அங்கம் வெட்டின படலம் | Angam Vettina Padalam story – Thiruvilaiyadal

அங்கம் வெட்டின படலம் (Angam Vettina Padalam) தன்னுடைய பக்தையின் துயரினைப் போக்க இறைவனான சொக்கநாதர் கொடியவனான சித்தனின் அங்கங்களை வெட்டியதைப் பற்றிக் கூறுகிறது.
பெண்களை குறைத்து மதிப்பிட்டு இழிவுபடுத்துபவர்களின் நிலை என்ன என்பதை இப்படலத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

வாட்போர் ஆசிரியர்,அவரது மனைவி ஆகியோரின் இறைபக்தி, எல்லோரையும் குறைத்து மதிப்பிடும் சித்தனின் எண்ணம் மற்றும் செயல்கள், சித்தனுக்கு இறைவனால் அளிக்கப்பட்ட தண்டனை ஆகியவற்றை இப்படலம் விளக்குகிறது.
அங்கம் வெட்டிய படலம் திருவிளையாடல் புராணத்தின் கூடல்காண்டத்தில் இருபத்தி ஏழாவது படலமாக அமைந்துள்ளது. திக்கற்ற தனது அடியவர்களை இறைவனார் காப்பாற்றுவார் என்பதை இப்படலம் மூலம் அறிந்து கொள்ளலாம்.

வாளாசிரியனும், சித்தனும்
குலோத்துங்கப் பாண்டியன் மதுரையை சீரும் சிறப்புமாக ஆண்டு வந்தான். அப்போது மதுரையில் வெளியூரினைச் சேர்ந்த வயதான வாளாசிரியன் ஒருவன் வசித்து வந்தான்.
அவனது மனைவியின் பெயர் மாணிக்க மாலை என்பதாகும். அவ்விருவரும் இறைவனான சோமசுந்தரரிடம் பேரன்பு கொண்டிருந்தனர்.
வாளாசிரியன் மதுரை நகரின் வெளிப்புறத்தில் வாட்பயிற்சி கூடம் ஒன்றினை அமைத்து வாட்பயிற்சியினைக் கற்பித்து வந்தான். அவனிடம் சித்தன் என்பவன் வாட்பயிற்சி பெற்றான்.
நாளடைவில் அவன் வாட்பயிற்சியில் குருவினை மிஞ்சிய சிஷியனாக விளங்கினான். திறமைசாலியாக விளங்கிய சித்தன் கெட்ட எண்ணங்கள் மற்றும் துர்நடத்தைகள் கொண்டவனாக விளங்கினான்.

சிறிது காலம் கழித்து தனது குருவுக்கு போட்டியாக வாட்பயிற்சி கூடம் ஒன்றைத் தொடங்கினான். வாட்பயிற்சி கற்பிக்க அதிக ஊதியம் பெற்றான்.
தனது குருவினை மதுரையை விட்டு விரட்ட தீர்மானித்த சித்தன், தனது குருவிடம் பயின்று வரும் மாணவர்களை தன்னிடம் பயிற்சி பெற கட்டாயப்படுத்தினான்.
ஆனால் அவனது குருவோ சித்தனின் இத்தகைய செயல்களால் அவனிடம் வெறுப்பு கொள்ளவில்லை.

சித்தனின் துர்நடத்தை
குருவால் தன்னை ஒன்றும் செய்ய இயலாது என்ற மமதை தலைக்கு ஏறிய சித்தன் தனது குருவின் மனைவியை அடைய விரும்பினான்.
ஒருநாள் குரு வீட்டில் இல்லாதபோது அவரது வீட்டிற்குச் சென்று மாணிக்க மாலையிடம் தன்னுடைய விருப்பத்திற்கு உடன்படும்படி அவதூறாகப் பேசினான்.
பின் மாணிக்க மாலையின் கையைப் பிடித்து இழுத்தான். அவனிடம் இருந்து தப்பித்த மாணிக்க மாலை உள்ளே சென்று கதவை தாளிட்டாள்.
சிறிது நேரம் காத்திருந்த சித்தன் மற்றொரு நாள் மாணிக்க மாலையை கவனித்துக் கொள்வதாகக் கூறி சென்று விட்டான். மாணிக்க மாலை தனது நிலை குறித்து மிகவும் வருந்தினாள்.

மாணிக்க மாலை ‘நடந்த விசயங்களை தன் கணவனிடம் கூறினால் சித்தனுக்கும் கணவனுக்கும் சண்டை ஏற்படக் கூடும். சண்டையில் வயதான தனது கணவனை சித்தன் தோற்கடித்தால் பின் தன்னுடைய நிலை?’ என்று பலவாறு மனதிற்குள் எண்ணினாள்.
இறுதியில் திக்கற்றவளாய் சோமசுந்தரரை சரண் அடைந்தாள். “இறைவா, என்னையும் என் கணவனையும் இந்த இக்கட்டிலிருந்து காப்பாற்று” என்று கதறினாள்.
மாணிக்க மாலையின் அழுகுரலைக் கேட்டு இறைவனார் அவளுக்கு உதவ அருளுள்ளம் கொண்டார்.

இறைவனார் சித்தனுடன் போர் புரிதல்
மறுநாள் இறைவனார் வாளாசிரியரின் உருவத்தில் சித்தனின் வாட்பயிற்சி கூடத்திற்கு சென்றார். சித்தனிடம் “சித்தா இளைஞனான நீயும், வயதான நானும் நாளை வாட்போர் புரிந்து நம்மில் வல்லவர் யார் என்பதைக் காண்போம். ஆதலால் நீ நகருக்கு வெளியே வந்து என்னுடன் வாட்போர் புரி” என்று கூறினார்.

இதனை எதிர்பார்த்து காத்திருந்த சித்தன் அதற்கு சம்மதித்தான். ‘நாளை நடைபெறும் போரில் எளிதாக வெற்றி பெற்று வாளாசிரியனை ஊரைவிட்டு துரத்திவிட்டு மாணிக்க மாலையை அடைந்து விடவேண்டும்’ என்று மனதிற்குள் எண்ணினான்.
மறுநாள் மதுரைநகரின் வெளியிடத்தில் சித்தனுக்கும், வாளாசிரியன் உருவில் வந்த இறைவனாருக்கும் வாட்போர் தொடங்கியது. இருவரும் நீண்ட நேரம் போர் புரிந்தனர்.
வாளாசிரியர் அங்கிருந்தோர் அனைவருக்கும் கேட்கும்படி “உன் குருவின்மனைவியை விரும்பிய உள்ளத்தையும், தகாதவார்த்தை பேசிய நாவினையும், தொட்ட கைகளையும், கெட்ட எண்ணத்தோடு பார்த்த கண்களையும் காத்துக்கொள்” என்று கூறினார்.
பின்னர் சித்தனுடைய அங்கங்கள் ஒவ்வொன்றையும் வெட்டி வீழ்த்தினார். பின்னர் அவ்விடத்திலிருந்து மறைந்தார்.

தங்களுடைய ஆசிரியரைக் காணாது வாளாசிரியரின் மாணவர்கள் திகைத்தனர். தங்களுடைய ஆசிரியரைத் தேடி அவருடைய இல்லத்திற்கு சென்றனர்.
வாளாசிரியருக்கும், மாணிக்க மாலைக்கும் கிடைத்த சிறப்பு
வாளாசிரியரின் இல்லத்தில் இருந்த அவருடைய மனைவியிடம் வாளாசிரியர் எங்கே என்று கேட்டனர். மாணிக்க மாலை வாளாசிரியர் இறைவனை வழிபட திருக்கோவிலுக்கு சென்றதாகத் தெரிவித்தார்.
அப்போது வாளாசிரியர் தனது இல்லத்திற்கு வந்தார். அவரிடம் மாவணவர்கள் “சித்தனைக் கொன்றபின் தாங்கள் எங்கே சென்றீர்கள்?” என்ற கேட்டனர்.
வாளாசிரியரும் சித்தனைத் தான் கொல்லவில்லை என்று தெரிவித்தார். அப்போது மாணிக்க மாலை வாளாசிரியரிடம் சித்தன் தன்னிடம் நடந்த முறையற்ற நடத்தைகளைக் கூறினார்.
வாளாசியரின் மாணவர்களும் போர்களத்தில் வாளாசிரியர் மாணிக்க மாலை கூறியவாறு கூறி அவனைக் கொன்றதாகத் தெரிவித்தனர்.
அப்போது வாளாசிரியர் மாணிக்க மாலையின் துயரினைப் போக்க சோமசுந்தரர் தனது உருவம் தாங்கி வந்து சித்தனைக் கொன்றாதக் கூறினார்.
இந்நிகழ்ச்சியைக் கேள்விப்பட்ட குலோத்துங்க பாண்டியன் இறைவனின் திருவருளைப் பெற்ற அத்தம்பதியினரை வணங்கி யானையின் மீது ஏற்றி ஊர்வலம் வரச் செய்து பொன்னும் பொருளும் வழங்கினான்.
பின் தன் மகனான அனந்தகுண பாண்டியனுக்கு அரசு உரிமை அளித்து சிவப்பேறு பெற்றான்.

அங்கம் வெட்டின படலம் கூறும் கருத்து
திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்பதே அங்கம் வெட்டின படலம் கூறும் கருத்தாகும்.

Enable Notifications Allow Miss notifications