சங்கடம் தீர்க்கும் சத்தியகிரீஸ்வரர் கோவில் (Satyagireeswarar temple) – விக்கிரவாண்டி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் திருப்பனந்தாளுக்கு அருகில் கும்பகோணம் மார்க்கத்தில் சத்தியகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
சங்கடம் தீர்க்கும் சத்தியகிரீஸ்வரர் கோவில்
முன்னொரு காலத்தில் வாயு தேவனுக்கும், ஆதிசேஷனுக்கும் இடையே, தங்களுள் யார் பலசாலி என்ற போட்டி ஏற்பட்டது.
ஆதிசேஷன் மேரு மலையைத் தன் உடம்பால் இறுக்கிப்பிடித்துக்கொள்ள, வாயுதேவன் பெருங் காற்றை வீசி அந்த மலையை அசைக்க முயன்றான்.
அப்பொழுது மேருமலையின் ஒன்பது சிகரங்கள் பெயர்ந்து, ஒன்பது கண்டங்களில் வீழ்ந்தன.
இந்த ஒன்பது சிகரங்களில் ஒன்றான கந்தமானம் என்னும் சிகரம் ஏழு சிறுகூறுகளாக பிரிந்து பரதகண்டத்தின் ஏழு இடங்களில் விழுந்தது. ஏழில் ஒன்றான சத்தியம் என்னும் சிறுகூறு விழுந்த இடத்திற்கு ‘சத்தியகிரி’ என்ற பெயர் ஏற்படலாயிற்று. இவ்வூரில் சுயம்புவாகத் தோன்றி அருள்பாலிப்பவரே சத்தியகிரீஸ்வரர்.
‘கடவுள், தேவர், மனிதர் எவராயிருந்தாலும் தனக்கான வரையறை களைத் தாண்டி நடக்கும்போது, அதற்கான விளைவுகளை ஒருநாள் ஏற்கவேண்டியிருக்கும்’ என்பது இந்து மதத்தின் கோட்பாடாகும்.
பிரணவத்தின் பொருள் சொல்லத் தெரியாத பிரம்மனை, சிறையில் அடைத்தார் முருகப் பெருமான்.
சிவபெருமான் விடுவிக்கக் கூறியும் அவர் உடன்படவில்லை. இதையடுத்து வேதத்தின் பொருளை தனக்கு உரைக்குமாறு, முருகப்பெருமானிடம் ஈசன் கேட்டார்.
அதற்கு முருகப்பெருமானோ, ‘கைகட்டி, வாய் பொத்தி சீடனின் பாவனையில் இருந்து கேட்டால்தான், வேதத்தின் பொருளை உரைக்க முடியும்’ என்று நிபந்தனை விதித்தார்.
சிவபெருமானும் அவ்வாறே சீடன் பாவனையில் வேதத்தின் பொருளை கேட்டார். இதனால் தந்தை சீடனாகவும், மகன் குருவாகவும் இருக்கும்படியான விபரீதம் ஏற்பட்டது. அதன்காரணமாக குமரனுக்கு, சிவத்துரோக தோஷம் ஏற்பட்டது.
இதனைப் போக்கிக்கொள்ள இந்த வரலாறு நடந்த சுவாமி மலையில் இருந்து இறங்கி, சத்தியகிரி என்னும் தலத்தை அடைந்தார் முருகப்பெருமான்.
அங்கு குமார தீர்த்தத்தை ஏற் படுத்தி அனுதினமும் அந்தத் தீர்த்தத்தில் நீராடினார். மேலும் அருகில் இருந்த சத்திய புஷ்கரணியிலும், சுப்பிரமணிய நதியிலும் (பழவாறு) நீராடி மூன்றாண்டுகள் சத்தியகிரீஸ்வரரை வணங்கி வழிபாடு செய்து வந்தார்.
இவ்வாறு சேய் (முருகன்), தந்தையை (சிவனை) வழிபட்டதால், சத்தியகிரிக்கு ‘சேய்ஞலூர்’ என்ற பெயர் ஏற்பட்டது. சேய்ஞலூர் காலப்போக்கில் மருவி சேங்கனூர் ஆனது.
இந்த சம்பவத்திற்கு பிறகு ஒரு சமயம் முருகப்பெருமான் இத்தலத்தில் வந்து தங்கினார். சூரபதுமனை வதம் செய்வதற்காக செல்கின்ற வழியில் பெரும் படையுடன் அவர் இங்கு தங்கியதாக கூறப்படுகிறது.
அப்போது தேவதச்சன், இந்த தலத்தை ஒரு நகரமாக ஆக்கியதாகவும், அதனால் இந்தத் தலத்திற்கு குமரபுரம் என்றும் பெயர் வந்ததாகவும் கூறுகிறார்கள்.
இதைத்தவிர இத்தலத்தில் பலமுனிவர்கள் விலங்குகளாகவும், மரங்களாகவும், பறைவைகளாகவும் உருவகம் கொண்டு வழிபட்டதால் இவ்வூர் ‘அசுமகாதக வனம்’ என்றும், சண்டேஸ்வர நாயனார் அவதரித்த தலம் என்பதால் ‘சண்டேஸ்வரபுரம்’ என்றும் குறிப்பிடப்படுகின்றது.
(சண்டேஸ்வர நாயனார் இவ்வூரில் அவதரித்திருந்தாலும் அவரது வரலாற்றுடன் இவ்வாலயம் அதிக தொடர்புடையதாக இல்லை. அவர் முக்தியடைந்த திருவாய்ப்பாடி திருத்தலமே அவரது வரலாற்றுடன் அதிக தொடர்புடையதாக உள்ளது).
சேங்கனூர் ஊரின் நடுவில் சத்தியகிரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற 274 தலங்களில் இது 41–வது திருத்தலமாகும்.
காவிரியின் வடகரையில் அமைந்துள்ள இந்தக் கோவில், மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்று சிறப்புக்களையும் கொண்டது. கிழக்கு பார்த்து கட்டுமலைக் கோவிலாக சத்தியகிரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.
மலையின் மேலே ஒரு பிரகாரம், மலைக்குக் கீழே ஒரு பிரகாரம் என இரண்டு பிரகாரங் களுடன், தேரோடும் நான்கு மாடவீதிகளும் உள்ளன.
கர்ப்பக் கிரகத்தில் சத்தியகிரீஸ்வரர் எழுந்தருளியுள்ளார். கோஷ்டத்தில் இரண்டு தட்சிணாமூர்த்திகள் வீற்றிருக்கின்றனர்.
மேலும் விஷ்ணு, பிரம்மாவும் அருள் பாலிக்கின்றனர், கர்ப்பக் கிரகத்தின் முன் அர்த்தமண்டபமும், மகாமண்டபமும் அமைந்துள்ளன. அர்த்தமண்டபத்தில் நடராசப் பெருமான், சமயக் குரவர் நால்வர் உள்ளனர்.
மகாமண்டபத்தில் தட்டினால் ஓசையைத் தரும் பைரவரும், சூரிய– சந்திரர்களும், சகிதேவி அம்பாளும் எழுந்தருளி இருக்கிறார்கள். மலைப்பிரகாரத்தின் மேல்பகுதியில் விநாயகர், சுப்பிரமணியர், கஜலட்சுமி சன்னிதிகள் உள்ளன.
வடபுறத்தில் சண்டேஸ்வரர் சன்னிதியும், தீர்த்தக் கிணறும் இருக்கின்றன. கட்டுமலைக்குக் கீழே மலை வாசலை அடுத்து, தெற்குமுகமாக முருகன் சன்னிதி உள்ளது. கீழவீதியில் மேற்கு நோக்கி சீனுவாசப்பெருமாள் எழுந்தருளியுள்ளார்.
சத்தியகிரீஸ்வரர் ஆலயத்திற்கு மேற்கே ஈஸ்வரனால் உருவாக்கப்பட்ட, சத்திய புஷ்கரணி என்னும் தீர்த்தக்குளம் உள்ளது.
இந்த குளத்தில் நீராடினால் சகல புண்ணியமும் உண்டாகும் என்பது நம்பிக்கை. வடக்கே 1½ கிலோமீட்டர் தொலைவில் மண்ணியாறு (இது சுப்பிரமணிய நதி, சத்திய நதி என்றும் குறிப்பிடப்படுகின்றது) ஓடுகிறது.
இந்த தீர்த்தத்தில் நீராடினால் தர்ம வாழ்வும், மோட்சமும் கிடைக்கும் என்பது ஐதீகம். இதே போல் திருக்கோவிலுக்கு வடக்கில் குமாரசுவாமியால் உருவாக்கப்பட்ட குமார தீர்த்தம் இருக்கிறது.
இங்கு நீராடினால் சிவதுரோகம், குருதுரோகம் போன்ற பாவங்கள் நீங்கும் என்பதும், கிழக்கே பெருமாள் கோவிலின் பின்புறத்தில் அரிச்சந்திரனால் உருவாக்கப்பட்ட, மலையப்பன் குளம் என்னும் அப்பன் குளத்தில் நீராடினால் இஷ்டசித்தி உண்டாகும் என்பதும் ஐதீகமாக இருந்து வருகிறது.
Satyagireeswarar temple timings
தினசரி நான்கு கால பூஜைகள் நடைபெறும் இக்கோவில் காலை 7 மணி முதல் 9.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
திருப்பனந்தாளிலிருந்து தொடங்கி திருவாய்ப்பாடி, சேங்கனூர், திருமங்கலக்குடி, திருவிசநல்லூர் சிவாலயங்களையும், திருவெள்ளியங்குடி திவ்யதேசத்தையும் ஒரே நாளில் தரிசனம் செய்து வரலாம்.
Satyagireeswarar temple route
விக்கிரவாண்டி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் திருப்பனந்தாளுக்கு அருகில் கும்பகோணம் மார்க்கத்தில் நெடுஞ்சாலையிலிருந்து 1½ கிலோமீட்டர் தூரத்தில் கிழக்கில் சேங்கனூர் அமைந்துள்ளது.
கும்பகோணம், ஜெயங்கொண்டம், காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் ஆகிய ஊர்களிலிருந்து இவ்வாலயத்திற்குச் செல்ல பேருந்து வசதியுள்ளது. இந்த ஆலயத்தில் அருகில் உள்ள ரெயில் நிலையம் கும்பகோணம் ஆகும்.
108 லிங்கம் தஞ்சாவூர் பாபநாசம் ராமலிங்கேஸ்வரர் கோவில்
மர்மம் நிறைந்த முக்கோண சிவாலயங்கள்
Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன் இன்றைய பஞ்சாங்கம் *பஞ்சாங்கம் ~ க்ரோதி ~ ஐப்பசி… Read More
Lakshmi kubera pooja சகல ஐஸ்வர்யமும் தரும் லட்சுமி குபேர விரத பூஜை... சந்தோஷத்தையும், மகிழ்ச்சியையும் அள்ளிதரும் தீபாவளி திருநாளில்… Read More
Diwali celebrations தீபாவளியை ஏன் கொண்டாடுகிறோம்? நாம் எல்லோரும் எதிர்ப்பார்த்திருக்கும் ஒரு முக்கிய பண்டிகை தீபாவளி. அதாவது தீபங்களின் வரிசைகள்,… Read More
Yema Deepam தீபாவளிக்கு முந்தைய நாள் அன்று யம தீபம் ஏற்றுங்கள் ! யம தீபம் - 30/10/2024 -------------------… Read More
Lord mururgar different darshan temples குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பார்கள். அபூர்வ தோற்றத்தில் முருகன் காட்சி… Read More
ஏன் காலையில் சுப்ரபாதம் பாடுகிறோம் என்று தெரியுமா? விஸ்வாமித்திரரின் யாகத்தினை ஒருமுறை காக்க சென்ற போது, கங்கைக்கரையில், ராம லட்சுமணர்கள்… Read More
Leave a Comment