Arthamulla Aanmeegam

மகா சிவராத்திரி வரலாறு மற்றும் ரகசியங்கள் | Maha Shivaratri history and secrets

Maha Shivaratri history and secrets

1)மஹா சிவராத்திரி (maha shivaratri history in tamil) எதனால் கொண்டாடபடுகிறது?
2) இரவு முழுவதும் ஏன் கண் விழிக்க வேண்டும்?
3) இரவு முழுவதும் ஏன் தீபங்கள் ஏற்ற வேண்டும்?

(காலத்தால் அழியாத அபூர்வ ரகசியங்கள்…. இந்த பதிவை முழுமையாக படித்தாலே முழு சிவ ரகசியங்களும் தானாக புரியும்)

எல்லா கேள்விகளுக்கும்…
ஆன்மீக வழியில் ஒருபதிலும்,
அறிவியல் ரீதியான ஒரு பதிவும் ,
புராண ரீதியாக ஒரு பதிலும் ,
மருத்துவ ரீதியாக ஒரு பதிலும் ,
வாழ்வியல் ரீதியாக ஒரு பதிலும் ,
ஆக எந்த விதத்தில் வேண்டுமோ அந்த வகையில் பதில் கிடைக்கும் .

இந்து மதம் என்பது மதம் இல்லை , அது வாழ்வியல் நெறிமுறை , எப்படி ஒரு மனிதன் வாழவேண்டும் என்று செல்லும் நெறிமுறை பின்னடைய முனிவர்கள் , சித்தர்கள் , ஞானிகள் மூலம் மக்களுக்கு இறைவனால் சொல்லப்பட்ட விதிமுறைகள். என்பதே நிதர்சனமான உண்மை. சரி இனி ஒவ்வரு ரீதியான பதில்களையும் பார்க்கலாம்.

சிவராத்திரி என்பது விழா அல்ல! அது, மனதைக் கட்டுப்படுத்தும் மகாவிரதம். அதனால், இதைக் கொண்டாடுகிறோம் என்று சொல்வதை விட, அனுஷ்டிக்கிறோம் என்று சொல்வதே சரி.

சிவராத்திரி என்றால் பட்டினி கிடப்பது, கண்விழிப்பது, கோவிலுக்குப் போவதுடன் நின்று விடாமல், இதன் தத்துவம் உணர்ந்து இவ்விரதத்தை அனுஷ்டித்தால், வாழ்க்கை என்றால் என்ன என்பதை புரிந்து கொள்ளலாம்.

Sivarathri

நம் மனம் சந்திரனின் இயக்கத்தை பொறுத்து செயல்படுகிறது. சந்திரன் வளரும் நாட்கள் 15; தேயும் நாட்கள் 15. இதில் தேய்பிறையின், 14வது நாள், அதாவது, அமாவாசைக்கு முந்தைய நாள், சந்திரன் ஏறத்தாழ மறைந்துவிடும். நம் மனமும் இப்படித்தான்… ஒருநாள், ஒன்றை அடைந்தே தீர வேண்டும் என்ற ஆசை பொங்கும். அடுத்த நாளே, ‘அது எதற்கு, அதனால் என்ன பயன்…’ என எண்ணி, அந்த எண்ணம் தேய்ந்து போகும். மறுநாளே, ’விட்டேனா பார்…’ என்று, அதே ஆசையின் மீது லயிக்க ஆரம்பித்து விடும்; இப்படி நிலையில்லாமல் இருப்பது மனம்.

சிவராத்திரியை ஏன் தேய்பிறையின்,14ஆம் நாள் அனுஷ்டிக்கின்றனர் தெரியுமா?

மனித மனம், ஒரு நிலைப் பட தியானம் அவசியம். அலைபாயும் மனதை, சிவத்தின் மீது வைத்து, எங்கும் போகாமல் கட்டிப் போட வேண்டும். அப்படி கட்டிப் போட்டாலும்,அமாவாசைக்கு முந்தைய நாள், சந்திரனின் சிறு கீற்றுப் போல, மனதின் ஏதோ ஒரு மூலையில் முந்தைய ஆசை எண்ணங்களின் சிறு வடிவம் புதைந்து தான் இருக்கும். அதையும் ஒழித்தால் தான், நாம் பிறவியிலிருந்து விடுபட்டு சிவனை அடையமுடியும். அதற்காக சிவனை வழிபடும் நாளே சிவராத்திரி.இந்த தத்துவத்தை உணர்த்தத்தான், சிவனை லிங்க வடிவில் படைத்தனர் நம் முன்னோர். லிங்கத்தின் பாணம் ஏறத்தாழ முட்டையின் வடிவில் இருக்கும். ஒரு முட்டை படம் வரையுங்கள். அதற்கு முதலும் இல்லை, முடிவும் இல்லை. சுற்றிச் சுற்றிபோய்க் கொண்டே இருக்கும். அதே போன்றுதான் சிவனும்,
முதலும், முடிவும் இல்லாதவர்.

மனிதர்களுக்கு அப்படி இல்லை. நமக்கு பிறப்பு என்னும் முதலும், மரணம் என்னும் முடிவும் இருக்கிறது. இது, நாம் செய்யும் பாவ, புண்ணியத்திற்கேற்ப பல பிறவிகளைத் தருகின்றன. சிலர் ஏழு பிறவி என்று மனிதர்களுக்கு கணக்குச் சொல்வர். ‘எழுபிறவி’ என்பதே சரி! நம் பாவக்கணக்கு கரையும் வரை, மீண்டும் மீண்டும் பூமியில் எழுந்து கொண்டே இருப்போம். பிறவிச் சூழலில் இருந்து விடுபட ஏதாவது வழியிருக்கிறதா என்றால், இருக்கிறது… அதற்கு ஒரு மந்திர வார்த்தையைச் சொல்லியிருக்கின்றனர் முன்னோர்… அதுதான், ‘அன்பே சிவம்!’ பிற உயிர்களையும் தம்மை போல கருதி அன்பு செலுத்த வேண்டும்.

ப்ரதோஷத்தின் அடுத்தநாள் சிவராத்திரியைக் கொண்டாடுவதன் சூட்சுமம் என்ன?

புராணம் சொல்லியிருப்பதை முதலில் பார்ப்போம். என்றும் அழிவே இல்லாமல் அமிர்தம் கடையப்படுகிறது. கடைபவர்கள் தேவர்களும் அசுரர்களும். மந்தார மலை மத்து, கடையும்போது முதலில் ஆலம், காலம் என்கிற இரண்டு விதமான விஷம் வருகிறது. உலகமக்களை இரட்சிக்கும் பொருட்டு சிவன் அதை பருகுகிறார். உமையாகிய சக்தி அதைக்கண்டத்தில் நிறுத்தி வைக்கிறார். எனவே சிவன் திருநீல கண்டர் என்று போற்றப்படுகிறார். ஆனால் இதற்குப் பின்னால் தெளிவான யோக விஷயங்கள் மறைந்துள்ளன.

முதலில் நந்தியின் கொம்பின் நடுவில் நின்று தாண்டவமாடுவது குறித்துப் பார்ப்போம்.

திருமந்திரத்தில் ,
‘ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே”
இந்தபாடலை படிக்கும் போது ஒரு சந்தேகம் வரக்கூடும். வினாயகர் சிவனின் மகன்தானே? நந்தி மகன் என்று போடப்பட்டிருக்கிறதே என்று. சிவபெருமானே நந்தி தேவனாக குருவாக வந்தார் என்றும் சொல்வார்கள். அப்படி என்றால் வாகனமாகக் காட்டுவது எதனால் ?

இதில் உள்ள சூட்சுமத்த நந்தனாரின் பாடலில் ஒரு வரியில் கேட்கலாம். அதாவது அவரைக் கோவிலுக்குள் அனுமதிக்க மாட்டார்கள். ஏனென்றால் அவர் ஜாதியில் குறைந்தவர். ஆனால் பக்தியில் அவருக்கு ஈடு சொல்ல அன்று யாருமே இல்லை. சரி வாசலில் நின்று எட்டிப் பார்க்கலாம் என்றால், இந்த நந்தி மறைக்கிறது. அதை அவர் ”நான் செய்த பாவங்களல்லவா இப்படி நந்தியாக வந்து குறுக்கே நிற்கிறது ” என்பார். ஆக சிவபெருமானை நாம் அடையத் தடையாக உள்ள வினைகள் எங்கே இருக்கும்? நம் உயிர் சக்தியில் பதிந்திருக்கும். அந்த உயிர் சக்தியே நமக்குள் இருக்கும் நெருப்பாகிய குண்டலினி ஆகும். அதாவது நம் தீ என்பதே நந்தி என்றழைக்கப்படுகிறது. அசையாமல் இருக்கும் பேராற்றல் சிவம் அவரே இயக்கும் வல்லமையுள்ள சக்தியாகி நம் உடலில் உயிராக விளங்குகிறார். இதையே குண்டலினி சக்தியாகிய நந்தியின் மேலேறி அமர்ந்திருப்பது போல் காட்டப்படுகிறது. வினாயகர் பார்வதியின் பிள்ளை தான் என்று சொல்வார்கள்.

சிவத்தின் சக்தி அம்சமே குண்டலினியாகி நம் மூலாதாரத்தில் உறைகிறது. எனவேதான் மூலாதாரத்தின் தேவதையாக கணபதியைக் குறிப்பிடுவார்கள். வினாயகரின் உருவமே யோகத்தை உணர்த்துவது என்பதை வினாயகர் அகவல் மூலம் ஔவை நமக்கு தெளிவுபடுத்தி இருக்கிறார்கள்.

குண்டலினியானவளை உச்சிக்கு ஏற்றி
சிவத்தோடு கலக்கும் போது அமிர்தம் உண்ணலாம். குண்டலினி உச்சியில் இருக்கும் போது உச்சியில் சிவதாண்டவம் காணலாம்.எல்லாமே யோக விஷயங்களின் குறிகாட்டிகளாகவே திகழ்கின்றன. பாற்கடல் நம் உடல், நம் முதுகுத் தண்டே மந்தாரமலை, வாசி எனப்படும் சுவாசமே வாசுகி, இடகலை, பிங்கலை என்பது தேவர்கள், அசுரர்கள். வாசி யோகத்தின் மூலம் தவம் செய்யும் போது குண்டலினியானவள் மேலேரும் போது முதலில் நமது பாவ வினைகள்தான் மேலேறும். அது அனாகதம் வரும் போதே அதாவது ஆத்ம லிங்க தரிசனம் காணும் போதே இறையாற்றலோடு கலக்கும், அவ்வாறு கலந்தால் எல்லா தவப் பலனும் வீணாகிவிடும் என்று குண்டலினி தேவியானவள் அதை விசுத்திக்கு மேலேறாமல் தடுத்து விடுவாள். விசுத்திக்கு மேலே பாவம் நீங்கிய சுத்த சக்தியே சிவத்தோடு ஒன்று சேர்ந்துசாதகனுக்கு அமிர்தம் கிடைக்கச்செய்யும். பிரதோஷம் என்றால் பகல் முடிந்து சூரியன்அஷ்தமிக்கும் காலம் என்பார்கள். அதற்குஇன்னொரு பொருளும் உண்டு. அதாவதுஒடுங்கும் நேரம். எல்லா புலன்களும் ஓடுங்கி மகாசக்தி மேலேறும் நேரம். ஶ்ரீவித்யை மார்க்கத்தில் தோள்கண்டம், நீள் கண்டம் என்று சொல்வார்கள். அண்டத்தையும் , பிண்டத்தையும் இணைக்கும் கண்டமாகிய தொண்டைப்பகுதியைக் குறித்துசொல்வார்கள். பக்தர்களை இரட்சிக்கும் படிக்கு அவர்களது பாவமாகிய விஷத்தை சிவன் ஏற்றுக் கொள்வார். ஆனால், மகா சக்தியானவள் அது மேலேறினால் எல்லாம் கெடும் என்று அதை கண்டத்தில் நிறுத்திவிடுவாள்.

ஆக பிரதோஷ வேளையில் (ஒடுங்கும் நேரத்தில்) நமது பாவங்களை சிவன் ஏற்றுக் கொள்வார் என்றுதான் பிரதோஷமும். இதற்கு முன்னால் ஒடுங்கியவர்களின் (நம் முன்னோர்களின்) பாவத்தை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும். பூமியில் உள்ளவர்கள் காலத்தை அறிந்து கொள்ளும் பொருட்டு சந்திரனைத் தேய்து வளரச் செய்து அருளியதற்காகவும், அவ்வாறு தேயும் போது அமாவாசையை ஒட்டிய காலங்களில் ஏற்படும் பலவீனத்தை சரி செய்வதற்காகவும், சிவராத்திரி பூஜை எற்படுத்தப்பட்டது.

நீங்கள் மேல் நாடுகளில் உள்ளவர்களைக் கேளுங்கள் பதிமூன்றாம் நாள், அல்லது எண்ணைக் கண்டு பயப்படுவார்கள்.இதில் ஆச்சரியம் என்னவென்றால், நம் முன்னோர்களுக்கும் அந்த நம்பிக்கை இருந்தது. பதி மூன்றாவது நாளான (திதி) அன்று பிரதோஷ வேளையில் பூமிக்கு வானில் இருந்து விஷத்தன்மையும், தீயசக்திகளும் வருவதாக நம்பிக்கை இருக்கிறது. அந்த வேளையில் பூஜை செய்து உலகை காக்க வேண்டுவதே பிரதோஷ பூஜை என்றும். அந்த நேரத்தில் முறைப்படி அதாவது ஆகமவிதிப்படி கட்டப்பட்ட கோவிலில் இருந்தால் அந்த விஷத்தன்மை உள்ள தீயசக்தியின் பாதிப்பு ஏற்படாது என்றகருத்தும் நிலவுகிறது .

எது எப்படியோ எல்லா பாதைகளும் வழிபாடுகளோ, யோகமோ எதுவாயினும் பலன் இறைவனை அடைவதே. என்ன சற்று முன் பின்னாக அமையும். சிவ இராத்திரி எதனால் என்று புராணக்கதைகள் கேட்டிருக்கிறோம். ஒரு வேடன் புலிக்கு பயந்து மரத்துக்கு மேலே ஏறி அமர்ந்திருந்ததும், அது வில்வ மரம் என்பதும், தூக்கம் வராமல் இருக்க ஒவ்வொரு இலையாகப் பறித்து கீழே போட்டுக்கொண்டிருக்க, அது கீழே இருக்கும் சிவலிங்கத்தில் விழுந்ததனால், அவனுக்கு சிவ தரிசனம் கிடைத்தது, அதுவே சிவராத்திரி எனக் கொண்டாடப்படுகிறது என்று கேள்விப்பட்டிருக்கிறோம்.
மற்றொரு புராணமும் உண்டு. நான்கு முகம் கொண்ட அயனும், திருமாலும் தங்களுக்குள்சொற்போரிட்டுத் தன்னை தேடின பொழுது, சிவ பெருமான் திருவுளம் கொண்டு மாசித் திங்கள் பதினான்காம் நாள் திங்கட்கிழமை திருவோணம் கூடிய நல்ல நாள் இராத்திரி பதினான்கு நாழிகையில் மகேஷ்வர மூர்த்தமாக அடியும் முடியும் காட்டாமல் அவ்விருவருக்கும் காட்சி அளித்து, விசாரிக்கும் போது, பிரம்ம தேவன் சிவனாரின் திருமுடியைக் கண்டதாகப் பொய்யும், திருமாலானவர் திருஅடியைக் காணவில்லை என்று மெய்யும் விளம்பின படியால், நான்முகனுக்கு கோவிலே இல்லாமல் போவது என்ற சாபமும், திருமாலுக்கு காத்தற்சிறப்புரிமை உண்டாகக் கடவது என்று வாழ்த்தும் அருளின தன்றி, அக்காட்சி ஒருமூன்றேமுக்கால் நாழிகை அளவு விளங்கி மற்ற தேவர்கள் எல்லோரும் கண்டுள்ளமையால், லிங்கோற்பவ காலமே முகூர்த்தம் என்றும், இராத்திரியில் பரமசிவன் மகேஷ்வர மூர்த்தமாகத் தோன்றினபடியால் சிவராத்திரி என்றும் பெயர் பெற்றது. வேடனானவன் இதே நாளில் வில்வத்தால் சிவபெருமானை அர்ச்சித்ததால் சிவதரிசனம் பெற்றான் என்பதே உண்மையாகும்.

ஆனால்,

இதற்குப் பின்னால் விஞ்ஞான ரீதியான காரணம் உள்ளது என்பது பலருக்குத் தெரியாது.

பொதுவாக ஒவ்வொரு அமாவாசை,பௌர்ணமி அதற்கு முன் பின் தினங்களில் பூமியில் சந்திரனுடைய காந்த சக்தியில் மாற்றம் ஏற்பட்டு சகல விதமான ஜீவராசிகளும் மனநிலைத் தடுமாற்றத்திற்கு ஆளாகி, அந்த நேரத்தில் உதிக்கும் எண்ணங்களினால் செயல்படும் செயல்களின் விளைவாகத்துன்பங்களை அனுபவிக்கின்றனர். இது அவர்களை அறியாமலேயே ஒவ்வொரு மாதமும் நடந்து கொண்டிருக்கிறது.காரணம் என்னவென்றால் சந்திரன் மனோகாரகன். மனதையும் அதன் எண்ணங்களையும் ஆள்பவன். மனநோயாளிகள் அமாவாசையை ஒட்டிய நாட்களில் அதிகத் துன்பத்திற்கு ஆளாவதும் இதனால்தான். மேற்படி நாட்களில் வியாதியின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதுஅனுபவத்தில் நாம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம். சாதாரணமானவர்களுக்கு மேற்படி நாட்களில் ஞாபகமறதி, அலர்ஜி, டென்சன்(மன அழுத்தம்), ஜீரண சக்திக் குறைபாடு போன்றவைகளால், சோர்வு, தூக்கமின்மை, அதிக உஷணம் போன்ற துன்பங்கள் ஏற்படும். இன்றைய நடைமுறை வாழ்க்கைச் சூழலில் இதை உணராமல் நாம் வாழந்து பழகிக்கொண்டோம். நம் முன்னோர்கள் இதைப்புரிந்து கொண்டதால், அமாவாசை மற்றும் பௌர்ணமியை ஒட்டிய நாட்களில் மனவலிமையையும், அறிவின் விழிப்பாற்றலைத்தூண்டவும் மன ஒருமை மற்றும் உடல் இயக்கங்களில் நிதானத்தைக் கொண்டுவரவும் விரதம் மற்றும், பூஜைகள், தியானம் போன்றவற்றைக் கடை பிடித்தார்கள்.

மாதாந்த வளர்பிறை, தேய்பிறை இரண்டிலும் வருகின்ற ஏகாதசி திதிகளில் குறைவான உணவுப்பழக்கத்தை கை கொள்வார்கள். துவாதசி திதிகளில் கிழங்கு உணவு வகைகளைத் தவிர்த்து, உப்பைக் குறைத்து, கீரைவகைகளை அதிகமாகச் சேர்ப்பார்கள். திரியோதிசி நாட்களில் உணவில் எண்ணெயை நீக்கி, இனிப்பை சொஞ்சம் சேர்த்து மதியம்1.30 மணிக்குள் உண்பார்கள். சதுர்தசி திதிகளில்(மாத சிவராத்திரி) மதிய உணவு அரை வயிறும் இரவு பால் பழம் உணவாகக் கொள்வார்கள். சிலர் சிவ சிந்தனையில் இருந்து பூஜை, அபிஷேக ஆராதனைகளைச்செய்வார்கள், யோக சாதகர்கள் தியானம் மேற்கொள்வார்கள்.

மாத சிவராத்திரியில் நடுச்சாமம் (இரவு 12.00 மணி) வரை விழித்திருந்து ஈசனை நினைத்து பூஜைகளோ, தியானமோ மேற்கொள்வார்கள். அதற்குப்பிறகு ஓய்வு எடுப்பார்கள். இவ்வாறாக சிவராத்திரி பூஜையினை மாமாங்க வழிமுறையாக செய்து வந்து 12 வது மாதம் வருகிற மஹாசிவராத்திரி (சூரியன் சந்திரனின் வீட்டுக்கு எட்டாவது வீட்டில் சஞ்சரிக்கும் காலம்) அன்று இரவு முழுவதும் கண்விழித்து ஈசனை மனதில் நிறுத்தி சிவ பூஜையினைச் செய்து மாமாங்க பூஜையினை நிறைவு செய்வார்கள். அதாவது சரியை வழியில் உள்ளவர்கள் பூஜைகள் விரதங்கள். கிரியை வழியில் உள்ளவர்கள் இரவில் தூங்கி விடும் அறிவை தூங்காமல் விழிப்பு நிலையில் இருக்கச்செய்வது(தியானம்). இதைக்கடைபிடிப்பதால்உடல்நலமும், மனவளமும் காக்கப்படும்.

சைவசமய ஆகமங்களில் சிவராத்திரி ஆகம வழிமுறைகள், கால வரையறை, பூஜைமுறை என்று விரிவான விளக்கங்கள்
கூறப்பட்டுள்ளன. பக்தியும், பூஜைகளும், விரதங்களும், தியான யோகங்களும் எல்லாமே ஈசனை அடைவதற்குத்தான். அதற்கு உடல்நலமும், மனவளமும் அவசியம் என்பதைக்கருத்தில் கொண்டே இத்தகைய நுட்பமான விரத முறைகள் நம் முன்னோர்களால் தரப்பட்டிருக்கிறது. அதை அவர்கள் இந்தப் பிரபஞ்ச சக்தியின் இயக்கத்தை ஒட்டியே வடிவமைத்துத் தந்திருக்கிறார்கள் என்பதையோசித்துப் பார்க்கும் போது அவர்களின்
விஞ்ஞான அறிவு குறித்து ஆச்சரியம் தோன்றுகிறது. மேலும் மெய்ஞானத்தின் ஒருசிறு பகுதியே விஞ்ஞானம் என்பதுவும் புலனாகிறது. அதற்காக நம்மைத் தயார்படுத்திக்கொள்ளும் நாளே சிவராத்திரி. இந்த விரதத்தை
பொருள்உணர்ந்து அனுஷ்டித்தால் சிவனருளால் அனைத்து வரங்களும் கிடைக்கும்.

மகா சிவராத்திரியில் இதை எல்லாம் செய்யாதீர்கள்!

*************************

மகா சிவராத்திரி அன்று இறைவனுக்கு நான்கு ஜாம பூஜைகள் செய்யப்படும். ஒவ்வொரு ஜாமத்தின் போதும் அபிஷேக, ஆராதனைகள் செய்யப்படுவது வழக்கம்.

மகா சிவராத்திரி அன்று நாம் செய்ய கூடாத சில நடைமுறை பழக்கத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்……

நான் கடந்த வருடம் சிவராத்திரி அன்று சிவனை தரிசிக்க கோவில் சென்ற பொழுது ஒரு புரம் உணவு வழங்கப்பட்டு கொண்டு இருந்தது, மக்கள் உணவுகளை உண்டு விட்டு கோவிலில் இலைகளை சிதறி கோவிலை அசுத்தப்படுத்தி கொண்டு இருந்தார்கள்.

மகா சிவராத்திரி அன்று செய்ய கூடாத மிக முக்கியமான தவறு பக்தர்களுக்கு உணவு அளிப்பது…

அடியார்கள், சிவாச்சாரியார்கள், கோவிலில் உள்ள குருக்கள் ஏன் இதை கவனித்து தானம் செய்பவர்களிடம் சொல்ல தவறுகிறார்கள் என்று புரியவில்லை,

உண்மையில் சிவராத்திரி நமக்கு அருளப்பட்டதன் காரணத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

மனிதர்களுக்கு மிக முக்கியானது இரண்டு விஷயம். உணவு, நல்ல தூக்கம். இந்த இரண்டையும் விலக்கி, சிவனுக்காக நாம் விரதமிருப்பது தான் இந்த நாளின் நோக்கமாகும்.

உணவையும், உறக்கத்தையும் விலக்கினால் புலன்கள் தானாகவே அடங்கும். அப்போது இறையுணர்வு பெறமுடியும். நினைத்த காரியம் சித்தி ஆகும். வைகுண்ட ஏகாதசியும் இந்த நோக்கம் தான்.

கோவில் என்ன சிற்றுண்டி கடையா? இப்படி பிரசாதம் என்று அவர்கள் பசியை வெல்ல உதவாமல் தரிசிக்க வரும் பக்தர்களை பசியாற்றி மஹா சிவராத்திரி நோக்கத்தை கெடுத்து சாபத்தை பெறுகிறார்கள் என்ற காரணத்தை யார் சொல்வது. கோவில் நிர்வாகம் கண்டு கொள்வது இல்லை.

மகா சிவராத்திரி அன்று அம்பாளே உணவு அருந்தாமல் இருக்கும் பொழுது நமக்கு ஏன் உணவு?

மேலும் சிவபெருமான் ஆரவாரத்தை விரும்பாதவர், ஏகாந்தம்; ஏகாந்தம்; ஏகாந்தம். முற்றிலும் அமைதி இவர் விரும்புவது அமைதி

மஹா சிவராத்திரி அன்று சிவபுராணம், கோளறு பதிகம், லிங்காஷ்டகம், பஞ்சாட்சர ஸ்தோத்திரம், நடராஜப் பத்து, பரமசிவன் ஸ்தோத்திரங்களைப் படிக்கலாம். தமிழில் திருமறைகளையும் ஓதலாம்.

சிவராத்திரியன்று பஞ்சாட்ச மந்திரம் உச்சரிப்பதால் மற்ற நாட்களில் நூறுகோடி முறை பஞ்சாட்சரம் ஜெபித்த பலன் கிட்டும் என்கிறது சாஸ்திரம்.

ஆனால் பக்தர்களின் ஆரவாரம், கேளிக்கைகள், சப்தம் கோவிலை பிளக்கிறது. சிவராத்திரி விழாவாக மாறிக்கொண்டு இருக்கிறது.

ஆன்ம தரிசனம் தேடும் சிவ பித்தர்களுக்கு,

மாலை 6 மணிக்குள் குளித்து விட்டு, உணவு முடித்து விட்டு கோவிலுக்கு செல்லுங்கள், பணியில் உள்ளவர்கள் பணி முடித்து விட்டு குளித்து விட்டு கோவிலுக்கு சென்று அமைதியாக ஒரு இடத்தில அமர்ந்து சிவ சிந்தனைகள் செய்தாலே போதுமானது.

மனதில் சொல்லவேண்டிய மந்திரம்

‘சிவாய நம ஓம்
சிவாய சிவ ஓம்
சிவாய வசி ஓம்
சிவ சிவ சிவ ஓம்’

இப்படி செய்வது ஒரு விதம்,

மற்றது 9 லிங்க தரிசனம் ஒரே இரவில் தரிசிப்பது இன்னொரு விதம்,

சிவ பெருமான் ஆலகால விஷத்தை உட்கொண்டதால் அவருடைய உடல் மிகவும் வெப்பமாக மாறி விடுவதாக ஐதீகம். அந்த வெப்பத்தைத் தணிப்பதற்காகவே அவருக்குப் பல்வேறு வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்கிறோம்.

தேன், பால், தயிர், நெய் ஆகியவற்றால் அபிஷேகம் செய்வது எண்ணற்ற பலன்களைக் கொடுக்கக் கூடியது, முடிந்தால் இவைகளை கோவிலுக்கு உபயமாக தரலாம்.

இப்படி சரியாக எதுவும் செய்யாமல் இரவு முழுவதும் தொலைகாட்சி பார்த்து கண்விழிப்பது, நண்பர்களுடன் பொழுது போக்கிற்காக கோவிலை சுற்றி வருவது, கோவிலில் உணவு கொடுத்து புண்ணியம் சேர்கிறேன் என்று செய்வது பலன் இல்லை.

சிவராத்திரி என்ற பெயர் வர காரணம் அம்பாள் தான். பிரளய காலத்தின் போது பிரம்மனும், அவரால் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்டநிலையில், இரவுப் பொழுதில் அம்பிகை உமாதேவி, பரமேஸ்வரனை நினைத்து பூஜை செய்தாள்.

நான்கு ஜாமங்களிலும் இரவு முழுவதும் ஆகம விதிப்படி அர்ச்சனை செய்தாள். பூஜையின் முடிவில் அம்பிகை ஈஸ்வரனை வணங்கி, அடியேன் தங்களைப் பூசித்த இந்த இரவை, தேவர்களும், மனிதர்களும் தங்கள் திருநாமத்தாலேயே, அதாவது “சிவராத்திரி” என்றே கொண்டாட வேண்டும் என்று வேண்டினாள்.

சிவராத்திரி அன்று, சூரியன் மறைந்தது முதல் மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை, தங்களை(சிவனை)ப் பூஜை செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எல்லாவிதமான பாக்கியங்களையும் தந்து முடிவில் மோட்சத்தையும் அளிக்க வேண்டும். அருள் புரியுங்கள் என்று அன்னையானவள் வேண்டிக் கொண்டாள்.

சிவபெருமானும், அப்படியே ஆகட்டும் என்று கூறி அருள் புரிந்தார். அந்த இரவே “சிவராத்திரி” என வழங்கப்பட்டு அனைவராலும் கொண்டாடப்படுகிறது.

பகல் பொழுது பரமேஸ்வரனுக்கும், இரவுப் பொழுது அம்பிகையான உமாதேவிக்கும் உரியது என்பது நியமம். ஆனால் சிவராத்திரி என்பது அம்பாளின் வேண்டுதலின் படி கொண்டாடப்படுவதால் அது சிவனுக்கு உரியதாயிற்று.

முடிந்தால் முறையாக வழிபாடு செய்யுங்கள், தவறுகளும் மாறுதலும் செய்யவேண்டாம்.
திருச்சிற்றம்பலம்…

சிவராத்திரி பற்றிய 40 அரிய தகவல்கள்

செல்வ வளம் தரும் மஹா சிவராத்திரி வழிபாடு

சிவபுராணம் பாடல் வரிகள்

லிங்காஷ்டகம் தமிழ் பதிகம் | Lingashtagam Tamil song lyrics

You can find this article related to lord shiva – Maha shivaratri that is one of the famous and popular festival in hindu religion! You can find lord shiva songs with lyrics in this poral

Share
ஆன்மிகம்

Leave a Comment
Published by
ஆன்மிகம்
Tags: Lord Shiva
  • Recent Posts

    ஆதி சங்கரர் முழு வாழ்க்கை வரலாறு | Aadhi Sankarar History in Tamil

    ஆதிசங்கரர் பற்றிய முழு வாழ்க்கை வரலாறு | Aadhi Sankarar History in Tamil (சற்று நீண்ட பதிவு பொறுமையாக… Read More

    1 day ago

    இல்லாத ஒன்றிற்கு ஆசைப்பட்டால் – கருத்து கதைகள்

    இல்லாத ஒன்றிற்கு ஆசைப்பட்டால்.. பேராசைக்கு முன்னுரை அளித்தால் அதுவே பேரழிவுக்கு காரணமாகும். சிலருக்குத் தேவைக்கு அதிகமாகப் பணம் இருந்தும் மனக்… Read More

    3 days ago

    63 நாயன்மார்கள் சுருக்கமான வரலாறு | 63 Nayanmaargal Life story

    63 நாயன்மார்கள் வரலாறு சுருக்கம்... 63 Nayanmaargal Life story 1. திருநீலகண்ட நாயனார்: கூடா நட்பின் விளைவால், மனைவியை… Read More

    4 days ago

    நேர்மை கூட ஒரு போதை தான் | Honesty Moral Story

    நேர்மை கூட ஒரு போதை தான் ஒரு வியாபாரி தனக்கு பயணம் செய்ய ஒட்டகம் ஒன்று வாங்கி வர சந்தைக்குப்… Read More

    1 week ago

    சிவபெருமானின் பாதம் பார்க்க வேண்டுமா? | Sivaperuman Patham Story

    சிவபெருமானின் பாதம் பார்க்க வேண்டுமா? மதுரை மீனாட்சி அன்னை உடனுறை சொக்கநாத பெருமான் ஆலய சன்னிதியில் உள்ள வெள்ளியம் பல… Read More

    1 week ago

    அட்சய திரிதியை பூஜை முறையும் பலனும் | Akshaya Tritiya benefits

    அட்சய திரிதியை பூஜை முறையும் பலனும் Akshaya Tritiya benefits சித்திரை (10) நாள் 10.5.2024 வெள்ளிக்கிழமை அட்சய திருதியை… Read More

    1 week ago