ஆடிப்பூரம் (Aadi Pooram) என்னும் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது கொண்டாடப்படுவது. இது தேவிக்குரிய திருநாளாகும். இந்த நாளில் தான் உமாதேவியும் தோன்றியதாக கூறப்படுவதுண்டு. உலக மக்களை காக்க சக்தியாக அம்பாள் உருவெடுத்தாள். சித்தர்களும், யோகிகளும் இந்த நாளில் தவத்தை துவக்குவதாக புராணங்கள் கூறுகின்றன.
ஆடிப்பூரம் 2024 – 07/08/2024 – புதன் கிழமை
அனைத்து உலகத்தையும் படைத்தும் காத்தும் கரந்தும் விளையாடும் அகிலாண்ட கோடி அன்னைக்கு மஞ்சள் காப்பு, சந்தனக்காப்பு, குங்குமக்காப்பு, நடத்துவார்கள். அந்த அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகிக்கு வளை காப்பு நடக்கும் நாள் தான் ஆடிப்பூரம். அன்னை உளம் மகிழ்ந்து மாந்தர்கள் அனைவருக்கும் தன் அருளை வழங்கும் நாள். பல்வேறு விதங்களில் அன்னையைக் கொண்டாடும் நாள் திருவாடிப்பூரம். சைவத்தலங்களில் உற்சவ அம்மனின் திருநாமம் பெரும்பாலான இடங்களில் சுக்கிரவார அம்மனாக தனக்கு உகந்த வெள்ளிக்கிழமையின் பெயரைக் கொண்டு அருள் பாலிக்கும் அம்மன் அதற்கு அடுத்து ஆடிப்பூர அம்மனாக அதிகமாக எழுந்தருளியுள்ளாள். இதிலிருந்தே ஆடிப்பூரத்தின் சிறப்பை அறிந்து கொள்ளலாம்.
ஆடி மாதம் என்பது தக்ஷிணாயன காலத்தின் தொடக்க காலம். இது வரை வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்த சூரியன் தனது தெற்கு நோக்கிய பயணத்தை தொடங்கும் மாதம். நம்முடைய ஒரு வருடம் தேவர்களுக்கு ஒரு நாள். அவர்களது இரவுக்காலமே இந்த தக்ஷிணாயன காலம் ஆகும். உத்தராயணக்காலம் சிவபெருமானை வழிபட உகந்தது என்றால் தக்ஷிணாயனம் அவரது வாம பாகத்தில் வீற்றிருக்கும் அம்பிகைக்கு உரிய காலம் ஆகும். அம்மனுக்கு உகந்த ஆடி மாதம், நவராத்திரி ஆகிய பண்டிகைகள் வரும் காலம். இவ்வாறு இது வரை பகல் காலம் அதிகமாக வெப்பமாக இருந்த நிலை மாறி இரவு அதிகமாகவும், வெப்பம் குறையும் காலம் ஆரம்பிப்பதால்தான் ஆடி மாதங்களில் எளிய உணவான கூழ் சாப்பிட்டால் உடம்பிற்கு நல்லது என்று ஜகன் மாதாவிற்கு கூழ் வார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்தினர் நமது முன்னோர்கள். இந்த ஆடி மாதத்தில் வெள்ளி, செவ்வாய் , ஞாயிறுகளில் அன்னையை வழிபட எல்லா நலன்களும் தந்து அருளுவாள் அந்த தயாபரி. இவ்வளவு சிறப்புகள் கொண்ட ஆடி மாதத்தில் வரும் பூர நாள் அம்பிகைக்கு மிகவும் உகந்த நாள்.
தாய்மை என்பது பெண்களுக்கே உரித்தான ஒரு தனி சிறப்பு. உள்ளே உயிர் வளர்த்து உதிரத்தால் பால் கொடுக்க ஒரு தாயால்தான் முடியும். நம்முடைய மானிட வழக்கமான சூல் கொண்ட பெண்ணுக்கு வளை காப்பு நடத்துவது போல படைக்கும் அன்னையாய் இருந்தும் கன்னி என்று மறைகள் பேசும் அம்பிகைக்கு நாம் வளைகாப்பு நடத்தி கண்டு களித்திடும் நாள். மாலை நேரங்களில் அன்னைக்கு வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்து வழிபட்டு அந்த வளையள்கள் பெண்மணிகளுக்கு பிரசாதமாக வழங்கப்படுகின்றன.
காந்திமதியம்மனுக்கு வளைகாப்பு: திருநெல்வேலி காந்திமதியம்மனுக்கு, ஆடிப்பூர விழாவின் நான்காம் நாளன்று, ஊஞ்சல் மண்டபத்தில் வளைகாப்பு விழா நடைபெறும். இந்த வளைகாப்பு விழாவில் பக்தர்களுக்கு வளையல் பிரசாதமாகத் தரப்படும். இந்த வளையலை வாங்கி அணிந்து கொள்ளும் பெண்களுக்கு விரைவில் வளைகாப்பு வைபவம் நடப்பது உறுதி என்பது நம்பிக்கை.
சில இடங்களில் ஆடிப்பூரம் முளைப்பாலிகை திருவிழாவாகவும் கொண்டாடபடுகின்றன. ஒரு வாரத்திற்கு முன்னரே அவரவர் இல்லங்களில் நவதான்யங்களை விதைத்து முளைப்பாலிகையை தயார் செய்கின்றனர். திருஆடிப்பூரத்தன்று அவை அம்மன் சன்னதியில் சேர்க்கப்படுகின்றன. முளை வளர்ந்துள்ள விதத்தில் இருந்து வருடம் எவ்வளவு செழிப்பாக இருக்கும் என்பதை உணர்த்துகின்றது என்பது ஐதீகம்.
பல்வேறு ஆலயங்களில் ஆடிப்பூரம் அம்மனுக்குரிய பிரம்மோற்சவமாக பத்து நாள் திருவிழாவாக வாகன சேவையுடன் சிறப்பாக நடைபெறுகின்றது. இவ்வாறு பத்துநாள் பிரம்மோற்சவம் நடைபெறும் சில தலங்கள், திருவாரூரில் கமலாம்பாளுக்கு, திருநாகையில் நீலாயதாக்ஷி அம்மனுக்கு, திருக்கருகாவூரில் கர்ப்பரட்சாம்பிகைக்கு. திருமயிலை கற்பகவல்லிக்கு ஆடிப்பூரத்தன்று மதியம் சந்தனக்காப்பு அலங்காரம், இரவு விரைமலர் குழல் வல்லி, மறைமலர் பதவல்லி, கற்பகவல்லிக்கு வளை காப்பு உற்சவம். மேல் மருவத்தூரில் ஆதிபராசக்திக்கு ஆடிப்பூரம் மிகப்பெரிய பண்டிகையாக அம்மனுக்கு கூழ் வார்க்கும் பண்டிகையாக சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. ஆடிப்பூரத்தன்று அம்பிகைக்கு சிறப்பு வழிபாடு நடக்காத கோவிலே இல்லை.
ஆடியில் பூத்த அரும்பு: வைணவத்திருக்கோவில்களிலும் திருவாடிப்பூரம் பத்து நாள் திருவிழாவாக கொண்டாடப்படுகின்றது. ஏனென்றால் ஆண்டாள் அவதரித்த நட்சத்திரம் பூரம். ஆடி மாதத்தில் துளசி தோட்டத்தில் ஆண்டாள் இந்த நட்சத்திரத்தில் அவதரித்தாள். ஆண்டாளின் இயற்பெயர் கோதை. இவளை வடமாநிலங்களில் கோதாதேவி என்று அழைப்பர். ஆண்டாள் அவதரித்த திருத்தலமான ஸ்ரீவில்லிபுத்தூரை அம்மக்கள் கோதாதேவி அவதார ஸ்தலம் என்று சிறப்பித்துக் கூறுவர். இந்த நாளில் இக்கோயிலுக்கு சென்றுவருவது மிகவும் நல்லது. எம்பெருமானின் பல்வேறு அம்சங்களான சங்கு, சக்கரம், வில், கதை, வாள் போன்ற ஆயுதங்கள் மட்டுமே ஆழ்வார்களாக அவதரித்த தருணத்தில், பூமிபிராட்டியும் ஆடிப்பூர நாளில் அவதரித்தாள். அரங்கனுக்குச் சூட்ட வேண்டிய ஆரத்தினை தானே சூடிக் கொண்டு ஆடியில் அழகு பார்த்தாள் ஆண்டாள். தான் சூடிக் களைந்த மாலையைப் பெருமாளுக்கு அளித்து வந்ததால் சூடிக் கொடுத்த சுடர்க்கொடி என்ற திருநாமம் பெற்றாள். அப்போது அந்தக் கண்ணாடியில் அரங்கனாகவே தெரிந்தாள் அவள். தானே அவனாக பாவித்து மகிழ்ந்த ஆண்டாளின் அவதார தினம்தான் ஆடிப்பூரம். அந்த அற்புதத் திருநாளை ஒட்டி நடக்கும் திருவிழாவில் ஆண்டாளை தரிசிப்போர் ஆனந்த வாழ்வு பெறுவர் என்பது ஐதீகம்…
மஞ்ச பொடவ கட்டி பாடல் வரிகள் | Manja Podava Katti song lyrics tamil மண்ணளந்த காளி அவள்… Read More
மலையனூரு அங்காளியே பாடல் வரிகள் | Malayanooru Angaliyae song lyrics in tamil மலையனூரு அங்காளியே பாடல் வரிகள்… Read More
தன்னன்னா நாதினம் பாடல் வரிகள் - Onnam Padi Eduthu Song lyrics தன்னன்னா நாதினம் பாடல் வரிகள் அல்லது… Read More
திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா! Karthigai deepam tiruvannamalai 🏕✅ தினமும் பக்தர்களால் கூட்டம் நிரம்பி வழியும் மலை திருவண்ணாமலை.… Read More
ஆடுக நடனம் ஆடுகவே சிவன் பாடல் வரிகள் | Aaduga nadanam lyrics in tamil ஆடுக நடனம் ஆடுகவே… Read More
பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை பற்றி 50 குறிப்புகள் அருமையான பதிவு, முழுவதும் படியுங்கள் .. 1. மகாவிஷ்ணு எடுத்த… Read More