Aanmeega Kathaigal

கண்ணன் கதைகள் (7) அம்பரீஷ சரித்திரம்

கண்ணன் கதைகள் (7)

அம்பரீஷ சரித்திரம்

ராமபிரானின் முன்னோர்களில் ஒருவரான இக்ஷ்வாகு மிகவும்  புகழ் வாய்ந்தவர். அதனால் அந்த வம்சமே ‘இக்ஷ்வாகு வம்சம்’ என்று  பெயர் பெற்றது. இக்ஷ்வாகுவின் தந்தை  வைவஸ்வத மனு. வைவஸ்வத மனுவுக்கு பத்து புத்திரர்கள்.  அவர்களில் ஒரு பிள்ளை நபகன். அவனுடைய பிள்ளை நாபாகன். அவனுக்கு அம்பரீஷன் என்ற மகன் பிறந்தான்.

அம்பரீஷன் சிறந்த  பக்திமான். அவன் ஏழு கடல்களால் சூழப்பட்ட பூமிக்குத் தலைவனாக இருந்தான். இருப்பினும், விஷ்ணுவிடத்திலும், அவரது பக்தர்களிடத்திலும் அன்பு கொண்டு வாழ்ந்து வந்தான்.விரதங்களை மிகுந்த சிரத்தையுடனும் பக்தியுடனும் அனுஷ்டித்து வந்தான். விஷ்ணுவிடத்தில் கொண்ட பக்தியால், அனைத்து கர்மங்களையும் ஒன்றுவிடாமல் செய்து வந்தான். அவன் கேட்காமலேயே, அவனையும் அவன் நாட்டையும் காப்பதற்கு, ஆயிரக்கணக்கான முனைகளையுடைய சக்ராயுதத்தை விஷ்ணு அளித்தார்.

மகாவிஷ்ணுவிற்கு உகந்த  நாளான ஏகாதசிக்கு நிகரான விரதம் இல்லை என்பதை நன்கு அறிந்த அவன், ஏகாதசி விரதத்தை விவரம் தெரிந்த  நாள் முதல் கடைப்பிடித்து வந்தான். ஏகாதசிக்கு முதல் நாளான தசமியன்று இரவு முதல் உண்ணாமல் இருந்து, மறுநாள் ஏகாதசி முழுவதும் உபவாசமிருந்து விஷ்ணுவைப் பூஜித்து, அதற்கு அடுத்த  நாள் துவாதசியன்று அதிதிகளுக்கு உணவளித்து,  பின் பாரணை செய்வது (உணவு உண்பது) என்ற நியதி மாறாமல் பின்பற்றி வந்தான்.

ஒரு முறை அம்பரீஷன், யமுனைக் கரையில் உள்ள மதுவனத்தில், நற்குணங்கள் கொண்ட தன் மனைவியுடன், தியானம் செய்ய வந்தான். அறுபது கோடிப் பசுக்களை வேதமறிந்தவர்களுக்குத் தானம் செய்தான். ஒரு வருட காலம் துவாதசி விரதத்தை அனுஷ்டித்துத் தங்களைப் பூஜித்து வந்தான். விரதம் முடிந்து பாரணை செய்ய வேண்டிய நாளில் துர்வாசர் அம்பரீஷனின் மதுவனத்திற்கு வந்தார். அம்பரீஷன் அவரிடம் போஜனம் செய்ய வேண்டினான். விரைவில் கோபம் கொள்ளும் அவரும் சம்மதித்து, மெதுவே யமுனை நதிக்கு நீராடச் சென்றார். வெகு நேரமாகியும் நீராடச் சென்ற  முனிவர் வரவில்லை. துவாதசி திதி முடிவடையும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. அதற்குள் பாரணையை முடிக்கவேண்டும் இல்லையேல் ஏகாதசி விரதம் தவறிவிடும். அதிதி போஜனமும் ஆகவில்லை. செய்வதறியாமல்  திகைத்த அவன் கற்றறிந்தவர்களிடம் ஆலோசனை கேட்டான்.   அவர்களும், “துர்வாசர் வராமல் பாரணை செய்வது தவறு. துவாதசி திதி முடிய சிறிது நேரமே உள்ளது.  அந்த நேரத்திற்குள் சிறிது துளசி தீர்த்தம் உட்கொண்டால் பாரணை செய்த மாதிரியாகிவிடும். முனிவர் வந்தபின் அவருக்கு போஜனம் செய்வித்துப் பிறகு உண்ணலாம்” என்று கூறினர். அம்பரீஷன், வேறு வழியின்றி துளசி தீர்த்தம் பருகி விரதத்தை முடித்துக் கொண்டான்.  முனிவருக்காகக் காத்திருந்தான்.

அரசனான அம்பரீஷன், பாரணை செய்யவேண்டிய திதி முடியப்போகிறதே என்ற கவலையில் தீர்த்தத்தைக் குடித்துப் பாரணையை முடித்தான். ஞான திருஷ்டியால் அதை அறிந்த முனிவர், கோபத்துடன் கடுஞ்சொற்களால் அம்பரீஷனைத் தூஷித்து, ” என்னை நீ அவமதித்து விட்டாய்” என்று கூறி, தன்னுடைய ஜடையைப் பிய்த்து எறிந்து, அதிலிருந்து ‘க்ருத்யை’ என்ற துர்தேவதையை உண்டாக்கி, “அம்பரீஷனை அழித்துவிட்டு வா” என்று ஏவினார். கையில் கத்தியுடன், உலகங்களை எரிக்கும் அந்த துர்தேவதையை நேரில் கண்ட அம்பரீஷன் சிறிதும் நகராமல் இருந்தான். சுதர்சன சக்கரமானது, அவனுக்கு நேர்ந்த தீங்கைப் பார்த்து அந்த க்ருத்யையை அழித்து, துர்வாசரைப் பின்தொடர்ந்து சென்றது. பயத்தினால் முனிவர் எல்லா உலகங்களுக்கும் ஓடினார். எல்லா இடத்திற்கும் சக்ராயுதம் பின்தொடர்ந்ததைக் கண்டு பிரமனை சரணடைந்தார். காலச்சக்கரத்தை யாரால் எதிர்க்க முடியும் என்று பிரம்மதேவர் முனிவரை அனுப்பிவிட்டார். பிறகு, பரமசிவனிடம் சென்றார். அவரும் தங்களை சரணடைய உபதேசம் செய்தார். கடைசியாக முனிவர் வைகுண்டத்தை அடைந்து, எங்கும் நிறைந்த மகாவிஷ்ணுவை சரணடைந்தார். விஷ்ணுவோ,”முனிவரே! நான் பக்தர்களுக்கு அடியவன். அறிவும், தவமும் அகங்காரமில்லாமல் இருக்க வேண்டும். நீங்கள் அம்பரீஷனையே சரணடையுங்கள்” என்று சொல்லிவிட்டார். முனிவரும் அம்பரீஷனின் கால்களைப் பற்றினார். அவன் விலகி, சக்ராயுதத்தைத் துதிக்க, அது திரும்பிச் சென்றது. இதற்குள் ஒரு வருடம் ஆகிவிட்டது. அம்பரீஷனும். ஒரு வருடம் துர்வாசரை எதிர்பார்த்து, உண்ணாமல் விரதமிருந்து, அவர் வந்ததும் அவருக்கு உணவளித்து, வழியனுப்பி, பிறகு பாரணை செய்தான். துர்வாசரும், அம்பரீஷனின் பக்தியையும், தீங்கு செய்தவர்களுக்கும் நன்மை செய்யும் குணத்தையும் மெச்சி அவனை ஆசீர்வதித்தார்.

அம்பரீஷன், முன்பு இருந்ததைவிட அதிகமாய் மகாவிஷ்ணுவிடம் பக்தி கொண்டு முக்தி அடைந்தான்.

Share
ஆன்மிகம்

Leave a Comment
Published by
ஆன்மிகம்
  • Recent Posts

    Guru Peyarchi Palangal 2024-25 Parigarangal | குருப்பெயர்ச்சி பலன்கள் 2024-2025

    Guru Peyarchi Palangal 2024-25 Parigarangal குரு பெயர்ச்சி பலன்கள் 2024 - 2025 (Guru Peyarchi Palangal 2024-25)… Read More

    17 hours ago

    Mesha rasi Guru peyarchi palangal 2024-25 | மேஷம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்

    Mesha rasi guru peyarchi palangal 2024-25 குருப்பெயர்ச்சி பலன்கள் 2024-25 Mesha rasi guru peyarchi palangal 2024-25… Read More

    17 hours ago

    Rishaba rasi Guru peyarchi palangal 2024-25 | ரிஷபம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்

    Rishaba Rasi Guru Peyarchi Palangal 2024-25 ரிஷபம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் Rishaba Rasi Guru Peyarchi Palangal… Read More

    17 hours ago

    Mithuna rasi Guru peyarchi palangal 2024-25 | மிதுனம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்

    Mithuna rasi Guru peyarchi palangal 2024-25 மிதுனம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்.. Mithuna rasi guru peyarchi palangal… Read More

    17 hours ago

    Kadaga rasi Guru peyarchi palangal 2024-25 | கடகம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்

    Kadaga rasi guru peyarchi palangal 2024-25 கடகம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்.. Kadaga rasi guru peyarchi palangal… Read More

    17 hours ago

    Simma rasi Guru peyarchi palangal 2024-25 | சிம்மம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்

    Simma rasi guru peyarchi palangal 2024-25 சிம்மம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்.. Simma rasi guru peyarchi palangal… Read More

    17 hours ago