Siththarkal

Arunagirinathar History Tamil | அருணகிரிநாதர் வரலாறு தமிழ்

மகான் அருணகிரிநாதர் – சித்தர் வரலாறு (Arunagirinathar History Tamil)

அருணகிரிநாதர் குருபூஜை ஆனிமாதம் மூலம் நட்சத்திரம்

அருணகிரிநாதர்  வரலாறு சுருக்கம்

அருணகிரிநாதர், தெற்கிந்திய மாநிலமான தமிழ் நாட்டில் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து முருகக் கடவுள் மீது பாடல்கள் எழுதி புகழ் பெற்ற அருளாளர். இவர் திருவண்ணாமலையில் பிறந்தார். இவர் தமிழ் மொழி, வடமொழி ஆகிய இரு மொழிகளிலும் புலமை பெற்றவர். இவர் ஆயிரக்கணக்கான பல்வேறு இசைச் சந்தங்களில் பாடினார். கருத்தாழமும், சொல்லழகும், இசைத்தாளச் செறிவும் நிறைந்தது இவர் பாடல்கள். இவர் எழுதிய திருப்புகழில் 1307 இசைப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் 1088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்து இருக்கிறார்கள்.
இவருடைய நூல்கள் தேவாரம், திருவாசகம் போல் மந்திர நூலாகவும், நாள்தோறும் இறைவனைப் போற்றிப்பாடும் நூலாகவும் பக்தி வழி பின்பற்றுவோர் கொள்ளுகின்றனர்.

உருவ அமைப்பு

அருணகிரிநாதர் கைகளில் ஆறு விரல் இருந்தன. அதனால் முருகப் பெருமானின் ஆறு தலைகளையும், அவருக்குரிய “சரவணபவ” எனும் ஆறெழுத்து மந்திரத்தினையும் நினைவுறுத்துவது போல இருப்பதாகக் கூறுவர்.

அருணகிரிநாதர்  வரலாறு

திருவண்ணாமலை என்று சிலரும், காவிரிப்பூம்பட்டினம் என்று சிலரும் அருணகிரிநாதர் பிறந்த இடம் என்று சொல்கின்றனர். தந்தையார் பெயர் திருவெங்கட்டார் என்றும் தாயார் பெயர் முத்தம்மை என்றும் சொல்கின்றனர். திருவண்ணாமலைக்கு எப்போது வந்தார் என்பது சரிவரத் தெரியவில்லை. சிலர் இவருடைய தாயார் ஒரு பரத்தை என்றும் சொல்கின்றனர். இவருக்கு ஒரு மூத்த சகோதரி இருந்தாள். திருமணம் செய்து கொள்ளாமல் தம்பியின் வாழ்க்கையையே நினைத்துத் தம்பிக்குச் சேவை செய்து வந்ததாய்ச் சொல்லுவதுண்டு.

அருணகிரிநாதரின் தமக்கையார் அருணகிரிநாதரைச் சிறு வயதில் இருந்து மிகவும் செல்லம் கொடுத்து வளர்த்து வந்தார். இவர் தீய செயல்களைச் செய்கின்றார், சிறு வயதில் இருந்தே பெண்ணாசை கொண்டவராய் இருக்கிறார் என்பது தெரிந்தும் அந்த அம்மையார் நாளாவட்டத்தில் இவர் திருந்துவார் என எதிர்பார்த்தார். ஏனெனில் அருணகிரி இளமையிலே நல்ல கல்வி கற்றுத் தமிழில் உள்ள இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்திருந்தார். உரிய வயதில் திருமணமும் ஆகியது. ஆனாலும் இவருக்கு முற்பிறவியின் பயனாலோ என்னவோ, பெண்களின் தொடர்பு அதிகமாய் இருந்தது. வீட்டில் கட்டிய மனைவி அழகியாய் இருந்தும், வெளியில் விலை மாதரிடமே உள்ளத்தைப் பறி கொடுத்ததோடு அல்லாமல், கொஞ்சம் கொஞ்சமாய்ச் சொத்தையும் இழந்து வந்தார். எந்நேரமும் காமத்திலே மூழ்கித் திளைத்ததன் விளைவாய் சொத்தை இழந்ததோடு அல்லாமல், பெருநோயும் வந்து சேர்ந்தது இவருக்கு.
என்றாலும் அந்நிலையிலும் இவருக்குப் பெண்ணின் அண்மை தேவைப்பட, கட்டிய மனைவியைக் கட்டி அணைக்க முற்பட்டவரை மனைவி வெறுத்து ஒதுக்க, இவர் சகோதரி தன்னைப் பெண்டாளுமாறு கோபத்துடனும், வருத்தத்துடனும் இவரிடம் சொல்ல தன் தீய செயல்களால் ஏற்பட்ட விளைவு குடும்பத்தையே உருக்குலைத்ததை எண்ணி இவர் வீட்டை விட்டே வெளியேறிக் கால் போன போக்கில் சென்றார். அப்போது ஒரு பெரியவர் இவரைக் கண்ணுற்றார். அவர் தான் அருணாசலேஸ்வரர் என்றும் சொல்லுகின்றனர். குமரக் கடவுள் என்றும் சொல்லுவதுண்டு.

எது எப்படி இருந்தாலும் அருணகிரிநாதருக்கு அருட்பேராற்றல் சித்திக்கும் நேரம் நெருங்கி விட்டது. அந்தப் பெரியவர் அவருக்கு, “குன்றுதோறாடும் குமரக் கடவுளைப் பற்றிச் சொல்லி, அந்த ஆறெழுத்து மந்திரத்தையும், அதன் உட்பொருளையும், சரவணபவ என்னும் சொல்லின் தத்துவத்தையும் விளக்கி, குமரனைப் போற்றிப் பெருவாழ்வு வாழச் சொல்லி ஆசீர்வாதம் செய்தார். என்றாலும் குழப்பத்தோடு இருந்த அருணகிரி சரியாகச் செவி சாய்த்தாரில்லை.

ஒருபக்கம் பெரியவரின் பேச்சு. மறுபக்கம் குழப்பமான மனது. சற்றுத் தெளிவடைகிறது மனம் என நினைத்தால் மீண்டும், மீண்டும் குழப்பம். முருகனை நினைத்து தியானத்தில் அமர்ந்தால் மனம் ஈடுபட மறுக்கிறது. அமைதி வரவில்லை. என்ன செய்யலாம்? குழப்பத்திலும், கவலையிலும் செய்வதறியாது தவித்த அருணகிரி கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார். திருவண்ணாமலைக் கோபுர வாயிலில் தவம் இருந்த அருணகிரியார் அந்தக் கோபுரத்தின் மேலே ஏறி அதிலிருந்து கீழே குதித்து தம் உயிரை விட முற்பட்டார். அவர் கீழே குதித்தபோது இரு கரங்கள் அவரைத் தாங்கின. அந்தக் கரங்களுக்குச் சொந்தக்காரர் வேறு யாரும் இல்லை. குன்றுதோறாடும் குமரனே ஆகும். தன் கைகளால் அவரைத் தாங்கி, “அருணகிரி !நில்!” என்றும் சொன்னார்.

திகைத்த அருணகிரி தம்மைக் காப்பாற்றியது யாரோ எனப் பார்க்க வடிவேலவன் தன் திருக்கோலத்தைக் காட்டி அருளினான். மயில்வாகனனின் தரிசனம் கிடைத்த அருணகிரி வியப்பின் உச்சியிலிருந்து மீளாமல் தவிக்க, முருகன் அவரை, “அருணகிரிநாதரே! “ என அழைத்துத் தம் வேலால் அவர் நாவிலே “சரவணபவ” என்னும் ஆறெழுத்து மந்திரத்தைப் பொறித்து, யோக மார்க்கங்களும், மெய்ஞ்ஞானமும் அவருக்குக் கைவரும்படியாக அருளினார். சித்தம் கலங்கிய நிலையில் இருந்த அருணகிரியாரின் சித்தம் தெளிந்தது.
பிரணவ மந்திர உபதேசத்தை நேரடியாக முருகனிடமிருந்தே பெற்ற இவர் வள்ளி மணாளனை இரு கரம் கூப்பித் தொழுதார். அவனோ, “அருணகிரி, இந்தப் பிறவியில் இன்னும் செய்யவேண்டியவை நிறைய உள்ளன உனக்கு. ஆகையால் இம்மையில் எம்மைப் பாடுவாயாக. பாடிப் பணிந்து பின்னர் எம்மிடம் வந்து சேருவாய்.” என்று சொல்ல, கந்தனின் கட்டளையால் மனம் மகிழ்ந்தாலும், பாடல் புனையும் வழியே அறியாத தாம் எவ்விதம் கந்தனைப் பாடுவது எனக் கலங்கினார். கந்தவேளோ, “யாமிருக்க பயமேன்? அஞ்சேல்!” என்று சொல்லிவிட்டு, “முத்தைத் தரு பத்தித் திருநகை” என எடுத்துக் கொடுத்துவிட்டு மறைந்தான். ஆஹா, தமிழ் கூறும் நல்லுலகுக்கு அன்று பிறந்தது தமிழில் சந்தக் கவிகள். சந்தக் கவிகளுக்கு ஆதிகர்த்த என அருணகிரிநாதரைச் சொல்லலாமோ?

கந்தன் வந்து உபதேசம் செய்து சென்றபின்னரும் அருணகிரியாரைச் சோதனை விடவில்லை. திருவண்ணாமலை ஆலயத்தின் இளையனார் சந்நிதியில் பெரும்பாலும் மோனத் தவம் செய்து வந்தார் அருணகிரி. தவம் கலைந்த வேளைகளில் சந்தப் பாடல்களை மனம் உருகிப் பாடிவந்தார். இவரின் இந்தப் பாடல்கள் யோகக் கலையை ஒட்டி அமைந்தவை. பரிபூரண யோக ஞானம் கைவரப் பெற்றவர்களுக்கு மட்டுமே இந்தப் பாடல்களின் உட்பொருள் புரியும். அப்போது திருவண்ணாமலையை ஆண்டு வந்தவன் விஜயநகர வம்சத்தைச் சேர்ந்த பிரபுடதேவராயன் என்னும் மன்னன். தெய்வ பக்தி மிகுந்த அவன் அருணகிரியாரைப் பற்றியும் அவர்க்கு நேர்ந்த அனுபவங்கள் பற்றியும் அறிந்து கொண்டான். அருணகிரியாரைப் பணிந்து தனக்கும் அவருக்குக் கிடைத்த பாக்கியங்கள் கிடைக்குமாறு செய்யவேண்டும் என வேண்டிக் கேட்க, அருணகிரிக்கும், அரசனுக்கும் நட்பு முகிழ்ந்து மணம் வீசிப் பரவலாயிற்று.
அந்த நட்பின் மணமானது மன்னனிடம் ஆஸ்தான பண்டிதன் ஆன சம்பந்தாண்டானைப் போய்ச் சேர்ந்தது. தேவி பக்தன் ஆன அவன் தேவிகுமாரனைப் பணிந்து வந்த அருணகிரியிடம் ஏற்கனவே பொறாமை கொண்டிருந்தான். இப்போது மன்னனும் அருணகிரியைப் பணிந்து அவர் சீடர் ஆக முயல்வதைக் கண்டதும் மன்னனைத் தடுக்க எண்ணம் கொண்டான். “மன்னா, யாம் உம் நெருங்கிய நண்பன். உம் நன்மையே நாடுபவர். உமக்கு நல்லதே செய்ய நினைக்கிறோம். அருணகிரி பற்றி நீர் சரிவர அறியாமல் அவனிடம் நட்புக் கொண்டுள்ளீர். வேண்டாம் இந்த நட்பு. பரத்தையரிடமே தஞ்சம் எனக் கிடந்தான் அருணகிரி. உற்றார், உறவினர் கைவிட்டனர். அத்தகைய பெருநோய் வந்திருந்தது அவனுக்கு. ஏதோ மாயவித்தையால் இப்போது மறைந்திருக்கலாம். சித்துவேலைகளை எவ்வாறோ கற்றுக் கொண்டு, முருகன் நேரில் வந்தான், எனக்குச் சொல்லிக் கொடுத்தான், நான் முருகனுக்கு அடிமை, என்று சொல்லித் திரிகின்றான். நம்பவேண்டாம் அவன் பேச்சை!” என்று சொன்னான்.

மன்னரோ, அருணகிரிநாதரின் ஆன்மபலத்தையும், அவரின் பக்தியையும், யோகசக்தியையும் நன்கு உணர்ந்துவிட்டார். அருணகிரியின் செந்தமிழ்ப் பாக்களும், அதன் சந்தங்களும் அவரைப் பெரிதும் கவர்ந்திருந்தன. சம்பந்தாண்டானிடம், “நீர் பெரிய தேவி உபாசகர் என்பதை நாம் அறிவோம். அருணகிரி பரிசுத்தமான யோகி. முருகன் அவரை உண்மையாகவே ஆட்கொண்டதோடு அல்லாமல், பாடல் பாடவும் அடியெடுத்துக் கொடுத்துள்ளான். அவரின் கடந்த காலவாழ்க்கை எவ்விதம் இருந்தாலும் இப்போது அவர் வாழ்வது பரிசுத்தமான துறவு வாழ்க்கை. முருகன் அருணகிரியை ஆட்கொள்ளவில்லை என்பதை உம்மால் எவ்விதம் நிரூபிக்கமுடியும்,? “ என்று கேட்டான் மன்னன்.

சம்பந்தாண்டான் இது தான் சமயம் என சாமர்த்தியமாக , “மன்னா, தன்னை முருகனடிமை என்று சொல்லிக் கொண்டிருக்கும் அந்த அருணகிரியை அழையுங்கள். தேவி உபாசகன் ஆன நான் என் பக்தியால் அதன் சக்தியால் அந்தத் தேவியை இங்கே தோன்றச் செய்கிறேன். அதேபோல் அருணகிரியும் தன் பக்தியால் அந்த முருகனைத் தோன்றச் செய்யவேண்டும். தோல்வி அடைந்தால் ஊரை விட்டே ஓடவேண்டும். சம்மதமா?” என்று சவால் விட்டான். மன்னனும் நமக்கென்ன?? தேவி தரிசனம் ஒருபக்கம், இன்னொரு பக்கம் முருகன் தரிசனம். சம்மதமே என்று சொன்னான் மன்னன். குறிப்பிட்ட நாளும் வந்தது. அருணகிரிநாதருக்கும் விஷயம் சொல்லப் பட்டது. என் முருகன், என் அப்பன் என்னைக் கைவிட மாட்டான் என்ற பூரண நம்பிக்கையுடன் அவரும் சம்மதம் சொல்லிவிட்டார். மந்திர, தந்திரங்களில் தேர்ந்த சம்பந்தாண்டான் தன் தந்திர வித்தையால் தேவியைப் போன்ற தோற்றம் உண்டாக்கமுடியும் என்ற நம்பிக்கையில் இருந்தான். ஊரெங்கும் செய்தி பரவி அனைவரும் கூடிவிட்டனர்.

தேவி உபாசகன் ஆன சம்பந்தாண்டான் தான் வழிபடும் தேவியைக் குறித்துத் துதிகள் பல செய்து அவளைக் காட்சி தருமாறு வேண்டிக் கொண்டான். கொஞ்சம் ஆணவத்துடனேயே கட்டளை போல் சொல்ல அவன் ஆணவத்தால் கோபம் கொண்ட தேவி தோன்றவே இல்லை. கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. சம்பந்தாண்டானின் தோல்வி உறுதியானது. அனைவரும் அருணகிரியாரை மிகுந்த ஆவலுடன் நோக்கினார்கள். அருணகிரியாரோ கந்தவேளை மனதில் தியானித்துப் பின்னர் அருணாசலேஸ்வரர் ஆலயத்தின் வடக்குப் பக்கம் இருக்கும் மண்டபத்தின் வடகீழ்த் தம்பத்தில் முருகன் காட்சி அளிக்கும்படி வேண்டிக் கொள்வதாயும், இறைவன் திருவருளால் காட்சி கிடைக்கும் என்றும் சொல்லிவிட்டுக் கோயிலை நோக்கி நடக்கலானார். அனைவரும் அவரைப் பின் தொடர்ந்து சென்றார்கள். பக்திப் பரவசத்துடன் மனமுருகி, மணிரெங்கு என்று ஆரம்பிக்கும் கீழ்க்கண்ட திருப்புகழைப் பாட ஆரம்பித்தார். பாடி முடித்ததுதான் தாமதம்,. மயில் வாகனன் மயில் மீது அமர்ந்த திருக்கோலத்தில் கையில் வேல் தாங்கியபடி அங்கே அனைவரும் பார்க்கும் வண்ணம் தோன்றி மறைய, கூடி இருந்த கூட்டம் பக்திப் பரவசத்தில் ஆனந்தக் கூத்தாடியது. சம்பந்தாண்டான் அவமானத்துடன் வெளியேறினான். அருணகிரியார் இயற்றியவை திருப்புகழ், கந்தரலங்காரம், கந்தரநுபூதி, வேல் விருத்தம், மயில் விருத்தம், சேவல் விருத்தம், திருவெழுக்கூற்றிருக்கை, திருவகுப்பு போன்றவை ஆகும்.

அருணகிரிநாதரின் நூல்கள்

முதன்மைக் கட்டுரை: அருணகிரிநாதர் நூல்கள்
கந்தர் அந்தாதி (102 பாடல்கள்)
கந்தர் அலங்காரம் (108 பாடல்கள்)
கந்தரனுபூதி (52 பாடல்கள்)
திருப்புகழ் (1307 பாடல்கள்)
திருவகுப்பு (25 பாடல்கள்)
சேவல் விருத்தம் (11 பாடல்கள்)
மயில் விருத்தம் (11 பாடல்கள்)
வேல் விருத்தம் (11 பாடல்கள்)

திருவெழுகூற்றிருக்கை
சந்தக்கவி, தளமாலையின் முதல்வர், பன்னிருகை வேலவனைப் பாடியதில் முதல் இடம் பெற்றவர். முருகனை நேரில் தரிசித்தவர். எனினும், அசடர்களும் அறிவிலிகளு மான சிலர் அருணகிரிநாதரைப் பழித்தனர். ஒரு முறை… திருத்தணிகையில் அடியார்கள் சூழ, ஆறுமுகனை துதித்துத் திருப்புகழ்ப் பாடல்களைப் பாடியபடி, மலையை வலம் வந்து கொண்டிருந்தார் அருணகிரிநாதர்.அங்கிருந்த சிலர், ‘‘ஆளப் பார்றா! நெத்தியில சுண்ணாம்பு, உடம்புல காவிப் புடவை, கழுத்துல என்னவோ தொங்குது, கேட்டா ருத்ராட்சம்னு சொல்லுவானுக.

கால்கால்னு கத்திக்கிட்டு, மலையைச் சுத்தறாங்களாம். தொல்லை குடுக்கறானுங்கப்பா!’’ என்று பழித்துப் பேசினார்கள்.அவர்களது வம்பு ஒரு கட்டத்தில் எல்லை மீறியது. அருணகிரிநாதர் மனம் வருந்தினார்.‘‘முருகா! உன் திருப்புகழையும், அதைப் பாடும் இந்த உத்தமர்களையும் இப்படிப் பழித்துப் பேசுகிறார்களே! இவர்களை எரிக்க, தனியாக நெருப்பா வேண்டும்! திருப்புகழே நெருப்பாக மாறி இவர்களை எரித்து விடாதா?’’ என்று முறையிட்டு, ‘சினத்தவர் முடிக்கும்’ என்ற ‘திருப்புகழ்’ பாடலைப் பாடினார். இகழ்ந்தவர் அனைவரும் அப்போதே சாம்பலாகினர்.

அதைக் கண்ட அருணகிரிநாதர், அதிகம் மனம் வருந்தி முருகனிடம் முறையிட்டார். அதற்கு முருகன் செவி சாய்த்தான். சாம்பலானவர்கள் அனைவரும் மீண்டும் உயிருடன் எழுந்தனர்.அருணகிரிநாதரின் கால்களில் விழுந்து வணங்கிய அவர்கள், ‘‘ஐயா! தங்களை இகழ்ந்த எங்களுக்கும் உயிர்ப் பிச்சை அளித்தீர்களே எங்களை மன்னித்து, அடியார் கூட்டத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள்!’’ என வேண்டினர். அந்த வேண்டுதலை அருணகிரிநாதர் நிறைவேற்றினார்.ஒரு நாள், அருணகிரிநாதரின் எதிரில் புலவர்கள் சிலர் வந்தனர். ஆர்வத்தோடு அவர்களைப் பார்த்தவர் திடுக்கிட்டார்.

ஏனெனில், அந்தப் புலவர்கள் அனைவரும் காதுகளை இழந்திருந்தனர். காரணம் கேட்டபோது, ‘‘நாங்கள் பாடிய பாடல்களில் குற்றம் கண்டுபிடித்து வில்லிப்புத்தூரார் இவ்வாறு தண்டித்தார்!’’ என்றனர்.அவர்களை வில்லிப்புத்தூராரிடம் அழைத்துப் போனார். அங்கே, வில்லிப்புத்தூராருக்கும் அருணகிரி நாதருக்கும் புலமைப் போட்டி ஆரம்பமானது. அருணகிரிநாதரின் பாடல்களுக்கு வில்லிப் புத்தூரார் பொருள் சொல்ல வேண்டும். சொல்லா விட்டால் வில்லிப்புத்தூரார் தோற்றுப் போவார்.

வில்லிப்புத்தூரார் தனது வழக்கப்படி வாளாயுதத்தை அருணகிரிநாதரின் காதில் மாட்டிப் பிடித்துக் கொண்டார். அருணகிரிநாதர் தோற்று விட்டால், அவர் காதை அறுப்பது வில்லிப்புத்தூராரின் எண் ணம்.அருணகிரிநாதரும் அதே போல வாளாயுதம் ஒன்றை வில்லிப்புத்தூராரின் காதில் மாட்டிப் பிடித்துக் கொண்டார். போட்டி ஆரம்பமானது. அருணகிரிநாதர் தடையில்லாமல் பாடல்கள் பாடினார். வில்லிப்புத்தூராரும் தடையின்றிப் பொருள் சொல்லி வந்தார்.இப்படி ஐம்பத்துநாலாவதாக, ‘திதத் தத்தத்’ என்று தொடங்கும் பாடல் வெளியானது.

திதத் தத்தத் தித்தத் திதிதாதை
தாததுத் தித்தத்திதா
திதத் தத்தத் தித்ததி தித்திதத்த
தேதுத்து தித்திதத்தா
திதத் தத்தத் தித்தத்தை
தாததீ தேதுதை தாததத்து
திதத் தத்தத் தித்தித் திதீதீ
திதி துதி தீ தொத்ததே

இந்தப் பாடலை வில்லிப்புத்தூரார் திரும்பவும் சொல்லலாம் அல்லது பதவுரையோ கருத்துரையோ கூடச் சொல்லலாம்’ என்று வில்லிப்புத் தூராருக்கு விளக்கப்பட்டது. ஆனால், அவரோ, ‘‘என்னால் முடியாது!’’ என்று தன்னிடமிருந்த வாளாயுதத்தை வீசி எறிந்து, ‘‘அருணகிரிநாதரே! நான் தோற்று விட்டேன். என் காதுகளை அறுத்து விடுங்கள்!’’ என்றார்.தன்னிடம் இருந்த வாளாயுதத்தையும் வீசி எறிந்த அருணகிரிநாதர், ‘‘புலவரே! நடந்து கொண்டே இருந்தால் காலும், பார்த்துக் கொண்டே இருந்தால் கண்ணும், பேசிக் கொண்டே இருந்தால் வாயும் வலிக்கும்.

ஆனால், கேட்டுக் கொண்டே இருந்தால் காது வலிக்காது. ஆகவே, நல்லதைக் கேளுங்கள்! நாலு பேருக்குச் சொல்லி வழிகாட்டி வாழ வையுங்கள்!’’ என்று கருணையோடு சொன்னார்.அதன் பின், பாடலுக்கு அருணகிரிநாதரே பொருள் சொல்லி, வில்லிப்புத்தூராரின் வேண்டுதலின் பேரில், மேலும் 46 பாடல்களைப் பாடி நிறைவு செய்தார். அருணகிரிநாதரின் அருள் உள்ளத்தை வெளிப் படுத்தும் இந்த பாடல்கள், ‘கந்தரந்தாதி’ எனும் பெயரில் வில்லிப்புத்தூராரின் உரையோடு இப்போதும் கிடைக்கிறது.
அதில் தமிழ் கடவுள் முருகப் பெருமானின் அருளை முழுமையாகப் பெற்ற அருணகிரிநாதரின் அருந்தமிழை அறிந்து, உணர்ந்து, தோய்ந்து நாமும் முருகன் அருளை அடையலாம்.

கிருபானந்த வாரி யார் – அருணகிரிநாதர்
இளம் வயதிலேயே, அருணகிரிநாதர் படத்தைப் பலரிடம் தந்து வழிபடுவதற்கு வழிகாட்டியவர். தலைசிறந்த முருக பக்தர். அருணகிரிநாதரிடம் அளவில் லாத, அசைக்க முடியாத பக்தி கொண்டவர். இப்படிப்பட்டவர், தானே முன்னின்று வயலூர் முருகன் கோயில் ராஜ கோபுரத் திருப்பணியை நடத்திக் கொண்டிருந்தார். ஒரு நாள் இந்த பக்தரும் அவர் நண்பரும் கோயிலி லேயே படுத்துக் கொண்டனர்.
விடியற்காலை ஐந்து மணி. பக்தருக்கு இனிமையான ஒரு கனவு. அதில் காங்கேயநல்லூர் முருகன் கோயிலில் அருணகிரி நாதர் விக்கிரகத்தின் முன் நின்று கைகூப்பி வழி படுகிறார் பக்தர். அப்போது அருணகிரிநாதர் வடிவம் முன்பக்கம் சற்றுச் சாய்ந்திருந்தது. ‘ஏன் இப்படி?’ என்று பக்தர் வருந்தினார். சட்டென்று அருணகிரிநாதர் விக்கிரகம் நிமிர்ந்து நின்றது. காவி உடையில் காட்சியளித்த அருணகிரிநாதர், தன் பக்தரை அருகே அழைத்து, ‘‘ரொம்ப பசியா இருக்கு. கொஞ்சம் சாதம் போடு!’’ என்றார்.
பக்தர் தன் தம்பியை வீட்டிலிருந்து உணவு எடுத்து வரச் சொன்னார். சற்று நேரத்தில் திரும்பிய தம்பி, ‘‘இந்த நேரத்தில் வீட்டில் அன்னம் இல்லை!’’ என்றார். அருணகிரிநாதரோ, ‘‘எனக்குக் கடும் பசி. உப்புமா கிண்டிக் கொடு!’’ என்றார்.பக்தரின் தம்பி மறுபடியும் வீட்டுக்குப் போய் வந்து ‘‘அரிசி நொய்தான் இருக்கிறதாம். அதில் உப்புமா செய்து கொடுத்தால், ஸ்வாமி சாப்பிடுவாரா என்று அம்மா கேட்டு வரச் சொன்னார்!’’ என்றார். அதைக் கேட்ட அருணகிரிநாதர், பக்தரிடம், ‘‘உன் கையால் ஏதாவது தா; என் பசி தீரும்!’’ என்றார்.
அருணகிரிநாதருக்கு சரிவர நைவேத்தியம் ஆகவில்லை போலும். ஆகவே, அவரின் நைவேத்தியத்துக்கு ஏதாவது, நிரந்தர ஏற்பாடு செய்ய வேண்டும்!’ எனத் தீர்மானித்தார் பக்தர். பின்பு சிறுகச் சிறுகப் பணம் சேர்த்து, இரண்டு ஆண்டுகளில் நான்கு ஏக்கர் நிலம் வாங்கி, அதை அருணகிரிநாதர் பெயரிலேயே பதிவும் செய்தார். அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தில் இன்றும் அருணகிரிநாதருக்கு நைவேத்தியம் செய்யப்பட்டு, அது பல ஏழைகளுக்கு வழங்கப்படுகிறது. அந்த முருக பக்தர் வேறு யாருமல்ல திருமுருக கிருபானந்த வாரி யார் சுவாமிகள்தான்.

திருச்சிற்றம்பலம்…

 

சித்தர்கள் வகுத்த 64 கலைகள் பெயர்கள்

உங்கள் ராசி மற்றும் நட்சத்திரத்திற்கு எந்த சித்தர்களை வழிபாடு செய்ய வேண்டும்?

Share
ஆன்மிகம்

Published by
ஆன்மிகம்
  • Recent Posts

    மஞ்ச பொடவ கட்டி பாடல் வரிகள் | Manja Podava Katti song lyrics tamil

    மஞ்ச பொடவ கட்டி பாடல் வரிகள் | Manja Podava Katti song lyrics tamil மண்ணளந்த காளி அவள்… Read More

    3 hours ago

    மலையனூரு அங்காளியே பாடல் வரிகள் | Manjalilae neeradi song lyrics

    மலையனூரு அங்காளியே  பாடல் வரிகள் | Malayanooru Angaliyae song lyrics in tamil மலையனூரு அங்காளியே பாடல் வரிகள்… Read More

    3 hours ago

    தன்னன்னா நாதினம் பாடல் வரிகள் | Onnam padi eduthu song lyrics in tamil

    தன்னன்னா நாதினம் பாடல் வரிகள் - Onnam Padi Eduthu Song lyrics தன்னன்னா நாதினம் பாடல் வரிகள் அல்லது… Read More

    3 hours ago

    திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா | Karthigai deepam tiruvannamalai

    திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா! Karthigai deepam tiruvannamalai   🏕✅ தினமும் பக்தர்களால் கூட்டம் நிரம்பி வழியும் மலை திருவண்ணாமலை.… Read More

    3 hours ago

    ஆடுக நடனம் ஆடுகவே சிவன் பாடல் வரிகள் | Aaduga nadanam lyrics in tamil

    ஆடுக நடனம் ஆடுகவே சிவன் பாடல் வரிகள் | Aaduga nadanam lyrics in tamil ஆடுக நடனம் ஆடுகவே… Read More

    7 days ago

    பகவான் ஶ்ரீ  கிருஷ்ணரை பற்றி 50 குறிப்புகள்

    பகவான் ஶ்ரீ  கிருஷ்ணரை பற்றி 50 குறிப்புகள் அருமையான பதிவு, முழுவதும் படியுங்கள் ..   1. மகாவிஷ்ணு எடுத்த… Read More

    3 weeks ago