ஹரிவராசனம் எப்போது துவங்கியது? | Harivarasanam History
சபரிமலை அய்யப்பன் கோவிலில் இரவு பதினொன்று மணிக்கு நடை அடைப்பது, கானகந்தர்வன் ஏசுதாஸ் பாடிய ஹரிவராஸனம் பாடலோடுதான். பகவான் அய்யப்பனுக்கும், அய்யப்ப பக்தர்களுக்குமான தாலாட்டு போன்றது
இப்பாடலை இசைப்பது சபரிமலையில் பல ஆண்டுகளாகத் தொடரும் பழக்கமாக உள்ளது.
ஹரிவராஸனம் எப்படி சபரிமலைக்கு வந்து சேர்ந்தது? ஐம்பது வருடம் முன்னால் சபரிமலை சந்நிதானத்தில் மேல்சாந்தியாக இருந்த மாவேலிக்கரை வடக்கத்தில்லத்து ஈச்வரன் நம்பூதிரி (இப்போது (Feb 2011) அவருக்கு வயது தொண்ணூற்று ஒன்று) சொல்கிறார் –
“சபரிமலையில் அத்தாழபூஜை (இரவு உணவுக்கு அப்புறமான ஆராதனை) முடிந்து, பகவான் அய்யப்பனின் உறக்கப் பாட்டான ஹரிவராஸனம் பாடுவதையும், கற்பூர தீபம் ஏற்றி வணங்கி நடையடைப்பதையும் வழக்கத்தில் கொண்டு வந்தவன் நான் தான். அத்தாழபூஜை முடிந்து இந்தப் பாட்டைத் துதிப்பாடலாகப் பாடும் வழக்கத்தை நானும் கோவில் ஊழியர்களும் சேர்ந்து தொடங்கி வைத்தோம்.
கம்பங்குடி சுந்தரம் குளத்து அய்யர் பிரசுரித்த சாஸ்தா ஸ்துதி கதம்பம் என்ற புத்தகத்தில் உள்ளது இந்தக் கீர்த்தனம். நான் அச்சன்கோவில் அம்பலத்தில் சாந்தியாக இருந்தபோது அங்கே தரிசனத்துக்காக வந்த ஒரு பக்தர் எனக்குக் கொடுத்த அந்தப் புத்தகத்தை இன்னும் பத்திரமாகப் பாதுகாத்து வருகிறேன்.
இந்தப் பாடல் வழக்கத்திற்கு வருவதற்கு முன், சபரிமலையில் சாந்தியாக இருந்த செங்ஙன்னூர் கிட்டுமணி திருமேனி (நம்பூதிரி) புல்லாங்குழல் வாசித்து நடை சார்த்துவது நடப்பில் இருந்தது. நானும் கோவில் ஊழியர்களும் ஹரிவராஸனம் பாட ஆரம்பித்த வழக்கம், ஏசுதாஸின் இனிய குரலில் இந்தப் பாடல் வெளிவந்த பிறகு அந்த இசைத்தட்டை இசைப்பதாக மாறியது. அப்புறம் ஒலிப்பேழை. இந்தப் பாடலை மூன்று விதமான இசையமைப்பில் பாட அறிந்தவன் நான்.”
ஐமபதாண்டுகளுக்கு முன்னால் ஏற்பட்ட தீ விபத்தில் கிட்டத்தட்ட எரிந்து போனது சபரிமலைக் கோவில். கோவிலை மறுபடி அமைத்துக் குடமுழுக்காட்டி ஸ்ரீ அய்யப்ப விக்ரகம் பிரதிட்டை ஆனபோது கோவில் மேல்சாந்தியாக இருந்தவர் ஈச்வரன் நம்பூதிரி தான்.
அவர் மேல்சாந்தியாகும் காலத்தில் (1950) அப்பதவிக்கு இப்போது போல் நறுக்கெடுப்போ, தேர்தலோ நடத்தித் தேர்ந்தெடுக்கும் வழக்கம் இல்லை. மாதம் அறுபத்தியொண்ணு ரூபாய் சம்பளத்தில் ஒண்ணரை வருடத்துக்கான நியமனம் அப்போதெல்லாம்.
அந்த நியமன உத்தரவோடு, வன விலங்குகளும் விஷப் பாம்புகளும் நிறைந்த காட்டு வழியில் ஒற்றையடிப்பாதை வழியாகத் தனித்து நடந்து வந்து புனிதமான பதினெட்டுப் படி சவிட்டி ஈச்வரன் நம்பூதிரி சந்நிதானத்தை அடைந்தபோது அவர் பார்வையில் பட்டது பதினெட்டுப் படிகளின் உச்சியில் கரிந்து போன கட்டைகளும், சிதறிய கருங்கல் பாளங்களும். செம்பும், ஓடும் உருக்கிக் கலந்த நிலையில் பழைய கோவிலின் சிதைவுகள். தீ தீண்டி மூன்றாகப் பிளந்து சிதிலமாகி, வெள்ளிக்கம்பியால் கட்டப்பட்ட ஸ்ரீ அய்யப்பனின் திரு விக்கிரகம்.
தென்மேற்கு மூலையில் இன்னும் இருந்த இரண்டு ஓலைக் கொட்டகைகளில் ஒன்று மேல்சாந்தி தங்கியிருக்கும் இடமானது. அவருக்கு ஒத்தாசை செய்ய உள்கழகம் என்ற விளிப்பேர் (கூப்பிடும் பெயர்) உள்ள ஒருவன் மாத்திரம் உண்டு. நிம்மதியைக் கெடுக்க அவ்வப்போது காட்டானைக் கூட்டமும், புலிகளும் சுற்றி வரும்.
இப்போது போல் அந்தக் காலத்தில் பக்தர்களின் பெரும் கூட்டம் கிடையாது. மாத பூஜைக்கு ஒவ்வொரு ஒண்ணாம் தேதியும் நடை திறக்கும்போது தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் சுமார் இருபது பேர். மண்டல பூஜைக்கு அப்படி இப்படி ஆயிரம் பேர்.
தமிழ்நாட்டில் இருந்து, நாடக நடிகரான நவாப் ராஜமாணிக்கம் குழுவினரோடு தவறாமல் சபரிமலைக்கு வந்திருந்தது ஈச்வரன் நம்பூதிரியின் நினைவில் பசுமையாக உள்ளது. தமிழ்நாட்டில் அய்யப்பன் கோவில் பிரசித்தி அடையச் செய்தவர்களில் அவரே முக்கியமானவர்.
அப்போதெல்லாம் அரவணைப் பாயாசமும், திருமதுரம் என்ற இனிப்பும் தான் பிரதான வழிபாட்டுப் பொருள்கள். ஒரு உருளி திருமதுரமும், இரண்டு வார்ப்பு அரவணையும் கிடைத்தாலே பெரிது.
அப்போதைய சபரிமலை யாத்திரை இடையூறுகள் நிறைந்ததாக இருந்தது. சாலையோ, வழியில் வசதிகளோ கிடையாது. வண்டிப்பெரியார் வழியே சாலக்காயம் வந்து அங்கேயிருந்து ஒரு குறுகிய நடைப்பாதை வழியாகப் பம்பையாற்றங்கரையை அடைய வேண்டும். மாத பூஜைக்கு வருகிறவர்கள் தனியாளாகத்தான் நடந்து வருவார்கள் பெரும்பாலும். பம்பையிலிருந்து எட்டு மைல் நீளும் செங்குத்தான காட்டுப் பாதையில் காட்டு வ்¢லங்குகளுக்கு இடையே யாத்திரை செய்ய வேண்டும் அப்போதெல்லாம்.
சபரிமலையில் இப்போது உள்ள திருக்கோவிலும், பகவான் அய்யப்பனின் விக்கிரகமும் ஏற்படுத்துவதில் முக்கியப் பங்காற்றியவர் ஈச்வரன் நம்பூதிரி. கோவில் அமைக்கும் வேலைகள் நாகர்கோவிலைச் சேர்ந்த சிற்பி செல்லப்பனாசாரியாரின் பொறுப்பில் மேற்கொள்ளப்பட்டன. செங்ஙன்னூர் தட்டாவிளை அய்யப்பனாசாரியார் பொறுப்பில், செங்ஙன்னூர் மகாதேவர் கோவில் ஊட்டுபுரையில் புதிய விக்ரகம் வடிவமைக்கப்பட்டது. பழைய விக்கிரகத்தின் கண், மூக்கு, தாடை, செவி முதலியவற்றை துல்யமாகத் தர்ப்பைப் புல்லில் அளந்து புதிய விக்கிரக வடிவமைப்புக்காகக் கொடுத்ததும், பிரதிட்டை சடங்குகளை முன் நின்று நடத்தியவரும் ஈச்வரன் நம்பூதிரிதான்.
அதற்கு முந்தைய பிரதிட்டைக்குக் கிட்டத்தட்ட நாற்பத்தொன்று ஆண்டுகள் கழித்துக் கோவிலில் தீவிபத்து ஏற்பட்டிருந்தது. இப்போதைய பிரதிட்டாதானத்தில் சதுரமான திருக்கோவிலும் அதன் முன்பாக மிகச் சிறிய மண்டபமும், கிழக்கே பெரிய கோவிலும் அதற்கு வடக்கே கீழ்ப்புறமாக பலா மரத்தில் செய்து நிறுத்திய நெய்த்தோணியும் (தீபத்தம்பம்), தென்மேற்கு மூலையில் வினாயகர் சந்நிதியும் அதன் வடக்கே ஒற்றை வரிசையாக நாக விக்கிரகமும், மாளிகைப்புரத்தம்மைக்கு ஒரு திருக்கோவிலும் அங்கே ஒரு பீடமும்தான் அன்று இருந்த கோவில். நவக்கிரகங்கள் தவிர மற்ற உபதேவதைகள் எல்லாம் ஈச்வரன் நம்பூதிரி மேல்சாந்தியாக இருந்த காலத்தில் பிரதிட்டை செய்யப்பட்ட மூர்த்திகள். படிபூஜைக்கும், உத்ராட சத்யை (விருந்து) வழிபாட்டுக்கும் ஏற்பாடு செய்தவர் ஈச்வரன் நம்பூதிரி தான் தொண்ணூற்றியொன்றாம் வயசிலும் அவர் படு சுறுசுறுப்பாக, கேரளத்தில் எத்தனையோ கோவில்களில் திருப்பணிக்காக அலைந்து கொண்டிருக்கிறார்.
(மே 1, 2005 – தேசாபிமானி ஞாயிறு மலரில் பிரேம்ஜித் காயம்குளம் எழுதிய கட்டுரையிலிருந்து – நன்றி தேசாபிமானி) 🙏சுவாமி சரணம்🙏