கொடுப்பதும் சனி – கெடுப்பதும் சனி
யாரைவிட்டது சனி ?
நவக்கிரகங்களில் ஈஸ்வர பட்டம் பெற்றவர் சனி பகவான் என்று சொல்வார்கள். அதனால் அவரை ‘சனீஸ்வரன்’ என்று போற்றுவர்.
ஒவ்வொருவரது வாழ்க்கையிலும், அவரவர் ராசிக்கேற்ப ஏழரை ஆண்டுகள் சனியின் பிடிக்குள் அடங்கி, உயர்வு- தாழ்வுகளைச் சந்தித்து வாழவேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.
இதைத்தான் ‘ஏழரைச்சனி’ என்கிறார்கள். ‘கொடுப்பதும் சனி; கெடுப்பதும் சனி’, ‘யாரை விட்டது சனி’ என்றெல்லாம் பழமொழிகள் பல உண்டு.
ஒருமுறை சனீஸ்வரன், தேவலோகத்தில் தேவேந்திரனுடன் உரையாடிக்கொண்டு இருந்தார். அப்போது தேவேந்திரன் சனீஸ்வரனைப் பார்த்து, ”உங்களால் பீடிக்கப்பட்டுத் துன்பம் அடையாதவர் எவரேனும் உண்டா?” என்று கேட்டான்.
அதற்கு சனீஸ்வரன், ‘இதுவரை இல்லை. ஆனால், இப்போது நினைவுக்கு வருகிறது. ஒரே ஒருவரை மட்டும் இதுவரை நான் பீடிக்கவேயில்லை. ஆனால், இப்போது அதற்கான தருணம் வந்துவிட்டது!’ என்று கூறி, அவசரமாகப் புறப்பட்டார்.
‘எங்கே செல்கிறீர்கள்?” என்று இந்திரன் கேட்க, ‘சிவனைத் தரிசிக்க!” என்று கூறிச் சென்றார் சனீஸ்வரன்.
நேராக கயிலாயம் சென்றவர், சிவன்- பார்வதிதேவியை வணங்கி நின்றார்.
”சனீஸ்வரா! எம்மைக் காண வந்ததன் காரணம் என்னவோ?” என்று கேட்டார்.சிவபெருமான்.
”பெருமானே! உங்கள் ஜாதகப்படி, இந்த விநாடி ஏழரைச்சனியின் காலம் ஆரம்பிக்கிறது. தங்களைப் பீடிக்கவே வந்தேன்” என்றார் சனீஸ்வரன்.
”எனக்குமா ஏழரைச்சனி? என்ன சனீஸ்வரா… விளையாடுகிறாயா? கிரகங் களின் சுழற்சியை நிர்ணயித்த என்னையே பீடிக்கப் போகிறாயா?’ என்று கேட்டார்.
”ஆம் ஸ்வாமி! நீங்கள் நிர்ணயித்த விதிகளின்படிதான் நான் வந்துள்ளேன். ஏழரை ஆண்டுகள் இல்லாவிட்டாலும், ஏழரை மாதங்கள் அல்லது ஏழரை நாட்களுக்காவது நான் தங்களைப் பீடித்து என் கடமையைச் செய்ய அனுமதி தாருங்கள்” என்று கேட்டார் சனீஸ்வரன்.
”ஏழரை நாட்கள் என்ன, ஏழரை நாழிகை கூட உன்னால் என்னைப் பீடிக்க முடியாது’ என்று கூறிய சிவபெருமான், பார்வதி தேவியின் கழுத்தில் இருந்த மாலையில் இருந்த ருத்ராக்ஷத்தில் மறைந்துகொண்டார்.
ருத்ராக்ஷத்தில் உள்ள தெய்வீக சக்தியைத் தாண்டி வேறு எந்த சக்தியும் அதனுள் நுழையவே முடியாது. அதுவும் பார்வதி தேவியின் கழுத்தில் இருக்கும் ருத்ராக்ஷத்துக்குள் சனி பகவான் எப்படி நுழைய முடியும்?
ஆனால், சற்றும் அசராமல் சிவ நாமத்தை ஜெபித்தபடி அங்கேயே அமர்ந்துவிட்டார் சனீஸ்வரன். ஏழரை நாழிகை கடந்தது. சிவபெரு மான் ருத்ராக்ஷத்திலிருந்து வெளியே வந்தார்.
சனீஸ்வரனை நோக்கி, ”பார்த்தாயா சனீஸ்வரா… உன்னால் என்னை ஏழரை நாழிகைகூட நெருங்க முடியவில்லையே?” என்றார்.
”இல்லை பரமேஸ்வரா! உங்களை ஏழரை நாழிகை நேரம் நான் பீடித்திருந்தேன். அதனால்தான் உலக ஜீவராசிகளுக்கெல்லாம் படியளக்கும் நீங்களே, ஒரு ருத்ராக்ஷத்தில் மறைந்து, ஏழரை நாழிகை சிறைவாசம் ஏற்படுத்திக்கொண்டு, அதை அனுபவித்தீர்கள்” என்றார்.
‘சனீஸ்வரனின் விதி’யை நிர்ணயித்தவரும் அந்த விதிக்குக் கட்டுப்பட வேண்டியது அவசியம்தான் என்பதை எடுத்துக்காட்டிய சனீஸ்வரனை வாழ்த்தினார் சிவபெருமான்.
ஏழரை நாழிகை நேரம் தன் கழுத்தில் இருந்த ருத்ராக்ஷத்தில் தங்கி, தனக்கும் ருத்ராக்ஷத்துக்கும் சிவபெருமானின் அருள் கிடைக்கக் காரணமான சனீஸ்வரனை அன்னை பார்வதிதேவியும் வாழ்த்தினாள்.
சிவனைப் பீடித்த சனி அதோடு விட்டு விடவில்லை. திரேதா யுகத்தில், அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட பகவான் விஷ்ணு ஸ்ரீராமராக அவதரித்தபோது, அவருக்கு உதவி செய்வதற்காக அனுமனாக அவதாரம் செய்த சிவபெருமானை மீண்டும் ஒருமுறை பீடிக்க முயன்ற சம்பவம் ராமாயணத்தில் காணப்படுகிறது.
ராவணனை அழிக்க வானர சேனைகளுடன் இலங்கை செல்வதற்காக, கடலில் பாலம் அமைக்கும் பணியை மேற்கொண்டிருந்தார் ஸ்ரீராமன்.
இந்த சேதுபந்தனப் பணியில் சுக்ரீவன், அங்கதன், அனுமன் மற்றும் அவனது வானர சேனைகள் ஈடுபட்டிருந்தன. வானரம் ஒவ்வொன்றும் தனது சக்திக்கு ஏற்றவாறு மரங்களையும் பாறைகளையும் தூக்கி வந்து கடலில் வீசிக்கொண்டிருந்தன.
ராம, லட்சுமணர்கள் இருவரும் கடலில் பாலம் உருவாவதை நோக்கிய வண்ணம் எல்லோருக்கும் ஆசி கூறிக் கொண்டிருந்தனர். அனுமனும் பாறைகளைப் பெயர்த்தெடுத்து, அவற்றின்மீது ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற அக்ஷரங்களைச் செதுக்கி கடலில் எறிந்துகொண்டிருந்தார்.
அப்போது, அங்கே சனீஸ்வர பகவான் தோன்றி, ஸ்ரீராம லட்சுமணர்களை வணங்கி, ”பிரபு! அனுமனுக்கு ஏழரைச் சனி பீடிக்கும் காலம் தொடங்குகிறது. என்னைத் தவறாக எண்ணாதீர்கள். என் கடமையைச் செய்ய அனுமதி தாருங்கள்” என்று வேண்டினார்.
‘எங்கள் கடமையை நாங்கள் செய்கிறோம். அதுபோல உங்கள் கடமையை நீங்கள் செய்யுங்கள். முடிந்தால், அனுமனைப் பீடித்துப் பாருங்கள்’ என்றார் ஸ்ரீராமன்.
உடனே சனீஸ்வரன் அனுமன் முன் தோன்றி, ”ஆஞ்சநேயா! நான் சனீஸ்வரன். இப்போது உனக்கு ஏழரைச்சனி ஆரம்பமா கிறது. உன்னைப் பீடித்து ஆட்டிப்படைக்க, உன் உடலில் ஓர் இடம் கொடு” என்றார்.
”சனீஸ்வரா! ராவணனின் சிறையில் இருக்கும் சீதாதேவியை மீட்க நாங்கள் இலங்கை செல்லவே இந்த சேதுபந்தனப் பணியை ஸ்ரீராம சேவையாக ஏற்றுத் தொண்டாற்றிக் கொண்டிருக்கிறோம். இந்தப் பணி முடிந்ததும், நானே தங்களிடம் வருகிறேன். அப்போது என் உடல் முழுவதுமே தாங்கள் வியாபித்து என்னை ஆட்கொள்ள லாம்” என்றான் அனுமன்.
”ஆஞ்சநேயா! காலதேவன் நிர்ணயித்த கால அளவை நான் மீற முடியாது; நீயும் மீறக்கூடாது. உன்னை நான் பீடிக்கும் நேரம் நெருங்கிவிட்டது. உடனடியாகச் சொல்; உன் உடலின் எந்த பாகத்தில் நான் பீடிக்கலாம்?”என்று கேட்டார் சனீஸ்வரன்.
”என் கைகள் ராம வேலையில் ஈடுபட்டுள்ளது. அதனால், அங்கே இடம் தர முடியாது. என் கால்களில் இடம் தந்தால், அது பெரும் அபசாரமாகும். ‘எண் சாண் உடம்புக்குச் சிரசே பிரதானம்! எனவே, நீங்கள் என் தலை மீது அமர்ந்து தங்கள் கடமையைச் செய்யுங்கள்” என்று கூறினார் அனுமன்.
அனுமன் தலை வணங்கி நிற்க, அவன் தலை மீது ஏறி அமர்ந்தார் சனீஸ்வரன்.
அதுவரை சாதாரண பாறைகளைத் தூக்கிவந்த அனுமன், சனீஸ்வரன் தலை மீது அமர்ந்த பின்பு, மிகப் பெரிய மலைப் பாறைகளைப் பெயர்த்து எடுத்துத் தலைமீது வைத்துக்கொண்டு, கடலை நோக்கி நடந்து, பாறைகளை கடலில் வீசினார்.
பெரிய பெரிய பாறைகளின் பாரத்தை அனுமனுக்குப் பதிலாக, அவர் தலை மீது அமர்ந்திருந்த சனீஸ்வரனே சுமக்கவேண்டியதாயிற்று.
அதனால், சனீஸ்வரனுக்கே கொஞ்சம் பயம் வந்துவிட்டது. ‘தனக்கே ஏழரைச் சனி பிடித்துவிட்டதா?’ என்றுகூடச் சிந்தித்தார். அனுமன் ஏற்றிய சுமை தாங்காமல், அவனது தலையிலிருந்து கீழே குதித்தார்.
”சனீஸ்வரா! ஏழரை ஆண்டுகள் என்னைப் பீடிக்கவேண்டிய தாங்கள், ஏன் இவ்வளவு சீக்கிரம் விட்டுவிட்டீர்கள்?” என்று கேட்டார் அனுமன்.
அதற்கு சனீஸ்வரன், ”ஆஞ்சநேயா! உன்னை ஒரு சில விநாடிகள் பீடித்ததால், நானும் பாறைகளைச் சுமந்து சேது பந்தனப் பணியில் ஈடுபட்டுப் புண்ணியம் பெற்றேன்.
சாக்ஷத் பரமேஸ்வரனின் அம்சம் தாங்கள். முந்தைய யுகத்தில் தங்களை நான் பீடிக்க முயன்று, வெற்றியும் பெற்றேன். இப்போது தோல்வி அடைந்துவிட்டேன்’ என்றார் சனீஸ்வரன்.
”இல்லை, இல்லை… இப்போதும் தாங்களே வென்றீர்கள்! ஏழரை ஆண்டுகளுக்குப் பதில் ஏழரை விநாடிகளாவது என்னைப் பீடித்துவிட்டீர்கள் அல்லவா?’ என்றார் அனுமான்.
அதைக் கேட்டு மனம் மகிழ்ந்த சனீஸ்வரன், ”அனுமான்..! உனக்கு நான் ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என விரும்புகிறேன். என்ன வேண்டும் கேள்” என்றார்.
”ராம நாமத்தை பக்தி சிரத்தையோடு பாராயணம் செய்பவர்களை உங்களது ஏழரைச் சனி காலத்தில் ஏற்படும் துன்பங்களில் இருந்து நீங்களே காத்தருள வேண்டும்’ என வரம் கேட்டார் அனுமன். சனியும் வரம் தந்து அருளினார்.
பொதுவாக ஒருவரை ஏழரைச் சனி பீடிக்கும் காலத்தை மூன்று கூறாகப் பிரித்து மங்குசனி, தங்குசனி, பொங்குசனி என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
அனுமன் பெற்ற வரத்தால் ஏழரைச் சனியின் மங்குசனி, தங்குசனி காலத்தில் ஏற்படும் இன்னல்களைத் தாங்கி பிரச்னைகளைச் சமாளித்து, முடிவில் வெற்றியும் செல்வமும், சௌபாக்கியமும் பெற, ”ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராம” என்ற தாரக மந்திரத்தை சிரத்தா பக்தியுடன் ஜெபிக்க வேண்டுமென்று சாஸ்திரங்கள் அறிந்த பெரியோர்கள் நமக்கு வழிகாட்டியுள்ளனர்.
Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன் _*பஞ்சாங்கம்*_*சித்திரை - 12**ஏப்ரல் - 25 - (… Read More
# 2025-26 தமிழ் புத்தாண்டு: விசுவாவசு வருடத்தின் பஞ்சாங்கக் கணிப்பும் பலன்களும் **தமிழ் புத்தாண்டு** இந்த ஆண்டு ஏப்ரல் 14,… Read More
Panguni Uthiram 2025 11-04-2025 மாதந்தோறும் உத்திர நட்சத்திரம் வந்தாலும், பங்குனி மாதத்தில் வரும் உத்திரத்திற்கு அதிக மகிமைகள் உண்டு.… Read More
Panguni Uthiram Special பங்குனி உத்திரம்: அசுரனை வீழ்த்திய நாள்... Panguni Uthiram special அனைத்து அறுபடைவீடுகளில் பங்குனி உத்திரம்… Read More
Rama Navami ஸ்ரீ ராம நவமி ஸ்பெஷல் இராமாயணத்தில் ஒரு சம்பவத்தின் நிகழ்ச்சியால் ராம மந்திர மகிமையை உணரமுடியும். ஹனுமான்,… Read More
வியாழக்கிழமைகளில் இவைகளைச் செய்தால் வீட்டில் செல்வம் கொட்டும். நவகிரகங்களில் குரு மிகவும் முக்கியமானவராகவும், சிறப்பானவராகவும் கருதப்படுகிறார். ஒருவரது ஜாதகத்தில் குரு… Read More