வரகுணனுக்கு சிவலோகம் காட்டிய படலம் | Varagunan story in Thiruvilaiyadal

வரகுணனுக்கு சிவலோகம் காட்டிய படலம் (Varagunan story) இறைவனான சொக்கநாதர் வரகுணனின் பிரம்மகத்தி தோசத்தைப் போக்கி, அவனது விருப்பப்படி சிவலோக தரிசனத்தை அவனுக்கு அருளியதைக் விளக்கிக் கூறுகிறது.
வரகுணனுக்கு ஏற்பட்ட பிரம்மகத்தி தோசம், அதனை நீக்க இறைவனார் நீக்குதல், வரகுணனின் சிவலோக தரிசன ஆசை, இறைனார் அதனை நிறைவேற்றுதல் ஆகியவை இப்படலத்தில் கூறப்பட்டுள்ளன.
வரகுணனுக்கு சிவலோகம் காட்டிய படலம் திருவிளையாடல் புராணத்தின் கூடல் காண்டத்தில் நாற்பதாவது படலமாக அமைந்துள்ளது.

வரகுணனுக்கு ஏற்பட்ட தோசம்
வரகுணன் சீரும் சிறப்புமாக மதுரை நீதிநெறி பிறழாமல் ஆட்சி செய்து வந்தான். அதேநேரத்தில் சொக்கநாதரிடம் பேரன்பு கொண்டிருந்தான்.
ஒருநாள் அவன் வேட்டையாட காட்டிற்குச் சென்றான். இருள் சூழ்ந்த வேளையில் அவன் கனவட்டம் என்ற குதிரையின் மீதுஅமர்ந்து நாட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தான்.
அப்போது வழியில் தூங்கிக் கொண்டிருந்த அந்தணர் ஒருவர் குதிரையின் காலடியில் சிக்கி இறந்தார். இதனை அறியாத வரகுணன் அரண்மனை திரும்பினான்.
காட்டில் இருந்த சிலர் இறந்த அந்தணரின் உடலை எடுத்துக் கொண்டு வரகுணனின் வாயிலில் இட்டு நடந்தவற்றை வரகுணனுக்கு கூறினர்.
தனது குதிரையின் காலடியில் சிக்கி அந்தணர் இறந்ததை அறிந்த வரகுணன் அவ்வந்தணனைச் சார்ந்தோரை வரவழைத்து பொன்பொருள் உதவி செய்ததோடு அந்தணனுக்கு முறைப்படி இறுதி சடங்குகளை நடத்த ஏற்பாடு செய்தான்.
எனினும் வரகுணனை பிரம்மகத்தி என்னும் பாவம் (கொலைப் பாவம்) பற்றிக் கொண்டது. பிரம்மகத்தி பிடித்த வரகுணன் மிகவும் துன்பத்துக்கு ஆளானான். அதனைப் போக்குவதற்கு நிறைய முயற்சிகள் செய்தான்.
இறுதியில் பொரியோர்களின் கூற்றுப்படி நாள்தோறும் சொக்கநாதரைத் தரிசித்து 1008 முறை வலம் வந்தான்.

வரகுணனின் பிரம்மகத்தி நீங்குதல்
அப்போது ஒருநாள் இறைவனார் அசரீரியாக “பாண்டியனே, நீ அஞ்சாதே, காவிரி நாட்டைச் சார்ந்த சோழன் உன்னுடன் போரிட வருவான்.
அப்போது நீ அவனை புறங்காட்டி ஓடச்செய்வாய். நீ சோழனைத் தொடர்ந்து சென்று திருவிடைமருதூரை அடைவாய். அங்கே உன்னுடைய பிரம்மகத்தியை யாம் நீக்குவோம்.” என்று திருவாய் மலர்ந்தருளினார். இதனைக் கேட்ட வரகுணன் மகிழ்ந்து சோழனின் வருகைக்காக காத்திருந்தான். இறைவனாரின் கூற்றுப்படி சோழன் பாண்டியனின்மீது படையெடுத்து வந்தான்.
வரகுணனும் சோழனை எதிர்த்து போரிட்டு அவனை விரட்டிச் சென்றான்.

திருவிடைமருதூர் வந்ததும் மகாலிங்கத்தை வழிபடுவதற்காக வரகுணன் கோவிலின் கிழக்கு வாயில் வழியாக திருகோவிலுக்குச் சென்றான். வரகுணனைப் பிடித்திருந்த பிரம்மகத்தி கோவிலின் வெளியேயே தங்கியது. உள்ளே சென்ற வரகுணன் மகாலிங்கத்தை பலவாறு துதித்து வழிபாடு நடத்தினான். அப்போது இறைவனார் “பாண்டியனே, நீ மேற்கு வாயிலின் வழியாக வெளியேறு. கிழக்கு வாயிலில் பிரம்மகத்தி உன்னை பிடிப்பதற்காக காத்திருக்கிறது.” என்று திருவாய் அருளினார். வரகுணனும் இறைவனாரின் ஆணைப்படி மேற்கு வாயிலின் வழியே வெளியேறினான்.

வரகுணனுக்கு ஏற்பட்ட ஆசை
மதுரைக்கு திரும்பிய வரகுணன் சொக்கநாதரை நாள்தோறும் வழிபட்டு வந்தான். ஒருநாள் வேதங்கள், ஆகமங்கள் உள்ளிட்ட நூல்களில் கூறியபடி உலகம் அனைத்திலும் மேம்பட்ட சிவலோகத்தைக் காணும் ஆசை வரகுணனுக்கு ஏற்பட்டது.
தன்னுடைய விருப்பத்தை சோமசுந்தரரிடம் தெரிவித்து மனமுருக வழிபாடு மேற்கொண்டான். வரகுணனின் விருப்பத்தை நிறைவேற்ற சொக்கநாதர் திருவுள்ளம் கொண்டார்.
சிவலோகத்தை மதுரைக்கு எழுந்தருளச் செய்தார். திருநந்தி தேவரை அழைத்து வரகுணனுக்கு சிவலோகத்தை காட்ட ஆணையிட்டார்.
திருநந்தி தேவரும் வரகுணனுக்கு சிவலோகத்தை சுற்றிக் காட்டினார். இறைவன், இறைவியுடன் இருந்த காட்சியைக் கண்ட வரகுணன் பேரின்பக்கடலில் மூழ்கினான். அன்று முதல் மதுரையம்பதி பூலோக சிவலோகம் என்று சிறப்பிக்கப்படுகிறது.

வரகுணனுக்கு சிவலோகம் காட்டிய படலம் கூறும் கருத்து
இறைவனார் தனது அடியவர்களுக்காக செயற்கரும் செயல்களைச் செய்து காட்டுவார் என்பதே வரகுணனுக்கு சிவலோகம் காட்டிய படலம் கூறும் கருத்தாகும்.