி வலிமை பெறுவார்கள் என்பது ஐதீகம். கருநீல நிற வஸ்திரத்தையும் சனீஸ்வரனுக்கு அணிவித்து கருநீல சங்கு புஷ்ப மலர்களையும், அர்ச்சனை செய்வது நன்மையைத் தரும். மற்றும் அநாதைகளுக்கும் வயோதிகர்களுக்கும் தான தர்மங்கள் செய்தும் சனிபகவானின் அருளைப் பெறலாம்.

இந்த கோயில் பல்லாவரம் – குன்றத்தூர் சாலையில் பல்லாவரத்திலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள பொழிச்சலூர் என்ற ஊரில் உள்ளது.

8. ராகு ஸ்தலம் (குன்றத்தூர்)

போரூர் அருகில் உள்ள குன்றத்தூரில் அருள்மிகு காமாட்சி அம்மன் சமேத திருநாகேஸ்வரர் கோயில் ராகு பரிகாரத்தலமாக விளங்குகிறது. இத்தலத்தில் ராகு வழிப்பட்டதால் சிவபெருமானுக்கு ‘திருநாகேஸ்வரர்’ என்று பெயரானது. இந்த ஆலயத்தில் ராகுவுக்குரிய வழிபாடுகள் சிறப்பாக செய்யப்படுகிறது. இக்கோயில் 800 ஆண்டுகள் பழமையானது. இத்தலத்தை வடநாகேஸ்வரம் என்று அழைக்கின்றனர். இத்தலத்தில் நாகத்தின் கீழ் லிங்க உருவில் காட்சி தருகிறார் ஈஸ்வரன். இன்றும்கூட இரவு நேரத்தில் நாகங்கள் இறைவனை வழிபட வருவதாகக் கூறுகின்றனர்.

இத்தலத்தில் அமர்ந்திருக்கும் மூலவரான நாகேஸ்வரர், ராகுவின் அம்சமாகவே காட்சி தருகிறார். ராகு காலத்தில் சிவனுக்கு பாலாபிஷேகம் செய்தும், உளுந்து தானியம் மற்றும் உளுந்து சாதம் போன்றவற்றை நைவேத்தியமாக வைத்தும் வழிபாடு செய்கிறார்கள்.

ராகு தோஷமுள்ளவர்கள் இங்குவந்து வழிபட்டால் தோஷம் விலகி நன்மை பெறுவார்கள். மேலும் சர்ப்ப தோ‌ஷம், திருமணத்தடை, ஆயுள் பாதிப்புகள் ஆகியன விலகி நலம் அடைவார்கள். இங்கு சர்ப்ப சாந்தி பரிகாரமாக ஹோமமும் செய்து நல்ல பலன்களை பெறலாம்.

போரூரில் இருந்து சுமார் 10 கி.மீ. தூரத்திலும், பல்லாவரத்தில் இருந்து சுமார் 8 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது.

9. கேது ஸ்தலம் (கெருகம்பாக்கம்)

போரூர் அருகில் கெரகம்பாக்கத்தில் அருள்மிகு ஆதி காமாட்சி சமேத நீலகண்டேஸ்வரர் கோயில், கேது பரிகாரத்தலமாக விளங்குகிறது. இதனை வட கீழ்ப்பெரும்பள்ளம் என்றும் அழைக்கின்றனர். இக்கோயில் 1000 ஆண்டுகள் பழமையானது. கேதுவால் வழிபடப்பட்ட பெருமை கொண்ட ஆலயம் என்பதால், அவரால் ஏற்படும் தோ‌ஷங்கள் இங்கு நிவர்த்தியாகின்றன.

ஒவ்வொரு நாளும் எமகண்ட வேளை என்பது கேதுவிற்கு உரிய தாகும். இங்கே செய்யப்படும் எமகண்ட வேளை பூஜைகள் விசே‌ஷமானது. நீலகண்டேஸ்வரருக்கும், நந்திக்கும் இடையே இருக்கும் மேல் விதானத்தில், சூரியனை கேது விழுங்குவது போன்ற ஒரு சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதற்கு கீழாக நின்றபடி நீலகண்டேஸ்வரரையும், அம்பிகையையும் பிரார்த்தனை செய்தால் கேது தோ‌ஷம் நீங்கும். இத்தலத்தில் கேது பகவான் தனி சந்நிதியில் அருள்பாலிக்கிறார். திருமணத்தடை, புத்திர பாக்கியம், தேக ஆரோக்கியம், தொழில் சம்மந்தப்பட்ட அனைத்து தடைகளும் நீங்குவதற்கு ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை, எம கண்டத்தின் போது, காலை 9 மணி முதல் காலை 10.30 மணி வரை, ஸ்ரீ கேது பகவானுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் ஹோமங்கள் செய்யப்படுகின்றன, அதன் பிறகு சிறப்பு அபிஷேகம் செய்து, பல வண்ண வஸ்திரம் அணிவித்தும், சிவப்பு அல்லி மலர்களால் அலங்கரித்தும்

கொள்ளு பொடி கலவை சாதம் நைவேத்தியம் செய்கிறார்கள்.

போரூர் – குன்றத்தூர் சாலையில் போரூர் சந்திப்பில் இருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.

தமிழ்நாட்டில் நவகிரகங்கள் ஸ்தலங்கள் அனைத்தும் கும்பகோணம், மயிலாடுதுறை, காரைக்கால் பகுதியை சுற்றி அமைந்திருக்கின்றன. சூரியனார் கோவில் (சூரியன்), திங்களூர் (சந்திரன்), வைத்தீஸ்வரன் கோயில் (அங்காரகன்), திருவெண்காடு (புதன்), ஆலங்குடி (குரு), கஞ்சனூர் (சுக்கிரன்), திருநள்ளாறு (சனி), திருநாகேஸ்வரம் (ராகு), கீழ்பெரும்பள்ளம் (கேது) என ஒன்பது கிரகங்களுக்கும் கோயில்கள் உள்ளன.

கும்பகோணத்தை சுற்றி உள்ள நவக்கிரக ஸ்தலங்களுக்கு செல்ல முடியாதவர்கள் சென்னை நகருக்கு அருகிலேயே உள்ள இந்த நவக்கிரக ஸ்தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு அமைந்திருக்கிறது. இந்த ஸ்தலங்களுக்கு சென்று தரிசனம் செய்து நவக்ரஹ மூர்த்திகளின் அருளை பெறுவோம்.

தகவல் உதவி  whatsapp, facebook மாலை மலர்.

Leave a Comment

Enable Notifications Allow Miss notifications