Aanmeega Kathaigal

கல்யானைக்கு கரும்பருத்திய படலம் | Kal Yaanai Story – Thiruvilaiyadal

கல்யானைக்கு கரும்பருத்திய படலம் | Kal Yaanai Story – Thiruvilaiyadal

கல்யானைக்கு கரும்பருத்திய படலம் (Kal Yaanai Story) இறைவனான சொக்கநாதர் சித்தர் வேடம் பூண்டு அபிடேகபாண்டியனின் சந்தேகத்தை நீக்குவதற்காக கல்யானைக்கு கரும்பினை கொடுத்து உண்ண செய்ததை விளக்கிக் கூறுகிறது.
இப்படலம் எல்லாம் வல்ல சித்தரான படலத்தின் தொடர்ச்சியாகும். கல்யானை உயிர் பெற்றபோது அதனுடைய உடலமைப்பு மற்றும் அசைவுகள், கரும்பைத் தின்ற விதம் ஆகியவற்றை இப்படலம் விளக்கிக் கூறுகிறது.
அபிடேகபாண்டியன் மற்றும் அவனின் காவலர்கள் சித்தரிடம் நடந்த விதம், சித்தரின் திருவிளையாடல்கள் ஆகியவற்றை இப்படலத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இப்படலம் திருவிளையாடல் புராணத்தில் கூடல் காண்டத்தில் இருபத்தியோராவது படலமாக அமைந்துள்ளது.

அபிடேகபாண்டியனும், சித்த மூர்த்தியும்
அபிடேகபாண்டியனுக்கு வீடுபேற்றினை அளிக்க எண்ணிய சொக்கநாதர் சித்தர் வடிவம் கொண்டு மதுரையில் எழுந்தருளினார். மதுரை மக்களிடையே அவர் பல சித்து விளையாடல்களைப் புரிந்தார்.
சித்தரின் சித்து விளையாடல்களை கேள்வியுற்ற அபிடேகபாண்டியன் சித்தரை அரண்மனைக்கு அழைத்து வருமாறு கட்டளையிட்டான். பாண்டியனிடம் தனக்கு எதுவும் தேவையில்லை.
பாண்டியனுக்கு ஏதேனும் தேவையெனில் அவனை வந்து பார்க்கச் சொல்லி அபிடேகபாண்டியனின் ஆட்களை திருப்பி அனுப்பிவிட்டார்.
பாண்டியனும் சிவபெருமானின் அருளைப் பெற்று இவ்வுலக ஆசையைத் துறந்தவர்கள் யாரிடம் ஏதேனும் பொருட்களை விரும்பி அவர்களை நாடி செல்ல மாட்டார்கள் என்று எண்ணினான்.
பின்பு “சித்தமூர்த்திகள் என்னை நாடிவர எந்த ஒரு காரணமும் இருக்கவில்லை. ஆதலால் நானே அவரை நாடிச் செல்வேன்” என்று கருதினான்.
தைமாதம் முதல் நாள் அன்று சொக்கநாதரை வழிபட வேண்டி அபிடேகபாண்டியன் மீனாட்சி அம்மை கோவிலுக்குச் சென்றான். பாண்டியனின் வருகையை அறிந்த சித்தர் கோவிலின் வடமேற்கு திசையில் சென்று அமர்ந்திருந்தார். அபிடேகபாண்டியன் சொக்கநாதரை வழிபட்டு கோவிலை வலம்வந்தபோது பாண்டியனின் மெய்காவலன் முன்னதாகச் சென்று சித்தமூர்த்தியிடம் “அரசர் வரும்நேரமாதலால் நீங்கள் இவ்விடத்தை விட்டுச் செல்லுங்கள்” என்று கூறினான்.

பின்னர் வந்த அபிடேகபாண்டியன் சித்தரிடம் “சித்தரே, தாங்கள் யார்? தங்களது ஊரும், நாடும் எவை? நீங்கள் எதனை எதிர்பார்த்து இங்கு வந்து சித்து வேலைகளை மதுரை மக்களுக்கு காட்டிக் கொண்டிருக்கிறீர்கள்? என்னால் உங்களுக்கு ஆகவேண்டியது ஏதும் உளதா?” என்று கேட்டான்.
இதனைக் கேட்ட சித்தர் சிரித்துக் கொண்டே “அப்பா எல்லா நாட்டிலும், எல்லா ஊரிலும் நாம் திரிவோம். நான் தற்போது காசியை சொந்த ஊராகக் கொண்டுள்ளேன்.
எதிலும் பற்றுஇல்லாமல் பிச்சை எடுத்து வாழும் அடியவர்களே என்னுடைய உறவினர்கள். நாம் எந்நாளும் வித்தைகள் செய்கின்ற சித்தராவோம்.
தில்லைவனம் உள்ளிட்ட சிவதலங்களை வணங்க வந்தோம். இம்மையில் வளமான வாழ்கையையும், மறுமையில் வீடுபேற்றினை அளிக்கும் மதுரையம்பதியில் தற்போது தங்கியுள்ளேன்.
உன்நாட்டு மக்கள் என்னிடம் என்ன கேட்கிறார்களோ அதை தருவது போல் உனக்கும் நீ வேண்டியதைக் கொடுக்கிறேன். அறுபத்திநான்கு கலைகளிலும் நாம் நன்கு தேர்ச்சியுடையோம்.
விண்ணுலகத்தில் உள்ளவற்றை மண்ணுலகத்திற்கு கொண்டு வரும் ஆற்றலை உடையவன். ஆதலால் பாண்டியனே உன்னிடத்தில் நாம் பெறத்தக்கது ஒன்றும் இல்லை.” என்று கூறி புன்னகைத்தார்.
சித்தரின் வார்த்தைகளைக் கேட்ட அபிடேகபாண்டியன் அதிர்ச்சி அடைந்து ‘இவருடைய செருக்கு, பெருமிதம், இறுமாப்பு ஆகியவற்றை கண்டிப்பாக சோதித்து அறிய வேண்டும்’ என்று எண்ணினான்.

கல்யானைக்கு கரும்பு அளித்தல்
அப்போது அங்கே ஒரு உழவன் செங்கரும்பினைக் கொண்டு வந்து அரசனை வணங்கினான்.
அபிடேகபாண்டியன் அக்கரும்பினைப் பெற்றுக் கொண்டு “வல்லோர்களில் வல்லோர் என்று உம்மை மதித்துக் கொண்டவரே, நீர் இங்கு நிற்கும் இக்கல்யானைக்கு இக்கரும்பினைக் கொடுத்து அதனை உண்ணச் செய்தால் எல்லா வல்ல சித்தரும் நீரே, இங்கு குடிகொண்டிருக்கும் சொக்கநாதரும் நீரே என்பதை நான் ஒப்புக் கொள்வேன். நீர் விரும்பிதை அளிப்பேன்.” என்று கூறினான்.
பாண்டியன் கூறியதைக் கேட்ட இறைவனார் சிரித்துக் கொண்டே “பாண்டியனே எமக்கு உன்னால் வரும் பயன் ஏதேனும் இல்லை. இருப்பினும் நீ கூறியவாறே இதே இக்கல்யானை இப்பொழுதே இக்கருப்பினை கடித்து உண்பதைப் பார்” என்று கூறி கல்யானையைப் பார்த்தார்.
இறைவனின் கண் அசைவினால் கல்யானை உயிர்பெற்று தன்னுடைய கண்களை உருட்டியது. வாயினைத் திறந்து கோவில் அதிரும்படி பிளிறியது.
அபிடேகபாண்டியனின் கையிலிருந்த கரும்பினைப் பிடுங்கியது. பின்னர் அதனுடைய கடைவாயில் கரும்புச்சாறு ஒழுகுமாறு கரும்பினை மென்று தின்றது.
பின்னர் சித்தமூர்த்தி கல்யானையை மீண்டும் பார்த்தார். உடனே கல்யானை தன்னுடைய துதிக்கையால் பாண்டியன் அணிந்திருந்த முத்தாலாகிய மாலையை பிடுங்கியது.
இதனைக் கண்ட மெய்காவலர்கள் யானை அடிக்க கம்பினை உயர்த்தினர். சித்தமூர்த்திகள் கோபம் கொண்டு மெய்காவலர்களைப் பார்த்தார்.
அதற்குள் கல்யானை முத்துமாலையை விழுங்கி விட்டது. இதனைக் கண்ட பாண்டியன் மிக்க கோபம் கொண்டான். உடனே மெய்காவலர்கள் சித்தமூர்த்தியை அடிக்க நெருங்கினர்.
உடனே சித்தமூர்த்தி புன்னகையுடன் “நில்லுங்கள்” என்று கூறினார். உடனே அவ்வீரர்கள் அடுத்த அடியை எடுத்து வைக்க முடியாமல் அப்படியே அசைவின்றி நின்றனர். இதனைக் கண்ட பாண்டியனுக்கு கோபம் மாறி பயம் உண்டாகியது.

சித்தமூர்த்திகளின் காலில் விழுந்து வணங்கி “அடியேனின் பிழையைப் பொறுத்தருளுங்கள்.” என்று கூறினான். சித்தமூர்த்தி “பாண்டியனே நீ வேண்டும் வரம் யாது?” என்று கேட்டான்.
அதற்கு அபிடேகபாண்டியன் “நற்புத்திரப் பேறு அருளுக” என்று வேண்டினான். சித்தமூர்த்தியும் “அவ்வாறே ஆகுக” என்று அருள்புரிந்தார்.
கல்யானையின் மீது சித்தமூர்த்தி தன்னுடைய கடைக்கண் பார்வையைச் செலுத்தினார். உடனே யானை தனது துதிக்கையை நீட்டி பாண்டியனின் முத்துமாலையை திருப்பிக் கொடுத்தது.
பாண்டியனும் அதனை வாங்கி அணிந்து கொண்டான். அப்போது சித்தமூர்த்தி மறைந்து அருளினார். யானையும் மீண்டும் கல்யானையாகி அசைவற்று நின்றது.
இறைவனின் திருவிளையாடலை எண்ணிய அபிடேகபாண்டியன் மீண்டும் சொக்கநாதரை வணங்கி அரண்மனை திரும்பினான்.
சித்தமூர்த்தியின் திருவருளால் அபிடேகபாண்டியனுக்கு விக்ரமன் என்ற புதல்வன் பிறந்தான். விக்ரமன் வளர்ந்து பெரியவனானதும் அபிடேகபாண்டியன் விக்ரமனுக்கு அரசாட்சியை அளித்து இறைவனின் திருவடியை அடைந்தான்.

கல்யானைக்கு கரும்பருத்திய படலம் கூறும் கருத்து
இறைவனை தவறாக எண்ணி சோதித்தாலும் இறைவன் இறுதியில் தன் பக்கதர்களைக் காப்பான் என்பதே இப்படலம் கூறும் கருத்தாகும்.

Share
ஆன்மிகம்

Leave a Comment
Published by
ஆன்மிகம்
  • Recent Posts

    63 நாயன்மார்கள் சுருக்கமான வரலாறு | 63 Nayanmaargal Life story

    63 நாயன்மார்கள் வரலாறு சுருக்கம்... 63 Nayanmaargal Life story 1. திருநீலகண்ட நாயனார்: கூடா நட்பின் விளைவால், மனைவியை… Read More

    16 hours ago

    நேர்மை கூட ஒரு போதை தான் | Honesty Moral Story

    நேர்மை கூட ஒரு போதை தான் ஒரு வியாபாரி தனக்கு பயணம் செய்ய ஒட்டகம் ஒன்று வாங்கி வர சந்தைக்குப்… Read More

    6 days ago

    சிவபெருமானின் பாதம் பார்க்க வேண்டுமா? | Sivaperuman Patham Story

    சிவபெருமானின் பாதம் பார்க்க வேண்டுமா? மதுரை மீனாட்சி அன்னை உடனுறை சொக்கநாத பெருமான் ஆலய சன்னிதியில் உள்ள வெள்ளியம் பல… Read More

    6 days ago

    அட்சய திரிதியை பூஜை முறையும் பலனும் | Akshaya Tritiya benefits

    அட்சய திரிதியை பூஜை முறையும் பலனும் Akshaya Tritiya benefits சித்திரை (10) நாள் 10.5.2024 வெள்ளிக்கிழமை அட்சய திருதியை… Read More

    6 days ago

    அட்சய திருதியை பற்றி 60 தகவல்கள் | Akshaya Tritiya

    Akshaya tritiya அட்சய திருதியை பற்றி 60 தகவல்கள் மற்றும் சிறந்த நிகழ்வுகள் (Akshaya tritiya) அட்சய திருதியையின் முக்கியத்துவத்தையும்,… Read More

    6 days ago

    ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் | odi odi utkalantha lyrics in tamil

    odi odi utkalantha lyrics in tamil சித்தர் சிவவாக்கியர் பாடிய ஓடி ஓடி உட்கலந்த (Odi Odi Utkalantha)… Read More

    1 week ago