வேலவன் அன்னையிடம் வேல் வாங்கும் அற்புதமான மெய்சிலிர்க்க வைக்கும் நிகழ்வு….
கண்டிப்பாக_படியுங்கள்
சிக்கல்கள் தீர்க்கும் சிங்காரவேலர்!
‘‘முருகனை தொழப்போய் மூவரையும் வணங்கினேன்’’ என்பார்கள். ஆனால், இங்கோ மிக அரிதாக சிவன், சக்தி, நாராயணன், அனுமார், கணபதி என்று ஐந்து கடவுள்கள் புடைசூழ அருள் பாலிக்கிறார் முருகன். சிக்கல் கிராமத்தில் வீற்றிருக்கும் இந்த சிறப்பு மிக்க சிங்காரவேலர், பக்தர்களின் சிக்கல்களைத் தீர்க்கும் சிங்கார வேலராக விளங்குகிறார்.
நாகை மாவட்டம், நாகை – திருவாரூர் சாலையில் நாகப்பட்டினத்திலிருந்து மேற்கே 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சிக்கல் கிராமம். இங்கு 80 அடி உயரத்தில் அமைந்துள்ள கோயிலில் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறார் சிங்காரவேலர்.
சோழ வள நாட்டில் இயற்கையில் மலைகள் கிடையாது. செயற்கையாக அமைக்கப்பட்ட மலைக் கோயி லான இந்தத் தலம், அறுபடை வீடுகளுக்கு இணையானதாகப் போற்றப்படுகிறது.
வலப்புறம் சிவனாகிய ‘நவநீதேஸ்வரர்’, இடப்புறம் பார்வதிதேவியான ‘வேல் நெடுங்கண்ணி’.. இப்படி அம்மை – அப்பனுக்கு இடையில் அமர்ந்து அருள் பாலிக்கும் சிங்காரவேலரின் பார்வை பட்டாலே மலையளவு சிக்கல்களும் பனி போல மாயமாகி விடுமாம்.
‘‘ஒருகாலத்தில் சூரபத்மன் என்ற அரசன், மக்களுக்கும் தேவர்களுக்கும் பெரும் தொல்லை கொடுத்து வந்தான். அழியா வரம் பெற்ற அவனை வதம் செய்ய முருகனால் மட்டுமே முடியும் என்று கருதிய தேவர்கள் முருகனிடம் மன்றாட, முருகனும் சூரனை வதம் செய்ய சம்மதித்தார்.
சூரன் சிவனிடம் அழியா வரம் பெற்றதால், அவனை அழிப்பதற்கான வேல் வேண்டி இந்தத் தலத்தில் அம்மை – அப்பன் முன் தவமிருந்தார் முருகன். இறுதியில் மகனின் தவத்தை மெச்சிய பார்வதிதேவி, சக்தி மிக்க வேலை வழங்க, அந்த வேலுடன் திருச் செந்தூர் சென்று சூரனை சம்ஹாரம் செய்ததுடன், அன்று முதல் சிங்காரவேலன் ஆனார் முருகன்.
ஒவ்வொரு ஆண்டும் திருச்செந்தூரில் நடக்கும் சூரசம்ஹார நிகழ்ச்சிக்கு முன், ஐப்பசி மாதம் கந்தர் சஷ்டியன்று சக்தியிடம் முருகன் வேல் வாங்கும் காட்சி, ‘சக்தி – வேலன் புறப்பாடு’களுடன் இங்கு கோலாகலமாகக் கொண்டாடப்படும்.
இந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் ஐம்பொன்னால் செய்யப்பட்ட முருகனின் திருமேனியில் வியர்வை துளிர்க்கும். அப்படி வழியும் வியர்வையை அர்ச்சகர்கள் துடைப்ப தும், துடைக்கத் துடைக்க வியர்வை துளிர்ப்பதும் மிகவும் ஆச்சர்யமானது. இந்த அதிசயத்தைக் காண வெளி நாடுகளில் இருந்தெல்லாம் பக்தர்கள் குவிந்து விடுவார்கள்’’
பக்தர்கள்_கூறியவை
தன் மைத்துனருக்குத் திருமணமாக வேண்டும் என்ற வேண்டுதலோடு கோவையிலிருந்து குடும்பத்துடன் வந்திருந்தார் கணேசன் குருக்கள்.
‘‘என் மைத்துனர் மகாராஜன், அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் குருக்களாக இருக்கிறார். ரெண்டு வருஷமா இவருக்குப் பொண்ணு பார்க்கறோம். ஏதோ ஒரு சிக்கல் வந்து கல்யாணம் தடைபட்டுட்டே போகுது. அதான், எல்லா சிக்கல்களும் தீர்ந்து சீக்கிரமே இவருக்கு ‘டும் டும்’ கொட்டணும்னு வேண்டிக்க வந்தோம்’’ என்றார்.
ஏழாவது திருமண தினத்தை முன்னிட்டு தேவூரில் இருந்து மகனுடன் வந்திருந்தனர் ராஜலிங்கம் – பாக்ய லஷ்மி தம்பதி.
‘‘ஒவ்வொரு கல்யாண நாளன்றும் சிங்காரவேலரைத் தரிசிப்பது எங்கள் வழக்கம். இவர் கருணையால் எங்கள் வாழ்வில் எந்த சிக்கலும் இல்லை. சண்டை, சச்சரவுகளும் இல்லை. ஒரு மகன், ஒரு மகளுடன் தெளிந்த நீரோடை போல போகிறது எங்கள் வாழ்க்கை’’ என்று மகிழ்ந்த படியே சிக்கல் தீர்க்கும் சிங்காரவேலரின் வரலாற்று மகிமையை சொல்லத் தொடங்கினார் ராஜலிங்கம்.
‘‘சூரபத்மனின் முரட்டுப் பிடியில் சிக்கித் தவித்த தேவர்களையே காப்பாற்றிக் கரை சேர்த்தவர் இந்த சிங்காரவேலர், அப்பேர்ப் பட்டவருக்கு சாதாரண மானுட பக்தனின் சிக்கல்களெல்லாம் எம்மாத்திரம்? இவரது அருட் பார்வை பட்டதுமே எப்பேர்ப்பட்ட சிக்கலும் சுக்குநூறாகிவிடும்’’
பாண்டிச்சேரியிலிருந்து குடும்பத்துடன் வந்திருந்த ஆசிரியை தமிழரசி, ‘‘டீச்சர் டிரெயினிங் முடிச்சிருந்த எனக்கு, போஸ்ட்டிங் போடாம மூணு வருஷமா அலைக்கழிச்சுட்டு இருந்தாங்க. ஆறு மாசத்துக்கு முன்னாடி இங்க வந்து ‘சத்ரு சம்ஹார பூஜை’ செஞ்சு சிங்காரவேலரை வழிபட்டுப் போனோம். இப்ப எனக்கு வேலை கிடைச்சு ரெண்டு மாசமாகுது. அதான்.. நன்றிக் கடன் செலுத்திட்டுப் போகலாம்னு வந்திருக்கோம்’’ என்றார் நெகிழ்ச்சியுடன்.
தூத்துக்குடியிலிருந்து மகளுடன் வந்திருந்தனர் செல்வம் – விஜயலெட்சுமி தம்பதி.
‘‘என் மகள் விழுந்து விழுந்து படிப்பா. ஆனாலும் மறதி அதிகமாகி நைன்த்ல ஃபெயிலாயிட்டா. அடுத்த எக்ஸாம் எழுதறதுக்கு முன்னாடி சிங்காரவேலரை வேண்டிக்க வந்தோம். பொதுவா, சிவன் வேறு.. சிவ மைந்தன் வேறு அல்ல. முருகனே சிவனுக்கு சமமானவர்னு சொல்வாங்க. அப்பேர்ப்பட்ட சக்தியுடைய முருகன் இங்கு அம்மை அப்பனுடன் அருள் பாலிக்கிறார். சகல சக்திகளும் வாய்ந்த சிங்காரவேலர் என் மகளின் மறதியை நீக்குவார்னு நம்பறோம்’’ என்றபடியே ‘சத்ரு சம்ஹார பூஜை’ செய்ய ஆயத்த மானார்கள்.
சரியாக அதே நேரம்,
‘‘சிக்கலில் வேல்வாங்கி
செந்தூரில் போர் முடித்து
சிக்கல் தவிர்க்கின்ற
சிங்காரவேலனை
நித்தம் பாடுவோம்’’
– என்ற கோயில் அர்ச்சகரின் கணீர் குரல் ஒலிக்கிறது…
Sashti viratham கந்த சஷ்டி விரதம் பற்றி ஓர் பார்வை: கந்த சஷ்டி விரத மகிமைகள், கந்தசஷ்டி விரதம் கடை… Read More
Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன் இன்றைய பஞ்சாங்கம் *_📖 பஞ்சாங்கம்: ~_* *┈┉┅━❀•ॐ•❀━┅┉┈* *🎋… Read More
Lakshmi kubera pooja சகல ஐஸ்வர்யமும் தரும் லட்சுமி குபேர விரத பூஜை... சந்தோஷத்தையும், மகிழ்ச்சியையும் அள்ளிதரும் தீபாவளி திருநாளில்… Read More
Diwali celebrations தீபாவளியை ஏன் கொண்டாடுகிறோம்? நாம் எல்லோரும் எதிர்ப்பார்த்திருக்கும் ஒரு முக்கிய பண்டிகை தீபாவளி. அதாவது தீபங்களின் வரிசைகள்,… Read More
Yema Deepam தீபாவளிக்கு முந்தைய நாள் அன்று யம தீபம் ஏற்றுங்கள் ! யம தீபம் - 30/10/2024 -------------------… Read More
Lord mururgar different darshan temples குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பார்கள். அபூர்வ தோற்றத்தில் முருகன் காட்சி… Read More
Leave a Comment