Temples

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மகிமைகள் !! Tiruvannamalai temple special information

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மகிமைகள் !! Tiruvannamalai temple special information

🔔சிவசிவ சிவாயநம🔔
〰〰〰〰〰〰〰〰
🔱திருவண்ணாமலை அருணாசலசுவாமியின் அற்புத மகிமைகளின் முழு தொகுப்பு🔱
♾♾♾♾♾♾♾♾

*⚜சிதம்பரத்தை தரிசித்தால் முக்தி. காசியில் நீராடினால் முக்தி. ஆனால் திருவண்ணாமலையை இருந்த இடத்திலிருந்து நினைத்தாலே முக்தி கிடைத்துவிடும். ஒரு முறை இந்த தலத்திற்கு சென்றால் மீண்டும் மீண்டும் செல்வதற்குரிய வாய்ப்பு கிடைக்கும்.*

அப்படி ஒரு அருட்சக்தி இந்த மலைக்கு உள்ளதால் இந்த மலையை காந்தமலை என்றும் அழைக்கிறார்கள்.

“சீல முனிவோர்கள் செறியு மலை..
சிந்திப்பார் முன் நின்று முக்தி வழங்கு மலை..
ஞான நெறி காட்டு மலை..
ஞான முனிவோர்கள் நித்தம் நாடு மலை..

அஞ்ஞானக் கங்குல் அகற்று மலை – அன்பருக்கு
மெய்ஞானச் சோதி விளக்கு மலை
ஞானத் தபோதனரை வா என்று அழைக்கு மலை
அண்ணாமலை”

-என்றெல்லாம் போற்றப்படும் திருவண்ணாமலை திருத்தலம், அண்ணாமலை என்றும் அருணாசலம் என்றும் அழைக்கப்படுகின்றது. அருணாசலம் என்பதைப் பிரித்தால் அருணம் + அசலம் என்று வரும். அருணம் என்றால் நெருப்பு. அசலம் என்றால் மலை. ஆகவே இது நெருப்பு மலையாக விளங்குகிறது. அதனால் தான் இதனை அக்னி பர்வதம் என்றும் அழைப்பர் பெரியோர். இந்த அக்னி பர்வதமாகிய நெருப்பு மலையே அருணாசலமாகக் காட்சியளிக்கிறது. அண்ணாமலை என்றால் அண்ண முடியாத மலை என்பது பொருளாகும். அண்ணுதல் என்றால் நெருங்குதல் என்பது பொருள். ஆக யாவரும் எளிதாய் நெருங்க இயலாத பரம் பொருளே இங்கு அண்ணாமலையாய், அருணாசலமாய் வீற்றிருக்கிறது என்பதே உண்மை. இது வெறும் கல் மலை எல்ல. பல்வேறு அதிர்வுகளைத் தன்னகத்தே கொண்டது என்பதே உண்மை.

*⚜மலை தோன்றிய வரலாறு:*
ஒரு முறை அயனுக்கும் அரிக்கும் யார் பெரியவர் என்ற விவாதம் ஏற்பட்டது. இருவரும் தத்தம் தொழில்களை மறந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இறுதியில் இருவருக்கும் இடையே பெரும் போரும் மூண்டது. பாதிக்கப்பட்ட தேவர் முதலானோர் சிவனைச் சரணடைந்தனர். சிவன் அவர்களுக்கு அபயம் அளித்தார். போர் புரிந்து வரும் இருவருக்கும் இடையில் பெரும் அக்னி மலையாக தோன்றினார். இந்த ஒளி மலையைப் பார்த்த திருமாலும், பிரம்மனும் அளவு கடந்ததுள்ள இந்த மலையின் அடியையும், முடியையும் யார் முதலில் காண்கின்றரோ அவரே பெரியவர் என்பதாக முடிவு செய்தனர்.

பிரம்மா அன்னப்பறவையாய் மாறி ஈசனின் திருமுடி தேடிச் சென்றார். விஷ்ணுவோ வராக அவதாரம் எடுத்து சிவனின் திருவடி தேட முற்பட்டார். அடி முடியை இருவரும் காண முடியாததால் தாம் தான் உயர்ந்தவர் என்ற எண்ணம் நீங்கி சிவனைச் சரண் அடைந்தனர். (சிவனின் தலையிலிருந்து விழுந்த தாழம்பூவை சாட்சியாகக் கொண்டு சிவனின் திருமுடியைக் கண்டதாக பிரம்மா பொய் கூறியதும் அதனால் சீற்றமுற்ற சிவன் பிரம்மாவுக்கு வழிபாடு இல்லாமல் போகக் கடவது என்றும், தாழம்பூவை இனி தன் பூஜையில் பயன்படுத்தக் கூடாது என சபித்ததும் தனிக்கதை

சினம் தணிந்த சிவபெருமான் ‘நாம் இத்தலத்தில் அருள்பாலித்ததால் இன்று முதல் இத்தலத்தைச் சுற்றிலும் மூன்று யோசனை தூரம் வரைக்கும் தூய்மையான புனித பூமியாக விளங்கும். அகண்ட ஒளி வடிவாயுள்ள இம்மலை சிறிய உருவம் கொண்ட மலையாக ஆகும். இத்தலத்தை நினைப்பவர்களுக்கு பிறவி நோய் நீங்கும். இந்த மலையும், நகரமும் பிரளய காலத்திலும் அழிவின்றி நிற்கும். கார்த்திகை மாதத்தில் கிருத்திகை நட்சத்திரத்தில் மலையின் உச்சியில் யாம் காண்பிக்கும் பேரொளியைக் கண்டு தொழுவோர்க்கும் அவர் தம் இருபத்தொரு தலைமுறையில் உள்ளவர்களுக்கும் வீடு பேறு உண்டாகும்’ என்று கூறி ஆசிர்வதித்தார்.

*⚜மலையின் சிறப்பு:*
இம்மலை பிறப்பு, இறப்பினை நீக்க கூடியது. ஆதலால் மலைமருந்து என்றும், சிகப்பு நிறம் உடையதால் அருணாகிரி என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு மலையே இலிங்க வடிவாக இருப்பதால் இம்மலையைச் சுற்றுவது இறைவனையே சுற்றி வருவதற்கு சமாகக் கருதப்படுகிறது. பௌர்ணமி தோறும் பல இலட்சம் பக்தர்கள் இங்கு மலை வலம் வருகின்றனர். இம்மலையின் பெயரினை அடிக்கடி சொல்லி வருவது திரு ஐந்தெழுத்தை (ஓம் நமசிவாய) கோடி முறை உச்சரிப்பதற்குச் சமம் என்பது புராணம் கூறும் செய்தியாகும்.

*⚜இம்மலையின் சிறப்பை,*

“தர்சனாத் அப்ரஸதசி
ஜனனாத் கமலாலயே
காச்யாந்கி மரணான் முக்த்தி
ஸ்மரணாத் அருணாசலே:”

“கயிலையைக் கண்டால் முக்தி. திருவாரூரில் பிறந்தால் முக்தி. காசியில் மரணமடைந்தால் முக்தி. அருணாசலத்தை நினைத்தாலே முக்தி.” என்ற பொருள் தணிக்கும் மேற்கண்ட ஸ்லோகத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

அண்ணாமலை வெறும் மலையல்ல; இன்னும் பற்பல யோகியர்களும் சித்தர்களும் தவம் செய்யும் அற்புத மலை. யுகம் தோன்றித் தோன்றி அழிந்தும் மாறாத ஒரே மலை. உள்ளுக்குள் பல்வேறு அசைவுகநிளைத் தன்னகத்தே கொண்ட மலை. உலகின் பல இடங்களில் இருந்தும் பல யோகியர்களும், சித்தர்களும், மகான்களும் இன்னமும் இங்கே வந்து தவம் புரியும் பெருமை மிக்க மலை. காந்தம் இரும்பை இழுப்பது போல தன் பேரொளியால் ஞான வேட்கை உடையோர்களை தன்னகத்தே இழுக்கும் மலை.

அதனால் தான் இம்மலையின் சிறப்பை குரு நமசிவாயர் தமது ‘அண்ணாமலை வெண்பா’வில்

தொண்டர் பணியுமலை..
தந்த்ர மலை யந்த்ர மலை..
சாற்றிய பஞ்சாக்கரமாம் மந்த்ர மலை..
பிறவி நோய்க்கு மருத்து மலை..
அண்ணாமலை
என்றும்

தொண்டர் இணங்கு மலை..
வானோரும் ஏனோரும் போற்றி வணங்கு மலை..
தன் அடியார் செய்த குறை எல்லாம் மறக்கு மலை..
நாளும் குறைவிலாச் செல்வம் அளிக்கு மலை..
என்றும்

பற்பலவாறு புகழ்ந்து பாடியிருக்கிறார்.

இம்மலையின் வேறு பெயர்கள்:
கவுரி நகர், தேகநகர்,அண்ணாமலை, அண்ணாநாடு, அண்ணாவூர், அருணாசலம், சிவலோக நகர், வாயு நகர், அறிவு நகர், தூய்மை நகர், தென்கயிலாயம், சோணமலை, அருணகிரி, முக்தி புரி, மோட்ச புரி என இம்மலைக்கு பல பெயர்கள் உண்டு. இப்பூவுலகம் என்றைக்கு உண்டாயினவோ அன்றே உண்டான மலை அண்ணாமலை. சித்தர்கள், முனிவர்கள், ஞானிகள் அனைவரும் இம்மலையினைச் சிவலிங்கமாகக் கருதி வழிபட்டு வருகின்றனர்.

கிருத யுகத்தில் நெருப்பு மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் பொன்மலையாகவும், கலியுகத்தில் கல் மலையாகவும் திருவுருவம் கொண்டுள்ளது அண்ணாமலை. இத்தலத்தைச் சுற்றி 1008 லிங்கங்கள் புதைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதனால் தான் ஆன்றோர் பலர் இன்னமும் காலணி அணியாதுதான் இப்பகுதிக்குச் செல்வர்.

*⚜ஆலயச் சிறப்பு:*
திருவண்ணாமலை கோயில் 25 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ளது. ஆறாம் பிரகாரம் என்று அழைக்கப்படும் வெளிப்பிரகாரத்தில் மிக உயர்ந்த கருங்கல்லினால் கோயில் சுற்றுச் சுவர் எழுப்பப்பட்டு உள்ளது.

நான்கு திசையிலும் வானை முட்டும் நான்கு கோபுரங்கள் அமைந்துள்ளன. கிழக்கு கோபுரம் ராஜ கோபுரம் என அழைக்கப்படுகிறது. இந்த கோபுரம் 11 நிலைகளுடன் 217 அடி உயரம் கொண்டது. தென்னிந்தியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய கோபுரம் இது தான். இதன் அடிநிலை நீளம் 135 அடி. அகலம் 98 அடி.

தெற்கு திசை கோபுரம் திருமஞ்சன கோபுரம். மேற்கு திசையிலுள்ள கோபுரம் பேய்க் கோபுரம் எனவும், வடக்கு திசையிலுள்ள கோபுரம் அம்மணி அம்மாள் கோபுரம் எனவும் அழைக்கப்படுகின்றது. இங்குள்ள கிளி கோபுரம் மிகவும் சிறப்பானது. இப்போதும் இங்கு பச்சைக் கிளிகள் வசிக்கின்றன. இங்குள்ள மண்டபத்தின் அருகில் தான் அருணகிரிநாதர் தம் உடலைக் கிடத்தி விட்டு பாரிஜாத மலரைக் கொணர்வதற்காகக் கூடு விட்டுக் கூடு பாய்ந்து கிளி ரூபத்தில் இந்திரலோகம் சென்றார்.

இராஜ கோபுரத்தில் நுழைந்தவுடன் வலது புறத்தில் ஆயிரங்கால் மண்டபம் அமைந்துள்ளது. ஆயிரங்கால் மண்டபத்துள் ரமண ரிஷி வழிப்பட்ட பாதாள லிங்கேஸ்வரைக் காணலாம்

ஒரு காலத்தில் இவ்வாலயம் படைக்கலன்கள் பாதுகாக்கப்படும் கூடமாக இருந்திருக்கிறது. பல்வேறு மன்னர்கள் இக்கோயிலுக்கு திருத்தொண்டு புரிந்துள்ளனர். கோபுரத்திளையனார் சன்னதி, கம்பத்திளையனார் சன்னதி போன்றவை சிறப்புப் பெற்றவை. சம்பந்தாண்டானுடன் அருணகிரிநாதருக்கு நடந்த போட்டியில், அருணகிரிக்காக முருகன் தோன்றி காட்சி அளித்த பெருமைக்குரிய சன்னதி இது. முருகன் கம்பத்தில் காட்சி அளித்தார். அதனால் கம்பத்திளையார் என முருகனுக்கு பெயர் வந்தது.

இதன் தென்புறமாக சிவகங்கை புண்ணிய நதி தீர்த்தம் அமைந்துள்ளது. சர்வ சித்தி விநாயகர் சன்னதியின் கீழ் புறமாக சிவகங்கைக் குளம் அமைந்துள்ளது. பெரிய நந்தியின் எதிரி வல்லாள மகாராஜன் கோபுரம் காணப்படுகிறது.

ஆலயத்தின் உள்ளே அண்ணாமலையார் வீற்றிருக்கிறார். தனிச்சன்னதியில் உண்ணாமுலை அம்மன் காட்சி தருகிறார். அண்ணாமலை சன்னதியின் பின்புறத்தே வேணுகோலன் புல்லாங்குழலுடன் காட்சி தருகிறார். லட்சுமி, சரஸ்வதி, ஷண்முகநாதரும் தனிதனிச் சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர்.

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
அண்ணாமலை எம் அண்ணா போற்றி
கண்ணா ரமுதக் கடலே போற்றி

-என்ற பாடல் அண்ணாமலையாரின் சிறப்பை விளக்குவதாகும்.

சுந்தரரைத் தவிர ஞானசம்பந்தர், அப்பர், வாதவூரர் ஆகிய மூவரும் இத்தலத்து இறைவனைத் தொழுதேத்திப் பாடியுள்ளனர். வள்ளலார், அருணகிரி நாதர், குரு நமசிவாயர், குகை நமசிவாயர், ஈசான்ய ஞான தேசிகர், பகவான் ரமண மகரிஷி உட்பட பலர் இத்தலத்து இறைவனையும், இம்மலையையும் பாடிப் பரவியுள்ளனர்.
இம்மலைப்பாதைகளில் சேஷாத்ரி சுவாமிகள் ஆஸ்ரமம், ரமணாஸ்ரமம், யோகி ராம் சுரத் குமார் (விசிறி சாமியார்) ஆஸ்ரமம், ஈசான்ய ஞான தேசிகர் மடம், அடிமுடிச் சித்தர் ஜீவ சமாதி ஆலயம் போன்ற பல ஞானியரது ஆஸ்ரமங்களும், ஜீவ சமாதிகளும், பல கோயில்களும் உள்ளன. இங்குள்ள மலைப் பாதையில் அஷ்ட லிங்கங்கள் உள்ளன. மலை வலத்தின் போது அவர்களையும் வணங்குதல் வேண்டும்.


கிரிவலம்:
இம்மலையின் சுற்றளவு 14 கி.மீ. கிரிவலத்தை எங்காவது துவங்கி, எப்படியாவது முடித்தல் கூடாது. அதன் பெயர் கிரி வலமும் அல்ல. முதலில் ஆலயத்தின் புறத்தே இருக்கும் பூத நாராயணரிடம் மலையைச் சுற்றுவதற்கு அனுமதி வாங்கிக் கொள்ள வேண்டும். அவர் தான் இம்மலையைக் காவல் காக்கிறார். அதன் பின் விக்னங்கள் ஏதும் இல்லாமல் சிறப்பாய் மலை வலம் முடிய வேண்டும் என்று வழியில் உள்ள இரட்டைப் பிள்ளையாரை வணங்கி வேண்டிக் கொள்ள வேண்டும். பின்னர் ஆலயம் சென்று அண்ணாமலையாரையும், உண்ணாமுலை அம்மனையும் தரிசனம் செய்தல் வேண்டும். அதன் பின் வெளியில் வந்து ராஜ கோபுரத்தை வணங்கி விட்டு மலை வலத்தை ஆரம்பிக்க வேண்டும்.

நடந்தே செல்ல வேண்டும். வாகனங்களில் செல்லுதல் கூடாது. இடமிருந்து வலமாக மட்டுமே சுற்ற வேண்டும். இடப்புறமாகவே நடந்து செல்ல வேண்டும். மலை சுற்றும் போது கைகளை வீசிக்கொண்டும், பேசிக்கொண்டும் நடக்கக் கூடாது. நமச்சிவாய நாமத்தை உச்சரித்துக்கொண்டே நடந்து செல்லல் வேண்டும். அங்கும் ஆடிக் கொண்டும், பாடி, ஓடிக் கொண்டும் செல்லக் கூடாது. அமைதியாலவே செல்ல வேண்டும்.

மலை வலம் வரும்போது அருணாசலேஸ்வரின் கிழக்கு கோபுரத்தில் துவக்கி முடிக்கும் போது அருணாசலேஸ்வரரை வணங்கினால் தான் மலைவலம் முடிந்ததாகப் பொருள். அருணாசலேஸ்வரரின் கிழக்கு வாயிலில் இருந்து மலை வலம் வர ஆரம்பிக்க வேண்டும். மலையின் எட்டு திசைகளிலும் தன் பாவங்களை போக்க்கிக் கொள்வதற்காக வழிபட்ட அஷ்டதிக்கு பாலகர்களில், கிழக்கிற்கு அதிபதியான இந்திரன் வழிபட்ட இந்திரலிங்கத்தை முதலில் வழிபடவேண்டும். மலை சுற்றும் சாலையில் உள்ள நந்திகேசுவரர் சன்னதியை வணங்கி வழிபட்டு பின்னர் தான் மலைவலம் வர வேண்டும். தென்கிழக்கு திசைக்கு அதிபதியான அக்னி பூஜை செய்த அக்னி லிங்கம் உள்ளது. இதன் அருகில் சிம்ம தீர்த்தம் உள்ளது.

வழியில் உள்ள சத்குரு சேஷாத்ரி சுவாமிகள் ஆசிரமம் மகத்தான மந்திர சக்தி வாய்ந்தது. கேட்ட வரத்தைத் தர வல்லது. இங்கு கிட்டத்தட்ட 22க்கு மேற்பட்ட மகான்கள் ஜீவ சமாதியில் உள்ளனர். வழிபடுதல் சிறப்பு. தொடர்ந்து ரமணாஸ்ரமம் ஆன்ம அமைதியைத் தர வல்லது. சற்றுத் தொலைவில் விசிறி சாமியார் ஆசிரமம் அமைந்துள்ளது. மன அமைதியைத் தர வல்லது. தியானம் செய்ய ஏற்ற இடம் அது.

அடுத்து வழியில் தெற்கு திசைக்கு அதிபதியான எமன் பூஜை செய்து வழிப்பட்ட எமலிங்கம் உள்ளது. எமன் கட்டளை நிறைவேற்றும் கின்னரர் முதலானோர் இங்கிருந்து தான் புறப்பட்டு செல்லுகின்றனர் என்பது ஐதீகம்.

அடுத்து தென்மேற்கு திசைக்கு அதிபதியான நிருதி, சிவனை வழிப்பட்ட நிருதி லிங்கம் உள்ளது. இங்கு வணங்கிய பின்பு தெற்கிலிருந்து மேற்கில் திரும்பும் வளைவில் நின்று மலையை தரிசிக்க வேண்டும். இந்த இடம் பார்வதி தேவிக்கு ரிஷப வாகனத்தில் சிவபெருமான காட்சி அளித்த இடம் ஆகும். ஆதலால் இங்கு மலையின் முகப்பில் தெரியும் நந்தியின் தலையை வணங்கிச் செல்ல வேண்டும். அடுத்து அருணாசலேஸ்வரின் கோயிலுக்கு நேர் எதிரில் திருநேர் அண்ணாமலை கோயில் உண்டு. இங்கு உண்ணாமுலை அம்மன் தீர்த்தம் அருகிலேயே உள்ளது. அதனை வழிபட வேண்டும்.

அடுத்து சூரியன் வழிபட்ட லிங்கம். மேற்கு திசைக்கு அதிபரான வருணன் வழிபட்ட வருண லிங்கம் ஆகியவை உள்ளது. அதனை வழிபட்ட பிறகு பிரம்மன் வழிபாடு செய்து பாவங்களை போக்கி கொண்ட ஆதி அருணாசலேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலை அடி அண்ணாமலையார் என்று அழைப்பர். இங்கு அவசியம் தரிசனம் செய்தல் வேண்டும்.

அதற்கடுத்து வடமேற்கு திசைக்கு அதிபதியான வாயுலிங்கம் உள்ளது. சிறிது தூரம் சென்றால் வட திசைக்கு அதிபதியான குபேரன் வழிபட்ட குபேர லிங்கம் காணப்படும். அடுத்து இடுக்கி பிள்ளையார் கோயில் உள்ளது. இங்கிருந்து மலையை பார்த்தால் ஐந்து முகங்கள் தெரியும். இது சிவனின் ஐந்து திருமுகங்களை குறிக்கக்கூடியது. இதனை பஞ்ச முக தரிசனம் என்பர். அடுத்து மலை வல பாதையில் இருந்து சுடுகாட்டுக்கு பிரியும் தனிப் பாதையில் சென்றால் வட கிழக்கு அதிபரான ஈசானன் வழிபட்ட ஈசான லிங்கம் உள்ளது. இதனையும் வழிபட்டு, வழியில் உள்ள ஈசான்ய மடத்தில் ஜீவ சமாதியாக உள்ள ஈசான்ய ஞான தேசிகரையும் வணங்க வேண்டும். அதன் பிறகு அருணாசலேஸ்வரர் கோயில் சென்று தரிசித்த பிறகுதான் மலைவலம் பூரணத்துவம் அடைகிறது.

மலை வலம் வர உகந்த நாட்கள்:
எல்லா மாதங்களும் கிரி வலத்திற்கு ஏற்ற மாதங்களே! இருந்த போதும் ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, பௌர்ணமி காலங்கள் மலை வலத்திற்கு ஏற்ற காலங்களும், மாதங்களும் ஆகும்.

புராண காலத்தில் பார்வதி தேவியார் சிவனின் இடப்பாகம் பெற வேண்டும் என்பதற்காக கார்த்திகை மாதத்தில் கிருத்திகை நட்சத்திரத்தில் தன் பரிவாரங்களூடன் மலையை வலம் வந்தார். அப்போது சிவன் காட்சி தந்து உமையாளுக்கு இடப்பாகம் அளித்தார் என்பது வரலாறு. சித்தர்கள், ஞானிகள் ஆகியோர் ஒவ்வொரு மாதப்பிறப்பு மற்றும் பிரதோஷ காலத்தில் மலை வலம் வந்தனர். இன்றும் சூட்சும ரீதியாக வந்து கொண்டிருக்கின்றனர்.

சந்திரன் நம் மனத்துக்கு (எண்ணத்திற்கும்) காரகன். பௌரணமியன்று பூமியில் சூரியனிடமிருந்து சக்திகளை அதிகளவில் கிரகித்து பூர்ண நிலவாக, அதிகக் கலைகள் கொண்டவனாக சந்திரன் விளங்குகிறான். இதனால் பௌர்ணமி மலை வலம் வருவது சாலச்சிறந்தது என பெரியோர்களால் போற்றப்பட்டது.

அமாவாசை, பிறந்த நாள், திருமண நாள், பிரதோஷம், சிவராத்திரி போன்ற புண்ணிய தினங்களிலும் மலை வலம் வரலாம்.

சிவன் கோயில்கள் அனைத்திலும் சிறப்பு வழிபாடு திங்கள்கிழமையாக இருக்கும். சோமவாரம், சோமப் பிரதிஷணம் போன்றவற்றின் மூலம் நாம் இந்த உண்மையை அறிந்து கொள்ளலாம். ஆனால், திரு அண்ணாமலை அக்னி மலை. அக்னிக்குரிய நாள் செவ்வாய்கிழமை. அக்னிக்குரிய கிரகம் அங்காரன். ஆகவே இந்தக் கோயிலில் மட்டுமே சிவபெருமானுக்கு செவ்வாய்கிழமை அன்று தான் விசேஷ வழிபாடு நடக்கின்றது. செவ்வாய் கிழமை அன்று வழிபடுவோர் பிறவிப் பிணியிலிருந்து விடுபடலாம் என்று புராணங்கள் கூறுகின்றன. சத்குரு சேஷாத்ரி சுவாமிகளும் செவ்வாயன்று மலை வலம் வருதலை மிகச் சிறப்பாகக் கூறியுள்ளார்.

ஊழ்வினைகளை நீக்கக்கூடியது அண்ணாமலையார் கோயில். பிறவிப்பிணி நீங்க வேண்டும் என விரும்பும் எவரும் மலை வலம் வருவதால் தத்தம் கர்மாவை குறைத்து கொள்ள முடியும்.

‘அண்ணாமலை தொழுவார் வினை வழுவா வண்ணம் அறுமே!’ -என்கிறது தேவாரமும்.

மலை சுற்றி வரவேண்டும் என நினைத்து ஓரடி எடுத்து வைப்பவர்களுக்கு ஒரு யாகம் செய்த பலன் கிடைக்கும்.

இரண்டாம் அடி எடுத்து வைத்தால் ராஜ சூர்ய யாகம் செய்த பலன் கிடைக்கும்

மூன்றடி எடுத்து வைத்தால் அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.

நான்காவது அடி எடுத்து வைத்தால் எல்லா யாகங்களும் பலன் கிடைக்கும்.

மலையைப் பற்றியும், மலை சுற்றுவதைப் பற்றியும் நினைப்பவர்களுக்கே இந்தப் பலன் என்றால், மலை சுற்றுபவர்களுக்கு கிடைக்கும் பலன்…???

அவர்கள், கைலாசத்திற்குள் நுழைந்து பிறப்பு இறப்பாகிய பிணி நீங்கி, மோட்சமாகிய உயர் பதவியை அடைவார்கள் என்று அருணாசல புராணம் தெரிவிக்கின்றது.

*⚜ஞாயிற்றுக் கிழமை சுற்றினால் சிவபதவி கிடைக்கும்,*

*⚜திங்கட்கிழமை சுற்றினால் இந்திர பதவி கிடைக்கும்.*

*⚜செவ்வாய்க்கிழமை சுற்றினால் கடன்,வறுமை நீங்கும்.*

*⚜புதன்கிழமை சுற்றினால் கலைகளில் தேர்ச்சி, முக்தி கிடைக்கும்.*

*⚜வியாழக்கிழமை சுற்றினால் ஞானிகளாவார்கள்.*

*⚜வெள்ளிக்கிழமை சுற்றினால் விஷ்ணு பதம் அடையலாம்.*

*⚜சனிக்கிழமை சுற்றினால் நவக்கிரக தோஷம் நீங்கும்.*

*🔯நாற்பத்தெட்டு நாட்கள் அதிகாலையில் கணவனும், மனைவியும் நீராடி மலைவலம் வந்தால் மகப்பேறு கிடைக்கும்.*

*🚩கர்ம வினைகள் அனைத்தும் தொலையும்.*

*🚩அமாவாசை அன்று சுற்றினால் மனதில் உள்ள கவலைகள் போகும். மனம் நிம்மதி அடையும். பாவங்கள் அனைத்தும் நீங்கும். பித்ரு தோஷங்கள் நிவர்த்தியாகும்.*

ஆகவே, மலை வலம் வருவோம். மன நலம் பெறுவோம்.

திருவண்ணாமலை அருணாசலசுவாமியின் அற்புத மகிமைகளின் முழு தொகுப்பு சொல்ல இப்பிறவி போதாது.

 

Share
ஆன்மிகம்

Leave a Comment
Published by
ஆன்மிகம்
Tags: Lord Shiva
 • Recent Posts

  Sivapuranam lyrics Tamil | சிவபுராணம் பாடல் வரிகள் | Manickavasagar Tiruvasagam Tamil

  Sivapuranam lyrics Tamil - சிவபுராணம் பாடல் வரிகள் சிவபுராணம் பாடல் வரிகள் (sivapuranam lyrics tamil) மற்றும் இந்த… Read More

  2 months ago

  Aadi Pooram | ஆடிப்பூரம் | Aadi pooram Festival | Aadi Pooram 2023 Date

  Aadi Pooram Festival ஆடிப்பூரம் (Aadi Pooram) என்னும் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது… Read More

  2 months ago

  நம: பார்வதீ பதயே என்பது என்ன?

  ஓம் நமசிவாய... ஓம் சக்தி.... நம: பார்வதீ பதயே என்பது என்ன? சிவன் கோயில்களில் நம:பார்வதீபதயே என ஒருவர் சொல்ல,… Read More

  3 months ago

  உங்கள் எல்லா பிரச்சனைகளையும் தீர்க்கும் சக்தி வாய்ந்த 6 சிவன் மந்திரங்கள் | Powerful shiva mantras tamil

  சக்தி வாய்ந்த 6 சிவன் மந்திரங்கள் | Powerful Shiva Mantras Tamil Powerful shiva mantras tamil |… Read More

  2 months ago

  Girivalam benefits | திருவண்ணாமலை கிரிவலம் பலன்கள் | கிரிவலம் வரலாறு

  பக்தியோடு பக்தர்களால் சுற்றிக் கும்பிடப்படும் நிகழ்வு மலைவலம் அல்லது கிரிவலம் எனப்படும். கிரி என்றால் மலை ; வலம் என்றால் சுற்றுதல்… Read More

  4 months ago

  Today rasi palan 22/09/2023 in tamil | இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் வெள்ளிக் கிழமை புரட்டாசி -5

  Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன் Join our 3rd WhatsApp group *_📖 பஞ்சாங்கம்:… Read More

  7 hours ago