Arthamulla Aanmeegam

Srardham procedure in tamil | சிராத்தம் விதிமுறைகள்

Srardham procedure in tamil

சிராத்தம் விதிமுறைகள் (Srardham procedure)

பரலோகம் பித்ருலோகம்  பித்ரு கர்மா

நாம் ஒரு விஷயத்தை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

பரலோகம் உண்டு. பித்ரு லோகம் உண்டு.

அங்கு பித்ருக்கள் வசிக்கின்றனர். நம் முன்னோர்கள் உடல் அழிந்ததும் பிரேத நிலையில் சில காலம் இருந்து தங்கள் செய்த நற்கர்மங்களின் பயனாகவும், பின் சந்ததிகள் செய்யும் பித்ரு காரியங்களின் பயனாகவும், பிரேத நிலை நீங்கியவராய் பித்ரு லோகத்தில் இடம் பெற்றவராக விளங்குகின்றனர்.
பித்ருக்களை உத்தேசித்து செய்யும் கர்மாவே சிராத்தம் .

நாம் செய்யும் முக்கியமான கர்மாக்களில் ஸ்ரார்த்தமும் ஒன்று.

நமது முன்னோர்கள் தெய்வங்களுக்கு செய்யும் பூஜைகளை விட ஸ்ரார்தத்தை மிக பயபக்தியுடனும் ஆசாரத்துடனும் செய்து வந்திருக்கிறார்கள்.

மஞ்சள் துணியில் ஒரு ரூபாயை முடிந்து வைத்து விட்டு பிறகு நிதானமாக முடிந்த போது தெய்வ சங்கல்பத்தை நிறைவேற்றலாம்.

ஆனால் சிராத்தம் அவ்வாறல்ல. குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்டபடி சிராத்தம் செய்தே ஆக வேண்டும்.

சிராத்தம் செய்வதினால் யாருக்கெல்லாம் திருப்தி?

1. எப்போதும் நம்மை வாழ்த்துகின்ற பித்ருக்கள

2. அவர்களுக்கு துணை வருகின்ற விஸ்வே-தேவர்கள் என்ற தேவப்பிரிவினர்.

3. ஹோமத்தில் பாகம் பெருகின்ற அக்னி பகவான்.

4. எந்த இடத்தில் ப்ராம்ஹண போஜனம் நடந்தாலும் அதன் மூலம் திருப்தி அடைகின்ற தேவர்கள்.

5. பிண்டப்ரதானத்தினாலும், விகிரானத்தாலும் வேறு வழியில் திருப்தி பெற வாய்ப்பில்லாத நரகத்தில் இருப்பவர்களுக்கும்.

6. பித்ருலோகம் அடைய இயலாத நிலையில் உள்ளவரும்.

இவ்வாறாக நாம் அறிந்திராத பித்ருக்கள் என பலர் நாம் செய்யும் ஸ்ரார்த்ததில் பல கட்டங்களில் பல மந்திரங்களின் மூலம் திருப்தி அடைகின்றனர்.

பித்ருக்களின் அனுக்ரஹம்

நமது பித்ருக்கள் இருந்தார்கள். இறந்து விட்டார்கள். இப்பொழுது இல்லை என்று முடித்து விடாமல் அவர்கள் இப்போதும் இருக்கின்றனர். அவர்களுடன் தொடர்பு கொள்ள முடியும் என்ற நம்பிக்கை நமக்கு வர வேண்டும்.

அவர்கள் தெய்வாம்சம் உடையவர்களாக இருப்பதால், நம்மைப் பற்றி அவர்களுக்குத் தெரியும்.

தேவர்களைப் போலவே அவர்கள் நமக்கு அனுக்ரஹம் செய்வார்கள்.

அவர்கள் எப்போதும் இனிமையானவர்கள். க்ரூரமானவர்கள் அல்ல.

தனது கோத்ரத்தில் வந்தவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைப்பவர்கள்.
பித்ருக்கள் திருப்தி அடைவதன் பயனாக சிராத்தம் செய்பவருக்கு நோயற்ற சந்ததி, செல்வம், வம்சவ்ருத்தி, ஆரோக்யம், ஞானம், இம்மை-மறுமையில் மேன்மை கிடைக்கின்றன.

பித்ரு சாபம்

நாம் கடமையிலிருந்து தவறக்கூடாது.

வாத்தியாரை குறை சோல்லுவதும், சாக்குபோக்குகளை தேடி கண்டுப்பிடிப்பதும் இப்போது அதிகமாகி வருகின்றது. இதைக் கைவிட வேண்டும்.

யாரிடம்தான் குறையில்லை. ஸ்ரார்தத்தை எப்படியாவது செய்யத்தான் வேண்டும் என்பதில்தான் நமது கவனம் இருக்க வேண்டும்.

ஸ்ரார்தத்தை செய்யாதவன் நன்றி கெட்டவன். இதில் சந்தேகமே வேண்டாம்.

குதர்கக வாதம் கூடாது. சிராத்தம் செய்யாமல் விட்டவர்கள் எவ்வாறு பாதிக்கப்படலாம் என்று விபரமாக இங்கு எடுத்துக்கூற அபிப்ராயமில்லை.

சுருக்கமாக பித்ருசாபத்திற்கு அப்பேர்பட்டவர்கள் ஆளாகலாம் என்பதை மட்டுமாவது ஞாபகத்தில் வைத்துக் கொண்டால் நல்லது.

பித்ருக்கள் சாபமிடுவார்களா என்று நினைக்க வேண்டாம். பித்ருக்கள் கஷ்டத்தினால் பெருமூச்சு விட்டாலே, நமக்கு தோஷம் ஏற்படும். பெற்ற சீரையும் செல்வத்தையும் இழந்து துன்புறவும் நேரலாம். வம்சவிருத்தி பாதிக்கலாம்.

மந்திரங்கள்

சிராத்தம் செய்யும்போது மந்திரங்களை வாத்யார்கள் அக்ஷர சுத்தத்துடனும், ஸ்வரத்துடனும் சொல்லி வைப்பது முக்கியம்.

அதே மாதிரி கர்த்தா கூடியமானவரையில, அப்யாசம் இல்லாவிட்டாலும், சரியாக திருப்பி சொல்ல முயற்சி செய்வதும் மிகவும் அவசியம்.

சிரத்தையுடன் சிராத்தம் செய்வதை முக்கிய கர்மாவாக வைதீக கர்மாக்களில்குறிப்பிட்டுள்ளது.

ஸ்ரார்த்த இறுதி கட்டத்தில் ஸ்ரார்த்த பிராஹ்மண்ர்களிடம் கர்த்தா மந்திர ரூபமாக வேண்டுவது என்னத் தெரியுமா?
நாங்கள் ஒருவரையும் யாசியோம். யாசிப்பவர்களுக்கு நிறைய நாங்கள் தர வேண்டும். எங்களது ஸ்ரத்தை எங்களிடமிருந்து விலகக் கூடாது.

வேதமும், குலமும் எப்போதும் அறுபடாமல் பெருகட்டும்.

உணவு நிறைய கிடைக்க வேண்டும். அதிதிகளும் நிறைய எங்கள் வீட்டிற்கு வர வேண்டும் என்று அவர்களிடம் கோரி ஆசி பெறுகின்றோம்.

இந்த மாதிரி அர்த்த புஷ்டியுள்ள மந்திரங்களை நாம் சரியாக உச்சரிப்பதால் நமக்கு எவ்வளவு நன்மை கிடைக்க வாய்ப்புண்டு. நினைத்துப் பாருங்கள்.

ஸ்ரார்த்த நியமம்

இரண்டாவது ஆண்டு முதல் தொடர்ந்து ஒவ்வொரு வருஷமும் இறந்த அதே மாதம், திதி கூடிய தினத்தில் செய்வதே ப்ரத்யாப்திக சிராத்தம் .

ஸ்ரார்த்ததில் ஸ்ரத்தை மிகமிக முக்கியம். கர்த்தா ஸ்ரார்த்த மாதம் அல்லது ஸ்ரார்த்த பக்ஷம் முழுவதும் நியமத்துடன் இருக்க வேண்டும்.

அதுவும் முடியாவிட்டால் குறைந்த பக்ஷம் முன் 3 நாளாவது நியமத்துடன் இருக்க வேண்டும்.

நியமம் என்றால்

அந்த நாட்களில் வெளியில் சாப்பிடவதாக இருந்தால் சகோதரர், குரு, மாமா, மாமியாரின் வீடுகளில் அல்லது மற்ற இடங்களில் சாப்பிடக் கூடாது.

வபனம் (க்ஷவரம்) அப்யங்கம் (எண்ணை தேய்த்துக் குளித்தல்) ஸ்த்ரீ ஸங்கமம் முதலியவை கூடாது.

சிராத்தம் செய்யும் முறை

இன்றைய நவீன ஆடம்பரமான சூழ்நிலையில் நாம் புதுப்புது வழக்கங்களுக்கும் நாகரீகம் என்ற பெயரில் புதுப்புது பழக்கங்களுக்கும், பல நேரங்களில் மற்றவர்களைப் பார்த்து பார்த்து நாமும் ஆகர்ஷணமாகி, நமக்கு தேவையா என்று கேட்காமலேயே அவைகளுக்கு அடிமையாகி விடுகின்றோம்.

இதன் நடுவில் ஸ்ரார்த்ததிற்கு அவகாசம் பலருக்கு இருப்பதில்லை என்றாலும் மனமிருந்தால் மார்க்கம் கிடைக்கும்.

விதிப்படி, சிராத்தம் செய்ய வேண்டும்.

வசதியும், சிரத்தையும் உள்ளவர்கள் ஸ்ரார்தத்தில் கீழ்கண்ட அம்சங்களை குறைந்தது கடைபிடிக்க வேண்டும்.

வசதி இருப்பது என்பது முக்கியமல்லவா குருடனைப்பார்த்து ராஜமுழி முழிக்க வேண்டும் என்றால் எவ்வாறு சாத்தியம்.

வசதி இல்லாதவர்களுக்கு எந்த தோஷமும் வராது. சாதாரண உத்யோகத்தில் பணிபுரியும் ஒருவர் வருஷத்தில் இரண்டு சிராத்தம் செய்வதாக இருந்தால், குறைந்தது ஐந்தாயிரம் ரூபாய் செலவாகும்.

இது அப்பேர்ப்பட்டவர்க்கு ச்ரமம்தான்.

குறைவான வருமானத்தில் வாழ்பவர் ஸ்ரார்த்ததை சுறுக்கி செய்தால் தோஷம் ஏற்படாது.

எந்த வருமானமும் சரியாக இல்லாதவர்கள் ஹிரண்யமாகவும் ஸ்ரார்த்ததை செய்யலாம். (அரிசி, வாழைக்காய், தக்ஷணை மட்டும் அளிப்பது). ஆனால்

வசதி இருப்பவர்கள் ஸ்ரார்தத்தை ஏனோதானோ என்று செய்தால் தோஷம் ஏற்படும். சந்தேகமில்லை.

வசதி இருப்பவர்கள் அவசியம் கவனிக்க வேண்டிய அம்சங்கள்

1. பார்வணம் (ஹோமம்)

2. தூய்மையான, ருசியான, சூடான சமையல்.

3. ப்ராம்ஹணாளுக்கு ஆசாரியனுக்கும் வஸ்த்ரம்.

4. போஜனத்திற்குப் பிறகு ப்ராம்ஹணாளுக்கு தக்ஷிணை.

5. ஆசாரியனுக்கு (பண்ணிவைக்கும் சாஸ்திரிகளுக்கு) சம்பாவனை

(அவருக்கும் எல்லா தான பொருட்களும்)
வெள்ளியில் ஏதாவது பொருளும், வெண்பட்டும் வழங்கினால் மிகவும் விசேஷம்.

வழங்கும் சாமான்கள் நல்லதகவும், தரமானதாகவும் இருத்தல் முக்கியமானது.

ஏனோதானோவென்று வழங்கக் கூடாது. (உதாரணத்திற்கு வாழைக்காய் கொடுப்பதாக இருந்தாலும் அது பெரியதாகவும், புதிதாகவும் இருக்க வேண்டும்)

வசதியும், மனோபாவமும் உணவு தயாரிக்க இயலாத நிலையிலும் ஸங்கல்பம் செய்து பூர்ண உணவிற்கு தேவையானதைவிட அதிகமான அரிசி, பருப்பு, வெல்லம், காய்கறி, வஸ்த்ரம், தக்ஷிணையுடன் தரவேண்டும் என்பதுவிதி.

இந்த மாதிரி செய்ய முடியாத போது, ஹிரண்ய ஸ்ரார்த்தமாகச் செய்யலாம்.

அதுவும் முடியாதவர்கள், பசுவிற்கு புல் தரலாம்.

ஸ்நானம் செய்து முறைப்படி தர்ப்பணம் செய்யலாம்.

ஸ்ரார்த்த மந்திரங்களை ஜபிக்கலாம். அன்று முழுவதும் உபவாசமிருக்க வேண்டும்.

வசதி உள்ளவன் இந்த மாற்று முறைகளைச் செய்தால் பித்ரு சாபத்திற்கு ஆளாக நேரிடும்.

வினோதமான வாதம் ஒன்று இப்போது சிலரால் சொல்லப்பட்டு வருகின்றது. நல்ல வசதி இருப்பவர்கள் கூட வஸ்திரம் வாங்குவது எங்கள் ஆத்து பழக்கமில்லை என்று கூறுவதுதான் அது.

முன்னோர்கள், பாவம் ஒரு வேளை வசதி இல்லாமல் வாங்காமல் இருக்கலாம். அதை நாம் இன்று கூறி தப்பித்துக் கொள்வது அசட்டுத்தனம் அல்லவா?

ஆசார நியமங்களுக்கும் அனுஷ்டானத்திற்கும் விதண்டாவாதம் கூடாது.

கூடியமான வரயில் சாஸ்த்ரங்களை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சற்று காது கொடுத்துக் கேட்பது நல்லது.

அப்படி கேட்போமாகில் பிறகு பிற்காலத்தில் வருத்தப்பட வேண்டியிருக்காது.

ஸ்த்ரீகள்

இன்னொரு விஷயத்தையும் நாம் இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது.

கர்த்தாவின் மனைவியின் ஒத்துழைப்பு ஸ்ரார்த்தத்தில் மிகவும் அவசியம்.

அது இருந்துவிட்டால் கர்மா நன்கு நடக்குமென்பதில் சந்தேகமில்லை.

கர்மா சரிவர நடை பெற ஒத்துழைப்பதால் அந்த ஸ்த்ரீகளுக்கும் பல சௌபாக்கியங்கள் ஏற்படுவதோடு இஹபர நன்மைகள் எண்ணற்றவை ஏற்படும்.

புருஷர்களிடம் ச்ரத்தை கம்மியாக இருந்தாலும், மனைவிகள் வற்புறுத்தத்தினால் சிராத்தம் நடைபெருவதையும் நாம் இல்லங்களில் பார்க்கின்றோம்.

மொத்ததில் எல்லா வைதிக கர்மாக்களும் நன்கு நடைபெற வேண்டுமென்றால், புருஷர்கள் நினைத்தால்மட்டும்போதாதுபொம்மானாட்டிகளின் ஒத்துழைப்பு மிக மிக அவசியம்.

நமது தர்மத்தில் ஸ்திரீகளின் இடம் மகத்தானது.

புத்திரர்கள் சேர்ந்து செய்யலாமா?

பங்கு பிரிக்கப்பட்டிருந்தாலும், பிரிக்கப்படாமல் தனித்தனியாக குடும்பம் நடத்திக் கொண்டிருந்தாலும் தனித்தே சிராத்தம் செய்ய வேண்டும்.

எல்லோரும் ஒரே குடும்பமாக இருந்தால் தனித்தனி சிராத்தம் தேவையில்லை.

தனித்தனியே வாழ்ந்து கொண்டு ஸ்ரார்த்தத் தினத்தன்று ஒன்று சேர்ந்து ஒரே ஸ்ரார்த்தமாக இருந்தால் அது ஏற்புடையதல்ல.

மூத்தவர் பண்ணினால் அவரருகில் இருந்தால் போதும் என்பது எப்போதும் சேர்ந்து இருப்பவர்களுக்கு மட்டுமே.

தாயார் உயிருடனிருந்தால் அவன் இருக்குமிடத்தில் பித்ரு சிராத்தம் எல்லோரும் சேர்ந்து செய்வதில் தவறில்லை என்பது பெரியோர்களது வாக்கு

தனித்தனியே ஹோமத்துடன் சிராத்தம் செய்வதால், பித்ருக்களுக்கு அதிக திருப்தி.

பித்ருக்கள் பல இடங்ககளிலும் ஒரே சமயத்தில் இருக்க முடியும்.

ஸ்ரார்த்ததில் பலவற்றிற்கு மாற்று உண்டு. ஆனால் ச்ரத்தைக்கு மட்டும் மாற்றம் இல்லை.

தெய்வ காரியங்களை முன்பே குறிப்பிட்ட மாதிரி சில நேரங்களில் தள்ளி வைத்து, பிறகு செய்ய சட்டத்தில் இடமுண்டு.

ஆனால், ஸ்ரார்த்தக் காரியங்களை தள்ளி வைக்கவோ அசிரத்தையாகச் செய்ய இடமில்லை.

பூரண ஈடுபாட்டுடன் அவசரமின்றி செய்ய வேண்டும்.

முறைப்படி செய்ய இயலாவிடில் சக்தியுள்ள மட்டும் சிரத்தையுடன்செய்யசாஸ்திரம்அனுமதிக்கின்றது.

எல்லாவற்றிற்கும் பிரதிநிதி உண்டு. சிரத்தைக்கு பிரதிநிதி இல்லை.

ஸ்ரார்த்தத்தன்று சமாராதனை?

ஸ்ரார்த்த திதி அன்று நாங்கள் வருஷா வருஷம் அன்னதானத்திற்கு (அல்லது ஏதாவது பாடசாலைக்கு) ஏற்பாடு செய்து மொத்தமாகப் பணம் கட்டிவிட்டோம். அதனால் சிராத்தம் செய்வதில்லை என்று கூறுபவர்களும் நமது கண்ணில் படத்தான் செய்கிறார்கள்.

இது சுத்த அபத்தம். அன்னதானம் செய்த பலன் வேண்டுமானால் தனியாகக் கிடைக்கலாம்.

(ஸ்ரார்த்தத்தன்று பித்ருக்களை வரித்து அல்லாமல் மற்றவர்களுக்குப் போஜனம் செய்விக்கலாமா என்பதே ஒரு கேள்விக்குறி ?)

எது எப்படி இருந்தாலும், ஸ்ரார்த்தத்திற்குப் பிரதிநிதியாக அன்னதானம் ஆகாது.

சிராத்தம் சிராத்தம் தான்.

பிரச்சனை ஏதும் இல்லாதவர்களும் வசதி உள்ளவர்களும் முறையாக ஸ்ரார்த்தத்தை அனுஷ்டித்துத்தான் ஆக வேண்டும்.

சில குறிப்புகள்

சிராத்தம் நடக்கும் போதும், சமையல் செய்யும் போதும், யாரும் (சாப்பிட வரும் பிராம்ஹணாள் உட்பட) அதிகப் பேச்சுக்களோ, வம்பு, அரசியல் போன்ற விவாதங்களில் ஈடுபடுவதோ கூடாது.

சங்கீதம், பக்தி கேசட்டுகளைக் கூட ஓட விடக்கூடாது. இவற்றையெல்லாம் கேட்டால் பித்ருக்கள் திரும்பி போய்விடுவார்களாம்.

வீட்டில் சமையல் செய்து சிராத்தம் செய்ய வேண்டும். கர்த்தாவின் தர்மபத்தினி தளிகை செய்வது உத்தமம்.

ஸ்ரார்த்த முதல் நாள் எந்த பட்க்ஷண்மும் தயார் செய்து வைத்து, ஸ்ரார்த்ததில் உபயோகிக்கக் கூடாது.

சிலர் சமாராதனை சாப்பாடாக, தேங்காய் முதலியவைகளை சேர்த்து செய்வார்கள். இதுவும் சரிதான். ஏனெனில் சாப்பிடுபவர்கள் திருப்தியாக சாப்பிட இதில் வாய்ப்பு அதிகம்.

திருப்தியாக ப்ராம்ஹணர்க்ள சாப்பிட வேண்டுமென்பது மிக முக்கியம் அல்லவா? எங்காத்து வழக்கம் என்று முரண் பிடிக்காமல் தளிகை ருசியாக சமாராதனை ரூபத்தில் தயாரித்தால் தவறில்லை.

அதற்காக ஸ்ரார்த்ததில் விலக்கப்படவேண்டிய காய்கறிகளையும், பொருட்களையும் விலக்காமல் இருக்கக் கூடாது.

மொத்தத்தில் தளிகை நன்கு சாப்பிடும்படியாக இருக்க வேண்டும். அவரவர்கள் இல்லத்து பெரியோர்களின் ஒப்புதலோடு சமாராதனை சாப்பாடு ஏற்புபுடையதே என்பது அடியேனுடைய கருத்து.

தயாரிக்கும் மற்றும் பரிமாறும் ஸ்த்ரீகள் மிகவும் மடியாகவும், மடிசார் புடவையுடன் தான் இருக்க வேண்டும்.

தூய்மையிலாத பந்துக்கள் ஸ்ராத்த இடத்தில் இருக்கக் கூடாது.

தளிகை செய்து எல்லாம் ஆறி அலர்ந்து போயிருக்கக் கூடாது. சுடச்சுட ருசியாக சாப்பிடும்படி பரிமாறுவது அவசியம்.

தான் சந்தோஷமிக்கவனாக, ஸ்ரார்த்த ப்ராஹ்மணாளை சநோஷப்படுத்தயவாறே மெதுமெதுவாக அவர்கள் சாப்பிடுமாறு பரிமாறுவது முக்கியம்.

பதார்த்தங்களை அவர்கள் சமீபம் கொண்டு சென்று இந்த அத்ருஸம் ருசியாக செய்யப்பட்டுள்ளது;

இந்த வடை சூடாக உள்ளது; இன்னுமொன்று போட்டுக்கோங்கோ என்று பவ்யமாகக் கேட்டு திருப்தியாக சாப்பிடும்படி அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும். (அதற்காக அவர்கள் வேண்டாம் என்ற சைகை காட்டியபோதும், அவர்கள் மீது திணிக்கக் கூடாது. அவர்களை ச்ரமப்படுத்தக் கூடாது).

தளிகையில் கோதுமை, உளுந்து, பயறு, எண்ணையில் செய்யப்பட்ட பதார்த்தங்கள், இவைகளை கட்டாயம் ஏதாவது ஒரு வடிவத்தில் சேர்க்க வேண்டும்.

கர்த்தா, சகோதரர்கள், பெண், புத்திர பௌத்திரர்கள், தௌஹித்திரர்கள், ஸபிண்ட ஞாதிகள், பித்ரு சேஷம் சாப்பிடலாம்.

ஒருவன் தனது மாமனார், மாமா இவர்களுடைய பித்ரு சேஷம் சாப்பிடலாம்.

ஸந்தியாவந்தனம் தொடர்ந்து செய்யாதவர்கள் ஸ்ரார்த்த நாள் அன்றாவது த்ரிகால ஸந்தியாவந்தனம் செய்துதான் ஆக வேண்டும்.

தளிகை ருசியாக உள்ளதா என்று கர்த்தா சாப்பிடும் ப்ராஹ்மணர்களிடம் வாய் தவறியும் கேட்கக் கூடாது.

கருப்பு எள் சாதத்தில் மிகவும் அவசியமான ஒன்று. ராக்ஷஸர்களை விரட்டி பித்ருக்களுக்கு திருப்தி தரக் கூடியது (எள்ளை ஆள்காட்டி விரலாலும் கட்டை விரலாலும் சேர்த்து எடுக்கக் கூடாது)

பழத்தைத் தவிர மற்றதை வெறும் கையால் பரிமாறக் கூடாது.

உப்பை தனியாக பரிமாறக் கூடாது.

ஸ்ராத்ததன்று காலையில் சிராத்தம் முடியும் வரயில் கர்த்தாவும் அவரது துணைவியாரும் எதுவும் சாப்பிடக் கூடாது.

அன்று மத்தியானம் போஜனமானபின் இரவில் சாப்பிடும் பழக்கம் தவறு.

மிக அவசியமெனில், திரவாக சிறிது இரவு உட்கொள்ளலாம். உடல் நலம் குன்றியவர்களுக்கும் இது பொருந்தும்.

மாத்யாஹ்னிகம் செய்த பிறகு, ஸ்ரார்த்த கர்மா ஆரம்பிக்கலாம்.
க்ருஸரம் கொடுப்பதாக இருந்தால், சிராத்தாங்க ஸ்நானத்தை (2-வது ஸ்நானம்) பிறகு தான் செய்ய வேண்டும்.

அன்று காலை நனைத்து உலர்த்திய மடி வஸ்த்ரத்தைதான் உடுத்த வேண்டும். ஸ்ரார்த்ததில் மடி மிக முக்கியம்.

அபிச்ரவணம் சொல்பவர் கிடைக்காவிட்டால், தானே இதிகாச புராணங்கள் படனமோ, ஸ்லோகங்களையோ, சூக்தாதிகளையோ, ப்ராம்ஹணாள் சாப்பிடும்போது சொல்லலாம்.

ஸ்ரார்த்த நாளன்று கோபமும், அவசரமும் கூடாது. மணி ஓசை, கோலம் முதலுயவை கூடாது.

சிராத்தம் ஆரம்பித்து, தான் சாப்பிட்டு எழுந்திருக்கும் வரயில் கர்த்தா, அப்ராம்ஹணர்களுடன் பேசுவதையோ, பார்ப்பதையோ தவிர்க்கவும்.

இரும்புப் பாத்திரத்தை ஸ்ரார்த்ததில் உபயோகிக்கக் கூடாது.

கடி சூத்ரம், மிக உசத்தியானது. மகிமை வாய்ந்தது. அதை நாம் எப்போதும் அணிந்திருக்க வேண்டும். குறைந்தது ஸ்ரார்த்த கர்மா அன்றாவது கட்டிக் கொள்வது அவசியம். அவ்வாறே பஞ்சகச்சமும்.

தினசரி செய்யும் ஆத்து பூஜையை சிராத்தம் முடிந்த பிறகு செய்ய வேண்டும்.

ஸ்ரார்த்தத்தை நம் விருப்பத்திற்குத் தள்ளிப் போடக் கூடாது.

ஒரு வேளை தீட்டு, ஞாபக மறதி போன்ற காரணங்களினால் உரிய தேதியில் செய்ய முடியாமல் போய்விட்டால், அன்று உபவாசமிருந்து மறுநாள் சிராத்தம் செய்யலாம்.

கர்த்தா ஸ்ரார்த்தத்தையே மறந்துவிட்டு இருந்தால்,

அவருக்கு ஞாபகம் வந்தவுடன் அடுத்து வரக்கூடிய க்ருஷ்ண பக்ஷ அஷ்டமி, ஏகாதசி, அம்மாவாசை, இதில் ஏதாவது ஒரு திதியில் செய்ய வேண்டும்.

ப்ராஜாபத்ய க்ருச்ரம் செய்து ஆரம்பிக்கவேண்டும்.

ஒருவேளை சிராத்தம் செய்பவருக்கு உடல் நலம் குன்றியோ, அல்லது தள்ளாமையோ வந்தால்,

பிறரை விட்டு (மகனாக இருந்தாலும் தோஷமில்லை) ஹோமம் செய்து ஸ்ரார்த்தத்தை நடத்தலாம்.

கயா ஸ்ரார்த்தமும், ப்ரத்யாப்திக ஸ்ரார்த்தமும் சமீப காலமாக ஒரு கருத்து ஆங்காங்கு நிலவி வருகிறது.

கயாவில் ஒரு தடவை சிராத்தம் செய்து விட்டால் வருஷா வருஷம் இனி சிராத்தம் செய்யத் தேவையில்லை என்பதே அது.

இது சுத்த அபத்தம்.

சாஸ்த்திர விரோதமானது.

ஒரு சிறு உதாரணத்தின் மூலமாக இதை புரிந்து கொள்ள முயற்சி செய்வோம்.

ஒரு நாள் பிரமாதமான மிக ருசியான உயர்ந்த விலையில் பலவகைகளுடன் மிகவும் காஸ்ட்லியான விருந்து (பெரிய நக்ஷத்ரஓட்டலாகவும் அது இருக்கலாம்) சாப்பிட்டு விட்டால், மறுநாள் நாம் சாப்பிடாமல் இருந்து விடுகிறோமா?

கயா சிராத்தம் மிக உன்னதமானது. ஜன்மாவில் ஒரு தடவையாவது கயா சிராத்தம் செய்ய வேண்டும்.

ஆனால் அதற்கும் வருஷாவருஷம் செய்யும் ப்ரத்யாப்திக ஸ்ரார்த்ததிற்கும் சம்பந்தம் கிடையாது. இது வேறு. அது வேறு.

ஔபாஸன அக்னி

ஔபாஸனம் நமக்கு நித்ய கர்மாவாகும்.

ஆனால் இக்காலத்தில் நாம் செய்வதில்லை.

ஸ்ரார்த்தத்தன்று ஔபாஸனம் செய்கின்றோம். ஹிரண்யமாக சிராத்தம் செய்யும்போதும் அல்லது பெரியவரோடு மற்ற தம்பிகள் சேர்ந்து ஒரே ஸ்ரார்த்தமாக செய்யும்போது, ஔபாஸனம் நம்மை விட்டு அறவே விலகிவிட வாய்ப்புள்ளது

கிருஹஸ்தனுக்கு அடையாளமான ஔபாஸனம் விலகி விடாமல பார்த்துக் கொள்ள வேண்டும் அல்லவா?

ஸ்ரார்தம் பார்வணமாகத்தான் (ஹோமத்துடன்) செய்ய வேண்டும்

(பிரம்மச்சாரி கர்த்தாவாக இருந்தால் ஔபாஸனத்திற்கு பதிலாக ஸமிதாதானம் சொல்லப்பட்டுள்ளது).

நம்பிக்கை

அவரவர்கள் அவரவர் சூத்திரப்படி சிராத்தம் செய்வதுதான் முறை.

ஒரு வேளை குறிப்பிட்ட சூத்திரம் பண்ணிவைக்க ஆசாரியன் கிடைக்காத பட்சத்தில் எந்த சூத்திர வாத்தியார் கிடைப்பாரோ அந்த சூத்திரபடியாவது சிராத்தம் செய்யலாம்.

கர்மாவை விடக்கூடாது.

அதே மாதிரி வாத்யார்களை குறை சொல்லவும் தேவையில்லை. அவரவர்கள் கர்மா அவரவர்களுடையது.

நமது ச்ரத்தையும், பார்வையும் தான் முக்கியம். அதைக் கவனத்தில் வைத்துக் கொள்ள வெண்டும்.

சம்பாவனை

ஸ்ரார்த்ததில் இப்பொழுதெல்லாம் இன்னொரு விஷயமும் பிரச்சனையாகி வருகின்றதை நாம் சில இடங்களில் பார்க்கின்றோம்.

அது சம்பாவனை விஷயத்தில். எங்கள் அப்பா அப்போதெல்லாம் இவ்வளவுதான் கொடுப்பார் என்ற ஆர்க்யுமெண்ட். சிறிது யோசித்தாலும் நமக்கே புறியும், இது எவ்வளவு அபத்தமென்று.

சிலர் குறிப்பிடுகின்ற அந்த காலத்தின் ஒரு ரூபாய் என்பது இன்று கிட்டத்தட்ட 100 ரூபாய்க்கு சமமல்லவா?

அதனால் இப்படியெல்லாம் வாதிடாமல் தன்னால் முடிந்ததை திருப்தியாக சம்பாவனை அளிப்பது உசிதம்

வாதயாரை தேவதாஸ்வரூபமாக நினைப்பதுதான் நமது பாரம்பரியம்.

சாப்பிடும் ப்ராம்ஹணாள்

எக்காரணம் கொண்டும் வரிக்கப்பட்ட பிராம்ஹணாளை அவமானப்படுத்தும் எண்ணமே நமக்கு வரக்கூடாது.

நாம் எல்லோருமே ப்ராம்மணார்த்தம் சாப்பிட வேண்டிய குலத்தில் பிறந்தவர்கள்தானே!

நம் முன்னோர்களும் ஒரு காலத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள்தானே!

ஆனால் இன்று நம்மில் எத்தனை பேர் இன்னொரு வீட்டில் போய் ப்ராம்மணார்த்தம் சாப்பிடத் தயார்? நம்மால் முடியாதல்லவா?

அப்படிஇருக்கும்போதுமற்றவர்களைகுறைகூறுவதில் நமக்கு என்ன யோக்யதை இருக்கு?

ப்ராம்மணார்த்தம் சாப்பிடுபவர்களும் ஒரு வகையில் பொது சேவை செய்பவர்கள்தான்.

அவர்கள் இல்லாவிடில் கர்மா எப்படி நடக்கும். நாம் யோசிக்க வேண்டிய விஷயம்.

வைதீகம்

வைதீகத்தில் நம்பிக்கை வளர வேண்டும் அதற்க்கு பண்ணிவைக்கும் வாத்யார்மீது நம்பிக்கையும், மரியாதையும் வைப்பதுதான் ஒரே வழி.

வைதீக தர்மத்தை அனுஷ்டிப்பது நமது கடமையாக் இருப்பதால் மிக முக்கியமான மந்திரங்களையாவது நாம் ஒவ்வொருவரும் அத்யாயனம் செய்ய வேண்டும்.

கேசட்டுகளை நம்பக் கூடாது. ஏனெனில் அது நம்மைத் திருத்தாது. மேலும் கேசட்டுக்களைக் கேட்கும்போது, நம்மை அறியாமலே நமக்கு ஒரு திருப்தி மாயை ஏற்பட்டு விடுகின்றது. நாம் வாயை திறந்து சொன்னால்தான் பலன் கிடைக்கும்.

ஒரு நாளும் ஸந்தியாவந்தனம் செய்யாமல் இருக்க வேண்டாம்.

குறிப்பாக ஸந்தியாவந்தனத்தில் வரும் ப்ராணாயாமம், சூரிய த்யானம், தர்ப்பணம், காயத்ரி ஜபம் போன்றவைகளை கவனமாக செய்யப் பழகுவது நல்லது.

கூடியமானவரை ஆசார நியமங்களை நாம் கடைபிடித்தால், நமக்கு ச்ரேயஸ் உண்டாகும் என்பதில் சந்தேகமில்லை.

அவர்கள் நல்ல பதத்தால் மனை வாழ்வர் கொண்ட பெண்டிர் மக்களே !!!!

அமாவாசை திதி-பித்ரு வழிபாடு பற்றி ஒரு தகவல்

மஹாளய பட்சம் பற்றிய தகவல்கள்

பித்ரு 108 போற்றி | பித்ரு 108 நாமாவளிகள்

Share
ஆன்மிகம்

View Comments

Published by
ஆன்மிகம்
  • Recent Posts

    அள்ளிக் கொடுப்பதில் பாடல் வரிகள்| Alli koduppathil song lyrics tamil

    அள்ளிக் கொடுப்பதில் பாடல் வரிகள்| Alli koduppathil song lyrics tamil அள்ளிக் கொடுப்பதில் வல்லமை பெற்றவன் அப்பன் பழனியப்பன்… Read More

    1 month ago

    பச்சை மயில் வாகனனே பாடல் வரிகள்| Pachai Mayil Vahananae Lyrics Tamil

    பச்சை மயில் வாகனனே பாடல் வரிகள்| Pachai Mayil Vahananae Lyrics Tamil பச்சை மயில் வாகனனே – சிவ… Read More

    1 day ago

    மஞ்ச பொடவ கட்டி பாடல் வரிகள் | Manja Podava Katti song lyrics tamil

    மஞ்ச பொடவ கட்டி பாடல் வரிகள் | Manja Podava Katti song lyrics tamil மண்ணளந்த காளி அவள்… Read More

    1 month ago

    மலையனூரு அங்காளியே பாடல் வரிகள் | Malayanooru Angaliyae amman song lyrics tamil

    மலையனூரு அங்காளியே  பாடல் வரிகள் | Malayanooru Angaliyae song lyrics in tamil மலையனூரு அங்காளியே பாடல் வரிகள்… Read More

    1 month ago

    தன்னன்னா நாதினம் பாடல் வரிகள் | Onnam padi eduthu song lyrics in tamil

    தன்னன்னா நாதினம் பாடல் வரிகள் - Onnam Padi Eduthu Song lyrics தன்னன்னா நாதினம் பாடல் வரிகள் அல்லது… Read More

    1 month ago

    திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா | Karthigai deepam tiruvannamalai

    திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா! Karthigai deepam tiruvannamalai   🏕✅ தினமும் பக்தர்களால் கூட்டம் நிரம்பி வழியும் மலை திருவண்ணாமலை.… Read More

    1 month ago